Tuesday, March 08, 2011

(இந்த‌ப் ப‌திவுதான் என‌க்கான‌ காத‌லைக் கொண‌ர்ந்திருந்த‌து. இந்த‌ப் ப‌திவுதான் தொலைந்து போன‌ ந‌ண்பிக‌ளை மீள‌வும் க‌ண்டெடுத்துத் த‌ந்த‌து. இவ்வாறு என‌க்குப் பிடித்த‌மான‌ பெண்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்திய‌ -2005ல் எழுதிய‌- இப்ப‌திவை விட றெத‌னைச் ச‌மர்ப்ப‌ண‌ம் செய்ய‌முடியும்,  இன்று பிற‌ந்த‌நாள் கொண்டாடும் என் அம்மாவிற்கு... ~டிசே)


1.
கொழும்பில் இருந்தது ஒன்றரை வருடங்களுக்கும் குறைவானது. யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்ட சில மாதங்கள் சிலாபத்திலிருந்ததையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒரு வருடந்தான் கொழும்பில் இருந்திருக்கின்றேன் என்றுதான் சொல்லமுடியும். கொழும்பு ஒரு நகரத்துக்குரிய வசீகரங்களையும் வக்கிரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் எனது கொழும்பு வாழ்க்கை வீடு-பாடாசாலை-ரியூசன்- சில உறவினர் வீடுகள் என்று ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே சுழன்றபடி இருந்தது. முக்கியமாய் கொழும்பில் எனது எல்லைகளை விரிவாக்கிப் பார்க்காமையிற்கு சிறிலங்கா பொலிசும், ஆமியும் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்க‌ள் என்ற பயத்தோடு எனக்குரிய சோம்பலும்தான் முக்கிய காரணம் என்பேன்.


இன்று வாலிபத்தின் கிழட்டுப் பருவத்தில் நின்று கொண்டு பார்க்கும்போது, யாரவது கடந்து போன வாழ்க்கையில் எதை நீ மீண்டும் வாழ ஆசைப்படுகின்றாய் என்று கேட்டால் கொழும்பில் இருந்த ஒரு வருட வாழ்க்கையை என்று தயங்காமல் கூறுவேன். அரசர்களுக்கு மட்டுமா ஒரு பொற்காலம் இருக்கவேண்டும்? என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு இருக்கக்கூடாதா என்ன?


நெரிசலும், வெக்கையும் நிரம்பிய மாநகர் வாழ்க்கையை சுவாரசியமாக்கியவர்கள் இரண்டு நண்பர்கள். அப்போதுதான் பதின்மத்தில் காலடி வைத்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. பெண்களோடு கோழிகளாய்ச் சண்டைபிடித்ததை மறந்துவிட்டு உடல் மாற்றங்களோடு புத்துணர்ச்சியாய் பார்க்கின்ற காலகட்டத்தில் இந்த இரண்டு நண்பிகள் கிடைத்திருந்தனர். இவர்கள் இருவரும் ஒரு மகளிர் கல்லூரியில் அந்தப் பாடசாலைக்குள்ளேயே இருந்த விடுதிக்குள் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தனர். ஒருவர் மட்டக்களப்பு கல்முனையைச் சேர்ந்தவர். மற்றவர் நுவரேலியாவைச் சொநத இடமாகக் கொண்டவர். சில வருடங்களுக்கு முன் வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பத்திரிகையில் 'நேர்காணல்' என்ற ஒன்றைக் கண்டபோது, கவிதை எழுதுவதற்கு எது உனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று கேட்டார்க‌ள். இ'ந்த தோழிகள்தான் காரணம்' என்று கூறியபோது அவர்கள் கொஞ்சம் நக்கலாய்ப் பார்த்துச் சிரித்தாலும், அதுவே உண்மைக் காரணமாகும். எதையாவது எழுத வேண்டும் என்ற ஆவலை ஊதித் தணலாக்கி நெருப்பாக்கி விட்டது அவர்கள் தான். (எனவே நான் எழுதும் கவிதைகள் சகிக்கமுடியாமல் இருந்தால் என்னைக் குற்றஞ்சாட்டாமல், இப்படி ஒரு கொடூரமான நிலைக்குத் தள்ளிவிட்ட அவர்களை நோகும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்). ஒரு பொழுது, எப்போதாவது ஒரு 'தொ- குப்பை' போட்டால் அவர்கள் இருவருக்கும் சமர்ப்பணம் செய்வதாய் கூறியிருந்ந்ததும் நினைவிலுண்டு.

2.
இந்த தோழிகளுடன் முகிழ்ந்த நட்பைப் பற்றியும் கொஞ்சம் கூறவேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் கதைக்க விரும்பினாலும், வழமையான கூச்ச‌த் த‌ன்மையால் அவர்களைத் தவிர்த்துக்கொண்டிருந்தேன். எனது நண்பர்களிடம் அவர்கள் என்னிடம் பேசவிரும்புவதாய்க் கூறியும் நான் அவர்களை விலத்தியபடியே வகுப்புக்களுக்குப் போய்க்கொண்டிருந்தேன். பதினைந்து வயதுகளில் யாழில் அல்ல, கொழும்பிலும் கூட அப்போது பெண்களுடன் கதைப்பது என்பது பெரும் பாவமாய் இருந்தது. வகுப்புக்கள் முடிந்தவுடன் நின்றும் கதைக்க முடியாது. அவர்கள் விடுதியில் தங்கி நின்றதால் இருந்த கட்டுப்பாடுகளை விட, அந்த தனியார் நிறுவனத்தை எனது மாமியின் மகனொருத்தரே நடத்திக் கொண்டிருந்ததும் இன்னொரு காரணமாகும்.. பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் வகுப்புக்களில் பேச ஆரம்பிக்க (அடடா பதின்மத்தில் பெண்களோடு பேச ஆரம்பிக்கத் தொடங்கும் பொழுதுகள் எவ்வளவு அழகானவை). நேரங் காணாமல் கடிதங்களை வகுப்புக்களில் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினோம். அப்போது நான் கொஞ்சம் படிக்கிற ஆசாமி எனபதால், 'நீ நல்லாய்ப் படிக்கவேண்டும், வகுப்புக்களில் வைக்கும் பரீட்சைகளில் அதிக மார்க்ஸ் எடுத்தால்தான் எங்களுக்குப் பெருமை' என்ற விதமாய் எழுதுவார்கள். அவர்களும் நன்கு படிக்கக் கூடியவர்கள். அதிலும் ஒரு தோழி நன்கு ஆங்கிலமும் கணக்கும் செய்யக்கூடியவர். அவரது ஆங்கிலத்தைப் பார்த்து ஒவ்வொரு பொழுதும் வியந்திருக்கின்றேன். கனடா வந்து ஆங்கில மீடியத்தில் படித்தாலும் அவரது ஆங்கிலத்துக்கு, இப்போதும் எனக்குத் தெரிந்த ஆங்கிலம் முன்னுக்கு நிற்காது போலத்தான் தோன்றுகின்றது. ஒரு முறை இப்படிக் கடிதப் பரிமாறல் நடக்கும்போது எங்கள் பாடசாலையில் படித்த உயர்தர வகுப்பு மாணவர்கள் கண்டுவிட்டார்கள். அவர்களுக்கு நாம் ஏதோ 'காதல் கடிதம்' பரிமாறுகின்றோம் என்ற பொறாமைத் தீ எரிந்ததோ என்னவோ தெரியாது. பிறகு நான் பள்ளிக்கூடம் போகத்தொடங்க தாங்கள் மாணவ தலைவர்கள்(prefects) என்ற மிதப்பில், என்னைச் சும்மா சும்மா தேவையில்லாத காரணங்களுக்கு punishments என்று வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டாங்கள். 'இல்லை அண்ணாமார்; அது வெறும் நட்பு மட்டும்தான்' என்றபோதும் நம்ப அவர்கள் தயாராகவில்லை.


ரியூசனுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, எனது நண்பர்களில் ஒருவருக்கு ஒரு விபரீத ஆசை வந்துவிட்டது அங்கே படித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது காதல் முகிழ ஆரம்பித்தது. அந்தப் பெண்ணும் கொஸ்டலில் தங்கியிருந்தே படித்துக்கொண்டிருந்தார். காதல் ஆசை வந்ததில் பிழையில்லை, ஆனால் அவன் உதவி கேட்டு என்னிடம் வந்ததில்தான் அவனுக்கு சனி (எனக்கும் தான்) பிடிக்க‌த் தொடங்கியது. எப்படி அந்தப் பெண்ணிடம் காதலைத் தெரிவிப்பது என்று மண்டையைக் குடைந்து அலசி ஆராய்ந்து, இறுதியில் கடிதம் ஒன்றின் மூலமாகவே விருப்பைத் தெரிவிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. கொடுப்பதற்கான கடிதத்தை, தான் எழுத்துப் பிழையுடன் எழுதிவிடுவேன் நீயே எழுதித்தாவென்று கூறினான். எனக்கும் அந்தமாதிரி புளுகம். முதன் முதலாய்க் காதல் கடிதம் எழுதுவது என்றால் சும்மாவா என்ன? அத்தோடு எனக்குள்ளும் ஒரு நினைப்பிருந்தது. முதலில் இவனை அனுப்பி வெள்ளோட்டம் விட்டால், பிறகு நான் யாரையாவது பெண்ணை விரும்பினால பாதை இலகுவாயிருக்கும் என்று.  காதல் கடிதம் எழுதக் கற்பனைக் குதிரையைப் பறக்க விடவேண்டும் அல்லவா? ஒரு இராஜ தோரணையுடன் நாமெல்லோரும் (வெள்ளவத்தையில்) இருந்த தேநீர்க் கடைக்குள் நுழைந்தோம். அன்றைய பாற்தேத்தண்ணி, வடை, வாய்ப்பன் இன்னபிற செலவெல்லாம் காதலிக்கும் நண்பனுக்கு உரியதென்பதால் கவலையில்லாமல் வெட்டினோம். வடையும் வாய்ப்பனும் வாழைப்பழமும் வயிற்றுக்குள் போகின்றதே தவிர பேனா மையில் ஒரு எழுத்தும் ஊறவில்லை. நண்பனை நிமிர்ந்து பார்த்தேன், காதலிக்கும் ஆசையில் மிகவும் ப‌த‌ற்ற‌மாய் இருந்தான். அத்தோடு இப்படி இன்று செலவழிக்கும் பணத்துக்கு தனது அப்பரிடம் எத்தனை ஏச்சு வாங்கவேண்டும் என்ற கவலையும் சேர பரிதாபமாய்த் தோன்றினான். (இப்பவாவது பெண்களே புரிந்துகொள்ளுங்கள், ஆண்களுக்கும் காதலிக்கையில் பிரச்சினைகள் பிணக்குகள் என்று எவ்வளவு கஷ்டம் இருக்கிறதென்றாவது). இனியும் இப்படி இருத்தல் சரியாய் இருக்காது என்று 'உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்து' காதற்கடிதத்தை எழுததொடங்கினேன். ஈழததில் தமிழ்,சமயப் பாடங்களை படித்திருந்தீர்கள் என்றால், உங்களுக்குத் தெரிந்திருக்கும், அவற்றுக்கு கொஞ்ச உண்மையும் கனக்க கற்பனையும் (பொய்யும்) தேவை என்று. சம்பந்தர் செய்த அற்புதங்களை எழுது என்று பரீட்சையில் கேட்டால், ஒரு வரி உண்மையை வைத்துக்கொண்டு நூறு வரி பொய்யை எழுதும் சாமர்த்தியம் பெற்றவனாய் அப்போது இருந்தது எனக்கு காதல் கடிதம் எழுத அந்தமாதிரி உதவியது. கடிதத்தை எழுதிமுடித்துவிட்டு நண்பனிடம் நீட்டியபோதுதான் வழமையான எனது ஆறாம் அறிவு விழிக்கத்தொடங்கியது. வெவ்வேறு எழுத்துக்கள் இருந்தால் எவரோ எழுதிக் கொடுத்திருக்கின்றார்கள் என்று அந்தப்பெண்ணுக்கு விளங்கிவிடும் என்று நினைத்து நானே நண்பனுக்காய் கையெழுத்தும் போட்டேன். வெற்றிகரமாய் நமது தாக்குதலுக்கான முன்னகர்வைச் செய்துவிட்டு தாக்குதலுக்காய் வகுப்புக்குப் போனோம். வகுப்பு ஆரம்பிக்கும்போது கடிதத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டான் நண்பன். வகுப்பின் நடுவில், அந்தப்பெண்ணைப் பார்த்தால் அவசரம் அவசரமாய் ஏதோ எழுதிக்கொண்டிருந்தது தெரிந்தது. ஆகா நண்பா, வெற்றி மேல வெற்றிதான் என்று ஜெயப்பேரிகை முழங்காத குறையில் நாங்கள் அனைவரும் வகுப்பில் உற்சாகத்தில் இருந்தோம். வகுப்பு முடிந்தவுடன் என்னைச் சந்திக்க விரும்புவதாய் அந்தப்பெண் விரும்புவதாய், எனது நண்பிகள் மூலம் எனக்கு தகவல் சொல்லப்பட்டது.


வகுப்பு முடிந்தவுடன் அந்தப்பெண் நடந்துவந்த வேகத்தைப் பார்த்தபோது இரண்டு அடி எனக்குத் தராமல் நடையை நிறுத்தமாட்டார் போலத்தான் தெரிந்தது. என்றாலும், கடிதம் எழுதியது எனக்காக இல்லைத்தானே, எனவே அடி எனக்கு விழாது என்பதில் உறுதியாய் இருந்தேன். 'உம்மை ஒரு தம்பி மாதிரி நினைதேன். நீரே அவனுக்கொரு கடிதம் எழுதிக்கொடுத்து இருக்கின்றீர். உமக்கே இது சரியா இருக்கிறதா?' என்று அந்தப்பெண் நேராய்க் கேட்டார். அங்கே நின்று அதிக நேரம் கதைக்கமுடியாது என்பதால், வகுப்பில் இடைநடுவில் எழுதிய நீண்ட கடிதத்தை என்னிடம் தந்தார். அதில் அவர் தனது தம்பி ஒருவரை சிலவருடங்களுக்கு முன் தான் இழந்திருக்கின்றார் என்றும் பிற குடும்பக்கஷ்டங்களையும் எழுதியிருந்தார். அதனாலேயே என்னவோ ஒருவருடம் பிந்தி எங்களோடு படித்துக்கொண்டிருந்தார். அவர் தன் நிலை பற்றி எழுதிய அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் மிகவும் கவலையாகி விட்டது. நன்றாய் நகைச்சுவையுடன் கதைத்துக் கொண்டிருந்த நண்பனின் நகைச்சுவைக் குணம் அதற்குப் பிறகு சற்றுக் குறைந்திருந்தாலும் அவன் இந்த விடயத்தை பெரிதுபடுத்தாமல் இலகுவாய் எடுத்துக்கொண்டு நகர்ந்துபோனது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

3.
இப்படி இந்த விடயம் சுமூகமாய் முடிந்தாலும் எனக்கு இன்னொரு பிரச்சினை ஆரம்பிக்கத் தொடங்கியது. ஏற்கனவே 'கவிதைகள்' எழுதுபவன் என்று சிலருக்குத் தெரிந்ததுடன், இப்படி காதல் கடிதம் நண்பனுக்கு எழுதிகொடுத்ததும் தெரியவர, என்னை விட வயது கூடிய சில மாணவர்கள் வந்து, தங்களுக்கும் காதல் கவிதைகள் எழுதத் தரச் சொல்லி, கேட்கத் தொடங்கினார்கள். சிலரைச் சமாளித்து தப்பினாலும், பலர் பயங்கரமான முரடர்களாய் இருந்தார்கள். கொழும்பில் அப்போது குழுக்களாய் இருந்த பாடசாலைக் காங்குகளில் இருந்தவர்களில் சிலரும் அடங்குவார்கள். எழுதித் தரமுடியாது என்றால் இர‌ண்டு த‌ட்டாவ‌து த‌ட்டாம‌ல் விட‌மாட்டார்க‌ள்  என்பது மட்டும் வெள்ளிடை மலைத் தெளிவாய்த் தெரிந்தது. 'அண்ணை, நான் நட்புக்கவிதைகள்தான் எழுகின்றனான் (உண்மையில் அப்படித்தான் அந்த வயதில் எழுதிக்கொண்டிருந்தேன்), காதல் கவிதைகள் எல்லாம் எழுதுவதில்லை என்றபோது, 'சரி இப்போது அதையும் எழுதத் தொடங்கு' என்று சொல்லிவிட்டார்கள். 'கவிதை' எழுத வந்த என் விதியை நொந்தபடி சிலருக்கு 'காதற்கவிதைகள்' எழுதிக்கொடுத்திருக்கின்றேன். நிச்சயம் எந்தப் பெண்ணும் அந்தக் கவிதைகளால் வசீகரிக்கப்பட்டிருக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. எனென்றால் அப்போது மு.மேத்தா போன்றவர்களின் 'எழுது எழுது எனக்கொரு கடிதம் எழுதும் என்னை நேசிக்கின்றேன் என்று எழுதாவிட்டாலும் வேறு ஒருவரையும் நேசிக்கவில்லை என்றாவது எழுது' போன்ற 'அற்புத கவிதைகளில்' மயங்கிக் கிடந்த காலம். 'போடா போடா விசரா, எழுதிறன் எழுதிறன் ஒரு கடிதம். வேறு யாரை நேசித்தாலும் உன்னை மட்டும் நேசிக்கவில்லை என்றாவது ஒரு கடிதம் உனக்கு எழுதித் தாறன்' என்றுதான் அந்தப் பெண்கள் கூற விரும்பியிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.



உயர்தரம் படித்து முடியும்வரை காதலிப்பதில்லை என்பதில் 'தெளிவாய்' இருந்தேன். ஆனால் வகுப்புகளுக்கு வரும் பெண்களைப் பார்த்து சலனமடைவது அன்று மட்டுமல்ல இன்றுவரை தொடர்கிறது (முன் ஜென்மத்தில் செய்த புண்ணியமாக்கும்). இப்படி சலனமடையச்செய்யும் பெண்களைப் பற்றி எனது நண்பிகளிடம் விசாரித்தால், அவர்களும் அந்தப்பெண்களின் பூர்விகம், எந்தப் பாடங்கள் நல்லாய்ச் செய்வார்கள், என்னவாய் எதிர்காலத்தில் வர விரும்புகின்றார்கள், தங்களோடு அந்தப் பெண்கள் எப்படி பழகுவார்கள் என்று எல்லாம் விபரமய் எழுதித் தருவார்கள். ஆனால் கடிதத்தை முடிக்கும்போது மட்டும், உனக்கு இவர் சரிவரமாட்டார் போலத்தான் கிடக்கிறது என்ற ஒரு அடிக்குறிப்பை மட்டும் மறக்காமல் எழுதிவிடுவார்கள். நானும் எதிர்காலத்தில் எனக்கும் பிறருக்கும் உதவுமே என்ற நல்லெண்ணத்தில் எனது databaseஐ update செய்துகொண்டிருப்பதில் சளைக்காமல் இருப்பேன். அந்தச் சமயத்தில் 'ஆசை' படம் வெளிவந்திருந்தது. 'கொஞ்ச நாள் பொறு தலைவா' பாடலை எப்போது கேட்டாலும் தங்கள் நினைவு வரவேண்டும் என்று அடிக்கடி இந்தத் தோழிகள் கூறுவார்கள். வஞ்சிக்கொடி வர காத்திருக்கவேண்டிய கொஞ்ச நாள் என்பது எத்தனை நாள்கள் என்று அப்போது கேட்டுத் தெரிந்திருக்கலாம். இல்லாவிட்டால் அந்தப்பாட்டைக் கேட்டபடி வருடக்கணக்காய் கனவுகளில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை எனக்கு வந்திருக்காது.

4.
அந்த வகுப்புக்களில் எனக்குக் கிடைத்த இந்த இரு நண்பிகளைப் போல மறக்கவே முடியாத இன்னொருவர் எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர். அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர். இரண்டிலும் தடுமாறும்/தடுமாறிய என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளைப் பார்த்து,  'உங்களுக்கெல்லாம் இரண்டிலும் அரைகுறை' எனபார். மிகவும் பிடித்த ஆசிரியர். எதையும் அவரோடு தயங்காமல் பேசலாம்; என்னோடு ஒரு நண்பரைப்போலப் பழகியவர். ஆங்கிலத்தில் எப்படி ஒரு வாக்கியம் அமைப்பது என்பதை அவரிடம்தான் முதன்முதலில் அறிந்து கொண்டேன். யாழில் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டாலும், பாடப்புத்தகங்களுக்கு அப்பால் போகாமல் நிறுத்தி விடுவார்கள். நாங்களும் புத்தகத்தைக் கொஞ்சம் பாடமாக்கி ஆங்கிலத்தில் ஏதோ எழுதித் தப்பிவிடுவோம். எப்படி தமிழில் ஒரு கட்டுரையை என்னுடையபாட்டில் எழுதமுடியுமோ அப்படி எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவில் என்பாட்டில் கட்டுரைகளை எழுதலாம் என்று நம்பவைத்து எழுதச்செய்தவர் அந்த ஆசிரியர். வீட்டில் பொங்கல், வருசப்பிறப்பு, நவராத்திரி இன்னபிற விழாக்களுக்காய்ச் செய்யப்படும் உணவுகளை அவருடன் பகிர்ந்தபடி ஆறுதலாய்ப் பேசிய பொழுதுகள் அருமையானவை. அவருடைய வகுப்பு என்றால் எதையும் கதைக்கலாம். ஒரு நாள் வாத்தி என்னிடம் 'உனக்குப் பிடித்த நடிகை யார்?' என்று கேட்டார். அப்போது ரோஜாவும், மீனாவும் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலம். நான் உடனே ரோஜா என்று தயங்காமல் கூறினேன். வகுப்பு முடிந்து போகும்போது வகுப்பில் படிக்கும் ஒரு பெண் அருகில் வந்து, 'சே உம்மை நல்ல ஒரு பெடியன் என்று நினைத்திருந்தேன். நீர் மீனாவை சொல்லுவீர் என்று நினைத்தால். கவர்ச்சி காட்டி நடிக்கின்ற ரோஜாவைச் சொல்லிவிட்டீர்;. உம்மோடு எல்லாம் இனி கதைக்க முடியாது' என‌ச் சொன்னார்.. என்ன ஒரு பரிதாபமான நிலை!  ஒரு ரோஜாவுக்காய் இன்னொரு ரோஜாவை இழக்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு நாவில் புரண்ட சனியைத் தவிர வேறு எது காரணமாய் இருக்கமுடியும்? இப்போது யோசித்துப் பார்க்கும்போது, மீனாவைச் சொல்லியிருக்கலாமோ என்று யோசிக்க தோன்றுகின்றது. மீனாவைச் சொல்லியிருந்தால் அந்தப் பிள்ளையை இழந்திருக்காமல் இருந்திருக்கலாம். மேலும் மீனாவும், ரோஜாவைப் போலன்றி singleயாய்த்தானே யாரோ ஒரு தீவிர இரசிகருக்காய் காத்துக்கொண்டும் இருக்க‌வும்கூடும்.


friend2

5.
கொழும்பில் எங்கள் வீட்டில் ஆரம்பத்தில் ரீவி, விசிஆர் போன்றவை இருக்கவில்லை. அதனால் படம் பார்ப்பதென்றால் உறவினர் வீடுகளுக்குச் சென்றுதான் பார்க்கவேண்டும். ஒரு நாள் ஒரு உறவினர் வீட்டில் படம் பார்க்கப்போய் இருந்தேன். அவர்கள் வெளியே அவசரமாக போகவேண்டி இருந்ததால் என்னைப் படம் போட்டு பார்க்கும்படி கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். கொப்பிகளைப் பார்த்தால் அதில் பெயர் எழுதப்படாத ஒரு கொப்பி இருந்தது. சரி என்னதான் இருக்கிறதென்று போட்டுப் பார்த்தால், அது ஒரு adults only படம். தொடர்ந்து பார்க்க ஆசையிருந்தாலும், யாராவது வந்துவிடுவார்களோ எற பயத்தில் சில நிமிடங்களிலேயே நிறுத்திவிட்டேன். adults only movie பார்க்காதபோது அதைப் பார்க்கவேண்டும் போல இருந்த சுவாரசியம் அதைப் பார்த்தவுடன் போனது ஏனோ என்று பிறகு தெரியவில்லை. படத்தை நிறுத்திய பிந்தான் எனது மூளையும் விழிக்கத் தொடங்கியது. இப்படி ஒரு 'மகா பாவத்தை' செய்துவிட்டேனே என்ற அந்த வயதுக்குரிய பயம் வந்துவிட்டது. பிறகு இந்தப் பாவத்தை நீக்குவதற்காய் ஒருகிழமை தொடர்ந்து கோயிலுக்குப் போயிருக்கின்றேன். ஆனால் Savoy போன்ற adults only movie தியேட்டர்களில் படம் பார்ப்பதற்காய் வரிசையில் நிற்பவர்களைப் பார்க்கும்போது இவர்கள் இப்படித் 'தெளிந்து' வர எத்தனை முறை கோயிலுக்குப் போயிருப்பார்கள் என்று யோசித்திருக்கின்றேன். ஒரு நாள் பாடசாலையில் ஒரு நடிகையில் (ஹொலிவூட்டாய் இருந்திருக்கவேண்டும்) பெரிய floor-up நிர்வாணப் படத்தை நண்பர்கள் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்னையும் பாரடா என்று அவர்கள் கேட்க, ஏறகனவே ஒரு கிழமை கோயிலுக்கு அலைந்த நினைவு வர, வேண்டாமடா வினை என்று தவிர்த்துவிட்டேன். நான் எதோ 'நல்ல பெடியன்' முகமூடி போடுகின்றேன் என்று அவங்களுக்குத் தெரிந்ததோ என்னவோ, அவங்களும் வேணும் என்று, 'ஆகா நல்லாயிருக்கிறது', 'super' என்று படதைப் பார்த்து comments செய்துகொண்டிருந்தாங்கள். என்றாலும் பம்பலப்பிட்டி பிள்ளையாரைத் தினம் போய்த் தொந்தரவு செய்யக் கூடாது என்பதில் மிக உறுதியாய் இருந்ததால் அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன். நண்பர்களிடம் யார் அந்த நடிகை என்றாவது கேட்டிருக்கலாம் என்று இப்போது கொஞ்சம் கவலையாய் இருக்கிறது.


ஏற்கனவே குறிப்பிட்டமாதிரி, பெண்களோடு சும்மா நின்று கதைப்பதே பெருங்குற்றமாகப் பார்க்கப்பட்டது அல்லது கதைப்பவர்கள் எல்லாம் காதலிப்பவர்களாய் இருப்பார்கள் என்பதுதான் பலரின் பொது அபிப்பிராயமாய் இருந்தது. நான் ஒரு முறை வகுப்பு முடிந்து நண்பிகளிடம் கதைத்துக்கொண்டிருந்தபோது, நிறுவன அதிபர் (மச்சான் உறவுமுறைப்படி) என்னைக் கழுத்தில் பிடித்து வெளியில் கொண்டுபோய் தள்ளிவிட்டது இன்னும் நினைவில் உண்டு. பிறகு எனக்குக் கூறுவதற்குப் பதிலாய் எனது நண்பிகளிடம், இவனிடம் நீங்கள் கதைத்தால் வகுப்புக்களுக்கு வராது செய்துவிடுவேன் என்று சொல்லப்பட்டதாயும் கேள்விப்பட்டேன். இப்படி சின்னச் சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் மகிழ்ச்சியான தருணங்களுக்கு குறைவில்லாது இருந்தது. அதுவும் முதன் முதலாய் ஜீன்ஸ் போட்டு வகுப்புக்கு வந்த பெண்ணை எங்களின் கடிகளால் கிட்டத்தட்ட அழுகின்ற வரைக்கும் கொண்டு வந்ததை நினைத்தால் இப்போது சற்று சங்கடமாய் இருந்தாலும் அந்த வயதுக்குரிய நிலையில் அது சந்தோசமாய் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இத்தனைக்கும் அந்தப்பெண் எனது நண்பர்களில் ஒருவரின் காதலியாக இருந்தவர். அதானால்தானோ கூட பகிடி செய்தமோ தெரியவில்லை. அவரும் தொடர்ந்து ஜீன்ஸ் அணிந்துகொண்டு வகுப்புக்களுக்கு வந்தது, எமது கடிகளைப் பெரிதுபடுத்தவில்லை போலத்தான் பிறகு தோன்றியது.


அதுபோல விஜயதசமி ஒன்றில் ஹொஸ்டலில் இருந்த பெண்கள் ஆடிய ஆட்டத்தை என்றைக்குமே மறக்கமுடியாது. அதுவும் இந்தப்பூனையும் பால்குடிக்குமா என்று வகுப்புக்களில் அமைதியாயிருக்கும் ஒரு பெண் (நாம் அவருக்கு சூட்டிய பெயர் பணிஸ்) 'முக்காலா முக்காப்பலாவுக்கு' நடனம் ஆடியது இன்றும் கண்ணுக்குள் நிற்கிறது. ஆண்கள் என்று நானும் இன்னொரு உறவுக்காரனும் மட்டுமே ஹொஸ்டல் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டோம். அதற்குக்காரணம் நாங்கள் ரீயூசன் அதிபருக்கு உறவினராய் இருந்தமையே. பெண்கள் நடனம் ஆடிவிட்டு எங்கள் இருவரையும் ஆடச்சொல்லிக் கேட்டார்கள். அவர்கள் ஆடிய நடனங்களைப் பார்த்து, ஆட்டத்தின் அரிச்சுவடி எதுவுமே தெரியாத எனக்கே ஆடவேண்டும் போல் கால்கள் உதறினாலும், இப்படி பெண்களின் முன் அவமானப்பட்டு மட்டும் விடக்கூடாது என்பதில் மட்டும் தெளிவாய் இருந்தேன். ஏதோதோ காரணங்கள் எல்லாம் சொல்லிச் சமாளித்துக்கொண்டிருந்தோம். உண்மையான 'உண்மையை' அந்தப் பெண்கள் எங்கள் பேச்சைப் பார்த்தே அறியாமலா இருந்திருப்பார்கள்?
freind4


6.
எனது மாமியொருவர் தெஹிவளைக் கடற்கரையையொட்டிய இடத்தில் வசித்துக்கொண்டிருந்தார். கடற்கரைக்கு அருகில் முளைத்திருக்கும் தாழைகள், பாதிரிமரங்களுக்கருகில் காதற்சோடிகள் மத்தியான வெயில்,மழை என்று எல்லாம் பார்க்காது உட்கார்ந்திருப்பார்கள். எங்களின் (எனதும் என் வயதொத்த மச்சான் ஒருவனின்) பொழுதுபோக்கு என்னவென்றால் அவ்வாறு ஆழமாய் காதலித்துக்கொண்டிருக்கும் சோடிகளுக்கு கல்லெறிந்து இயல்பு நிலைக்கு வரச்செய்வது. ஆனால் நாங்கள் எங்கள் முயற்சிகளில் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருப்போம். அனேகமான சோடிகள் ஏதோ நுளம்பு கடித்தது மாதிரி திரும்பிப்பார்த்துவிட்டு காதல் கடிவாளத்தைத் தட்டிவிட்டபடி இருப்பார்கள். இப்படி அடிக்கடி தண்டவாளத்தருகில் நடக்க ஆரம்பித்ததன் உண்மைக்காரணம் புரிந்ததோ என்னவோ, பிறகு மாமி எங்களை அந்தப்பக்கம் போகவிடுவதில்லை. காத‌ல‌ர்க‌ளுக்கு கல்லெறிந்த பாவந்தான் இப்போதும் என்னை விடாது துரத்துகின்றது போல. அப்போதே அந்தச் சோடிகளில் எவரிடமாவது, 'ஒரு காதலில் வெற்றிபெற என்னவெல்லாம் செய்யவேண்டும்?' என்று கேட்டிருந்தால் நான் இப்படி அவலநிலையில் நின்று எழுதிக்கொண்டிருக்க நேர்ந்திருக்காது. ஆகக்குறைந்து ஒரு காதல் துணை கிடைக்காவிட்டாலும், 'கடற்கரையில் நுளம்பு கடிக்கும்போதும், கல்லெறி விழும்போதும் விடாது காதலிப்பது எப்படி?' என்று மணிமேகலைப் பதிப்பகத்தை ( இன்னொரு பதிப்பகமும் நினைவுக்கு வருகின்றது) கொண்டு புத்தகம் வெளியிடச் செய்து பிரபலமான எழுத்தாள‌ர் ஆக‌வது ஆகியிருக்கலாம்.


வாழ்க்கையில் எவ்வளவு அருமையான பெண்களைச் சந்திந்திருக்கின்றேனோ அதுபோல சில பெண்களை வாழ்க்கைப் பாதையில் சந்திருக்காமலிருந்திருந்தால் மிகவும் நனறாக இருந்திருக்கும் என்றும் நினைத்திருக்கின்றேன். பெண்களைப்பற்றிய எனது புரிதல் இந்த இரு தோழிகளிடமிருந்துதான் ஆரம்பிக்கின்றது. அக்காவுடன் சேர்ந்திருந்த காலங்கள் என்பது மிகவும் குறைவு என்றாலும் தொலைவிலிருந்தபடி ஒரு ஆளுமையாக அக்கா எனக்குள் அமர்ந்திருக்கின்றார் என்பதையும் மறுக்கமுடியாது. இந்த நண்பிகளை எனது பதின்மத்தில் பெறாதிருந்தால் பெண்கள் பற்றிய எனது புரிதல் நிச்சயம் வேறு திசையில் நகர்ந்திருக்கும் என்றுதான் உறுதியாய்க் கூறுவேன். வாழ்க்கையில் பிறகு சில crushes வந்தாலும் இந்தப்பெண்கள் மீது எனக்கோ அல்லது அவர்களுக்கோ எந்த crushesம் வராதது, நட்பு நட்பாய் மட்டும் இருக்கவும்முடியும் என்பற்கு ஒரு சின்னச் சாட்சி. அண்மையில் உரையாடிய ஒரு பெண்மணி, எனது எழுத்துக்களில் பெண்களின் ஆக்கிரமிப்புத்தான் அதிகம் தெரிகிறது என்று (பிழையான அர்த்தத்தில் சொல்லவில்லை) சொல்லியதும் அதுபோல எனது பதிவுகளை வாசிக்கும் எனது குடும்ப அங்கத்துவர் ஒருவர், ஆண்கள் மட்டும்தான் இந்தச் சமூகத்தில் தவறு செய்கின்றார்கள் என்ற அர்த்தம் வரும்படி உனது எழுத்துத்தொனி இருக்கின்றது என்று கூறியதும் நினைவுக்கு வருகின்றது.  இதற்கு என்ன காரணமாய் இருக்கும் என்று நானும் யோசித்துப் பார்த்திருக்கின்றேன். சிலவேளைகளில் எனது முக்கிய பருவங்களில் எனது குடும்பத்திலோ அல்லது நெருங்கிய உறவுகளிலோ பெண்களை நேரடியாகச் சந்திக்காததால் வந்த பாதிப்பாய் இருக்கலாம் அல்லது எனது பதின்மத்திலிருந்து இன்றுவரை பல அரிய தோழிகள் கிடைத்துக் கொண்டிருப்பதுவும் முக்கிய காரணமாயிருக்கலாம்.


(ஆங்கில ஆசிரியர், அருள்எம்பெருமானுக்கு.......)

Tuesday, September 26, 2006

யசோதரா

புத்தரைப் பின் தொடரும்
தியானம் பூசிய
வாழ்வுத்தெருவில்
தற்செயலாய்ச் சந்தித்தேன்
பிரிய யசோதராவை
ஒரு மூலைக்கடையில
சேலைக்குப் பதிலாய்
short skirt அணிந்திருந்தாள்
இயல்பைமீறி அழகுசாதனங்கள்
அலங்கோலப்படுத்தினாலும்
மறந்துவிடாதிருந்தாள் புன்னகைப்பத
வெள்ளைத்தோலுடன் மண்ணிறக்காரனுக்கு
என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறதெனும்
வன்மம் ஒளிரக்கண்டோம்
அப்பொழுதில் தெருவைக்கடந்துபோன
காவற்துறையின் விழிகளுக்குள்ளும
ஒரு அகதியின் துயரங்களை
போரின் சிதைவுகளை
அவளுடன் பகிரப் பகிர
மனது குழைந்து
ஓவியமாயிற்று இரவு
‘ஆணின்’ தனித்துவத்தை
இழந்துவிடாதிருக்கும் கவனத்துடன்
எனக்கான நேரத்தை
முடக்குத்தெரு பெஞ்சில்
ஒதுக்கியமைக்கு நன்றியென
சில நோட்டுக்களை நீட்டினேன்;
செய்யாத தொழிலுக்கு
சம்பளம் பெறுவதில்லையென
மறுத்தாள் அதட்டிய குரலில்.
பின்
அவ் நெடுமிரவில்
கண்கள் கூசா வெளிச்சத்தில்
கிரீக் உணவும் வைனும்
பகிர்ந்துகொண்டிருக்கையில்
தன் உணர்வுகளை
சிகரெட் புகைக்குள் மறைத்தபடி
எங்கள் காயங்களும் வெறுமைகளும்
வேறுவிதமானவை
உனக்குப் புரியாதென்றாள்
விழிகளை ஆழ ஊடுருவியபட
சொல்லாத வலியின்
மெளனந்தாக்க
தியானங்கலைந்து
வனம் நீங்கி
பதட்டத்துடன்
தன் இல்லம் மீளக்கண்டேன்
புத்தரை
பின்னொருபொழுதில்.

தை 26, 2006

Magic Seeds by V.S.Naipaul

-நாவல் பற்றிய சில குறிப்புகள்-
(1)
மத்திய வயதிலிருக்கும் விலி சந்திரனின் (Willie Chandran) வாழ்க்கையின் ஒரு பகுதியை இந்நாவல் கூறுகின்றது. இந்தியாவில் பிறந்து படிப்பின் நிமிர்த்தம் இங்கிலாந்து சென்று, அங்கே போர்த்துக்கீசியய பின்புலமுள்ள ஒரு பெண்ணைத் திருமணஞ் செய்து, பதினெட்டு வருடங்கள் ஆபிரிக்காக்கண்டத்தில் வசித்த விலி சந்திரன், உரிய அனுமதியின்றி ஜேர்மனியிலுள்ள தனது சகோதரி சரோஜினியுடன் தங்கி நிற்பதுடன் நாவல் ஆரம்பிக்கின்றது. சரோஜினி மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தும் திரைப்பட முயற்சிகளில் ஈடுபாடுடையவர்.அவ்வாறான செயற்பாடுகளால் பல (இடதுசாரி) தலைமறைவு இயக்கங்களுடன் நேரடித்தொடர்புகளும் உடையவர்.
வாழ்க்கையின் பெரும் பகுதியை நோக்கமில்லாது கழித்து mid-life crisisல் அவதிப்படும் சந்திரனை, இந்தியாவுக்குச் சென்று அங்கே ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடும் ஒரு இயக்கத்துடன் இணைந்து செய்ற்படக சரோஜினி ஆலோசனை கூறுகின்றார். சந்திரனுக்கு தனிப்பட்ட ரீதியாக எந்த அடக்குமுறைக்கும் பாதிக்கப்படாதுவிட்டாலும் ஒருவித ஆர்வத்த்தாலும், வாழ்க்கையின் வெறுமையாலும் இந்தியாவுக்குச் சென்று ஒரு இயக்கத்துடன் இணைகின்றார்.
சந்திரன் இந்தியா சென்று இயக்கமொன்றில் சேர்கின்றபோது, சரோஜினி வழிகாட்டிய இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டு இருக்க, சந்திரன் பிரிந்த இருகுழுக்களில் ஒன்றில் இணைகிறார். ஆனால் அது இவர் நினைத்த தலைமையின் கீழ் இயங்கிய (கண்டபலியின் கொள்கைகளுக்கு) நேர்மாறாக இருப்பதைக் கண்டு சலித்தாலும் வேறு வழியில்லாது அவர்களுடன் இணைந்து போராடுகின்றார். ஆரம்பத்தில்- பொலிஸ் பதிவுகள்- எதுவுமில்லாததால் ஒரு தகவலாளியாக இயக்கத்துக்குச் செயற்படுகின்றார். வேறு இரகசிய இடங்களிலிருந்து வரும் ஆயுதங்களை இயக்கத்தின் கரங்களுக்கு மாற்றவும், நிதியைச் சேகரிக்கவும் இன்னொரு போராளியுடன் நகரத்தில் சில வருடங்களைக் கழிக்கின்றார்.. பிறகு பொலிஸ் சந்திரனின் நண்பரைக் கைதுசெய்து, சந்திரனுக்கும் வலைவிரிக்க, நகரை விட்டு நீங்கி, இயக்கத்தின் தலைமை இருந்த காட்டுக்குள் இருந்து செயற்படத் தொடங்குகின்றார். இவர் சார்ந்த இயக்கத்தில் இருப்பவர்கள் அனேகர் இவரைப் போல மத்திய வயதில் இருப்பவர்களாகவும்- சிலர் இயக்கத்தில் 30,40 வருடங்கள் இருப்பவர்களாயும்- என்றோ ஒரு நாள் தாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் புரட்சி நிகழ்ந்துவிடும் என்ற கனவை இறுகப்பற்றிப் பிடித்தவர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு உயர் சாதிக்காரர்கள் இயக்கத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களாகவும், தீர்மானங்களை எடுப்பவர்களாய் இருப்பதுவும் சந்திரனுக்கு ஆச்சரியமளிக்கிறது.
நகரங்களுக்கும் தங்கள் செயற்பாடுகளை விரிவாக்கவேண்டும் என்று விரும்பிய இயக்கத்தின் தீர்மானம், அரசு, பொலிஸ் போன்றவற்றின் கண்காணிப்பால் மாற்றமடைகிறது. தாங்கள் தங்கியிருக்கும் காடுகளை அண்டிய கிராமஙகளை முதலில் மீட்டெடுத்து அங்கிருக்கும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு நாடு முழுதும் புரட்சியை விரிவாக்க திட்டதை மாற்றி அமைக்கின்றனர்.
இயக்கம் பண்ணையாட்களிடம் இருந்து நிலங்களை மீட்டெடுத்து ஒடுக்கப்பட்டவர்களுக்காய் கொடுத்தாலும், அவர்கள் காலம் காலமாய் பழக்கப்பட்ட பழக்கத்திலிருந்து மாறமுடியாது, இது பண்ணையாட்களின் நிலம் எங்களால் பயிரிடமுடியாது என்று ஒவ்வொருமுறையும் கூறிக்கொள்கின்றனர். இவர்களை, ஆயுதங்களை வைத்து மிரட்டினால்தான் மாறுவார்கள் என்றும், பொலிஸை சுட்டுக்கொன்றால்தான் இயக்கம் என்ற ஒன்று இருக்கிறது என்று நமபுவார்கள் என்றும் சந்திரன் தனக்குள் அலுத்துக் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் சந்திரன் இயக்கத்தை விட்டு இன்னொரு தோழருடன் தப்பியோடி பொலிஸில் சரணடைகின்றார். தனக்கு சொற்ப சிறைத்தண்டனையே கிடைக்கும் என்று நம்பிய சந்திரனுக்கு பத்து வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட சந்திரன் சோர்வும் வெறுமையும் அடைகிறார். இதற்கிடையில் இவரது சகோதரியும் தங்கள் தகப்பன் மரணத்தின் விளிம்பில் இருப்பதைக்கண்டு இந்தியாவுக்கு வருகின்றார். பிறகு தந்தையாரும் இறந்துவிட, அவர் நடத்திய ஆச்சிரமத்தை நடத்தப்போவதாயும் இனி இந்தியாவில் தங்கப்போவதாயும் சிறையிலிருக்கும் சந்திரனுக்கு சரோஜினி கூறுகின்றார்.
இலண்டனில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சந்திரன் வெளியிட்ட ஒரு புத்தகத்தின் பதிப்பாளரின் உதவியால், குறைந்த கால சிறைத்தண்டனையுடன் சந்திரன் விடுதலையாகின்றார். பிறகு தனது கடந்தகால கசப்பான நினைவுகளைத் தாங்கிக்கொண்டு இங்கிலாந்திலிருக்கும் நண்பரொருவரின் வீட்டில் சென்று தங்குகின்றார்.
அங்கே அந்த நண்பருடன் நடைபெறும் நீண்ட உரையாடல்களும், வாழ்க்கை என்பது என்ன என்ற மாதிரியான கேள்விகளளுககு விடைகளைத் தேடுவவதாயும், அந்த நண்பரின் மனைவியுடன் (தகாத) உறவும் புதியவேலையும், முதலாளித்துவ உலகைப் புரிந்துகொள்வதுமாயும் நாவல் நீள்கிறது.
(2)
ஆரம்பத்தில் சுவாரசியமாகப் போகும் நாவல் பின்பகுதியில் மிக மெதுவாக நகர்ந்து, தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தை குறைக்கிறது. கவனமாக உற்றுப்பார்த்தால், வாசகர்களை ஆரம்பத்தில் எந்த அபிப்பிராயங்களை உருவாக்காமல் நாவலுக்குள் இழுத்துவிட்டு, அத்தியாங்கள் நீள நீள தனது வலதுசாரிக் கொள்கைகளை நாவலின் ஆசிரியன் திணிக்கத் தொடங்குவது கண்கூடு. நாவலின் ஆரம்ப அத்தியாயத்தில் ஜேர்மனியில் இருக்கும் தமிழர்கள் வ்ருகின்றார்கள். சந்திரனும் சரோஜினியும் மூன்றாம் உலகநாடுகளின் (தேசிய) போராட்டங்களைப் பற்றி உரையாடும்போது, ரோசாப்பூக்களை விற்கும் தமிழனைப் பார்த்து இந்த ரோசாப்பபூக்கள் எல்லாம் இவர்களின் நாட்டில் ஆயுதங்களாய் மாறும் என்ற மாதிரி சரோஜினி கூறினாலும், விமர்சனங்களை மீறி அவர்கள் போராடுவதற்கான நியாயங்களும் காரணங்களும் இருக்கின்றன என்கிறார். நாவலின் நீட்சியில் நாவலாசிரியர் தனது சொந்தக்கருத்துக்களை கதாபாத்திரங்களில் திணித்தாலும், சரோஜினியை ஒரு இடதுசாரி நம்பிக்கை உள்ள ஒருவராக அடையாளப்படுத்துவதால், தமிழர் போராட்டம் அரையும் குறையுமான மேற்கத்தைய புரிதல்களிலிருந்து தப்பிவிடுகின்றது.
வாழ்க்கையின் அரைவாசிக்கும் மேற்பட்ட காலத்தை வெளிநாடுகளில் வசித்த ஒருவர், முறையான காரணங்கள் இன்றி இந்தியாவுக்கு போராடப்போவதும், எந்தக் கேள்வியும் இல்லாது அவரை இயக்கம் ஏற்றுக்கொள்வதும், ஊர்/நகர மக்களும் வித்தியாசம் காட்டாது இயல்பாய் பழகுவதும் நாவலில் மட்டுமே நடக்ககூடிய விடயம். நாவலாசிரியர் ஒரு தெளிவான காரணத்தைக் காட்டாது சந்திரனின் பாத்திரத்தை -ஏதோ ஷொப்பிங்கு போவதுபோல- போராடவும் போவதாய் காட்சிப்படுத்தும்போதே நாவலின் சரிவும் ஆரம்பித்துவிடுகின்றது. எப்படி தங்கள் கொள்கைகள், கருத்துக்களை பரப்ப ஒரு கதைக்களன் தேவைப்படுகின்றதோ, அப்படியே நைபாலும் தனது நம்பிக்கைளை விதைக்க நைபாலும், சந்திரன் என்ற முக்கிய பாத்திரத்தையும், இந்தியத் துணைக்கண்டத்தையும் பயன்படுத்திக்கொள்கிறார் (இப்படி தனது நம்பிக்கைகளைத் திணித்து நாவலாய் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் நாவாலசிரியர் ஒருவரும் ஞாபகத்துக்கு வருவதை இந்தக்கணத்தில் தவிர்க்கமுடியவில்லை).
இங்கிலாந்தில் வாழும் வாழ்வுதான் யதார்த்தமான வாழ்வு எனவும், தத்துவங்களால், புரட்சிகளால் ஆகப்போவதில்லை ஒன்றுமில்லையெனவும் இறுதியில் நாவலை முடித்துவிடுகின்றார் நாவலாசிரியர். தனது தந்தை ஏழை மக்களுக்காய் நடத்திக்கொண்டிருந்த ஆச்சிரமத்தை தன்னால் தொடர்ந்து நடத்த முடியாது இருக்கின்றதென சரோஜினியும் முடிவில் நம்பிக்கை இழந்துவிடுகின்றார். ஆரம்பத்தில் கட்டியமைக்கப்படுகின்ற அனைத்து நம்பிக்கைகளும் இறுதியில் தகர்ந்துவிடுவதாய்க் காட்டுவது தனி மனிதர்களின் வீழ்ச்சி என்பதைவிட, மூன்றாம் உல நாடுகளில் எதையும் செய்தல் சாத்தியமில்லை என்ற தொனிதான் எல்லாவற்றையும் மீறி ஒலிக்கிறது. ரின்னாட்ட்டில் (Trindnad) பிறந்து இங்கிலாந்தில் பெரும்பகுதியைக் கழித்து, பிரிட்டிஷ் இராணியில் செல்லப்பிள்ளை பரிசான நைற் (Knight) விருதைப் பெற்ற ஒருவரிடமிருந்து மூன்றாம் உலப்பிரச்சினைகளையும் அங்குள்ள மக்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதுகூட ஒருவகையில் தவறுதானோ.

(Thursday, March 16th, 2006 at 10:03 am )

‘உயிர்ப்பு' அரங்கப்பட்டறையின் மூன்று நாடகங்கள்

‘உயிர்ப்பு’ அரங்கப்பட்டறை மூன்று நாடகங்களைக் கடந்த சனிக்கிழமை யோர்க்வூட் நூலகத்தில் அரங்கேற்றியிருந்தது. அரங்கேற்றப்பட்ட ‘மீறல்களின் கடைசி யாத்திரை’, ‘விளையாட்டு’, ‘அதன் வருகைக்காய்’ ஆகிய மூன்று நாடகங்களையும் சுமதி ரூபன் என்ற படைப்பாளியே நெறியாள்கை செய்திருந்தார். முதலாவது நாடகமான ‘மீறல்களின் கடைசி யாத்திரை’யில், சமுகத்தால் ஒடுக்கப்பட்டு தனக்குள்ளும் ஒடுங்கிக்கிடக்கும் தனது தாயை மகள் அன்பான, ஒடுக்குமுறைகளற்ற, சட்டங்களென்ற தண்டிக்கும் கருவிகள் எதுவுமற்ற இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லப்பிரியப்படுகின்றார். சடங்குகளாலும், மரபின் தளைகளாலும் தண்டிக்கப்பட்டு ‘விதவை’ என அடையாளப்படுத்தப்படுகின்ற தனது தாயை, மகள் அவையெதுவும் பிணைக்காத இயல்பான உலகமொன்றிற்கு அழைத்துச் செல்ல முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அத்தாய் ஏதோவொரு காரணங்காட்டி நிராகரிப்பதாகவும், இறுதியில் மகளுடன் அந்த இன்னொரு உலகை நோக்கி நகர்வதுமாகப் பிரதி எழுதப்பட்டிருக்கின்றது. ஒரு யூற்றோப்பியா (utopia) சமூகத்தைக் கற்பனாவாதமாய் சிருஷ்டித்திருக்கும் பார்வையைத் தந்தாலும், அவ்வாறான உலகம் எதுவுமில்லையென்பதை நெறியாள்கையாளரின் நாடகம் தொடங்குவதற்கு முன்னரான குறிப்பைக்கொண்டு பார்வையாளர் விளங்கிக்கொள்ளமுடியும். எனினும் அந்தக்குறிப்பை அலட்சியப்படுத்துமொரு தேர்ந்த இரசிகர், இறுதியில் உடைவதாய்க் காட்டப்படும் கற்பனாவாதத்தை இருவிதப் பின்னணிகளில் விளங்கிக்கொள்ள முடியும். உடைகின்ற உலகினை, மகள் சிருஷ்டித்த உலகின் வீழ்ச்சியாகவோ அல்லது அத்தாய் வாழ்ந்த -ஒடுக்கப்பட்டிருந்த உலகின்- நிர்மூலமாகவோ எடுத்துக்கொள்ளலாம். பிரதிக்குக்கு அப்பாலும் பார்வையாளர் மேலும் யோசிக்கின்றவெளியை இந்த நாடகம் தருகின்றதெனினும், ஒரு சிறுவட்டத்துக்குள்ளேயே தொடர்ந்து பாத்திரங்கள் சுழன்று கொண்டிருப்பது இந்நாடகத்தின் பலவீனம் என்றுதான் கூறவேண்டும். சற்றே திசை திரும்பினாலும் அலுப்பூட்டவும் தொய்ந்துபோகவும் கூடிய பிரதியை, இறுதிவரை நகர்த்திச் சென்ற நடிகர்களே இந்த நாடகத்தில் கவனத்துக்குரியவர்கள். அந்தவகையில் பவானியும், சத்தியாவும் பாராட்டுக்குரியவர்கள்.
இரண்டாவது நாடகமான ‘விளையாட்டு’, மேலைத்தேய நாடகப்பிரதியொன்றின் (இங்கிலாந்து நாடகாசிரியர் Anthony Shafferன் Sleuth) ஒரு தழுவல் வடிவமாகும். பெண் எழுத்தாளரொருவருக்கும், அவரது முன்னாள் துணைவருடன் தற்போது திருமணபந்தத்தில் இணைந்திருக்கும் இன்னொரு பெண்ணுக்குமிடையில் சிக்கல்களைச் சிதறவிட்டபடி இந்நாடகம் நகர்கின்றது. சற்று மனோநிலை பாதிக்கப்பட்ட எழுத்தாளர் பாத்திரம் தன்னையே சுயவிமர்சனம் செய்துகொள்வதாயமைந்த காட்சிகள் இரசித்துச் சுவைக்கக்கூடியவை. மனோவியாதி முற்றியநிலையில் அப்பெண் எழுத்தாளர், மற்றைய பெண்ணை விளையாட்டாகச் சித்திரவதைப்படுத்தி பிழைகளை உணரச்செய்வதும், இறுதியில் விளையாட்டுப் பொம்மையாகி வலி உணர்ந்த அதே பெண் எழுத்தாளர் பாத்திரத்தை நுட்பமாகப் பழிவாங்குவதுமாய் நாடகம் நிறைவுபெறுகிறது. நாடகத்தின் இடைநடுவில் சுட்டுக்கொல்லப்படுவதாய்க் காட்டப்படுகின்ற பெண், உண்மையில் சுட்டுக்கொல்லப்படுகின்றாரா அல்லது அதுவும் பெண் எழுத்தாளரைப் பீடித்துள்ள மனோவியாதியின் இன்னொரு விகாரந்தானாவென பார்வையாளர் தெளிவாக ஊகிக்கமுடியாதிருப்பது நாடகத்தின் பலவீனமாய்த்தான் தெரிகிறது. இங்கும் நாடகப்பிரதியின் பலவீனத்தை மீறி இரு அனுபவம் வாய்ந்த நடிகர்களான சுமதி ரூபனாலும், பவானியாலும் நாடகம் கட்டியெழுப்பப்படுகிறது. அதிலும் முக்கியமாக மேடையை அலட்சியப்படுத்தி ஒதுக்கி, அது பற்றிய பிரக்ஞை சிறிதுமின்றி இயல்பாய் நடித்திருந்த பவானியின் நடிப்பு விதந்து குறிப்பிடத்தக்கது. முதலாவது நாடகமான ‘மீறல்களின் கடைசி யாத்திரை’யிலும் பாத்திரமேற்று நடித்திருந்த பவானி, முன்னைய நாடகத்தின் சுவடுகள் எதுவுமின்றி வேறொரு பாத்திரமாய் உடனேயே மாறி சிறப்பாக நடித்திருந்தமை கவனிக்கத்தக்கது.
மூன்றாவது நாடகமான ‘அதன் வருகைக்காய்’, வெவ்வேறு காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொண்ட மூன்று தனிமனிதர்களைப் பற்றிப் பேசுகின்றது. ஒரு குடும்பப்பெண், பதின்மவயதுப் பெண், அறிவுஜீவிப் பெண் ஆகிய மூவர் சமூகத்தில் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் சமூகத்துடனான அவர்களது முரண்பாடுகள் குறித்து கவிதைகளின் புனைவுடன் சேர்ந்து இந்த நாடகப்பிரதி பேசுகின்றது. நாடகம் ஆரம்பமாகின்ற இடமே அருமையானது. பிணமாகிவிட்ட மூன்று பாத்திரங்களும் உயிர்த்தெழுந்து செம்மஞ்சள் நிறத்துடனான (இங்கே மரணம் படிமமாக்கப்படுகின்றது) பொருளொன்றை எதிர்பார்த்துக்காத்திருப்பதாய் அடிக்கடி உரையாடிக்கொள்கிறார்கள். இம்மூன்று பாத்திரங்களும் வெளியில் தாங்கள் மகிழ்வுடனிருப்பதாய்க் கூறிக்கொண்டாலும், ஆழமான கேள்விகளின் நீட்சியில் தமது மனதின் வெறுமையை உணர்ந்து தாம் உண்மையில் சந்தோஷமாய் இல்லையென்பதைத் தங்களளவில் உணர்கின்றார்கள். வளரிளம்பெண்ணினுடாக வெகுசன ஊடகங்கள் கற்பிக்கின்ற உடல் அளவுகள்/அழகுகள், மாதாந்திர உடற்பிரச்சினைகள், ஆண் துணைகளைத் தேடிக்கொள்ளும் சிக்கல்கள் என்பவற்றை மிக நேர்த்தியாக நெறியாள்கையாளர் கவனப்படுத்தியிருப்பார். அதேபோன்று தன்னைச் சமூகத்திலிருந்து விடுவித்துக்கொண்டு சமூகம் குறித்த விமர்சனங்களை முன்வைக்கின்ற அறிவுஜீவிப்பெண்ணினுடாக சில்வியா பிளாத், ஆன் செக்ஸ்டன், செல்வி, சிவரமணி, கலா போன்றவர்களின் கவிதைகள் வெளிப்படுத்தப்பட்டு மிக அழகாகப் பார்வையாளருக்கு வழங்கப்படுகிறது. எழுதப்பட்ட காலத்திலேயே சர்ச்சைக்குள்ளான கலாவின் கவிதையை பொதுத்தளத்தில் எந்த சங்கடமுமின்றி வெளிப்படுத்தி நடித்த தர்சினியும், அந்தக் கவிதையைப் பயன்படுத்திய சுமதி ரூபனும் பாராட்டுக்குரியவர்களே. இந் நாடகப்பிரதியின் தீவிரத்துக்கு நிகராய் அதன் பாத்திரங்களாய் இயல்பாய் மாறி நடித்த தர்சினியும், ஷாலினியும், யசோதராவும் புலம்பெயர் நாடகச்சூழலில் தேர்ந்த நடிகர்களாவார்கள் என்ற நம்பிக்கையைத் தருகின்றார்கள். இறுதியில் தாம் விரும்பிய செம்மஞ்சள் நிறத்தாலான மரணத்தைக்கண்ட இந்த மூன்று பாத்திரங்களும் மீண்டும் சவப்பெட்டிகளில் துயின்றுவிடத் திரும்பினாலும், நாடகம் முடிந்தபின்னும் பார்வையாளருக்குப் பலவித அதிர்வுகளைக் கொடுத்தபடியிருப்பதில் இந்தப் பிரதி வெற்றி பெறுகின்றது. இந்த நாடகத்தில்தான் நெறியாள்கையாளரும், பிரதியாளருமாகிய சுமதி ரூபன் தனிப்பட்ட கவனத்துடன் பிரகாசிக்கின்றார்.
நெறியாள்கையாளராக சுமதி ரூபனின் முதலாவது நாடக அரங்கேற்றம் இதுதானென (நான்) நினைக்கின்றேன். ஒரு நாடகமாயன்றி, மூன்று தனித்தனி நாடகங்களை ஒரே மேடையில் அரங்கேற்றுவதற்குக் கடுமையான உழைப்பும் அதிக நேரமும் தேவைப்பட்டிருக்கும். மேலும், ஒரு நாடகத்தின் சாயல் இன்னொரு நாடகத்தில் பிரதிபலிக்காமலிருப்பதற்கு நெறியாள்கையாளர் இயன்றளவில் முயன்றிருப்பதை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். நாடகப் பிரதிகள் பலவீனமாயிருக்கும் இடத்தில் திறமை வாய்ந்த நடிகர்கள் பிரதியின் பலவீனத்தைப் பார்வையாளருக்கு உணரச்செய்யாது அநயாசமாய் நடித்துப்போகின்றமையினால் நடித்த நடிகர்களும் கவனத்துக்குரியவர்களே. இந்த நாடகங்களைப் பார்க்கும்போது, நடிகரென்ற சுமதி ரூபனை விட நெறியாள்கையாளரென்ற சுமதி ரூபன் இனிவரும் காலங்களில் இன்னமும் பிரகாசிப்பாரெனும் நம்பிக்கை வேர்விடுகின்றது. அதிலும் திறமையான - இயல்பாகவே பாத்திரங்களுடன் ஒன்றிப்போய் விடுகின்ற - நடிகர்கள் சிலர் கிடைத்திருப்பதற்கு நெறியாள்கையாளர் என்றளவில் சுமதி ரூபன் நிறைவுகொள்ளலாம். நாடகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது பலவிடங்களில் அரங்க அமைப்பு மிக வெளியாகவும், நடிகர்களின் அசைவு இல்லாது பெரும்பகுதி வெறுமையாகவுமிருந்ததை இந்த நாடக அரங்கேற்றத்தின் முக்கிய பலவீனமாய்க் கொள்ளவேண்டும். அதுவும் முதலாவது நாடகமான ‘மீறல்களின் கடைசி யாத்திரை’யில் தாயும் மகளும் உரையாடுகின்ற அத்தனை சந்தர்ப்பங்களிலும் அரங்கத்தின் பெரும்பகுதி வெறுமையாகவேயிருந்தமை, பார்வையாளர்களை நாடகத்தோடு முற்றுமுழுதாக ஒன்றவிடாமல் தடுத்திருந்தது. மேலும், மூன்று நாடகங்களிலும் ஒரேவிதமான உரையாடல் (கிட்டத்தட்ட கேள்வி - பதில் முறையான) பயன்படுத்தப்பட்டதை இயன்றளவு தவிர்த்திருக்கலாம் (’அதாலை?’ ‘அதாலை? என்று ஒரு பாத்திரம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க, எதிர்ப்பாத்திரம் தொடர்ந்து உரையாடுவது ஒரு பொதுவான அம்சமாய் எல்லா நாடகங்களிலும் இடம்பெற்றிருந்தது). மூன்று நாடகங்களை ஒரே மேடையில் ஏற்றுவதன் சிரமங்கள் புரிந்தாலும், இலகுவில் விலத்தக்கூடிய இப்படியான விடயங்களைத் தவிர்த்திருந்தால் நாடகங்கள் இன்னும் செழுமை பெற்றிருக்கும். இத்தகைய சில பலவீனங்கள் காணப்பட்டாலும், அரங்கேற்றப்பட்ட மூன்று நாடகங்களும் பார்வையாளருக்கு நிச்சயமொரு மனநிறைவையும், பலவிதமான கேள்விகளின் அதிர்வுகளையும் கொடுத்திருக்கும். பெண் நெறியாள்கையாளர், அநேக பெண் நடிகர்களென (பின்னணியில் சில ஆண்கள் ஒலி/ஒளி மேடையமைப்பில் இருந்தாலும்) கிட்டத்தட்ட - பெரும்பான்மையாக - பெண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டதென்று இம்முயற்சியினை அடையாளப்படுத்த பங்குபற்றியவர்கள் விரும்பாதுவிட்டாலுமேகூட பெண்கள், பெண் பிரச்சினைகளென்று அவர்களை ஒதுக்கிவிடுகின்ற நமது சமூகத்தில் இவ்வாறான முயற்சிகள் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரக்கூடியவை.
நாடகங்களின் அரங்கேற்ற முடிவில் நடிகர்கள் நேரடியாகப் பங்குபற்றும் கலந்துரையாடல் நடந்தது. பல்வேறு வகையான விமர்சனங்களும், பாராட்டுக்களும் இந்நாடகங்கள் குறித்து முன்வைக்கப்பட்டன. நாடகமென்பது அனைவருக்கும் விளங்கக்கூடியவகையில் வழங்கப்பட வேண்டுமென்றும், இறுதியில் தெளிவான முடிவொன்றினைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் சிலர் விவாதித்தனர். எந்தப் படைப்பாளியும் தன்னைச் சுற்றி நிகழும் அநீதிகளுக்கு எதிராய் உடனடியாய் கேள்விகள் எழுப்பியிருக்கின்றாரா என்று கவனிக்கவேண்டுமே தவிர, அநீதிகளுக்கெதிரான தீர்வுகளையும் அவர்கள்தான் முன்வைக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது அவசியமற்றது. மேலும், கவிதை போன்ற படைப்புக்கள் மையத்துடனோ/தெளிவான கருத்துடனோ எழுதப்படுகின்ற காலங்கள் வழக்கொழிந்து வருகின்ற நிலையில் முடிந்த முடிவொன்றுடன் நாடகங்கள் அமையவேண்டுமென பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதும் நியாயமாகாது. எந்தவொரு சிறந்த படைப்பும் அதன் பிரதிக்கு அப்பால் இன்னுமொரு பிரதியை வாசகர் மனதில் உருவாக்குவதன் மூலமே வெற்றியடைகின்றது. அந்தவகையில் சுமதி ரூபனின் நாடகங்கள் நாடகம் முடிந்தபின்பும் சில கேள்விகளை எழுப்பிக்கொண்டிருப்பது நெறியாள்கையாளரினதும், நடிகர்களினதும், பிரதிகளினதும் வெற்றி எனத்தான் கொள்ளவேண்டும். இனிவரும் காலங்களில் ‘உயிர்ப்பு’ அரங்கப்பட்டறை இன்னும் சிறப்பான நாடகங்களைத் தருமென்ற நம்பிக்கையை இந்த மூன்று நாடகங்களும் பார்வையாளருக்கு விட்டுச்செல்வதுதான் இந்த மேடையேற்றத்தின் முக்கிய அடையாளம் எனலாம்.
(அரையும் குறையுமாய் எழுதிய இந்தப்பதிவை நேரமெடுத்து திருத்தித் தந்த நண்பருக்கு என் தனிப்பட்ட அன்பும் நன்றியும்.)

(Thursday, March 30th, 2006 at 10:26 am )

தபாலில் வந்த சொர்க்கம்

நியூ புக்லாண்ட்னினூடாக இணையத்தில் புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம் என்றறிந்தபோது காணாததைக் கண்ட கெலிதான் எனக்கு வந்தது. தமிழ்நாட்டு நண்பர்கள் சோற்றை ஒவ்வொரு கறிகளுடன் கறியுடன் சாப்பிடுவதுபோல கவிதைகள் தனிய, கட்டுரைகள் தனிய என்று ஓடர் செய்து விருந்துண்ணுவோம் என்று தீர்மானித்து, கவிதைத் தொகுப்புகள் எனக்கு; கட்டுரைத் தொகுப்புக்கள் உனக்கு; என்று எனக்கும் ஒரு நண்பருக்குமாய் சேர்த்து வாங்கியிருந்தேன்.
இன்று சொர்க்கம் தபாலில் வந்து சேர்ந்தது. நண்பருக்கு கிடைக்கமுன்னர் எனக்குக் கிடைக்கவேண்டும் என்ற அவாவில் சுண்டக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால்பணம் (மறந்திருந்த சொலவடையை ஞாபகப்படுத்திய அம்மாவுக்கு நன்றி) என்பதையும் அசட்டை செய்து, எனக்கு வான் மூலமும் அவருக்கு கப்பல் மூலமும் புத்தகங்கள கிடைக்க ஏற்பாடு செய்திருந்தேன்.
எனக்குக் கிடைத்த இன்பத்தைக் கண்டு நீங்களும் இன்புறுங்கள் என்பதற்காய் இந்தாங்கோ பிடியுங்கோ பட்டியல்…! (சிலருக்கு வயிற்றெரிச்சல் வரும் என்பதும் எனக்குத் தெரியும். என்ன செய்ய better next time என்று வாழ்த்தி உங்கள் கண்ணீரைத் துடைத்துவிடுகின்றேன் :-) ).

(1) கொலை மற்றும் தற்கொலை பற்றி - ரமேஷ்-பிரேம் (நம்மாளுகள் இல்லாமல் விருந்து விருந்தாகுமா?)
(2) உப்பு - ரமேஷ் - பிரேம்
(3) இரவு மிருகம் - சுகிர்தராணி
(4) அகி - முகுந்த் நாகராஜன்
(5) தவளை வீடு - பழனிவேள்
(6) கல் விளக்குகள் - என்.டி.ராஜ்குமார்
(7) நீலி - மாலதி மைத்ரி
(8) நீர் வெளி - அய்யப்ப மாதவன்
(9) நாகதிசை - ராணிதிலக்
(10) தந்துகி - ஆதவன் தீட்சண்யா
(11) பிறகொருநாள் கோடை - அய்யப்ப மாதவன்
(12) சொற்கள் உறங்கும் நூலகம் - யவனிகா சிறிராம்
(13) அரூப நஞ்சு - அழகிய பெரியவன்
(14) எதிர்ப்புக்கள் மறைந்து தோன்றும் இடம் - லக்ஷ்மி மணிவண்ணன்
(15) கடவுளின் நிறுவனம் - யவனிகா சிறிராம்
(16) வலியோடு முறியும் மின்னல்- ஜெ.பிரான்சிஸ் கிருபா
(17) அய்யப்பன் கவிதைகள் - என்.டி.ராஜ்குமார் (தமிழில்)
(18) மீண்டும் கடலுக்கு - சேரன் (நூலகம் இணையத்தளத்தில் கிடைக்கிறது)
(19) சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகள்-மூலமும் உரையும் - ந.முருகேச பாண்டியன்
(20) அதீதனின் இதிகாசம் - பிரேம்- ரமேஷ்
சும்மா உடனே மேலோட்டமாய் தொகுப்புக்களை புரட்டியபோது, இந்தப் பின்னட்டை எழுத்துக்கள் முகத்தில் அறைந்தன…
பறையர் சக்கிலியர் பள்ளர் சேரி
அல்லது
அம்பேத்கர் காலனியே
என் கிரகம் உலகம் நாடு
மாநிலம் மாவட்டம் வட்டம் ஒன்றியம்கூட
அவையே
அவற்றால் ஒதுக்கப்பட்டு
புறத்தே இருப்பவை எவையானாலும்
நானறியாதவை மற்றும்
நானறியக்கூடாதென்று நீங்கள் விரும்பியவை
-ஆதவன் தீட்சண்யா

(Tuesday, May 23rd, 2006 at 4:53 pm )

தமிழியல் மாநாட்டை முன்வைத்து…

-அங்கும் இங்குமாய் சில (தனிப்பட்ட) குறிப்புக்கள்-

(1)
சென்ற வெள்ளியிலிருந்து தொடர்ந்து மூன்று நாள்களாய் ரொரண்டோவில் தமிழியல்: திணையும் தளமும் நிலையும் என்ற தலைப்பில் மாநாடு நடந்தேறியது. மூன்றாம் நாள் பிற்பகல் அமர்வில், ஈழத்து இலக்கியம்: படைப்பின் கவித்துவம், திறனாய்வின் நெறிமுறைகள், வெளியீட்டின் தொழில்நுட்பம் என்ற பிற்பகல் அமர்வில் நா.சுப்பிரமணியன், எம்.கண்ணன், வ.கீதா, தேவகாந்தன் போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.
பேராசிரியர் நா.சுப்பிரமணியன், ஈழத்து படைப்புக்கள் பற்றிய ஒரு விரிவான ஆய்வை முன்வைத்திருந்தாலும், ஈழத்து/புலம்பெயர் இலக்கியம் உலகத்தரமாய் உயர்ந்து நிற்கின்றது என்று கூறியது மிகவும் வியப்பாயிருந்தது. ஈழத்து இலக்கியம் 80களிலும், 90களிலும் தீவிரமாய் இயங்கிய தளத்திலிருந்து மிகவும் பின் தங்கி சோர்ந்த நிலையில் காணப்படுவதை இன்று தீவிரமாய் எழுதிக்கொண்டிருக்கும் எந்தப்படைபாளியும் ஏற்றுக்கொள்வார் என்றே நம்புகின்றேன். அதிலும் 2000களில் எஸ்.பொ முன்வைத்த கோசமான புலம்பெயர் இலக்கியந்தான் இனி தமிழ் இலக்கியத்துக்கு தலைமையேற்கும் என்ற கூற்று ஒரு நகைச்சுவையாகி நீர்த்துப்போய்விட்ட இன்றைய காலகட்டத்தில் இன்னும் இந்தப் பேராசிரியர் இப்படியான கருத்துக்களை முன்வைப்பது அபத்தமாய்த்தான் இருக்கின்றது. ஈழத்தில் இஸ்லாமியர்களின் படைப்புக்கள் தனித்துவமாய் துலங்குகின்றது என்று பேராசிரியர் வைத்த கருத்தை ஏற்றுக்கொண்டாலும், சோலைக்கிளியினதும், என்.ஆத்மாவினதும் கவிதைகள் ஒரு தனி முஸ்லிம் தேசியத்தை வேண்டி நிற்கின்றன என்பதை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை. முஸ்லிம்களை ஒரு தனித்தேசியமாக ஏற்றுக்கொள்வதில் என்னைப்பொறுத்தவரையில் மறுப்பு இல்லாதபோதும், சோலைக்கிளியின் அனேகமான தொகுப்புக்களை வாசித்தவளவில் அவரது கவிதைகள் தனித்தேசியத்தை வேண்டிப்பாடும் தொனியை எங்கேயும் காணவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.
(ஆனால் அவரது மூன்றாம் மனிதன் நேர்காணலில் அவரது வேறொரு கோணம் வெளிப்பட்டதை ஒப்புக்கொள்ளவேண்டும்).
இவற்றுக்கப்பால் என்னை வசீகரித்த உரைகள் எம்.கண்ணனினதும், வ.கீதாவினதும் ஆகும். எம்.கண்ணன் ஆரம்பத்திலேயே, யாழ் விரிவுரையாளர் சனாதனனுக்கு கனடீய தூதகரத்தால் விஸா மறுக்கப்பட்டதற்கு எதிராக எந்தவொரு சின்ன முணுமுணுப்பைக் கூட மூன்று நாள்களாய் நடந்த அரங்கில் எந்த ஒரு அறிவுஜீவியாலோ பிறராலோ வைக்கப்படவில்லை என்பது தனக்கு மிகுந்த விசனத்தைத் தருவதாய் குறிப்பிட்டுத்தான் தனது உரையை ஆரம்பித்தார். தொடர்ந்து தமிழக-ஈழ இலக்கிய உறவுகள் எப்படி பார்க்கப்படுகின்றன பற்றி மிக அருமையாக ஒரு உரையை வழங்கியிருந்தார். 1983 கலவரத்திற்கு முன், அவ்வவ்போது ஈழத்து படைப்பிலக்கியங்கள் தமிழகத்தில் பிரசுரிக்கப்பட்டு வந்தபோது அது ஒரு வெளிப்புறமாகவே வாசிக்கப்பட்டு தொடர்ந்து ஒருவித இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்திருக்கின்றது என்றும், இன்னும் 1983ம் ஆண்டின் கலவரத்தின் பின் ஈழத்து அரசியல் விளங்கிக்கொள்ளப்பட்டவளவுக்கு ஈழ இலக்கியம் நேர்மையான முறையில் அணுகப்படவில்லை என்பதை தெளிவாக தனது பேச்சில் ஆதாரங்களுடன் விளக்கியிருந்தார். 90களின் பின் புலம்பெயர் சூழலால் வருகின்ற சந்தைப்படுத்தல் முறையினால் தமிழக பதிப்பகங்கள் புலம்பெயர் இலக்கியவாதிகளை அரவணைத்துக்கொள்ள, ஈழத்து/புலம்பெயர் இலக்கியவாதிகளும் அவர்களும் வலையில் விழுந்துகொண்டிருப்பது தனக்கு விசனம் அளிப்பதாய் கூறியிருந்தார். இவ்வாறு தொடர்ந்தும் ஈழத்துப்படைப்புக்கள், தமிழகத்தில் ஒரு சமனற்ற முறையில் தொடர்ந்து வாசிக்கவும் விளங்கிக்கொள்ளவும்படுகின்றது என்பது ஒரு முக்கிய அவதானமாகும். ஈழத்து நிலப்பரப்பை, சூழ்நிலையை ஒரளவுக்காவது புரிந்துகொள்ளாமல், அந்தப்படைப்புக்களை எழுந்தமானமாய் வாசித்து விளங்கிக்கொள்ளமுடியாது என்று கண்ணன் கூறி சு.வில்வரத்தினத்தின் இரண்டு கவிதை வரிகளை உதாரணமாய் கூறினார். ஒரு கவிதையில் முடிகின்ற, ‘எனக்குள் ஆனையிறவு என்ற சொற்றொடரையும், ‘கொக்கட்டிச் சொலை காற்றில் சொல்லியது என்ன?’ என்று தொடங்குகின்றன இன்னொரு கவிதையையும் அதன் பின்னணியை ஒரளவாவது விளங்கிக்கொள்ளாமல் நேர்மையான வாசிப்புச் சாத்தியங்கள் தமிழ்நாட்டில் நடைபெற சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்தினார். மேலும் ஆங்கில இலக்கியத்தையோ, பிரெஞ்சு இலக்கியத்தையோ அதன் பின்னணியை கொஞ்சமாவது விளங்கிக்கொண்டு வாசிப்புக்களை செய்கின்ற தமிழக இலக்கியவாதிகள் ஈழத்து படைப்புக்களுக்கு அவ்வாறு செய்வதற்கு அக்கறைகொள்வதில்லை என்று கண்ணன் கூறியது என்னளவில் முக்கியமாயிருந்தது.
கண்ணன் கூறிய இன்னொரு புள்ளிதான் முக்கியமானது. ஒவ்வொரு ஈழ/புலம்பெயர் படைப்பாளிகள் தாங்கள் தமிழகத்தில் புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது, ஒவ்வொரு படைப்பாளிக்கும் அறம் சார்ந்த விடயம் இருக்கின்றது என்றும் அதிலிருந்து எந்த படைப்பாளியும் இலகுவில் தப்பிவிடமுடியாது என்று கூறி காலச்சுவடு, தமிழினி போன்ற பதிப்பகங்களின் அரசியல் பின்னணிகளை மிக விரிவாக எடுத்துரைத்திருந்தார். காலச்சுவடுக்கும் தினமலருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்றதெனவும், காலச்சுவடுக்கு விளம்பரங்கள் வழங்கி ஆதரவளிக்கும் சிறிராம் சிட்ஸ், கிருஸ்ணா ஸ்வீட்ஸ் போன்றவை தீவீர ஆர்.எஸ்.எஸ்காரர்கள் என்றும் இந்தப்பின்னணி தெரிந்துகொண்டு அரசியல் உள்ளுணர்வுடன் இயங்கவேண்டிய புலம்பெயர் படைப்பாளிகள் காலச்சுவடினூடாக தங்கள் படைப்புக்களை கொண்டுவருவது நியாயமாகாது எனவும் கூறியிருந்தார். அதேபோன்று தமிழினி வசந்தகுமாரும் ஒரு ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்றும், தீவிர ஆர்.எஸ்.எஸ்காரான அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களின் படைப்புக்களை வெளியிட்டு வருகின்றார் என்றும், அந்தவளவில் தமிழினியால் தொகுப்பு கொண்டுவந்த அ.முத்துலிங்கமும், காலச்சுவட்டுடன் நெருங்கிய தொடர்புடைய சேரனும் கேள்விகளுக்கு அப்பால் தப்பமுடியாது என்றும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
வ.கீதா, ஈழத்துப்படைப்புக்களை மூன்றுவிதமான எல்லைகளுக்குள் பிரித்து தனது கருத்துக்களை முன்வைத்தார். முதலாவது பிரிவாய் நனவிடைதோயும் நினைவுகளுக்குள் ஈழத்துப் படைப்புக்கள் இருக்கின்றன எனவும், மற்றொரு வகையாய் தனது தமிழ் அடையாளத்தை ஈழத்துக்குள்ளும் புலம்பெயர் தேசத்திலும் தேடிக்கொண்டிருப்பதாயும், மூன்றாவது பிரிவாய் போராட்டம் குறித்ததுமான படைப்புக்களுமாய் இருக்கின்றன எனவும் வகைப்படுத்தியிருந்தார். ஈழத்து/புலம்பெயர் படைப்புக்களை கண்ணனைப் போல வ.கீதாவும் ஆர்வத்துடன் வாசித்து வருகின்றார்ர் என்பதை அவரது பேச்சினூடாக அறியமுடிந்தது. தமிழ் அடையாளம் என்பது தேவையில்லை என்று 90 களில் பேசத்தொடங்கிய ராஜ் கெளதமன் பிற்காலத்தில் பல்டியடிக்கத் தொடங்கி, புலமைப்பித்தனின் சாதித்திமிரையும், பாரதியின் மறைந்துகிடக்கும் இந்துத்துவம் குறித்தும் கேள்விகள் எதுவும் எழுப்பாது ஏற்றுக்கொள்வதையும் வெளிப்படையாக எடுத்துக்கூறியிருந்தார்.

மேலும் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள்/ஈழத்து அரசியல்/இலக்கியம் குறித்து இரண்டு விதமான போக்குகள் (புலிகள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று ஒருபுறமும், இன்னொரு புறம் புலிகள் தவறே செய்யாதவர்கள் என்றும்) மட்டுமே காணப்படுவதாயும், ஈழத்து அரசியலால் நேரடியாகப் பாதிக்கப்படாத தமிழகத்தவர்கள் ஏன் ஒரு நேர்மையான விமர்சனத்தை முன்வைக்க அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்பதையும், பாலஸ்தீனிய அறிவுஜீவி எட்வேர்ட் சயீட்டைப் போல ஏன் நம்மால் இருக்கமுடியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார் (தமிழகத்துக்கு மட்டுமில்லாது புலம்பெயர் தேசத்தில் உள்ள ஈழத்தமிழரும் இது குறித்து கேள்விகளை எழுப்பிப் பார்க்கலாம்; அவசியமானதும் கூட). தொடர்ந்து ஈழத்து/புலம்பெயர் விமர்சனங்கள் உணர்ச்சி நிலையில் நின்று கொண்டிருப்பதால் எதையும் சாதித்துவிடப்போவதில்லை எனவும் அதைத் தாண்டி அறிவுபூர்வமான தளத்துக்கு நகரும்போது மட்டுமே உருப்படியான காரியங்கள் நடைபெறும் சாத்தியம் உள்ளது என்று குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளக்கூடியது. மேலும் பாலஸ்தீனியப் படைப்புக்களுக்கு நிகராய் வீரியத்துடன் யுத்த அவதிகளினூடாக வெளிவந்திருக்கும் சாத்தியமுள்ள ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் ஏன் நனவிடைதோய்தல்களுடன் மட்டும் தேங்கிப்போயிருக்கின்றன என்ற கேள்வியை, நமது ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகள் அனைவரும் தமக்குள் எழுப்புவது அவசியமாகின்றது. எதிரி, துரோகி என்ற வார்த்தைப் பிரயோகங்களைத்தாண்டி ஈழத்து/புலம்பெயர் விமர்சன முறைகள் நேர்மையான நடுநிலையான நோக்கில் நகரவேண்டும் என்று கீதா கூறியபோது என்னாலும் ஒத்துப் போகமுடிந்தது.
(2)
அண்மைக்காலமாய் மற்ற ஊடகங்களில் மட்டுமில்லாது வலைப்பதிவுகளிலும், புலிகளின் தரப்பு துரோகிகள் என்று கூறினால் புலியெதிர்ப்புச் செய்பவர்கள் பாசிஸ்ட் என்று நொய்ந்துபோன வார்த்தைப்போர் செய்துகொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை புலியெதிர்ப்பாளர்கள்/ சனநாயகவாதிகள் பற்றிய நம்பிக்கை பொய்த்துபோனது சென்ற ஆண்டு நடந்த சிவராமின் படுகொலையை அடுத்துத்தான். எனக்குத் தெரிந்த ‘நடுநிலை’ நண்பர்களில் பாதிப்பேர் இந்தப்படுகொலையை அறிந்து, முதலில் கூறியது சிவராம் புலியின் ஆள் ஆகவே அவரைப் போட்டுத்தள்ளியது பெரிய விடயமில்லை (இதேயேதான் புலிகளின் ஆதரவாளர்கள் துரோகிகள் என்று பிலாக்கணம் பாடும்போது இந்த நண்பர்களுக்கு கோபம் வருவது வேறுவிடயம்). மிச்ச நடுநிலைவாதிகள் கூறியது என்னவென்றால், சிவராம் முந்தி புளொட்டில் இருந்தபோது யாரையோ இரண்டு பேரை போட்டுத்தள்ளுவதற்கு உடந்தையாக இருந்தார் ஆகவே இந்தக்கொலை ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றார்கள். அட நாசமாய்போனவர்களே ஒரு கொலை நடந்தால் முதலில் அனைத்து விமர்சனங்களைத்தாண்டி கண்டனத்தைச் சொல்லி முதலில் மனிதாபிமானத்துடன் இருக்க முயற்சி செய்யுங்களடா என்றுதான் மனதில் கூறிக்கொண்டேன். இவ்வாறான அதே காரணங்களைத்தான் புலிகள் மாற்று இயக்கதவர்களை போட்டுத்தள்ளும்போது புலிகளின் ஆதரவாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே வெளிச்சாயம் மட்டும் இந்த இரண்டு தரப்புக்கு வித்தியாசமே தவிர உள்ளுக்குள் இரண்டு தரப்புக்குள்ளும் ஓடிக்கொண்டிருப்பது பொதுவான ‘தமிழ்’ இரத்தம் போலும்.
இப்படி மேலும் சிலவிசயங்களில், புலிகளின் தீவிர ஆதரவாளர்களுக்கு எந்தவகையிலும் குறைவில்லாது இந்த ‘சனநாயகவாதிகளும்’ இருக்கின்றார்கள் என்று புரிந்துபோனதன்பின் ஒருவித சலிப்புத்தான் இவர்கள் மீது என்னளவில் வந்தது. மேலும் சிவராம் துவக்கோடு பாதுகாவலர்கள் சகிதம் பிற்காலத்தில் திரிந்தவரும் அல்ல. பேனா ஒன்றை வைத்து எழுதித்தள்ளியதே அவர் செய்த தவறு. இன்னமும் ராஜினி திரணகமவையும், சபாலிங்கத்தையும் போதும் போதும் என்று கிளிப்பிள்ளையாகும் அளவுக்கு விளாசித்தள்ளும் ‘நடுநிலையாளர்கள்’ இங்கே மட்டும் ஒளிந்துகொள்வதிலுள்ள அரசியல்/விமர்சனப்புள்ளிகள் சுவாரசியம் வாய்ந்தவைதான் (உடனே இப்படிச்சொன்னதால் மேலே சொன்னவர்களின் கொலைகளை ஒத்துக்கொள்கின்றேன் என்று விமர்சனக்கத்திகளுடன் நண்பர்கள் வராதிருக்க இறைவன் இரட்சிப்பாராக).
தனிமனிதராய் மட்டும் இருந்து, வெளிநாடு வந்து சுமுகமாய் வாழ்வதற்கு வசதி இருந்தும் (அல்லது நமது நடுநிலையாளர்களின் வாதத்தின்படி சொல்வதாயிருந்தால், வன்னியில் புலித்தலைமை பொங்கிப்படைக்க வெட்டி ஏப்பமிட்டு எழுதிக்குவிக்க வசதியிருந்தும்) தான் விரைவில் கொல்லப்பட அனைத்துச் சாத்தியமிருக்கும் என்றும் தெரிந்தும் ஒரு மனுசன் கொழுப்பில் இருந்திருக்கின்றான் என்றால் அவனின் மரணத்தை மரியாதை செய்யவேண்டும் என்ற அவசியமில்லாமல் இருந்தாற்கூட கேலிக்குரியதாக்கச் செய்யத்தேவையில்லை. அதே போல ஒரு மார்க்சியவாதி, சிவத்தம்பி பாஸிஸ்ட் என்று தொடங்கி ஒரு கட்டுரை எழுத சிரிப்போடு அரைகுறையாய் வாசித்துவிட்டு விலகிவந்தாயிற்று. (அடுத்ததாய் பாஸிஸ்ட் பட்டியலில் சிவசேகரம் வருவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன). சிவத்தம்பியோடு, அவரது இலக்கிய/அரசியல் விமர்சனப்பார்வையுடன் எனக்கு மிகுந்த விமர்சனமுண்டு. ஆனால் இன்றும் கொழும்பில் ஒரு இடர்பாடுடைய வீட்டில், அரசாங்க ஓய்வூதியம் எதுவுமின்றி தனது நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதரை பாஸிஸ்ட் என்று பொத்தாம் பொதுவில் கூறினால் நமது மனித விழுமியங்களின் அள்வீடுகள்தான் என்ன? இவ்வாறான பொழுதுகளில் சிலவேளைகளில் யோசிப்பதுண்டு, இவ்வாறான் ‘அறிவுஜீவிகள்’, ‘சனநாயகவாதிகள்’ புலிகளுக்குப் பதிலாக களத்தில் நின்றிருந்தால் எங்கள் மக்கள் நிலைதான் என்னவாயிருக்கும்? ஏதோ தன்ரை பாட்டில் இருக்கும் மனிதரை எல்லாம் பாஸிஸ்ட் என்று ஹிட்லருக்கும் ஸ்ராலினுக்கும் நிகராய் எழுதிக்குவித்தால், இவர்களின் கையில் துப்பாக்கி மட்டும் இருந்திருந்தால் இன்று புலம்பெயர் சூழலில் இருந்துகொண்டு ஒற்றைவரியாவது எழுதும் சுதந்திரம்கூட என்னைப்போன்றவர்களுக்கு இல்லாது போயிருக்குமோ என்ற அச்சந்தான் எனக்குள் எழுகின்றது.
மேலும் இன்னொரு புள்ளியையும் குறிப்பிடவேண்டும், (என்னால்) பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளும் விமர்சனத்தத்துவார்த்த கட்டுரைகளை ஒருபோதும் முழுதாய் ஆர்வத்துடன் வாசிக்கமுடிவதில்லை (எனது பலவீனமாயும் இருக்கலாம்). தங்களைத் தீவிர மார்க்சியவாதிகள் என்று பலர் எழுதும் ‘அரசியல் நடுநிலைக்கட்டுரைகளை’ விட எனக்கு சோபாசக்தி போன்றவர்களின் படைப்புக்கள் தரும் பாதிப்பும் மாற்றமும் அதிகமானது. உதாரணத்துக்காய், சோபாசக்தியின் தேவதை சொன்ன கதையில் வருகின்ற, விலைமாதராய் இருக்கும் பெண், ஒரு வியட்னாமிய போராளிப்பெண்ணின் மகள் என்று முடியும் இடமும், தேசத்துரோகியில் ரணில் விக்கிரமசிங்கவே வேசம்போட்ட ஒரு கடும் இனத்துவவாதி எனவும், அவரோடு புலிகளின் தலைமை நம்பிக்கை கொள்வதை கேலிசெய்வதுமாயும் முடியும் கதையும், அண்மையில் எழுதப்பட்ட ஒரு கதையில் பசியின் கொடுமையைச் சொல்லி இறுதியில் ஒரு (மாற்று) இயக்கத்தவனாய் இருந்து கடைசிச்சோற்றுக்கவளத்தை வாயில் வைக்கமுடியாமல் சினைப்பரடியில் இறந்துபோகின்றவனின் துயரை கசியவிடுகின்ற கதையும் தருகின்ற பாதிப்புக்களை என்னளவில் (தனிப்பட்டவளவில்) பத்துப்பக்கக் கட்டுரைகள் தருவதில்லை. ஜெயமோகனின் கட்டுரைகளின் அளவைப் பார்த்து அந்த மனுசன் எப்போது இரண்டு மூன்று பக்கங்களுக்குள் கட்டுரை எழுதுவார் என்று யோசிப்பதுண்டு. இப்போது அவர் அதிகம் எழுதாது அமைதியாயிருக்கும் காலத்தை நமது மார்க்சிய நண்பர்கள் குத்தகைக்கு எடுத்து எழுதித்தள்ளுகின்றார்கள் போலும். ஜெயமோகன் தனது கட்டுரைகளில் தன்னை எப்படியாவது ஓரிடத்திலாவது பீடத்தில் கொண்டு போய் அமர்த்திவிடுவதுபோல, இந்த மார்க்சிச நண்பர்களும் உலகத்து எல்லாப்பிரச்சினைகளையும் தீர்க்க மார்க்சிசம் மட்டுமே ஒரே மாற்று மருந்து என்பதைக் குறிப்பிட ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
அண்மையில் கனடாவில் புலிகளைத்தடைசெய்தபோது பல ‘நடுநிலையாளர்கள் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்ததாய் கேள்விப்பட்டிருக்கின்றேன் (’தேனீ’ தளத்தை வாசித்திருந்தால் நிறையத் தெரிந்திருக்கும். ஆனால் நான் ‘நிதர்சனம்’ போன்ற தீவிர புலி ஆதரவுத்தளங்களை வாசிக்காததுபோல தேனீப்பக்கமும் போகாமல் என் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றேன்). ஆனால் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் முன்னாள் போராளிகளில் பலர் ஒருவிடயத்தை இலகுவாய் மறந்துவிட்டிருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். ஈழத்தில் இருக்கும் வரை நாங்கள் எவரையும் கொலைசெய்யவில்லை தும்புக்கட்டையோடும் விளக்குமாற்றுடன் தான் அங்கே இருக்கும்வரை போராடிக்கொண்டிருந்தோம் என்று கூறுவதை நாங்கள் ‘நம்பினாலும்’ கனடீய அரசாங்கம் நம்பப்போவதில்லை. அவர்களுக்கு எல்லா இயக்கங்களும் புலிகள்தான்;பயங்கரவாதிகள்தான். ஒருவர் ஒரு இயக்கத்தில் இருந்தார் என்று அறிந்தார்கள் என்று எந்தக்கேள்விகளும் இல்லாது ‘நீ பயங்கரவாதி’ என்று அனுப்பிவிடுவார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் போலும். நான் உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றுதான் நினைவுக்கு வருகின்றது. ஒரு முன்னாள் இயக்கத்தவரை இங்குள்ள உளவு நிறுவனம் அவர் ஒரு இயக்கத்தில் இருந்தார் என்று கண்டுபிடித்து விசாரிக்க, இவர் புலிகள் பற்றிய தகவல்களைத் தருகின்றேன் என்னை நாடு கடத்தவேண்டாம் என்று கேட்டிக்கின்றார். கனடீய உளவுநிறுவனமும் இவரிடம் வறுகவேண்டியதை வறுகிவிட்டு பிறகு அனாதரவாய் கைவிட்டுவிட அந்த நபர் பரிதாபத்துக்குரிய நபராகிவிட்டார். இன்று புலி என்று ஒருவரை நாடுகடத்தினால் கூட அவருக்கு ஆதரவாய் குரல் எழுப்ப இங்கே குரல்கள் இருப்பதையும் மற்ற இயக்கத்தவர் என்று அடையாளப்படுத்தப்பட்டு நாடு கடத்தினால் எந்தக்குரலும் எழும்பாத அவலச்சூழலில்தான் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதை அறியாது - புலிகளைப் பயங்கரவாதிகளாய் அறிவித்துவிட்டார்கள் -என்று நமது ‘நடுநிலையான’ நண்பர்கள் குதூகலிப்பது மிகவும் அவலமானது. புலியைத் தடைசெய்ததை உற்சாகமாய் உரையாடிக்கொண்டும்/எழுதிக்கொண்டும் இருக்கும் நமது ‘நண்பர்களுக்கு’ (அடிக்கடி கூறும்) சோபாசக்தியின் மேற்கோளான, ‘நான் புலிகளை 100% எதிர்க்கின்றேன். ஆனால் இலங்கை அரசாங்கத்தை 200% எதிர்க்கின்றேன்’ என்பதை இன்னொருமுறை நினைவூட்டி இப்படியிருந்த்தல் நியாயந்தானா என்று கேட்கவேண்டுமா என்றும் தெரியவில்லை.
இவ்வாறான் ஒரு அரசியல் நிலைமை புலம்பெயர் சூழலில் இருக்கின்றபோதுதான் எனக்கு வ.கீதா, எம்.கண்ணன் போன்றவர்களின் நேர்மையான கருத்துக்கள் வசீகரிக்கின்றன. துரோகியோ பாஸிஸ்டோ என்றோ பொத்தாம் படையாக விமர்சிக்காமல் ஒரு பொதுநிலைப்பாட்டில் இருந்து நேர்மையாய் கருத்துக்கள் கூறுகின்ற சூழ்நிலை இன்னும் வராதது புலம்பெயர்சூழலின் சாபக்கேடே என்றுதான் கூறவேண்டும்.
இறுதியாய் கேள்விகளுக்கான நேரத்தில், கண்ணன் கூறிய ஒரு விடயத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். எம்.கண்ணன், காலச்சுவடு, தமிழினி மீது வைத்த விமர்சனத்தை மறுத்தும், தமிழினி வசந்தகுமார் சு.வில்வரத்தினத்தைவிடவும் அதிகம் கஷ்டப்பட்டவர் எனவும் குறிப்பிட்ட ‘காலம்’ செல்வம், சு.ராவும் காலச்சுவடு கண்ணனும் ஈழத்தமிழர் விடயங்களில் அக்கறையுள்ளவர்கள் எனவும், தமிழினி வசந்தகுமார் இராஜீவ் காந்தி கொலையுடன் கஷ்டப்பட்டவர் என்று கூறி கண்ணனின் கருத்தை மறுதலித்திருந்தார்.
அப்போது எம். கண்ணன், இத்தகை தரவுகளோடு காலச்சுவடின் பின்னணியை அடுக்கியபின்னும் காலச்சுவடுக்காய் வக்காலத்து வாங்குவதும், தமிழினி வசந்தகுமார் தனது நண்பர் என்றும் வசந்தகுமாரின் வழக்கு குறித்த உள்விவாகரத்து அரசியலை வெளிப்படையாக தன்னால் வைக்கமுடியும் என்றும், எல்லாவற்றையும் மீறி சு.வில்வரத்தினம் என்ற கவிஞர் புங்குடுதீவில் பிறந்து போரில் நிமிர்த்தம் அலைந்துழந்து திருகோணமலை என்று இன்னொரு மூலையில் வாழ்ந்து ட்சூனாமியால் எல்லாம் பாதித்ததை மறந்து/மறுத்து காலச்சுவடுக்காயும், தமிழினிக்காயும் உங்களைப்போன்றவர்கள் வக்காளத்து வாங்குவது தனக்கு மிகவும் வெட்கமாய் இருக்கின்றதென வெளிப்படையாகவே கூறினார். உண்மையில் இவ்வாறான ஒருவித உயர்வழிப்பாட்டு நிலையில்தான் இன்னும் பல ஈழத்தவர்கள் தமிழகத்து பதிப்பாளர்களையும், படைப்பாளிகளையும் அளவுக்குமீறி (அது சுந்தர ராமசாமியாய் இருந்தால் என்ன, அ.மார்க்ஸாய் இருந்தால் என்ன) ஒருவித பீடத்தில் வைத்து வழிபடுகின்றார்கள் என்பதுதான் நிதர்சனமானது.
இந்தியா தனது அரசியலை ஈழத்தமிழரில் புகுத்தி தொந்தரவுக்கு உள்ளாக்கி அதன் துயரத்தை இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கும், நீங்களே மீண்டும் பின்னணி அரசியல் தெரியாமல் இலக்கிய விடயங்களிலும் தமிழகப்பதிப்பாளர்களுடன் நெருங்குவது குறித்து அவதானமாயிருக்கவேண்டும் அல்லவா? என்று அரசியலில் மட்டுமின்றி இலக்கிய விடயத்திலும் கவனமாய் இருக்கவேண்டுமென கண்ணன் கூறியதை புலம்பெயர்ந்த/ஈழ நண்பர்கள் கவனத்தில் கொள்வார்களா?

Monday, May 15th, 2006 at 8:03 am

செவ்வரத்தம்பூத்தெரு

‘உன்னைப்போல் மனங்கலங்க வைக்கின்ற யுத்தகால அனுபவங்களெதுவும் எனக்கு வாய்த்திராத போதும், தடயங்களைத் தொலைத்தவளாய் மரணத்தின் விளிம்புகளில் நின்றுகொண்டு நாளைய இருப்புக்குறித்த எந்தவித எதிர்பார்ப்புக்களுமில்லாமற்போன கணங்களைக் கடந்தவள்தான், நானும். இனம்புரியாத பயங்களால் நிரம்பித் தளும்பிக் கொண்டிருக்கும் மனதோடு தொடர்ந்தும் வாழ்வது எங்ஙனம் சாத்தியம்.. வாழ்வு இத்தனை வெறுப்பிற்குரியதா.. என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றுகின்றபோது …’
(பழைய கடிதமொன்றிலிருந்து…)

பிணியும் சோர்வும்
வேண்டாவெறுப்பாய் புணர்ந்து
ஆஸ்த்மா ஒரு அவதியாய் உடலில்
இறங்கிக்கொண்டிருக்கையில்
ரீவியில் கசியும் பாடல்களின்
தனிமை நிரப்பி
சுவடுகளைப் பதிக்கத் தொடங்குகின்றேன்
செவ்வரத்தம்பூக்கள் நிறைந்தவுனது தெருவில
உதிர்ந்து கிடக்கும்
பூக்களைப் பொறுக்கும் சிறுமிகளின்
ரிபன்களிலிருந்து படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
அமர்ந்துகொள்கின்றன
ஆற்றினுள் வனமாய் கூந்தலை விரித்த
தேவதைகளின் விழிகளில
பிதுர்த்தோதும் பிக்குகள்
இரத்தத்தைக் குவளைகளில் நிரப்பி
படைப்பதைச் சகிக்காது
விகாரைவிட்டு நீங்கும் புத்தர்
பின்னவிகிதத்தில் மிளிரும்
உன்வீட்டுக்கு தானும் வரலாமா என்கிறார
உலகமுருளும் வேகத்தில்
உதைத்துத் துரத்தப்பட்டு
தெருவோரவாசியான பெரியார்
பழைய நண்பர் புத்தருடன்
இணைந்து நடக்க
வெசாக் விளக்குகளை
எரித்தபடி வரும் சிறார்களின்
ஆடல்களிலும் பாடல்களிலும்
நெகிழ்ச்சியுறும்
அவ் மாலைப்பொழுத
திரும்பவும்
விகாரைக்குப்போகப் பிரியப்படா புத்தருக்கு
மிதிவெடியில்
ஒற்றைக்காலிழந்த ஊர்வைரவர்
புகலிடம் கொடுத்து
ஆடிய களைப்பை நீக்க அழைத்துச் செல்கிறார்
கள்ளுக்கொட்டிலுக்க
நதியாகவும் பனிவெளியாகவும்
தகிக்கும் பாலைவனமாயும்
விரிந்து வித்தைகாட்டும்
நம் உடல்கள்
எழுதத்தொடங்கும்
காவியத்தின் முடிவை
சுற்றி வளைக்கும் துப்பாக்கிகளுக்கு
காணிக்கையாக்கி
மீண்டும் நுழைகின்றோம்
நமக்கான சவப்பெட்டிகளுக்குள்.

2006.05.03

போர்க்காலக் குறிப்புக்கள்

* ‘….Atleast 50 civilians were killed and more than 200 were injured in Sri Lankan forces aerial bombardment and artillery attacks, Thursday morning, in Kathiraveli and surrounding villages as thousands of civilians were still fleeing the areas…’ (TamilNet)
நேற்று, ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் அகோரமான குண்டுவீச்சுகளும், ஆட்டிலறி எறிகணை வீச்சுக்களும் நடந்துகொண்டிருக்கின்றன என்ற செய்தியை வாசித்தபோது ஊரிலிருந்த காலங்கள் மீண்டும் நினைவுக்கு வந்து தொந்தரவுபடுத்தத் தொடங்கின. இராணுவம் என்றவளவில் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வாழ்ந்திருக்கின்றேனே தவிர, ஒருபோதும் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் யாழில் இருந்தவரை வாழ்ந்ததில்லை. எனவே இலங்கை இராணுவத்தின் பொம்மரடிகளும் ஷெல்லடிகளும் மாத்திரமே எனக்கு அதிகம் பரீட்சயமாயிருந்தன.
இருளைப்போல, சிறுவயதுகளில் அதிகம் பயமுறுத்தியவை இந்த இரண்டு விடயங்களும்தான். செல்லடிகளிலும் பொம்மரடிகளிலும் சாவது என்றால் முற்றுமுழுதாக இறந்துவிடவேண்டும்; அரைகுறையாக உடல் உறுப்புக்கள் சிதைவடைந்து வாழ்வுமுழுதும் அதன் பாதிப்பில் கஷ்டப்படக்கூடாது என்றுதான் என்னைப் போன்ற பலர் அந்தப்பொழுதுகளில் நினைத்திருக்கின்றோம். அதன் நிமித்தமே ‘பங்கர்’ எனப்படும் பதுங்குகுழிகளை நாங்கள் எங்கள் வீட்டின் வளவில் வெட்டியிருந்தோம். ஒன்றல்ல இரண்டு பதுங்குகுழிகள் வெட்டியிருக்கின்றோம். இந்திய இராணுவம் வரமுன்னர் ஒருமுறையும், பிறகு -இந்திய இராணுவம் வந்துவிட்டதே அமைதி வந்துவிடும்- என்று அதை மூடிவிட…., எனினும் தொடர்ந்தும் போர் தொடர இன்னொரு பதுங்குகுழியையும் புதிதாய் வெட்டியிருக்கின்றோம்.
முன்னோர் பொழுதில்
ஊரில்
மாலை வேளையில்
மெழுகுதிரி கொளுத்தி
சாம்பிராணி காட்ட
பதுங்குகுழி
அபயம் காட்டும் கடவுளாயிற்று.
என்று ஏதோவொரு ‘கவிதை’யில் குறிப்பிட்டதைப்போல, பின்னேர/இரவுவேளைகளில் மெழுகுதிரி வெளிச்சத்தில் பதுங்குகுழியில் அமர்ந்திருக்கையில் மெல்லியதாய் வரும் காற்றும், மண்ணின் ஈரலிப்பும் அம்மாவின் கர்ப்பப்பைக்குள் இருப்பதான மிகப்பெரும் பாதுகாப்பையும் ஆசுவாசத்தையும் எனக்குத் தந்திருக்கின்றன. மனிதர்கள் அருகிலிருந்தாலும் மனிதர்கள் எவரும் இல்லாத தனிமையின் வாதையையும், நகரும் பூச்சிகளின் நட்பையும் பதுங்குகுழிதான் எனக்கு முதன்முதலில் அறிமுகமும் செய்திருந்தது.
எனக்குத் தெரிந்தளவில் எங்கள் வீட்டுக்கருகில் மூன்று முறை குண்டுவீச்சுக்கள் நடந்திருக்கின்றன. ஒருமுறை சகடை (அவ்ரோ? sea plane). இதற்குக் கோள்மூட்டி என்ற பெயரும் பாவிக்கப்பட்டதாய் நினைவு. அனேகமான பொழுதுகளில் இது குண்டுகள் வீசாது; முதலில் வந்து சுற்றி உளவுபார்த்துவிட்டு தகவல் அனுப்ப அதிவேக பொம்பர்கள் வந்து பிறகு குண்டுகளை வீசும்.
ஒருமுறை நான், அம்மா, பக்கத்துவிட்டு அக்கா மூன்றுபேரும் நின்று கதைத்துக்கொண்டிருக்கையில் சகடை பறந்துபோய்க்கொண்டிருந்தது. எனவே இப்போது ஆபத்து எதுவுமில்லை என எங்கள்பாட்டில் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தபோது…… -தற்செயலாய் நான் வானைப் பார்க்க- போன சகடை சடுதியாக ஒரு திசையில் திரும்ப ‘ஐயோ குண்டு போடுறாங்கள்’ என்று பின்னங்கால் அடிபட பங்கருக்குள் பாய்ந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. சகடையிலிருந்து தள்ளப்பட்ட குண்டுகள் கூட மிகத் தெளிவாக என் கண்களுக்கு அன்று தெரிந்திருந்தன. அவை பக்கத்து வயலில் வீழ்ந்து மிகப்பெரும் குழியை -கிணறளவுக்கு- உண்டு பண்ணியிருந்தன.
மற்றொருமுறை சந்தியில் தற்காலிகமாய் இயங்கிக்கொண்டிருந்த ஒரு வைத்தியசாலையின் மீது குண்டு வீழ்ந்திருந்தது. நல்லவேளையாக சொற்பமாக இருந்த நோயாளிகள் பக்கத்தில் இருந்த ஒரு மதகின் கீழ் அடைக்கலம் புகுந்ததால் அன்றைய பொம்மரடியில் இருந்து அவர்கள் தப்பியிருந்தனர். மூன்றாவது தாக்குதல்தான் எங்கள் வீட்டுக்கு மிக அருகில் நடந்தேறியது. அன்றைய பொழுதில் நான் அப்பாவுடன் யாழ் நகரை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தேன். இடைநடுவில் வந்து கொண்டிருந்தபோது, எவரோ எஙகள் ஊரில் குண்டு வீச்சு நடந்ததாய் சொல்ல வீடடையும்வரை அச்சமே என்கூட துணை வந்திருந்தது. வீட்டிலிருந்த அம்மாவுக்கும் அக்காவுக்கும் என்ன நடந்திருக்குமோ என்ற பதட்டத்தை அந்தச்செய்தி என்னில் ஏற்படுத்தியிருந்தது.
போர்க்காலங்களில் சம்பவம் நடந்த இடத்துக்குப் போய்ப்பார்க்கும்வரை, நடந்த நிகழ்வுகள் குறித்து அறிவது மிகக்கடினமாய் அன்றைய பொழுகளில் இருந்தது. அந்தக் குண்டு வீச்சில் நான் படித்துக் கொண்டிருந்த பாடசாலையின் இரண்டாம் மாடி முற்று முழுதாக சிதைந்து போனதும், பக்கத்திலிருந்த புளியமரத்தின் கிளைகள் முறிந்து போனதும் நிகழ்ந்தது. இந்த மூன்று சம்பவங்களிலும் சிறு காயங்களைத் தவிர பெரும் உயிரிழப்புக்கள் ஏற்படாததை நினைக்கும்போதெல்லாம், எங்கள் ஊர் வைரவர்தான் எங்களைக் காப்பாற்றியிருக்கின்றார் என்று அந்தப்பொழுதுகளில் நினைப்பதுண்டு.
விமானத்தாக்குதல்களைப் போல அல்ல எறிகணை வீச்சுக்கள். குண்டுத்தாக்குதலை விமானங்கள் பதியும் திசையைப் பார்த்து ஒரளவு கணித்தாவது எதிர்த்திசையில் ஓடமுடியும். ஆனால் எறிகணைத் தாக்குதல் எந்தத் திசையிலிருந்து எங்கு வந்து விழும் என்பதை உங்கள் காலடியில் ஷெல் வந்து விழுந்துவெடிக்கும் வரை உறுதிபடக்கூற முடியாது. எங்களைத் தாண்டித்தானே எறிகணைகள் போகின்றன என்று ஆசுவாசப்பட, சட்டென்று வீசுகின்ற தூரங்களையும் திசைகளையும் மாற்றி அடிக்கத் தொடங்குவார்கள். ஷெல்லை குத்துகின்ற (வீசுகின்ற) சத்தம் கேட்டவுடனேயே நெஞ்சம் அதிவேகமாய்த் துடிக்கத்தொடங்கி மனது கணங்களை எண்ணத் தொடங்கும். ஒவ்வொரு ஷெல்லும் விழுந்துவெடிக்கும்வரை அந்த மரண பயத்தோடேயே நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்.
போர்க்காலங்களில் ஊரிலிருந்த அனேக இரவுபொழுதுகளை, இவ்வாறான எறிகணைத் தாகுதல்களின் நிமித்தம் பதுங்குழிகளில்தான் அனேகம் கழித்திருக்கின்றேன். எறிகணைத் தாக்குதல்கள் ஒருபுறம் என்றால் அப்பாவின் ‘வீரதீர’க்கரைச்சல் இன்னொருபுறம் ஆரம்பித்துவிடும். அவருக்கு பதுங்குகுழிக்குள் நிற்பது பிடிக்காது. கூட்டணியில் வீரம் என்பது இப்படி செல் அடிக்கும்போது வெளியில் நிற்பதுதான் என்று கற்றுத் தந்தார்களோ என்னவோ தெரியாது, நாங்கள் பயந்துகொண்டு பங்கருக்குள் இருக்கும்போது அவர் வெளியில் சென்று நிற்பார். அப்பா வெளியில் நிற்பதைக் கண்டவுடன், அக்கா அப்பா உள்ளே வராவிட்டால் தானும் பங்கருக்குள் இருக்கமாட்டேன் என்று அடம்பிடித்து வெளியே வந்துவிடுவார். அக்காவும் அப்பாவும் முரண்டு பிடித்துக் கொண்டிருக்குக்கும்போது பங்கருக்குள் இருக்கும் எனக்கும் அம்மாவுக்கும் என்ன செய்வது என்ற அவதியும் விசரும் வந்துவிடும். இப்போது பார்க்கும்போது இவ்வாறான சண்டைகளால்தான் செல்லடிகள் மீதிருந்த பயத்தினை அந்த இரவுகளில் ஒரளவு இலகுவாய்க் கடந்துவிட முடிந்திருக்கின்றது என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகின்றது.. இல்லாவிட்டால் உயிரைத் தக்க வைப்பதற்கான எண்ணமே மூச்சு முட்ட வைத்து மிகப்பெரும் சித்திரவதையைத் தந்திருக்குமல்லவா?
பத்து வருடங்களுக்கு முந்தைய காலத்தைப் பற்றி உரையாடுவதைக் கூட ஒரு கற்காலத்தின் நினைவுமாதிரித்தான் பார்க்கவேண்டியிருக்கின்றது. ஏனெனில் போர் தன் கொடூர முகங்களை நொடிக்கொருதரம் இன்னுமின்னும் உக்கிரமாய் மாற்றிக்கொண்டிருக்கின்றது. இன்று ஈழத்தில் பல்லாயிரக்கணக்கில் ஏவப்படும் பல்குழல் ஆட்டிலறிகளையோ அதிநவீன கிபீர் குண்டுத்தாக்குதல்களையோ நான் நேரில் கண்டதுமில்லை; அதன் பாதிப்புக்களை அனுபவித்ததுமில்லை. பத்து வருடங்களுக்கு முன்னிருந்ததைவிட பன்மடங்கான அழிவுகளை இது கொடுக்கும் என்று மட்டுமே -ஷெல்லோ/குண்டோ என் உயிரை இந்தக்கணத்தில் எடுத்துவிடாதென உறுதிப்படுத்தப்பட்ட ஒருதேசத்தில் வாளாவிருந்து- யோசிக்கமுடிகிறது.
(2)
நாமெல்லோரும் போரின் அழிவுகளை அவ்வளவு கணக்கிலெடுக்காது நமக்கான நம்பிக்கைகளின் நியாயங்களைப்பற்றி பேசுவது எனக்கு இன்னும் அச்சமூட்டுகிறது. அதைவிட போரின் எந்தப்பக்கத்தையும் அறிந்துகொள்ளாது/அதற்குள் வாழ்ந்துபார்க்காது நாகரீகக்கனவான் வாழ்க்கை வாழ்ந்தபடி தமக்கான அரசியலைப் பேசுவர்களைப் பார்க்கும்போது இவர்களை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் விளங்கவில்லை.
ஒரு இராணுவ வீரனுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட லெபனானிய மக்கள் என்ற ‘அதியற்புத மனிதாபிமான சமன்பாட்டில்’ இஸ்ரேல் ஆட்டிலறிகளையும் குண்டுத்தாக்குதல்களையும் லெபனானில் நடத்திக்கொண்டிருக்கின்றது.
இன்றையபொழுதில்
ஒரு போரிலிருந்து
இன்னொரு போரைத் தொடக்குதல் குறித்து
எல்லாத் திசைகளிலிருந்தும்
ஆர்ப்பரித்துப் பேசுகிறார்கள
ஒரு மனிதனை
சிதைக்காமல் தடுக்கும்
மிக எளிய சமன்பாடுகள்
ஒவ்வொரு அழிவின்
தீராநடனங்களிடையே
சுடர்விட்டொளிர்வதை
நிசப்போரின் கொடூரமறியாக்கண்கள்
கவனிப்பதேயில்லை.
9/11 தாக்குதல்களின் பின், அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முன்னர் எழுதிய இந்த வரிகள்தான் நினைவில் ஓடுகின்றன. இன்று பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் லெபனானிய மக்களிலிருந்து இஸ்ரேலை அழித்தே தீரவேண்டும் என்ற வன்மத்துடன் நாளை பல்லாயிரக்கணக்கானவர்கள் தோன்றப்போகின்றார்கள். குழந்தைகளும் பெண்களும் குண்டுகளைத் தங்கள் உடலில் கட்டியபடி இஸ்ரேலில் வெடிக்கப்போகின்றார்கள் என்றுதான் கடந்தகால போர்க்கால வரலாறுகள் நமக்கு கட்டியங்கூறுகின்றன. இன்று பொதுமக்கள் கொல்லப்படுவதை பூனையைப்போல தூங்கிக்கொண்டு கண்டிக்காதிருக்கும் வல்லரசு நாடுகள்தான், நாளை நடக்கப்போகும் தற்கொலைத் தாக்குதல்களுக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாய் கண்ணீர் வடிக்கப் போகின்றன. அப்போது நாங்களும் இவர்கள் எல்லாம் மனிதர்களேயல்ல, ‘தீவிரவாதிகள்’ என்று உலகத்தோடு ஒத்து கலிங்கத்துப்பரணி பாடவேண்டியதுதான்.
(3)
ஊரில் இருந்தபோது, தாங்கள் கல்வீடு கட்டாதகாலங்களில் வைரவர் ஊர் - வலம் வருவதாய் அம்மா கதைகள் சொல்வதுண்டு. நள்ளிரவுகளில் மணியின் சத்தத்தோடும், லாம்பு விளக்கோடும், கோவணம் கட்டியபடி வைரவர் ஊரைக் காக்க கருவறை நீங்கி ஊர்வலம் வந்ததை தன் கண்களால் நேரே கண்டதாய் சித்தியொருவர் சத்தியம் செய்யாத குறையாகக் கூறியதும் நினைவிலுண்டு. அந்தப்பொழுதுகளில் பெண்கள், தாங்கள் எவ்வித பயமுமில்லாது வாழ்ந்ததாகவும் அம்மா அடிக்கடி நனவிடை தோய்வார். என்னைப் போன்றவர்களைக் கூட சிறுவயதுகளில் குண்டுவீச்சு/ஷெல்லடிகளிலிருந்து காப்பாற்றிய வைரவருக்கு பிறகு என்னதான் ஆயிற்றோ?
ஊர் நீங்கி அகதியாய் வேறு ஊர்களுக்கு நகர்ந்த பொழுகளில் வைரவர் ஏன் எங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை? இலங்கை இராணுவம் 95களில் யாழைக் கைப்பற்றியபொழுது எங்கள் ஊர் வைரவரின் சூலாயுதம் வேறொரு ஊரில் நிராதரவாய் காணப்பட்டதாய்க் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஊர் மக்கள் இல்லாத ஊரில் தானும் இருக்கமாட்டேன் என்று புலம்பெயர்ந்த வைரவரின் வைராக்கியம் பிடித்திருந்தாலும், எங்கள் வாழ்வையும் வளங்களையும் சூறையாடியவர்களைக் கண்டபின்னும் வைரவர் வெகுண்டெழுந்து ஊழிக்கூத்து ஏன் ஆடவில்லை?
நாங்கள் மீண்டும் ஊர் போவோம். ஒரு குழந்தையைப் போல குதூகலித்து ஆடியபடி எங்களோடு வைரவரும் ஊர் திரும்புவார். பாதிரிப்பூக்களும் பொன்னச்சிப்பூக்களும் மீண்டும் பூக்கத்தொடங்கும். புளிய மரத்தடியில் கிளித்தட்டும், பிள்ளையார் பேணியும் விளையாடச் சிறுவர்கள் கூடுவார்கள். பின் அந்திப்பொழுதுகளில் வைரவருக்கு வடைமாலை போர்த்தி பூசை நடக்க, எதிரேயிருக்கும் கள்ளுக்கொட்டிலில் இளைஞர்கள் கள்ளுக்குடித்துக் களிக்கும் காலங்கள் கனியும்.
………………………………………
* நேற்று அகோரமான தாக்குதல்கள் என்று அறிந்தபோது எவ்வளவு உயிரிழப்போ? என்றுதான் உடனே எண்ணத்தோன்றியது. இப்போது ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் பலி, இருநூறுக்கு மேற்பட்டவர்கள் காயம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான செய்திகளைக் கேள்விப்படும்போது பலியானவர்களில் ஒருவராய் நானிருந்தால்….எப்படியிருக்கும்…..? என்று மனம்போகின்ற போக்கில் மட்டுமே யோசிக்க முடிகிறது.

(Thursday, August 10th, 2006 at 10:33 am )

North Country (திரைப்படம்)

நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது.. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்கவேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியதுமாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடிந்துவிடுகின்றது.
தனது ஆண் துணையால் அடித்து துன்புறுத்தப்பட, குழந்தைகளுடன் ஜோஸி தனது பெற்றோர் வீடு நோக்கிச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கின்றது. பெற்றோருடன் இருந்தாலும் ஜோஸி தனக்கென்று சொந்த வேலை தேடத்தொடங்க நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்கப்போகின்றார். வேலைக்குச் சேரமுன்னர் வழமையான ‘கர்ப்பம் தரித்திருக்கின்றாரா’ போன்ற வைத்தியப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வேலையில் சேர்க்கப்பட்டாலும், ‘இது பெண்களுக்கு உரிய தொழில் அல்ல’ என்ற திமிருடன் ஆண்கள வேலைத்ளத்தில் பாலியல் சேட்டைகளைச் செய்தபடி இருக்கின்றனர். சுவர்களில், கழிவறைகளில், கெட்ட கெட்ட வார்த்தைகள் எழுதுவது, பெண்களின் உணவுப் பெட்டிகளில் sex toysஜ வைத்து ‘நீ வாறியா’ என்று பல்லிளிப்பது, அதற்கும் மேலாய் பெண்கள் வேலையின் பளுவில் இருக்கும்போது அவர்களின் முலைகளைப் பிடித்து, உறுப்புக்கள் பற்றி வக்கிரமான நக்கல்கள் செய்வது என்று பலவிதமான உடல் உள பாலியல் பாதிப்புக்கள் பெண்களுக்கு ஏற்படுகின்றது.

ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் சகிக்கமுடியாது என்று, ஜோஸி அந்த நிறுவனத்தின் உயர்பதவிகளில் இருப்பர்களிடம் முறையிடப் போகின்றார். அங்கே அவர்கள் இவரின் முறைப்பாட்டைக் கேட்கமுன்னரே, ‘நீ என்ன சொல்லப்போகின்றாய் எங்களுக்குத் தெரியும், ஆனால் அதற்கு முன் உனக்கு ஒரு சந்தோசமான செய்தியைத் தருகின்றோம் என்று கூறி, அவரை வேலையில் இருந்து நிறுத்துகின்றோம் என்கின்றார்கள். I’m not quiting என்றும் தனக்கு இந்த வேலை கட்டாயம் தனது வாழ்க்கைச் செலவுக்கு தேவை என்கின்றபோது, அப்படி என்றால் முறைப்பாடு எதுவும் செய்யாது ‘வேலையில் மட்டும் கவனம் செலுத்து’ என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.
மீண்டும் ஜோஸி வேலைக்குபோனாலும், அங்கே நடைபெறும் வன்முறைகள் முன்பு இருந்த்தைவிட இன்னும் மோசமாகின்றது. தொழிலாளர்களுக்கு என்று தொழிற்சங்கம் இருந்து அதில் பெண் பிரதிநிதிகள் இருந்தாலும் இப்படி ஜோஸி செய்ததால் ‘தொழிற்சங்க நண்பர்களும்’ கைவிட்டுவிடுகின்றனர். சக பெண் தொழிலாளிகளும் ‘உன்னாலை எங்களுக்குத்தான் பிரச்சினை’ என்று ஜோஸியை விலத்தி வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் சக தொழிலாளி மிக மூர்க்கமாய்த் தாக்க, எதுவும் செய்யவியலாத நிலையில் வேலையை விட்டு ஜோஸி விலகுகின்றார்.

ஜோஸி வேலை செய்யும் சுரங்கத்தில்தான் ஜோசியின் தகப்பனார் வேலை செய்தாலும் ‘பெண்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யக்கூடாது’ என்று அதிக ஆண்கள் நம்புவதைப்போல நினைக்கும் ஒரு ஆணாய் அந்தத் தகப்பனும் இருப்பதால், தனது மகள் அங்கே வேலை செய்வதால் தனது ‘கெளரவம்’ பாதிக்கப்படுகின்றது என்ற கோபத்தில் ஜோஸியுடன் பேசுவவதை நிறுத்திக் கொள்கின்றார். அதைவிட தனது மகள் பதின்மங்களிலேயேயே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, அதற்கு யார் தகப்பன் என்று கேட்டபோது, தெரியாது என்று கூறிய பழைய கோபமும் தகப்பன் - மகள் உறவு உடைந்துபோனதற்கு இன்னொரு காரணமாய் இருக்கிறது.
தான் வேலைக்குப் போவதை நிறுத்தினாலும் ஜோஸி தளர்ந்துவிடவில்லை. நிலக்கரிச் சுரங்ககத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக வழக்குப் போட ஒரு வழக்கறிஞரை நாடுகின்றார். வழக்கு தங்களுக்குப் பாதகமாய்ப் போகின்றது என்று அறிகின்றபோது எதிர்த்தரப்பு ஜோசியின் தனிமனித ஒழுக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துகின்றது. ஜோஸியின் இரண்டு பிள்ளைகளில், முதல் மகனுக்கு யார் தந்தை? என்று கேள்வி கேட்கின்றார்கள். ஜோஸி அத்ற்குப் பதிலளிக்கத் தயங்க, அவருக்கு பல sexual partners இருந்திருக்கின்றார்கள் என்று நிரூபணமாகின்றது, அவ்வாறே நிலக்கரிச் சுரங்கத்திலும் நடந்துகொண்டு பாலிய்ல வன்முறை நடப்பதாய் பொய்யான குற்றச்சாட்டை தங்கள் மீது சுமத்துகின்றார்கள் என்று நிலக்கரிச் சுரங்க நிறுவனம் நீதிமன்றத்தில் கூறுகின்றது. இறுதியில் அந்த உண்மையை ஜோஸி உடைக்கின்றார். தனது பதின்ம வயதில் தனது ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்புணரப்பட்டு, ஆனால் அந்தக் கொடூரத்துக்காய் தனது வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல வளர்ந்த கருவை அழிக்க மனமில்லாதால் குழந்தையாய்ப் பெற்றுக்கொண்டேன் என்கின்றார். ஆனால் எதிர்த்தரப்பு இந்த வல்லுறவு நடந்துபோது சாட்சியாய் இருந்த ஜோஸியின் பாடசாலை ஆண் நண்பனையும் ‘ஜோஸி விரும்பித்தான்’ பாலியல் உறவு வைத்துக்கொண்டார்’ என்று கூறவைத்து வழக்கை திசைமாற்றுகின்றது. இதுவரை காலமும் வேறொரு காரணத்தைக் கூறி வளர்க்கப்பட்ட ஜோஸியின் மகனும், she is a liar, she is a whore… என்று தாயைக் குற்றஞ்சாட்டி விலகிப்போக ஜோஸி உடைந்துபோகின்றார். மேலும் நகரும் இத்திரைப்படம், எப்படி இந்த வழக்கு முடிந்தது என்பதையும், ஜோஸியின் தகப்பன் - மகள் உறவும் ஜோஸி- மகன் உறவும் என்னாவாயிற்று என்பதையும் இயல்பாய் காட்சிப்படுத்துகின்றது.
Charlize Theron எனக்குப் பிடித்த கொலிவூட் நடிகைகளில் ஒருவர். Monster படம் பார்த்தபோதே ‘பெண்களின் அழகு’ என்று நமக்குப் போதிக்கப்ப்ட்ட விடயங்களை உதறித் தள்ளிவிட்டு அந்தக் க்தாபாத்திரமாய் -முக்கியமாய் ஒரு கொலிவூட் நடிகை- மாறியிருந்தது வியப்பாயிருந்தது.. இத்திரைப்படத்திலும் பாத்திரத்துக்கேற்ற இயல்பான அழகையும் நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறான் படங்களில் தேர்ந்தெடுப்பதற்கும் நடிப்பதற்கும் தனி துணிச்சல் வேண்டும் என்றுதான் நினைக்கின்றேன். (இப்படியே நடித்துக்கொண்டிருந்தால் இவர் ‘ஒருமாதிரியான’ ஆள் என்று கொலிவூட்டில் ஓரங்கட்டியும்விடவும் கூடிய அபாயமும் உண்டு என்பதால்).
இந்தப்படத்தில் காட்டப்படும் வழக்கு முடிந்தபின்னரே முதன்முதலாய் அமெரிக்காவில் (1984ல்) sexual harassment policy என்ற சட்டம் (நிலக்கரிச் சுரங்கங்களில்) வேலை செய்யும் பெண்களுக்காய் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது முக்கியமானது. இன்று நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்யும் பெண்கள் மட்டுமில்லாது, பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள்கூட கூட, நிஜத்தில் இதைச் சாதித்துக்காட்டிய அந்தப்பெண்ணை நினைவுகூரத்தான் செய்வார்கள். A long journey begins with a single step என்பதற்கு இணங்க சின்னக் காலடியை அந்தப் பெண் எடுத்து வைத்திருக்கின்றார், நீண்ட நெடும்பயணம் பெண்களுக்காய் காத்திருக்கின்றது அதன் அழகோடும், அசிங்கங்களோடும் குரூரங்களோடும்.

(Friday, March 10th, 2006 at 11:34 am )

நினைவெழுதும் ஒரு காலத்தின் உறைநிலை

-விளையாட்டுக்கள் பற்றிய சில குறிப்புக்கள்-

அண்மையில் ஒரு நண்பரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது கதையின் நடுவில் எனக்கு கிறிக்கெட் ஒரளவுக்கு விளையாடத்தெரியும் என்றபோது அவரால் நம்பமுடியவில்லை. யாழில் இருந்தபோது பாடசாலையின் பதினைந்து வயதுட்குட்பட்டவர்களின் கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றேன் என்ற அத்தாட்சிப்பத்திரம் வாசித்தபோதும் அந்த நண்பர் ஒருவித நகைச்சுவையாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமில்லை, இன்று மிகச் சோம்பேறியாக காலங்கழிக்கும் எனக்கும் இப்படியெல்லாம் ஒருகாலத்தில் இருந்திருக்கின்றேன் என்று நினைக்கும்போது வியப்பாய்த்தானிருக்கிறது. -எங்கள் தாத்தாவுக்கு முன்னொருகாலத்தில் யானை இருந்தது - என்று பழம்பெருமை பேசுவதை விட வாழ்வில் உவப்புத்தரக்கூடிய விடயங்கள் வேறேதும் உள்ளனவா என்ன?
யாழில் இருந்தபோது கிறிக்கெட் மட்டுமில்லை, உதைபந்தாட்டம், சதுரங்கம் போன்றவற்றிலும் ஆர்வத்துடன் பங்குபற்றி, பாடசாலை பாடசாலைகளாய் போட்டிகளுக்காய் அலைந்து திரிந்ததும் என்றுமே மறக்கமுடியாத நிகழ்வுகள்தான். அதுவும், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து சிறந்த பெறுபேறுகள் பெற்றாலும் கிடைக்காத புகழ் -பத்து நிமிடத்தில் பிரபல்யம் ஆகுவதுபோல- இவ்வாறான விளையாட்டுக்களில், தடகளபோட்டிகளில் ஈடுபடுபவர்க்கு பாடசாலையில் வந்துவிடுவது பலருக்கு பொறாமையைதான் கொடுத்திருக்கின்றது.

பாடசாலைக்கு அருகிலேயே வீடு இருந்ததனால் சிறுவயதிலேயே, அதிகமான பின்னேரப்பொழுதுகளை பாடசாலை விளையாட்டு மைதானத்தில்தான் கழித்திருக்கின்றேன். மைதானத்தின் நடுவில் கிறிக்கெட் பயிற்சிகள் நடக்கிறதென்றால், மைதானத்தின் இருகரைகளிலும் உதைபந்தாட்டப்பயிற்சிகள் களைகட்டும். இவர்களுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன என்று மைதானத்தின் ஒருமூலையில் வலைபந்தாட்டப் பயிற்சிகள் (netball) நடக்கும். பயிற்சிகளில் பங்குபெற முடியா சிறுவயதில் இவற்றில் எந்த விளையாட்டை நான் அதிகம் இரசித்துக் கொண்டிருப்பேன் என்று எவருக்கும் கூறத்தேவையில்லை. எனது இந்தப்பழக்கம் -தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்- தொடர்வதை என் சுயபுராணத்தின் சாட்சிகளாய் நீங்கள் அவதானித்துக்கொண்டிருப்பதால், தன்னடக்கம் காரணமாய் அது குறித்து விதந்து பேசுவதை இந்தப்புள்ளியில் நிறுத்திக்கொள்கின்றேன்.

எங்கள் பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை நான்குபுறமும் சூழ்ந்து வகுப்பறைகள் இருந்ததனால், கிறிக்கெட்டோ, உதைபந்தாட்டமோ, வலைபந்தாட்டமோ நடைபெறப்போகின்றதென்றால், மத்தியானமளவிலே பாடசாலையை மூடிவிடுவார்கள். வீடு அருகில் இருப்பவர்கள் வீடுகளுக்குப் போய்த் திரும்புவதும், தொலைவில் இருப்பவர்கள் அன்றைய விளையாட்டு முடியும்வரை பாடசாலையில் நிற்பதுமாய் அனேகருக்கு அன்றையபொழுது இனிதாய்க் கழியும் (வகுப்புக்குள் இருந்து, புத்தகத்தைத் திறந்து, கொட்டாவி விட்டு, வாத்தி முறைத்துப் பார்க்காத எந்தப்பொழுதும் எனக்கு அருமையானதுதான்). ஒரு காலத்தில் எங்கள் பாடசாலையின் உதைபந்தாட்டப் புகழ் அகில இலங்கைவரை பரவியிருந்தது (’பட்டிக்காடா பட்டணமா?’ என்று போஸ்டர் ஒட்டி ஆட்டங்களை விறுவிறுப்பாக்கும் வரைபோனதாகவும்…) என்று கேள்விப்பட்டிருந்தாலும், நான் படித்த காலங்களில் பெண்கள்தான் வலைப்பந்தாட்டத்தில் மிகப்பிரபல்யமாய் இருந்தனர். அதிலும் வலைபந்தாட்டத்துக்கு என்று ‘என்றுமே புகழ்’ பெற்றிருந்த உடுவில், சுண்டிக்குளி, வேம்படி மகளில் கல்லூரிகளுக்கே இவர்கள் பயத்தை வரவழைத்துக் கொண்டிருந்த காலமது. வலைப்பந்தாட்டத்துக்கு கூடும் கூட்டத்தைப்பற்றியும், அங்கே நடக்கும் சுவாரசியமான விடயங்கள் குறித்தும்- சொல்லாமல் புரிவர் பெரியார்- என்பதற்கிணங்க அதிகம் விபரிக்கத்தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

பாடசாலை அணிக்காய் வலைப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்த அக்காமார்களில் சிலர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாய் இருந்தததாலும் அவர்கள் மூலம் வலைபந்தாட்டம் விளையாடும் பிற அக்காமார்களும் எனக்கு நன்கு பழக்கமாயிருந்ததால் கொம்புகள் முளைத்த மாதிரியான எண்ணந்தான் அன்றையகாலகட்டத்தில் எனக்குள் பரவியிருந்தது. அதுமட்டுமில்லாமல், இப்படி ‘பெரும் புகழுடன்’ நானிருக்கின்றேன் என்று பல அண்ணாமார்களுக்குத் தெரிந்து, விளையாடும் அக்காக்களுடன் ‘சில உடன்படிக்கைகள்’ செய்யும் நோக்கத்துடன் என்னை இரகசியமாய் அணுக எனது நிலை சிறகுகளில்லாமல் வானில் பறந்த கதையாயிற்று. ஆனால், அது பிறகு -வானில் போன பிசாசை ஏணி வைத்து இறக்கிய அவதியாய்- சில அண்ணாக்களுக்கு நான் உபத்திரமாய் ஆகிப்போனதும் சோகமான விடயம்தான்.

எனக்கு விளையாட்டுக்களின் மீது ஆர்வம் வந்தற்கு, எனது அண்ணாவுக்கு கிறிக்கட், உதைபந்தாட்டம் போன்றவற்றிலிருந்த மோகம் ஒரு காரணம் என்றாலும் இன்னொரு முக்கியமான காரணமும் இருந்திருக்கும் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது. அது என்னவென்றால், பெடியங்கள் கிறிக்கெட், உதைபந்தாட்டம் விளையாடும்போது அவர்களை உற்சாகப்படுத்தவரும் பெண் இரசிகர்களின் எண்ணிக்கையையும் உற்சாகத்தையும் கண்டும்தான் எனக்கும் விளையாட்டில் ஆர்வம் வந்திருக்கின்றது என்று நினைக்கின்றேன். ஆனால் நான் எங்கள் கிறிக்கெட் அணிக்கு தலைமைதாங்கும்போது அது ஒரு சோகமான நிலையை அடைந்தது குறித்து பிறகு கூறுகின்றேன். பன்னிரண்டு வயதளவில் பதினைந்து வயதுட்குட்பவர்களின் கிறிக்கெட் அணியில் எடுபடும் வாய்ப்பிருந்தும், கொழும்புக்கு விடுமுறையில் சென்று சில வாரங்கள் கழித்ததில் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனதில் எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது. சரி கிறிக்கெட்தான் கைநழுவிப்போய்விட்டது

உதைபந்தாட்டத்திலாவது கவனஞ்செலுத்தலாம் என்று அந்தப்பக்கம் பார்வையைத் திருப்பலானேன். விடிகாலையில்தான் உதைபந்தாட்டப் பயிற்சிகள் நடக்கும். பயிற்சி முடிந்தபின் - அன்றையகாலகட்டத்தில் பிரேமதாசா பாடசாலைகளுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு கப் பாலும், சங்கிலி பணிஸ¤ம் எல்லோருக்கும் வழங்கப்படும். ஒரு மாதிரியாக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாவது போட்டியில் முதலாவது கோலும் அதிஸ்டவசமாய் நான் போட்டிருக்கின்றேன். எப்படி கோல் போட்டது என்று சொன்னால் கொஞ்சம் அவமானந்தான் ஆனால் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. வேறொரு நண்பன் கோலுக்கு அடித்த பந்தை, கோலி தட்டுத்தடுமாறித்தடுக்க அதையெடுத்துத்தான் கோல் போட்டனான். Rose is a rose is a rose என்ற மாதிரி எப்படி என்றாலும் கோல் கோல்தானே என்று என்சார்பாய் நீங்கள் பேசுவதும் நன்றாகவே என் காதுகளில் விழுகிறது என்க.

ஆட்டங்களுக்கு முன் ஒரு சம்பிரதாயமான பழக்கம் -ஆதிகாலத்தில் இருந்தே- எங்கள் பாடசாலையில் இருந்தது. பாடசாலையில் இருந்த கோயிலிலும், பக்கத்த்தில் இருந்த வைரவர் கோயிலிலும் தேங்காய் உடைத்து ‘வெற்றியைத்தாரும்’ என்று பிரார்த்திப்பதுதான் அது. ஆனால் கோயில்களுக்குள் போக முன்னரோ, போனதன் பின்னரோ, அல்லது இடையிலோ பச்சை முட்டைகள் குடிப்பதை மட்டும் மறக்கமாட்டோம். குடிக்கின்ற ஒவ்வொரு பச்சை முட்டைக்கேற்ப போடுகின்ற கோல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது எங்களில் பலருக்குள் ஒரு ‘ஜதீகமாய்’ இருந்தது. நான் விளையாடிய காலத்தில் நாங்களும் இன்னொரு பாடசாலையும் (வசந்தன் படித்த பாடசாலையும்) வலய/கோட்டமட்டத்தில் எடுபட்டு யாழ் மாவட்ட அளவில் விளையாடப் போயிருந்தோம்.

உதைபந்தாட்டத்தில் கத்தோலிக்க பாடசாலைகளின் திறமைபற்றி கூறவே தேவையில்லை. உலகில் பிரேசில் எப்படி கால்பந்தாட்டத்துக்கு மகுடம் சூட்டுபவர்களோ அப்படித்தான் யாழில் கத்தோலிக்கப் பாடசாலையினர். யாழ் மாவட்ட அளவில் எங்களுடன் முதலில் மோத வந்த அணி நாவாந்துறை சென்மேரிஸ் (பெயர் சரியா?) அணியினர். ஆனால் அன்று நடந்த சோகத்தைக் கேட்டால் என்னவென்று விளம்புவேன்? அவர்கள் அணியில் இருந்த அனைவரும் ரொனால்டோவாயும் ரொனால்டினோவாயும் இருந்தனர். ஒன்றா… இரண்டா… (என்ற ‘ஆசைகள்’ அல்ல, இது அவமானம்) ஏழு கோல்களைப் போட்டு, ஏதோ எங்களோடு பயிற்சி செய்வதைப் போலத்தான் அந்தப்பெடியங்கள் விளையாடினார்கள். கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் இனியும் நின்றால் அவமானம் என்று நினைத்து ஆட்டம் பார்க்க வந்த மாமாவின் சைக்கிளில் ஏறி, நண்பர்களையும் விட்டுவிட்டு உடனேயே வீடு திரும்பியதாயும் நினைவு.

(2)
கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியபோது நான் படித்த பாடசாலை சொந்த இடத்தைவிட்டு பல்வேறு ஊர்களுக்கு எங்களைப்போல அதுவும் அகதியாய் அலையத்தொடங்கியிருந்த காலம். கிறிக்கெட் விளையாடுவதற்கு சொந்தமாக விளையாட்டு மைதானமே இல்லாதபோது, ஒருமாதிரி கஷ்டப்பட்டு ஒரு இடத்தை கண்டுபிடித்திருந்தோம். அந்த இடத்தில் சிலவருடங்களுக்கு முன்புவரை இந்திய இராணுவம் முகாம் போட்டுத் தங்கியிருந்தது. மழைவந்தால் நீர் தேங்கக்கூடிய அதிபள்ளமான பகுதியும் கூட. அத்தோடு பக்கத்தில் இருந்த அரிசி ஆலையிலிருந்த உமி, கரி முழுவதையும் இந்த ஒதுக்குப்புறமான காணியில்தான் கொட்டிக்கொண்டுமிருந்தார்கள். அந்தப்பக்கமாய் போனால் உமியும் கரியும் சாம்பலும் காற்றில் பறந்து வந்து கண்ணில், மூக்கில் எல்லாம் உறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். ஒருமாதிரி pitch போட்டு அதற்கு மேல் Matting எல்லாம் ஆணியால் இழுத்து மண்ணோடு இறுக்கி அடித்து கிறிக்கெட் விளையாடுவதற்குத் தயாராக்கியிருந்தோம்.

ஆனால் இரசிகைகள் அந்தமாதிரி கூடுவார்கள் என்று விளையாட நான் பிரியப்பட்ட கிறிக்கெட்டை எந்த இரசிகையும் இல்லாமல் விளையாடி முடிந்ததுதான் மிகுந்த அவலமான விடயம். ஏனென்றால் எங்கள் பாடாசாலை இயங்கிக்கொண்டிருந்த நகரை விட்டு பக்கத்து நகரில்தான் விளையாட்டு மைதானம் இருந்தது என்றபடியால் கிறிக்கெட்டுக்காய் என்று கூறிவிட்டு பயணம் செய்து வருவது பெண்களுக்கு கடினமாயும் இருந்தது. (ஆனால் வகுப்புக்களிடையில் ‘சென்றுவருக தோழர்களே வென்று வருக தோழர்களே’ என்று அனுப்பி வைப்பதை மட்டும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நாங்களும் ஓமோம் ஓமோம் என்று தலையாட்டிவிட்டு… அடுத்த நாள் தோற்றகதையை வந்து சொல்வதும் வழமையான நிகழ்வாய் இருந்தது). யுத்தகாலம் என்றபடியால் வாகன வசதிகளும் அவ்வளவாய் இல்லையென்பதால், வரும் பார்வையாளர்களும், விளையாடும் எதிர் அணியினரும் உட்கார்வதற்கு என்று எங்கள் கைகளிலும் தோள்களிலும் நீண்ட வாங்குகளைக் காவிக்கொண்டு எல்லாம் நெடுந்தூரம் நடந்துபோய் இருக்கின்றோம்.

சென் பற்றிக்ஸ், கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் இந்துக்கல்லூரி போன்றவற்றோடு விளையாடி, இரண்டு ஆட்டங்களில் வெற்றிதோல்வியின்றியும், மிகுதி இரண்டு ஆட்டங்களில் தோற்றும் இருக்கின்றோம். அதுவும் யாழ் இந்துக்கல்லூரியுடன் தோற்றதையும் அங்கு நிகழ்ந்ததையும் பற்றி இப்போது நினைத்தால் கூட நெஞ்சில் ஒரு அக்கினிக்கோளம் உருவாகின்றமாதிரித்தான் தோன்றுகின்றது. ஆட்டம் இந்துக்கல்லூரி மைதானத்தில்தான் நடந்தது. நாங்கள் விக்கெட்டுக்கு முன்னால் வளைந்துநின்றால் வளைந்த உடம்பிற்கு அளவாய்த்தான் விக்கெட்டும் இருக்கும், ஆனால் இந்துக்கல்லூரிப்பெடியங்களில் பலர் விக்கெட்டைப்போல இரண்டு மடங்களவில் பெரிய உருப்படியாக இருந்தாங்கள். என்றாலும் தாவீதை வென்ற கோலியாத்தின் கதை தெரியும் என்பதால் நாங்கள் இதற்கு எல்லாம் அவ்வளவாய்ப் பயப்பிடவில்லை. அன்றைக்கு என்று என்னோடு ஒப்பினிங் போலிங் போடுகின்றவன் வருத்தம் என்று காரணத்தைக் காட்டி விளையாடவும் வரவில்லை. வருத்தம் என்பதைவிட அவனுக்கு தனக்கு அணித்தலைமை பதவி தரவில்லை என்ற கடுப்பு ஏற்கனவே இருந்தது. எனவே தோற்கப்போவதை படுதோல்வியாக்குவதில் தனது பங்கும் இருக்கட்டும் என்று பெரிய ஃபீலா காட்டிக்கொண்டு வராமல் நின்றான்.

இந்துக்கல்லூரிக்கு அப்போது யோகிதான் பயிற்சியாளராய் இருந்தார். நாங்கள் 50ற்குளேயே சுருண்டு விட்டோம். அவங்கள் அடிகிறாங்கள் அடிக்கிறாங்கள் முடிகிறபாடாய் காணவில்லை. ஓட்டங்கள் இருநூறைத் தாண்டிவிட்டது…இரண்டு பேர் 50ற்கு மேலாய் அடித்தமாதிரியும் நினைவுண்டு. கடைசியில், சரி இவங்கள் பாவங்கள் என்று மனமிரங்கி ஆட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு எங்களை இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பெடுத்தாட அழைத்தார்கள். ஆட்டம் ஆரம்பித்ததில் இருந்தே என்னைப் பற்றிய பூர்வீகம் ஏற்கனவே தெரிந்து, வெளியாலை இருந்து இந்துக்கல்லுரிப் பெடியங்கள் நக்கலடித்துக்கொண்டிருந்தாங்கள். பூர்வீகம் வேறு ஒன்றுமில்லை.; அதற்கு ஒராண்டு முன்னர்தான் இந்துக்கல்லூரிக்கு படிக்கப்போய் ஒரு மாதம் வரை இருந்துவிட்டு இது நமக்கெல்லாம் ஆகாது என்று பழைய பாடசாலைக்கு மீண்டு(ம்) போயிருந்தேன். அதை தெரிந்து வைத்து அவங்களுக்கு ஒரே நக்கல்…இதெல்லாம் உனக்குத் தேவையா என்று. பந்து வீசும்போதுதான் எதையும் செய்ய முடியவில்லை…துடுப்பாட்டம் செய்யும்போதாவது இவங்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்று கறுவிக்கொண்டேன். ஆடிக்கொண்டிருந்தபோது நடுமைதானத்துக்குக் கூடக் கேட்கக்கூடியமாதிரி என்னுடைய ‘புகழை’ கலிங்கத்துப்பரணி ரேஞ்சுக்குப் பாடிக்கொண்டிருக்க, எனக்கு வந்த விசருக்கு அப்போது நல்ல லெந்தாய் வந்த பந்துக்கு கண்ணை மூடிக்கொண்டு விசுக்கினேன். ஒன்டு அடிபட்ட பந்து எல்லைக்கோட்டைத்தாண்டி நிற்கின்ற அவங்களின்ரை தலையில் படவேண்டும், இல்லாவிட்டால் விசுக்கின்ற bat ஆவது கைநழுவிப்போய் இரண்டு பேரின்ரை மண்டைகளையாவது உடைக்கவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டு அந்தமாதிரித்தான் batஜ விசுக்கினனான். ஆனால் பிறகு -ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது.

அந்தப் பந்து நடு ஸ்டாம்பை துவம்சம் செய்துகொண்டு போக மாமியார் முன் நாணிப்போகும் மருமகனாய் என் ‘வீரதீரச்செயல்’ முடிவுக்கு வர பவுலியனை நோக்கித் திரும்பவேண்டியதாயிற்று. அதற்கும், ஒழுங்காய் லெந்தான பந்தைக் கூடப்பார்த்து அடிக்கத்தெரியாதவன் ஒரு அணிக்கு தலைமைதாஙக வந்துவிட்டான் என்று வாய்க்கரிசி போட்டு வாழ்த்தாத குறையாக அவங்களின் ‘வாழ்த்து’க் கிடைத்தது…. எனினும் இந்துக்கல்லூரி நண்பர்களோடு அருந்திய அருமையான பால் தேத்தண்ணியினதும் வடையினதும் வாய்ப்பனினதும் சுவையும் நட்புக் கலந்த வார்த்தைகளும்தான் இப்போது அதிகம் நினைவில் நிற்கின்றது என்பபதையும் குறித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

கிறிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவற்றில் இருந்த விருப்பைப் போல சதுரங்கத்திலும் மிகப்பெரும் விருப்பு எனக்கு ஈழத்தில் இருந்தபோது இருந்தது. இப்போதும் யாகூவின் சதுரங்கத்தளத்துக்கு வந்தால் நான் ஓடித்திரிந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டுபிடிக்கவும் கூடும். சிறுவயதிலேயே -ஏழு அல்லது எட்டு வயதளவில் - சதுரங்கம் விளையாடத்தொடங்கியிருந்தேன் என்று நினைக்கின்றேன். சதுரங்கப் பலகையை முதன்முதலில் எனது அண்ணாவும் அக்காவும் வாங்கித்தந்த நாள் கூட நினைவில் நிற்கின்றது. அதை வாங்கியவன்றுதான், அண்ணாவின் நண்பரொருவரின் வீட்டில் பொம்மர் அடித்து அவர்களின் வீடு சிதைந்துபோனதும், அதிஸ்டவசமாய் அந்த அண்ணாவும் அவர்களின் குடும்பமும் தப்பியிருந்தாலும் பொம்மரைக் கண்டு பாதுகாப்புக்கென ஒதுங்கிய ஒருவர் இறந்துபோனதும்…அந்த கசப்பான நாள் நினைவில் இப்போதும் மிதக்கிறது.

சதுரங்கப்பலகையை வாங்கிய சாபத்தால்தான் இப்படி நடந்தது என்று நெடுங்காலத்துக்கு எண்ணிக்கொண்டும் இருந்திருக்கின்றேன். யாழ் நகரில் சனசமூக நிலையங்கள், YMCA போன்றவை நடத்திய அனேக போட்டிகளில் பங்குபற்றி சிலதில் பரிசுகள் வாங்கியதும் இனிமையான தருணங்கள்தான். அந்தப்பொழுதுகளில் அப்பாவோடு சுமூகமான உறவுகள் இருந்ததும் - முக்கியமாய் எதையும் எதிர்த்துக் கதைக்காத ‘நல்ல பண்பும்’ என்னிடம் இருந்ததை அப்பா கூட இப்போது நனவிடை தோய்ந்து அந்தக்காலத்தை மகிழ்வுடன் அசை போடவும் கூடும். பிறகு பாடசாலைகளுக்கு இடையில் நடந்த போட்டிகளில் யாழ் மாவட்டவளவில் தொடர்ந்து runners-up யாய் -யாழ் இந்துக்கல்லூரிக்கு- அடுத்ததாய் வந்திருக்கின்றோம். எங்கள் அணியில் பெண்கள் இருப்பதைப் பார்த்து ஒருவித எகத்தாளத்துடன் விளையாடத்தொடங்கியவர்களை எல்லாம், அசர வைத்து வெற்றி வாகை சூடிய நாளகளும்….பதின்மூன்று பதினான்கு வயதுகளிலேயே வயது வித்தியாசமின்றி உயர்தரம் படிக்கின்றவர்களோடு நண்பர்களாகிக் களித்ததும் அருமையான பொழுதுகள்தான்.

(3)
விளையாடும் காலங்களைப்போல விளையாட்டை வெளியிலிருந்து இரசிக்கும் காலங்களும் மிகவும் அருமையானது. உள்ளூரிலிருந்து சர்வதேசம் வரை வெறிபிடித்தலையும் விளையாட்டு இரசிகர்கள் குறித்து பக்கம் பக்கமாய் எழுதலாம். நமது ஊர்களில்தான் மண்டையை உடைக்கின்றவரை இரசிகர்கள் போவார்கள் என்பதை… ஜரோப்பிய நாடுகளில்/ இலத்தீன் அமெரிக்காவில் நடக்கும் இரசிகர்களின் சண்டைகளைப்பார்த்தால் நாங்கள் எல்லாம் அவர்களின் கால்தூசிக்கும் வரமாட்டோம் என்றுதான் எண்ணிக்கொள்ளவேண்டிவரும். இன்றைய பொழுதில் வடஅமெரிக்கத் ‘தேசியத்தில்’ தவண்டும் புரண்டும் நீந்தியும் எழுந்தும் கொண்டிருப்பதால் கிறிக்கெட்ட் போன்றவற்றின் மீது வெறி போய், ஜஸ் கொக்கி, கூடைப்பந்தாட்டம், பேஸ்போல் போன்றவற்றில் பித்துப்பிடித்தலையும் நிலை வந்துவிட்டாலும் கனடாவில் கால்பதித்த ஆரம்பகாலங்களில் ஒருவித வெறியுடன் கிறிக்கெட் உதைபந்தாட்டம் போன்றவற்றைப் பார்த்திருக்கின்றேன்.

கனடா வந்தசமயத்தில்தான் இலங்கை கிறிக்கெட் அணி உலகக்கோப்பையை சுவீகரித்திருந்தது. நான் இலங்கையணியின் இரசிகனாவே என்றும் இருந்திருக்கின்றேன். இப்போது அல்ல, சிறுவயதிலிருந்தே டிலிப் மெண்டிஸ், அர்ச்சுன இரணதுங்கா போன்ற தொப்பை வண்டிக்காரர்களால் இலங்கை அணி நிரப்பட்டு எல்லா நாடுகளும் வந்து மொங்கு மொங்கு என்று அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்த காலத்திலிருந்தே நான் இலங்கையணியின் தீவிர இரசிகன்தான். அதற்கு அடுத்து மேற்கிந்தியத்தீவுகளுக்கு. எனது அண்ணாமார், அப்பா போன்றவர்கள் மேற்கிந்த்தியத்தீவின் தீவிர இரசிகர்கள். கொஞ்சம் ஆழமாய் அவதானித்தால் ஈழத்துக்கும் இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகளுக்கும் நிரம்ப ஒற்றுமை இருப்பது புரிபடும். சுமூகமற்ற அரசில் சூழ்நிலைகள், போராட்ட இயக்கங்கள், காலநிலை, அழிவுகள், மீண்டும் உயிர்ப்புடன் எழுதல்… என்று பல புள்ளிகளில் ஒன்றுபடமுடியும். இப்படியான ஒரு ‘தீவிரமான ஆராய்ச்சியின்’ ஈடுபடும் என்னைப் போன்றவர்களுக்கு ஸ்பானியப் பெண்கள் மீது ஈர்ப்பு வருவதும் அதிசயமில்லைதானே (அப்பாடா ஒருமாதிரி நான் நெடுங்காலமாய் கூற நினைத்த விடயத்தை காரணகாரியங்களுடன் நிரூபித்துவிட்டேன்).

எனக்குத் தெரிந்து, அண்ணா ஊரில் இருந்தபோது நடத்தி விளையாடிக்கொண்டிருந்த் அணிக்குக் கூட Gary Sobers என்று பெயரிட்டதாய்தான் நினைவில் இருக்கிறது. கிறிக்கெட் வேல்ட் கப் நடந்துகொண்டிருந்தபோது நாங்கள் இங்கே பேப்பர் போட்டுக்கொண்டிருந்தோம். தனியே பேப்பர் போடுவது -அதுவும் வின்ரர் காலங்களில்- கடினமென்பதால் நானும் அவ்வவ்போது அண்ணாக்களுடன் உதவிக்கு என்று போவதுண்டு. ஆனால் இங்கு விடிகாலை நேரத்துக்கே வேல்ட் கப் ஆட்டங்கள் தொடங்கிவிடும் என்பதால், பேப்பர் போடப்போகாது தூங்குவது போலக் கள்ளமாய் நடிக்கத்தொடங்கிவிடுவேன்.

ஆரம்பத்திலிருந்தே ஆட்டத்தை பார்க்கவிட்டால் அது ஒரு ஆட்டம் பார்த்ததுமாதிரி இல்லை என்று வெறிபிடித்த இரசிகனாய் இருந்த காலம் அதுவாம். அண்ணாக்களும் என்ரை கள்ளம் விளங்கியோ அல்லது பாவப்பட்டோ விட்டுவிட்டுப்போக நான் கொஞ்சநேரத்தில் எழும்பி ஆட்டம் பார்க்கத் தொடங்கிவிடுவேன். பிறகு கொஞ்ச நேரத்தில் அண்ணாக்களின் நண்பர்களும் வந்து குவிய, இடைக்கிடை ஆட்டம் பற்றிய கதைகள், ஈழத்தில் அவர்களின் நனவிடைதோய்தல் என்று விரிந்துபோக ஆட்டங்களைப் பார்ப்பது சுவாரசியமாகும் (இங்கே சாதாரண ரீவி சானல்களில் கிறிக்கெட்டை ஒளிபரப்பமாட்டார்கள்). நான் இங்குசந்தித்த நண்பர்களில் மட்டுமில்லை, 2004ல் இலங்கைகுச் சென்றபோது சந்தித்த நண்பர்கள் வரை 90% மேற்பட்டவர்கள் தீவிர இந்திய இரசிகர்களாக்வே இருக்கின்றார்கள் எனபதில் இந்தியாவின் பாதிப்பு ஈழத்துமக்களிடையே எவ்வளவுதூரம் என்பது வெள்ளிடை மலை. அதுவும் 2004ல் திருகோணமலையில் நின்றபோது ஏதோ ஒரு கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடியபோது இருந்த சனம் முழுதும் இந்தியாவுக்கு ஆதரவாய் நிற்க - சித்தியின் மகள் மட்டுமில்லை சித்தி கூட - இலஙகை வீரர்களைத் திட்டித்திட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, என்னுடைய மானத்தைக் காக்கவேனும் இலங்கையணி வெல்லவேண்டும் என்று நேர்ந்துகொண்டேன்.

அவர்கள் இறுதியில் வென்றுகாட்டி, ஒரு இரசிகனுக்குத் தரவேண்டிய மிகப்பெரும் சந்தோசத்தை எனக்கு அன்று அளித்துமிருந்தார்கள்.
ஆனால் 96ல் நடந்த உலகக்கோப்பையை இலங்கையணியின் இரசிகன் என்றவகையில் - என்னால் என்றுமே மறக்கமுடியாது. உலகக்கோப்பையைத் தமதாக்கிக்கொள்ளும்வரை எந்தப்போட்டியிலும் தோற்காமல் அருமையாக அவர்கள் ஆடியிருந்தார்கள். அதிலும் இந்தியாவுடனான அரையிறுதி ஆட்டமும், ஆஸ்ரேலியாவுடனான இறுதியாட்டமும் உயர்தர ஆட்டங்கள். கைதராபாத்தில் (?) நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஜெயசூரியாவின் பந்துகள் -துடுபடுத்தாடியவர்க்ள் வெளியே போகின்றது என்று விலத்திவிட- பின்னங்கால்களுக்குள் சுழன்றாடி விக்கெட்டுக்களை விழுத்திய காட்சிகளையெல்லாம் அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியுமா என்ன? அதேபோல இறுதியாட்டத்தில் அசைக்கமுடியாது என்று நினைத்த ஆஸ்திரேலியா அணி 250 தாண்டிவிட்டு பெருமிதமாய் நிற்க, இலஙகையின் அன்றைய ஆரம்பநிலை ஆட்டக்காரர்களான ஜெயசூரியாவும், களுவிதானவும் கொஞ்ச ஓட்டங்களுடன் ஆட்டமிழ்ந்துபோக, அரவிந்த டீ சில்வா- அசங்க் குருசிங்கா, அர்ஜூன இரணதுங்கா, மகாநாமவுடன் very coolயாய் இணை துடுப்பெடுத்தாடி, சதமும் அடித்து அணியை உலகின் உச்சிக்கு கொண்டுபோய கிண்ணத்தை கைப்பற்ற வைத்த ஆட்டம், என்னைப்பொறுத்தவரை ஒரு classicதான். அதுபோல் பிரான்சோடு இறுதி ஆட்டத்தில் 3-0 தோற்று, அதற்கடுத்த உலகக்கோப்பையில் ரொனால்டோ ஒரு படைப்பின் நேர்த்தியுடன் பந்தின் இலயத்தோடு இயைந்து, ஜேர்மனியை மண்கவ்வச் செய்த பிரேசிலின் ஆட்டமும் அவ்வளவு இலகுவில் மனதைவிட்டு அகலாது.

(4)
மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள், ஒரு ப்னீக்ஸ் பறவையைப் போல எழுந்துவரும் நம்பிக்கையைத் தருவதும், இன்று ஆரம்பிக்கின்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் -ஏதாவது பெருந்தவறுகள் விட்டாலன்றி- பிரேசில் வெல்லப்போகின்றது என்ற கட்டியங்களும் மீண்டும் கிறிக்கெட்ட்டிலும், உதைபந்தாட்டதிலும் எனக்கு ஈர்ப்பைக் கொண்டுவரச்செய்கின்றன. அதைவிட ரெக்கேயும், சம்பாவும் ஆடியும் பாடியும் ஆட்டங்களை ஒரு திருவிழாவின் கொண்டாட்டங்கள் போல ஆக்கும் இரசிகைகளைப் பார்க்கும்போது -எனக்குள் இருக்கும் இரசிகன் என்றும் உறைந்துபோய்விடமாட்டான் போலதான் தோன்றுகின்றது. இரசிகைகள் விளையாட்டு வீரர்கள் மீது பித்துப்பிடித்தலைவதும், என்னைப் போன்ற இரசிகன்கள் இரசிகைகள் மீது மையல் கொள்வதும் காலங்காலமாய் நடப்பதுதானே.

(Friday, June 9th, 2006 at 9:14 am )
(1)
சி.புஸ்பராஜாவுக்கான இரண்டாவது நினைவஞ்சலிக் கூட்டம் சென்ற சனிக்கிழமை மாலைப் பொழுதில் நிகழ்ந்தது. சாம் (அசை) சிவதாசன், சேரன், ‘காலம்’ செல்வம், கரிகாலன், கற்சுறா போன்றோர் தங்கள் நினைவுகளை/கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். சிவதாசன், ‘ஈழப் போராடத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலின் ஊடாக தனக்கு அறிமுகமான புஸ்பராஜாவைப் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, ‘காலம்’ செல்வம் எக்ஸில் நண்பர்களால் இறுதிக்காலத்தில் புஸ்பராஜா மாறிவிட்டார் என்று ஏதோ இலக்கிய அரசியல் குறித்து தனது பேச்சினிடையே அதிகம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். தமிழகத்தில் தினமலரில் கூட சி.புஸ்பராஜாவாவின் மரணச்செய்தி வந்தது எவ்வளவு பெரிய விடயம் என்று செல்வம் சற்று பெருமிதப்பட்டமாதிரி–எனக்கு- தோன்றியது. தினமலர் போன்றவை உண்மையான அக்கறையில் புஸ்பராஜாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா அல்லது ‘வேறு சில காரணங்களுக்காய்’ முக்கியம் கொடுக்கின்றதா என்று செல்வம் ஆறுதலாய் யோசித்துப் பார்த்தால் அவருக்கு நன்மை பயக்கும். அதேபோல் -நானறிந்தவளவில்- இதுவரை புலம்பெயர்ந்த ஈழத்தவர் என்றவகையில் கலைச்செல்வன், உமாகாந்தன் போன்றவர்கள் காலமானபோது கூட முகப்பில் அவர்களின் படங்களைப் பிரசுரிக்காத திண்ணை இணையதளம் ஏன் புஸ்பராஜாவுக்கு மட்டும் முக்கியம் கொடுத்தது என்று அவதானித்தால் ‘ஆழமான அரசியல் புள்ளிகள்’ சிலருக்கு விளங்கக்கூடும்.
செல்வத்துக்கு, எக்ஸிலின் ‘ஒன்றுமறியாய்ப் பெடியங்களோடு’ புஸ்பராஜா பிற்காலத்தில் சேர்ந்து திரிந்தது அவ்வளவாய்ப் பிடிக்கவில்லையென்றாலும், புஸ்பராஜா ஆர்வத்துடன் இப்படியொரு புத்தகத்தை எழுதியதற்கு இந்தப் புதிய நண்பர்களின் ஊக்கமே காரணம் என்ற யதார்த்தம் புரிந்ததற்காய் அவரைப் பாராட்டத்தான் வேண்டும். சேரனின் படைப்புக்களையோ இன்னபிற விடயங்களையோ விமர்சிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற ‘பலரில்’ ஒருவராய் செல்வமும் இருப்பதை அவரது உரையினூடு அவதானிக்கமுடிந்தது.. சேரனின் படைப்புக்களுக்கான இடம் என்றும் தமிழ் இலக்கியத்தில் உண்டு. அதை எவரும் மறுக்கப்போவதில்லை. ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பு தவிர்க்கவே முடியாது இருந்த கவிதைகளை இப்போதும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதன் அரசியல் ஏன் என்பதும் (எனக்குப்) புரியவில்லை. இரண்டாயிரம் ஆண்டளவில் சேரனின் கவிதைகளை தொகுப்பாய் வாசிக்கின்ற, சேரன் ஈழத்தில் கண்டதை விடவும் அதிகம் போரின் கோரத்தைச் சந்தித்த என்னைப் போன்றவர்களுக்கு சேரனின் அரசியல் கவிதைகள் பெரிதாய் எந்தப் பாதிப்பையும் தந்துவிடவில்லை என்பதே உண்மை (சேரன் 90ம் ஆண்டளவிலேயே கனடாவுக்கு இடம்பெயர்ந்தவர்). தான் பேசுகின்ற ஒவ்வொரு கூட்டத்திலும் எவரோ ஒருவரின் கவிதைகளை உதாரணம் காட்டுகின்ற ‘காலம் செல்வத்துக்கு, சேரனைத் தாண்டி இரண்டு புதிய தலைமுறைகள் வந்துவிட்டன என்பதைப் பற்றி நினைவுபடுத்தத் தேவையில்லையென நினைக்கின்றேன். மேலும் செல்வத்தைப் போன்றவர்கள் ஏன் ஈழத்தில் அ.யேசுராசா, கருணாகரன் போன்றவர்களோ புலம்பெயர் தேசத்தில் கி.பி.அரவிந்தன், அ.இரவி போன்றவர்களோ புதிய தலைமுறைப் படைப்பாளிகளை உருவாக்க ஆர்வம் காட்டுவதைப்போல சேரன் அக்கறை கொள்ளவில்லை என்பது பற்றியோ, அல்லது சு.ராவின் பாதிப்பிலிருந்து வந்தோம் என்று ஒரு புதிய தலைமுறை தமிழகத்தில் கூறுகின்றமாதிரி சேரனின் பாதிப்பிலிருந்துதான் நாங்கள் வந்தோம் என்று ஏன் இன்றைய இளைய தலைமுறை ஈழத்திலோ அல்லது புலம்பெயர் தேசத்திலோ குறிப்பிடவில்லையெனவும் தங்களுக்குள் கேள்வி எழுப்பி விடைகளைத் தேடுதலும் சாலவும் சிறந்ததாக இருக்கும்.
கரிகாலன் அந்தக்காலத்துக் கூட்டணிக்காரர் என்பதால், எனக்கு வாழ்க்கையில் பார்க்கக்கிடைக்காத- கூட்டணிக்காரரின் உரையை கேட்கமுடிந்தது. அவர் பேசப்பேச ஒரு காலத்தில் கூட்டணியில் தீவிரமாய் இயங்கிய எனது தந்தையாரும் இப்படித்தான் முந்தி இருந்திருக்க்கூடும் என்ற எண்ணம்தான் நினைவில் ஓடியது. கரிகாலன் பேசிய கருத்துக்கள் எதிலும் என்னால் உடன்படமுடியாவிட்டாலும், இயக்கங்களின் உடகொலைகள், இயக்கத் தலைமைகள் பற்றிய சில குறிப்புக்கள் என்னளவில் புதியவையாக இருந்தன. உரையின் முடிவில் உணர்ச்சிப் பெருக்கில் இந்தியா இல்லாமல் எமக்கு எதுவும் இல்லை என்று முடித்தார் பாருங்கள், அந்த இடந்தான் அற்புதம். எனது தந்தையாரும் இப்படியான நிலைப்பாட்டில் இருப்பவர் என்பதால் எனக்கு இது பெரிதாய் ஆச்சரிமளிக்கவில்லை என்றாலும், ஏதோ இந்திய அரசாங்கம் இந்த பிடி பிடி என்று எல்லாவற்றையும் கொடுப்பதுமாதிரியும் ஈழத்தில் இருப்பவர்கள் ‘உன்ரை ஒண்டும் வேண்டாம்’ என்று முகஞ்சுழித்து பின் பக்கத்தைக் காட்டி கொண்டு போவது மாதிரியும் இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதுதான் எரிச்சலூட்டுகின்ற விடயம்.
சேரன், இயக்கங்களில் இருந்தவர்கள் புஸ்பராஜாவைப் போல தங்கள் சாட்சியங்களை ஆவணப்படுத்தவேண்டும் என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார். ஆகக்குறைந்தது தாங்கள் சம்பந்தப்பட்ட இயக்கங்களின் கதைகளையாவது கோவிந்தன்,செழியன் மாதிரி எழுதவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். கற்சுறா, ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ வெளிவந்த அடுத்தடுத்த கிழமைகளிலேயே அதன் தகவற்திரிப்புகளை விளக்கி இன்னொரு புத்தகம் உமாகாந்தன், அசுரா, தேசதாசன்(?) கோவை மகேசன் (?) போன்றவர்களால் வெளியிடப்பட்டதைக் குறிப்பிட்டார் (நூலின் பெயர் இப்போது நினைவுக்கு வரவில்லை). ஏற்கன்வே முன்பு ஒரிடத்தில்குறிப்பிட்டமாதிரி, வரலாறும், உண்மைகளும் அவரவர்க்கு ஏற்ப வேறுபடத்தான் செய்யும் என்று இவ்வாறான நூல்களை வாசிக்கின்ற நாமனைவரும் சாந்தியடையவேண்டியதுதான்.
உரைகளின் முடிவில், பார்வையாளர்களாக வந்திருந்தவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள். புஸ்பராஜாவுடன், அவர் தமிழ் மாணவர் பேரவையை ஆரம்பித்தபோது அதனோடு இயங்கிய நண்பர்களின் பகிர்ந்த கருத்துக்கள் முக்கியமானவை. கடும் விமர்சனம் இருந்தாலும் வரதராஜப்பெருமாளின் குடும்பச்சூழ்நிலையை அறிகின்றபோது ஏழ்மையான குடும்பத்திலிருந்து வளர்ந்து நாட்டின் உயர் பதவியைப்பிடித்த பிரேமதாசாவை, வரதராஜப்பெருமாளுடன் மனம் ஏனோ ஒப்பிட்டுப்பார்க்கச் செய்தது. புஸ்பராஜாவாவின் சகோதரியான புஸ்பராணியும் ஈழ்ப்போராட்டத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளார் என்பதை புஸ்பராஜாவின் நூலினூடும், சிலரின் பேச்சுக்களினூடும் அறிய முடிந்தது.. காலமும் சூழலும் இயைந்து கொடுத்து புஸ்பராணியும் தனது போராட்ட கால வாழ்க்கையைப் பதிவு செய்வார் என்றால் அது ஒரு முக்கிய ஆவணமாய் இருக்கக்கூடும். பெண்ணின் பார்வையில் விரியும் சாத்தியமுள்ள அந்தச் சாட்சியம் பல விடயங்களை/பலரின் முகமூடிகளை கிழிக்க உதவவும் கூடும்.
சக்கரவர்த்தி, புஸ்பராஜாவின் நினைவஞ்சலிக்கூட்டத்துக்காய் கொடுக்கப்பட்ட பிரசுரத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட கேள்வி ஒன்றுடன் வந்தார். நினைவுக்கூட்டத்தை நடத்தியவர்கள், புஸ்பராஜா கொடுத்த தனது இறுதிச் சாட்சியத்தை நினைவஞ்சலிப் பிரசுரத்தில் பாவித்திருந்தனர். அதில், ‘… எனது நாட்டின் பேரின்வாத அரசியல்வாதிகளிடமும், எனது மண்ணுக்காய்ப் போராடுபவர்களையும், இதர குழுக்களையும் இந்த நேரத்தில் நான் இரு கரங்களையும் கூப்பிக் கேட்பது தயவு செய்து கொலைகளை நிறுத்துங்கடா..’என்று வருகிறது…. தனக்கு எல்லாம் விளங்குகிறது, ஆனால் மண்ணிற்காய் போராடுபவர்கள் யார் என்பதும் இதர குழுக்கள் என்பது யாவர் என்பது குறித்தும் யாரேனும் விளக்கம் தரமுடியுமா என்று சக்கரவர்த்தி சபையைப் பார்த்துக்கேட்டாரே பாருங்கள், ஒரு கேள்வி… பாவம் பிரசுரித்த நண்பர்கள் என்ன செய்வார்கள். புஸ்பராஜா சொன்னதைச் சொன்னமாதிரித்தானே போடமுடியும்…தங்களுக்கேற்றமாதிரி வெட்டிப் போட அவர்கள் என்ன தணிக்கைக் குழுவா வைத்திருக்கின்றார்கள்? புஸ்பராஜாவின் புத்தகம் குறித்தோ அவரது தனிப்பட்ட வாழ்வு குறித்தோ ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருக்க எங்கிருந்துதான் இப்படிப்பட்ட ‘புத்திசாலித்தனமான கேள்விகள்’ இந்தப் படைப்பாளிகளுக்கு வருகின்றதோ தெரியவில்லை. ஆனால் பிறர் மீது விமர்சனம் வைக்கின்ற சக்கரவர்த்தி, ‘வைகறை’யில் ‘காலம்’ செல்வத்துக்கு அவர் வைத்த விமர்சனத்துக்கு ‘காலம்’ செல்வம் தன்னிலை விளக்கம் தந்தபிறகும், அது குறித்து மன்னிப்போ வேறெதுவோ பேசாது அந்தவிடயத்தை -மவுனமாய்- சாதுர்யமாய்க் கடந்து போனது ஒரு ‘நடுநிலைவாதி’க்கு வேண்டிய அடிப்படைப்பண்பு என நாம் எடுத்துக்கொள்ளலாமா? என்பதை சக்கரவர்த்திதான் தெளிவுபடுத்தவேண்டும். மற்றும்படி சக்கரவர்த்தி கண்ணை மூடிக்கொண்டு -யதார்த்த சூழ்நிலைகளை மறந்து- பால்குடித்தால் கொஞ்சம் செல்லமாய் அதட்டிப்பார்ப்போம் என்பதற்காய், அவர்களின் தோழரான புஸ்பராஜாவே விகடனுக்குக் கொடுத்த பேட்டியிலிருது ஒரு பகுதியை எடுத்துத்தருகின்றேன்.
‘ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரை இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களிலிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.’
இந்த நினைவஞ்சலிக்கூட்டத்தில் தர்சனும், பா.அ.ஜயகரனும் வைத்த (எனக்கு விதிவிலக்காய்ப்பட்ட) கருத்துக்கள்தான் முக்கியமாய் இருந்தது. தர்சன், எல்லோரும் புஸ்பராஜாவின் ஒரு பக்க்கத்தை மட்டுமே கூறிக்கொண்டிருக்கின்றீர்கள், ஆனால் அவர் பதிவு செய்யாத ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் படுகொலைகள் குறித்தோ, அவர்கள் கட்டாயப்படுத்தி சிறார்களைத் தமிழ் தேசிய இராணுவத்தில் சேர்ந்த பக்கங்களையோ புஸ்பராஜா சாட்சியப்படுத்தாததை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார். முக்கியமாய் புலிகள் சிறார்களைப் படையில் சேர்க்கின்றார்கள் என்று விமர்சனம் செய்கின்ற எவரும் ஏன் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி மிகப்பலவந்தமாய் சிறார்களை சேர்த்தது குறித்து கேள்விகளோ ஆவணப்படுத்தல்களோ செய்யவில்லை என்றும், புஸ்பராஜாவின் தீராநதிப்பேட்டியில் இராணுவம் என்றால் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்யத்தான் செய்வார்கள் என்று சப்பை கொட்டியதையும் கேள்விக்குட்படுத்தி…இவ்வாறான பலவீனமான பக்கங்களையும் இணைத்துத்தான் புஸ்பராஜா அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது கவனிக்கத்தக்கது (இதையேதான் நானும் கூற விளைந்ததும் கூட). ஒரு ஆதிக்க சாதியப் பிரதியாய் இருந்தாலும் -ஒரு நண்பரின் வீட்டில் கண்டு சில அத்தியாயங்கள் மட்டுமே வாசித்து முடித்த- ‘மறைவில் ஜந்து முகங்கள்’ என்ற நாவல்(?) ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினர் செய்த கொலைகளையும்/பாலியல் வன்புணர்ச்சிகளையும் ஓரளவுக்கு ஆவணப்படுத்துகின்றது என்று நம்புகின்றேன்.
பா.அ.ஜயகரன், இந்தியாவை ஒற்றைப்படையாக கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்த கரிகாலனுக்கு நல்லதொரு பதிலை வழங்கியிருந்தார். தமிழக மக்களின் தார்மீக ஆதரவின் வலுவை விளங்கிக்கொண்டாலும் இந்திய அரசாங்கத்தின் இராஜ தந்திர விடயங்களை மறந்து பேசிக்கொண்டிருப்பது ஆபத்தானது என்றார். முக்கியமாய், இந்தியா ஏன் எல்லா இயக்கங்களுக்கும் தமிழகத்தில் பயிற்சி கொடுத்தது என்பதன் பின்னணி உண்மைகளையும், இந்தியாவினதும் றோவினதும் சாதுர்யமான காய் நகர்த்தல்கள் குறித்தும் இயக்கங்களில் இருந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்…அரசியல் சூழலின் யதார்த்தம் புரியாது எல்லாவற்றுக்கும் இந்தியா இந்தியா என்று கட்டியழுவதால் எந்தப் பிரயோசனமும் ஈழத்தமிழருக்கு வந்துவிடப் போவதில்லை என்று ஜயகரன் கூறியது கவனிக்கத்தக்க விடயம். இவ்வாறான ஒத்த கருத்து, முன்னாள் இயக்கங்களிலிருந்த -புலிகளை இன்று கடுமையாக விமர்சிக்கின்ற- தோழர்கள் பலரிடம் கூட இருப்பதைப் பல சமயங்களில் அவதானித்திருக்கின்றேன் என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். புஸ்பராஜாவும் ஈழப்போராட்டத்தில் இந்தியாவின் பங்கு குறித்து ஒரு நூலை அவரது இறுதிக் காலத்தில் எழுத விரும்பியதாக அறிகின்றேன். அவர் நேர்மையாக தனது கருத்துக்களை முன்வைத்து எழுதி அது நூலாக வெளிவந்திருப்பின் இன்று புஸ்பராஜாவைத் தலையில் வைத்துப் பாராட்டும் இந்தியா ரூடேயும், தினமலரும், பிற இந்தியத் தேசியவாதிகளும் புஸ்பராஜாவைத் தொடர்ந்து கொண்டாடியிருப்பார்களா என்பதுவும் கேள்விக்குரியது.
கரிகாலன் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு இடைக்கிடை கருத்துக்கள் கூறினாலும், ஒரு கட்டத்தில் இரண்டு தமிழ் எம்பிக்களின் கொலையில் றோ தனது கைவரிசையைக் காட்டியது என்பதை(யாவது) ஒப்புக்கொண்டார். மேலும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினரின் கொலைகள் உட்பட பிற இயக்கங்களின் பழைய சகோதர/உடகொலைகள் குறித்து கதைக்ககூடாது என்று கலந்துரையாடலில் ஒரு கருத்து வைக்கப்பட்டதை எந்தளவுக்கு -என்னளவில்-ஏற்றுக்கொள்ளமுடியுமென்று தெரியவில்லை. ஆரம்பத்தில் நடந்த கொலைகளைக் கண்டித்தும், கவனிக்காதும் விட்டதன் சாபந்தானே இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கும் படுகொலைகளுக்கு ஒரு காரணமாய் இருக்கிறது என்பதை மறுத்துவிடமுடியுமா என்ன? இந்தச் சகோதரக் கொலைகளை செய்வதற்கு ஆரம்பத்தில் தம்பிமார்களை உருவேற்றி அனுப்பிவைத்ததே கூட்டணி அண்ணர்மார்கள் என்றுதானே ‘சாட்சியமும்’ நமக்குச் சொல்கிறது.
இந்திய றோவின் ஈழத்தினுள்ளும் நீளும் கரங்கள் குறித்து அண்மையில் கூட ஒரு (மும்பாயில் நிகழ்ந்த) சம்பவத்தினூடு. அம்பலத்தப்பட்டிருக்கின்றது. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூலில் குறிப்பிடப்படுகின்ற ஒருவர், நாங்கள் ஈழத்தில் இருந்தவரை எங்கள் குடும்ப நண்பராக இருந்தவர் (புஸ்பராஜாவுடன் சேர்ந்து அவரும் ஆர்மபத்தில் தீவிரமாய் இயங்கியவர், புலிகளின் தலைமைக்கு ஆரம்ப போராட்டகாலங்களில் மிக நெருக்கமாயிருந்தவர், பிறகு இயக்கங்களின் அழித்தொழிப்பில் வெறுத்துப்போய் முற்றாக இயக்க அரசியலைவிட்டு விலகியிருந்தவர்) . அவர் ஒருமுறை (எனது சகோதரர்களிடம்) கூறிய சமபவந்தான் இப்போதும் நினைவுக்கு வருகின்றது. 83ம் ஆண்டுக் கலவரம் முடிந்தபின் ஒரு நபர் தெல்லிப்பளை-காங்கேசன்துறைப் பகுதியில் பல வருடங்களாய் தான் எங்கேயிருந்து வந்தேன் என்ற அடையாளங்களை மறைத்து வாழ்ந்து வந்திருக்கின்றார். பிறகு 87ம் ஆண்டள்வில் இந்திய இராணுவம் ஈழத்துக்கு வந்தபோது அந்த நபர் ஒரு இராணுவத்தொகுதியிற்கே தலைமை தாங்கிய அதிகாரியாக இருந்தமையைக் கண்டபோது தனக்கு வியப்பேற்பட்டதாக அந்த குடும்ப நண்பர் கூறியிருக்கின்றார். எப்படியெல்லாம் இந்திய அரசு சாமர்த்தியமாய்-பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என- ஆரம்பத்திலேயே செயற்படத்தொடங்கியிருக்கின்றது என்பதை அறிவது பெரிய கடினமான விடயமுமல்ல. ஆக, இன்னமும் ஏதோ இராஜீவ் காந்தியின் கொலையுடன் தான் இந்திய அரசுகளின் ஈழத்தமிழர் மீதான ‘உண்மையான அனுதாபம்’ அனைத்தும் ஒரேநாளில் மாறிப்போனது என்று பேச ஆரம்பிப்பவர்கள் றோவினது நெடுங்காலத் திட்டங்கள் குறித்தும், பல இயக்கங்களை ஒரே நேரத்தில் வளர்த்துவிட்ட காரணங்கள் ஆரம்பிக்கின்ற புள்ளிகளிருந்தும் விவாதிக்க ஆரம்பிப்பதே சரியாக இருக்கும். அது ஈழப்போராட்டத்துக்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்ற உண்மையான புள்ளிகளைக் கண்டடைய ஏதேனும் ஒருவிதத்தில் உதவவும்கூடும். அதே சமயம் பெரும்பான்மையான தமிழக மக்களின் தார்மீக ஆதரவை இழக்கதொடங்கிய முக்கியபுள்ளி இராஜீவ் காந்தியின் கொலையுடந்தான் ஆரம்பிக்கின்றது என்பதையும் நாமும் நேர்மையாக ஒப்புக்கொள்ளலாம்.
(2)
இவையெல்லாவற்றையும்விட எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும், உமாகாந்தன், கலைச்செல்வன், சி.புஸ்பராஜா போன்றவர்களின் மரணங்கள், இலக்கியக்கூட்டங்களில் சந்திக்கும் நண்பர்களை நாளை பார்க்கமுடியுமா என்ற சந்தேகங்களை எனக்குள் விதைத்தபடியே இருக்கிறது. அண்மையில்கூட எனக்கு மிகப்பிடித்தமான ஒரு படைப்பாளி தன் உடல் நலம் குறித்த அக்கறையில்லாது ஐரோப்பா நாடொன்றில் திரிகின்றார் என்று கேள்விப்பட்டபோது (இந்தியாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்ததாயும் அறிந்தேன்), இந்த விசருகளுக்கு துவக்கை முன்னுக்கு காட்டி உடல் நலத்தில் கவனமாய் இருங்கோடா என்று சொன்னால்தான் காதில் விழுமோ என்றுதான் யோசிக்கத் தோன்றியது. மேலும் ‘காலம்’ செல்வமாய் இருந்தாலென்ன, கற்சுறாவாய் இருந்தாலென்ன, எத்தகை விமர்சனங்கள் அவர்கள் மீது வைத்தாலும் முகங்களைச் சுழித்துத் திரும்பாது தொடர்ந்து உரையாடுவதற்கான வெளிகளைத் தருபவர்கள் என்றளவில் மேலே விமர்சிக்கப்பட்ட அனைத்து நண்பர்கள் மீதும் தனிப்பட்ட மதிப்பு எனக்குண்டு என்பதையும் குறிப்பிடவே விளைகின்றேன்.
(3)
இந்தப் பதிவுக்கு அவசியமற்றதும், என்னள்வில் அவசியமானதுமான ஒரு குறிப்பு!
இந்திய அரசு- இந்திய மக்கள் என்று பிரித்துப் பார்ப்பதை எப்படி விளங்கப்படுத்துவது, தமிழக மக்களின் உண்மையான ஈழத்தமிழர் மீதான அக்கறையை எப்படி தெளிவாக வரையறுப்பது என்று குழம்பிக்கொண்டிருந்தபோது சோபாசக்தியின் ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அதில் தமிழக மக்களைப் பற்றிக் குறிப்பிடும் விசயங்கள் மிகத் தெளிவாக இருப்பதால் அந்தப் பகுதியை நன்றியுடன் இங்கே உபயோகின்றேன்.
‘ஈழப் போராட்டத்துக்கு தமிழகத் தோழர்கள் செய்த பங்களிப்புகளும் அளப்பெரியன. அத் தோழர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக தீயில் எரிந்தார்கள். மாணவர்களும் இளைஞர்களுமாகத் திரண்டு ஈழ அகதிகளுக்குப் பெரும் உதவிகளைச் செய்தார்கள். பல தோழர்கள் ஈழப் போராட்டத்தின் நியாயங்களைப் பரப்புரை செய்வதையே தமது வாழ்நாள்ப் பணியாகக் கொண்டார்கள். பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்று ஈழத்தில் களப் போராளிகளாகவும் சில தமிழகத் தோழர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஈழப் போராட்டத்துக்கு பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்ததால் எண்ணுகணக்கற்ற தோழர்கள் சிறைக் கொட்டடிகளில் ஆண்டு கணக்காக அடைக்கப்பட்டார்கள். வாக்கு, மனம், காயம் எனச் சகலத்தையும் தமிழ்ப் போராட்டத்துக்கு ஒப்படைத்த சில தோழர்கள் சகோதரப் படுகொலைகளைத் தொடர்ந்து விரக்தியடைந்து தோழர் பாவரசுவைப் போல மனநோயாளிகளாக மாறிக் காணாமலேயே போய்விட்டார்கள். ஆக இவை எல்லாம் சேர்ந்தது தான் ஈழப்போராட்டத்தின் வரலாறு.’
குறிப்பு: மேலே கூட்டத்தில் உரையாடப்படட விடயங்கள் -குறிப்புகள் எதுவும் எடுக்காது- எனது நினைவில் இருந்தே எழுதுகின்றேன். ஏதேனும் குறிப்புகள் தவறெனச் சுட்டிக்காட்ட்படும்போது திருத்திக்கொள்ளவும், மன்னிப்புக்கேட்கவும் ஆயத்தமாகவே இருக்கின்றேன் எனக்கொள்க.