Tuesday, September 26, 2006

மழைக்காலம்

மழையைச் சந்திக்கும் எப்போதும் நினைவில் வருவது இரண்டு விடயங்கள்தான். தடிமன் வந்துவிடுமோ என்ற பயமும், அவளைப் பறறிய நனவிடை தோய்தலும்தான். மழையை- காதலுடன், மனதை வருட வைக்கும் நினைவுகளுடன், துளித்துளியாய் மனதில் பொழியவைக்கும் எழுத்துக்களை எழுதாத படைப்பாளிகள் மிகக் குறைவே என்றாலும் மழைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஒழுகாத கூரையில்லாத வீட்டை உடையவர்களும், வீடற்று தெருவில் உறங்குபவர்களும் மழையுடன் வேறுவிதமான உறவுகளைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.
ஊரில் இருந்தபோது நோயின் நிமிர்த்தம் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டதால் மழையில் ஒருநாளும் ஆசை தீர நனைந்ததில்லை. ஓடுகளில் கல்லால் எறிவது போல பேரிரைச்சலுடன் விழும் மழைத்துளிகளைக் கேட்டபடி, வீட்டுக்கூரையின் மூலைகளில் பீலியைப்போல(?) வழிந்து ஓடுகின்ற நீரை விடுப்புத்தான் பார்த்திருக்கின்றேன். மேலும் ஓலையால் வேயப்பட்டிருந்த எங்கள் குசினியின் இடுக்குகளுக்குள்ளால் விழும் மழைத்துளிகள், அம்மா செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாணத்தால் மெழுகும் தரையை குழிகளாக்குவதையும் பார்த்துமிருக்கின்றேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் அம்மா குண்டுத்தோசை சுடும்போது ஒவ்வொரு குழிகளிலும் தோசைமாவை வார்க்கும்போது பொங்கி தோசை வருவதைப் போல இந்தக் குழிகளிலும் நீர் விழுந்து விழுந்து சிலவேளை குமிழிகளை உருவாக்கின்றனவோ என்றுதான் உவமித்துக்கொள்வேன்.
மழைக்காலங்களில் நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணிகள் மீது ஏனோ இனந்தெரியாத பரிவு வந்துவிடுகின்றது. தங்கள் உடலைச் சிலிர்க்கவைக்க மழைத்துளிகளை உதறுகின்ற நாயை, கோழிக் குஞ்சுகளை, ஆட்டுக்குட்டிகளை மிக விருப்புடன் அதிக வேளைகளில் பார்த்துக் கொண்டிருப்பதுண்டு . அதுவும் சிலவேளைகளில் மழை பெருமழையாக உருமாறும்போது வீட்டுப் பிராணிகள் எங்கள் வீட்டு விறாந்தைக்கு பெற்றோரால் புலம்பெயர வைக்கப்படுகையில் இன்னும் நெருக்கமாய் அவற்றின் அசைவுகளை அவதானிக்க முடிந்திருக்கின்றது. மழை தொடர்ந்து பெய்கின்றபோது பாடசாலையும் இல்லாது வீட்டுக்குள் முடங்குகின்றபோது புத்தகங்களோடு விட்டுவிட்டு சில உரையாடல்களை நிகழ்த்த முடிந்ததில் ஒருவிதமான இதம் இருக்கிறது. வீட்டின் ஒரு அறை முழுதும் புத்தகங்களே நிரம்பியிருக்கும். அப்பா, நூலகங்களில் வருட இறுதிகளில் புத்தகங்கள் ஏலத்துக்கு போகும்போது விகடன், கல்கி, கல்கண்டு, கலைக்கதிர் (?), சினிமாப் புத்தகங்கள் என்று அள்ளிக்கட்டி கொண்டு வருவார். இவ்வாறான மழைப் பொழுதுகளில் அந்தப்புத்தகங்களை விறாந்தையில் வாரம்,மாதம் என்ற ஒழுங்கில் அடுக்கி பரப்பி மகிழ்வதுதான் எனது பொழுதுபோக்காய் இருக்கும். அப்படிச் செய்வது என்றுமே அலுக்க்காத விசயமாக இருந்திருக்கின்றது. அப்பாவுக்கு இருந்த புத்தகங்களின் மீதான வாஞ்சையும், அக்காவுக்கு வாசிப்பில் இருந்த தீராத மோகமும்தான் என்னைப் புத்தகங்கள் வாசிக்கத்தூண்டியிருக்கலாம் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது.. இப்படி எடுக்கப்பட்ட சஞ்சிகைகள் அத்தியாயம் அத்தியாயமாய் கட்டப்பட்டுத்தான், சாண்டியல்யனின் கடல் புறா, யவனராணி, சுஜாதாவின் பலகதைகள்(கரையெல்லம் செண்பகப்பூ இப்போதும் நினைவிலிருப்பது) போன்றவற்றை வாசிக்க முடிந்திருக்கிறது. இப்படி தொடராய் வந்தவற்றை அதுவும் ஓவியங்களுடன் வாசிப்பதில் இனம்புரியாத மகிழ்ச்சியும், உயிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.
மழைக்காலத்தில் மறக்கமுடியாத இன்னொரு நினைவு என்னவென்றால், அளவெட்டியையும் அமபனையையும் இணைக்கும் வீதியில் சைக்கிளோட்டிப் போவது. அந்த வீதியால போகும்போது இரண்டு பக்கமும் பசுமையாய் விரிந்திருக்கும் வயல்களில் இலயிக்காமல் எவரும் அவ்வளவு இலகுவில் கடந்துவிடமுடியாது. கமம் செய்வதற்கு நிலம் என்று எங்களுக்கு எதுவும் இல்லாதபோதும் வயல் மீது இருக்கும் என் காதல் அளவற்றது. அம்மாவோடு வீட்டில் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு புல்லுச் செருக்குவதாய்ப் போவதிலிருந்து… அறுவடைகள் முடிந்தபின் மிளகாய்ச்செடிகளை இன்னபிற பயிர்களை விறகுக்காய் சேகரிப்பதிலிருந்து… ஊரில் இருந்தவரை எனக்கு வயல்களோடு நெருக்கமான பிணைப்பு இருந்திருக்கின்றது. அவ்வாறான ஒரு பொழுதில்தான் அண்ணா வாங்கிகொண்டுவந்த கொத்துரொட்டியை வாழைத்தோட்டம் ஒன்றில் முதன் முதலாய் சாப்பிட்டதும்… இன்னும் பசுமையாய் இருக்கிறது. இந்த குண்டும் குழியுமான -தாரையே தசாப்தங்களாய் காணாத- வீதியால் போகும்போது, என் வயதொத்தவர்கள் அல்லது குறைந்தவர்கள் வாழைக்குற்றிகளை, முறிந்து மிதக்கும் மரக்கிளைகளை படகாக்கி மழைக்காலங்களில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க பார்க்க ஆசை நுரை நுரையாகப் பொங்கத்தொடங்கும் (வழமையான நிலப்பிரசினைகளால் ஒவ்வொருத்தரும் நிலத்தை வெட்டி வெட்டி வீதி சிறுத்துக் கொண்டுபோனது இன்னொரு சுவாரசியமான விடயம்). நோயின் காரணத்தாலும் பெற்றோர் கண்டு விட்டால் என்னாகும் என்ற பயத்தாலும் வீதியில் நின்று அவர்களை இரசித்துவிட்டு கையசைத்துவிட்டு நகர்ந்தபடி இருந்திருக்கின்றேனே தவிர அவர்களோடு அசைதீர மழைநீரில் ஒருநாளும் சேர்ந்து விளையாடியது கிடையாது.
புலம்பெயர்ந்து வந்தபின்னும் மழையில் ஆசைதீர ஒருநாளும் நனைந்ததில்லை. அவள் -நான் இன்று முழுவதுமாய் மழையில் நனைந்தேன்- என்று சிலிர்த்துக் கூறியபோது என்னால் ஏன் இப்படி ஒருபோதும் இருக்கமுடியவில்லை என்றுதான் எண்ணத்தோன்றியது. வீட்டையே உலகமாய் திணிக்கப்படும் பெண்களுக்கு மழை -என்னால் புரிந்துகொள்ளமுடியாத- பல மொழிகளை அவர்களுக்காய்ப் பேசவும் கூடும். ஒரு மழைப்பொழுதில் பிறர் பற்றிய பிரக்ஞையின்றி நனைதல் என்பது ஒரு பெண்ணுக்கு மிகபெரும் சுதந்திரமாயும் இருக்கலாம். அவள் -உன்னோடு நனையும் ஒரு மழைப்பொழுதுக்காய் காத்திருக்கின்றேன்- என்கின்றாள். மழையை வீட்டுக்குள் இருந்து மட்டும் இரசித்துக்கொண்டிருப்பவனுக்கு அது எவ்வ்ளவு சாத்தியம் சாத்தியமின்மை என்று தெரியாதபோதும் என்றேனும் ஒருநாள் அவளோடு மழையில் முழுதாய் நானும் நனைந்துவிடக்கூடும் போலத்தான் தோன்றுகின்றது.
அப்போது…அந்தப் பொழுதை என்ன பெயரிட்டு அழைப்போம் கண்ணே?
…………………….
-நீர்- பற்றி எழுதப்பட்ட… நினைவுக்கு வந்த இரண்டு கவிதைகள்
நீர்
~ரமேஷ்-பிரேம்
1.
கண்கள் கலங்கி
முகமே குளமான
நீர் நிலை
ஆழம் காண மூழ்கின்றேன்
இரவில் அமிழ்ந்து தரை படிந்த நிலாவில்
பாதம் பதிய
வசதியாகத் தியானத்தில்
அமர்ந்து விடுகின்றேன்
தியானவெளியாகவும் மையப்போதமாகவும் குளம்
ஆனால் இது
அந்தரத்தில் மிதக்கிறத
2.
மழையைப் போல நீ
எனக்கு எல்லாம் தந்தாய
3.
தூறலாய்த் தொடங்கி
படிப்படியாக வலுத்து
ஒவ்வொரு இழையாக இணைந்து
சலசலவென ஓடோடி
தியானத்தின் உச்சியிலிருந்து உன்னை
அவிழ்த்துக் கொண்டிருக்கிறாய்
அருவ
4.
நீ நடந்து செல்லும் பாதையெல்லாம்
ஈரம்
அது உனது பண்பு
என் உடலெங்கும் பலவாகி ஓடுவது
ஒரேயொரு ஆற
5.
கடலைப் போல ஒரு
உடல் நீ
கவிதையைப் போல ஒரு
கடல் ந
6.
குளம் மழை அருவி ஆறு கடல்
எல்லாம் நீ
இப் பெயர்களில் பொருந்தும்
வடிவம் நான
7.
குளம் தியானம்
மழை குதூகலம்
அருவி கொண்டாட்டம்
ஆறு திருவிழா
கடல் கலவி - எல்லாம்
மனசெனச் சுழலும் ஒரு துள
9.
மழையைப் போல நீ
எனக்கு எல்லாம் தந்தாய

நன்றி: கறுப்பு வெள்ளைக் கவிதை
(Friday, May 26th, 2006 at 8:55 am)
யுத்தமொன்றில் தோற்று
வீட்டுக்காவலை விரும்பித்தேர்கையில்
சாளரமும் சாலையோர மனிதர்களும்
நிறங்களை உதிர்த்து
கரைத்தனர்
நாட்களில் கரியவர்ணத்த
நினைவுக்கும் நனவுக்குமிடையில்
அலைந்து திரிந்து
கறுப்பும் வெளையுமாய்
ஒரு ஓவியத்தை
வரைய முயல்கையில்
நீ நுழைகிறாய்
ஒரு பாடல் வேண்டுமென்ற
அவ்வளவு எளிதல்ல
ஒரு பாடலை
உருவாக்குதல
நளினமான வரிகளும்
தெறித்துவிடா இசையும்
தேயிலையைப் பாலில் அளவாய் கலந்தாற்போல்
சுவைக்கின்ற குரலும்
நல்ல பாடலுக்கு அவசியம
மேலும்
தயாரில்லை நான்
வனப்புமிகு வார்த்தைகள்
இறுதியில்
குருதிதேய்ந்து
குரூரமாய் நகைப்பதை
சகித்துக்கொள்
‘தயங்காதே
தொடங்குக போரை
விழுப்புண் ஏற்குமுன் மேனியை
நெய்தோய்த்த என் கூந்தலால் தடவி
ஆற்றி அனுப்புவேன்
அடுத்த நாளும்..’
அலைவரிசைகளில் வந்து விழும்
தோற்றபோரின் முன்கேட்டகுரல்.
ஏற்கனவே
புதுப்பாடல்
புனையக் கேட்டு வந்தவர்களை
உதறித்தள்ளியது மாதிரி
உன்னையும்
ஆக்கியிருக்கலாம்
தொலைதூரத்துத் தாரகையாய்.
(2)
பின்னிரவில்
மயிலிறகு வீசி
மடியில் கிடக்கும்
பிரிவில்
பசலை படர்ந்து
வெம்பித் தவிர்க்கும்
சங்ககாலப் பெண்ணுமல்ல
ந
போர்க்களத்தில்
வீசுகின்ற வாளாயும்
தாங்குகின்ற கவசமாயும்
மாறிவிடத்துடிப்பவளின்
மொழி கிள்ளிப் புனைவேன்
கவித
முடிக்கவேண்டிய ஓவியத்தின்
மீதிக் கோடுகள்
உன் இதழில் அசையக்கண்டபின்
சாளரம் உடைத்து
சாலையோர மனிதனுமாயினன்
நான்.


மாசி 24, 2006
ஓவியம்: Frida (Self-Portrait, 1929)
நண்பகல் தாண்டி
நீளும் துயிலில்…
இழந்து வந்த ஊரை
துருவக்கரடி
பன்றியிறைச்சியாய் கடித்துக்குதறும்
கனவு முளைக்கும
ஒரு போராளி
ஏதேனுமொரு ஒழுங்கையின் திருப்பத்தில்
சந்தித்துவிடும் எதிரியைப்போல
தொலைபேசி அழைப்பு
திடுக்குறச் செய்கிறது
துயில் கலைத்த
வெளியே தோட்டத்தில்
அரும்பிக்கொண்டிருக்கும்
தக்காளியினதும் ஸ்ராபெரியினதும்
மினுமினுப்பில்
கவிதைகளாகின்றன
அவளது கன்னப்பருக்கள
ஒத்த அலைவரிசையுள்ள
நண்பனுடன்
நெடுந்தூரம் பயணிக்கையில்
சுட்டெரிக்கும் வெயிலையும்
காரில் காத்திருக்கும் கணங்களையும்
கடந்துவிட முடிகின்றது
புத்தரின் சாந்தத்துடன
நீச்சல் தெரியாதவனையும்
வசீகரிக்கும் கடலை
காதலியின் ஈரவிதழ்களாய்
கவ்விக் களிக்க
மேற்கினில் மறையும்
சூரியன் நாணிச்சிவந்த
நீரில் ஊறவைத்த
உடம்பை
பச்சைமிளகாய்க கொத்துரொட்டி
துவட்டி விட
மதுவும்…
கடலளையும் நங்கையரின் மொழியும்…
நினைவுபடுத்தும்
பீத்தோவனின் எழுதிமுடிக்கா
இசைக்கோர்வையின் இதத்த
எல்லாம்
அற்புதமாய்த்தான் தெரிந்தன
பத்துவயதுப் பையன்
சுழியில் மூழ்கி
மூச்சிழந்த அந்த நொடிவர
கொலைகளை
ஆடையில் ஒட்டிக்கொள்ளும்
கடற்கரை மணலைப்போல
உதறித்தள்ளி நகர்ந்துகொண்டிருப்பவனுக்கும்
வலிக்கத்தான் செய்கின்றது
மரணம்
சிலவேளைகளில்.
(1)
சோளம் விளைந்த விளிம்பில்
நடக்கும் அவனை
மழைபெய்து நெகிழ்ந்தமண்
அழைக்கிறது
ஒரு பருவத்தை நினைவுபடுத்தும்
எதையேனும் வனைகவெ
அவனுக்குள் அவனுக்கான பருவங்கள்
களிப்புடனும்
முடிவில் சோளவிலைகளில் கூர்மையைப்போல
குத்துகின்ற வலியுடனும்
இலவம்பஞ்சாய் வெடிக்கின்ற
வெடித்துச்சிதறி காற்றிலலையும்
பஞ்சைத் துரத்திப் பிடிக்கும்
சிறுவன்
சுரீரென்று காலைக் குத்துவது
முள்ளா என்று திரும்பிப்பார்ப்பதற்குள்
பலவந்தமாய் அடித்துத் துரத்துகிறது
ஷெல் துண்டு
அடுத்த பருவத்துக்க
பெண்களைப் பற்றிய
கிறக்கமான கனவுகள்
அரும்பும் மீசையுடன் துளிர்க்கவேண்டிய பொழுதில்
துவக்கு
தூக்கவேண்டிய அவதியும்
சரிகின்ற மனிதவுடல்களும்
எத்தித்தள்ளிவிடுகின்றது
இன்னொரு காலமாற்றக்கடலில
பதின்மமுடிவில் ஒரு சுழலாய்
திணறவைக்கும் காதலின் நினைவில்
தனிமையில் புழுங்குபவன்
இருப்பின்றியலையும் Blue Jaysகளுடன்
யன்னலோரமாயிருந்து
சினேகித்துச் சிலிர்க்க
வசந்தகாலங்கள் வரும
(2)
நாட்டின் நினைவில்
ஒரு சமாதானப்புறாவை வனையத்தொடங்குமவன்
திரள்கின்ற மண்ணில்
துவக்குகளும் முண்டங்களும் மிதக்கின்ற திகைப்பில்
பீதியுறத்தொடங்கி
த்ன்னையே வனையத்தொடங்குகின்றான்;
சோளப்பண்ணைக்கு காவலிருப்பவளோ
முகஞ்சுழித்து ஒதுக்குகிறாள்
குறைகளே மிகுதியாயிருக்கும் இவன் உருவை.
கொலைகளுடன் வளர்ந்து
சமூகம் ஆகாதெனும்
சுயமைத்துனத்துடன் தன்னைத் திருப்திப்படுத்துபவனை
தெய்வங்கள் மட்டுமல்ல
இளகியமனங்கொண்ட கிராமப்பெண்ணும்
ஏற்றுக்கொள்ளளல்
அவ்வளவு எளிதல்
பண்ணையைக்கடந்து
நீள நடக்கத்தொடங்குகின்றான
அவன்.
சோளம் பொத்தியவிழ்க்க
கோடைகள் வந்தாலும்
கதவைச் சாத்தி அனுப்பி வைக்கும்
பயணிகளை
மீண்டும் ஏறெடுத்துப்பார்ப்பதில்லை
காவலிருக்கும் கிராமப்பெண்கள்.

(எழிலுக்கு…)
நன்றி: ஓவியம்: Matt Sesow (’biko’)
புறாமலையில்
விஜயனால் தந்திரமாய் ஏமாற்றப்பட்ட வெஞ்சினமும்
தன் மூத்தகுடிகளை நிராதரவாய்க் கைவிட்ட துயரமும்
தோய தன்னைச் சிதைத்துக்கொண்டிருந்த
குவேனி
வள்ளமேறிவந்து நகரத்தெருக்களில் கால்களைப்பதிய
புழுதி சுழன்றாடி நகரைக்
கனவாய்ப் ப்டர்ந்ததாம் மழ
கடற்கரையில்
கால்கள் நனைத்து சுண்டல் சுவைத்து
நெல்சன் தியேட்டரில் படங்கள் பார்த்து
நீ இன்னவின்ன இனமென்றில்லாது
பொதுச்சந்தையில் கலகலக்கும்
சனங்களின் மொழியில்
தன் துயரினைத் தொலைத்தாள்
குவேன
கொத்துரொட்டிகளின் தப்பாத் தாளத்திலும்
பஸ்நிலைய பல்லினமொழிக்கீதத்திலும்
தன்னை உயிர்ப்பிக்கையில்
பலவந்தமாய்க் குடிவைக்கப்பட்ட
புத்தரைக்கண்டு
இயற்கையை வழிபடும்
குவேனி கோபித்தாளில்லை
அவரையும் நேசிக்கத் தொடங்கினாள்
பேச்சுத்துணையாக்க
புத்தரும் குவேனியும்
நேவிக்கப்பல்கள் தொலைவில் மின்னும்
கடற்கரையில் கால்கள்புதைய கரங்கள்கோர்த்து
உலாவுகையில்
கோணேசரும் பத்திரக்காளியும்
காதற்கிறக்கத்திலும் பதட்டத்திலும்
இருப்பது கண்டு புன்னகைப்பதுண்டு
கோணேசர் பாவம்
இராணுவம் சூழவிருக்கும் அவருக்கும்
ஊரடங்குச் சட்டமுண்டு;
பின்னிரவு நீளமுன்னர் தன் தலம்
மீளவேண்டிய அவதி அவர்க்கு.
சங்கமித்தா
புத்தரைச் சந்திக்க வந்தவொருபொழுதில்
எல்லாம் தலைகீழாயிற்று
குவேனியுடன் புத்தர் நட்பாயிருப்பதை
சகிக்கா சங்கமித்தா
உறுமய ஜாதிய நரிகளை உசுப்பிவிட
கொந்தளிக்கத் தொடங்கிற்று
மீண்டும் நகர
அரசமரக்கிளைக்குப் பதிலாய்
கொடும் ஆயுதங்கள் முளைக்கத்தொடங்கின
சங்கமித்தாவின் கரங்களில்
கோணேசரருடன் காதல் சரசமாடிக்கொண்டிருந்த
காளியும் ஆடத்தொடங்கினாள்
தற்காப்பு ஆட்டம
தம் இயல்பு மறந்து
காளியும் சங்கமித்தாவும்
ஊழிநடனம் ஆடுவது பொறுக்காது
இடைநடுவில் புகும் குவேனியையும்
கொத்துரொட்டித் தகட்டால்
குற்றுயிராக்கி
நரிகளுக்கு நிகராய்
விழும் தலைகளுக்காய் தெய்வங்களும் அலைகின்றன
நாக்குகளைத் தொடங்கவிட்டபட
பிறகு
புத்தர் குவேனி எனும்
இரு சடலங்கள்
காலப்பெருவெளியில் மிதந்துகொண்டேயிருந்தனவாம்
ஒரு சிறுதீவில்.

(April 18th, 2006)
நிசப்தம் நிரம்பிய
அறையிலிருந்து
துயரம் சிறகிழந்த வண்ணத்துப்பூச்சியாய்
படபடக்க
வரலாற்றின் இரத்தம் கசியும்
விளிம்புப்பக்கங்களை இன்னமும் வாசித்தறியா
சிறார்கள் ஒடிப்பிடிக்கிறார்கள்
தட்டுத்தடுமாறி பிணியென
தம் கடந்தகாலங்களை சுமந்தவர்களின்
நினைவுகள் மூச்சுத்திணறடிக்க
எனக்கான நியாயத்தராசை
பேப்பர்களின் பக்கங்களை புரட்டி
சமோசா சுவைத்து
புதைக்கத்தொடங்குகின்றேன் நடுக்கத்துடன்
‘துப்பாக்கி பிடிக்காத எவருடனும்
பேசத்தயாரென்றவனின்’ கடைசி நேர ஆன்மாவின் அவலம்
அனைத்து விமர்சனங்களையும் மீறி
அறைய
பேப்பர் எழுத்துக்கள்
ஒரு துவக்கை வரையத்தொடங்குகின்றது
புன்னகை மலர்ந்து சிறகுகள் விரித்து
வராண்டாக்களில் அலறிப் பிடித்தோடும் சிறார்களின்
பளிங்கு மனத்தோடு
எதன் பொருட்டோ தங்கள் இளமைக்காலங்களை
ம்க்களுக்காய் புதைத்துவிட்டு வந்தவர்களை
அணைத்துவிடமுயலும்
என்னை எனது ஆவி
கூர்மையான கண்களால் அவதானித்தபடி
காலகளுக்கடியில் இரையும் பாதாள இரயிலாய்
ந்கர்ந்துகொண்டிருக்கின்றது
மதுவின் முதல் துளியில் மிதக்கும்
எல்லாமாகவிருக்கும் அவளின் புன்னகையை
துடைத்து கசப்பை அருந்திக்கொண்டிருக்கும்
என்னைக் குறிபார்க்கும் துவக்கின்
விசை அழுத்தப்பட
வெடித்துச் சிதறும் துகள்களிருந்து
உயிர்த்தெழும் இயக்கப்பெடிபெட்டைகளின்
ஜீன்கள்
பொலிவியா மழைக்காடுகளிளில்
க்யூபாச் சுருட்டுக்களைப் பிடித்தபடி
தாம் போராடிய பூர்விக நிலங்களின் வரைபடங்களைத் தேடியலைய
மக்கள் பத்துச் சதம் கூட்டிய
பஸ் ரிக்கட்டுக்களைப் பற்றியே கதைக்கின்றார்கள்
பாதாள இரயில்களில்.

(ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்தின் நீட்சியில்)

கதைசொல்லியும் Gang fightsம்

(மீள்பதிவு)

எனக்கு எழுதுவதென்றாலே என்னவென்று தெரியாது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு இலக்கியத்திலோ, தமிழிலோ அவ்வளவு பரீட்சயமும் கிடையாது. அதற்கான நேரமும் கிடைத்ததில்லை. அவ்வாறு இருந்தற்காக வெட்கப்பட்டதும் கிடையாது. இப்ப நான் சொல்லப்போகின்ற இந்த கதைகூட எந்தவடிவத்தில் அடங்கும்- அடங்காது என்பது குறித்த எந்த பிரக்ஞையும் என்னிடமில்லை. ஏதோ என் நேற்றைகளை பதிவுசெய்யவேண்டுமென்று விரும்பி எழுதுகிறேன். அவ்வளவுதான்.
எல்லோருக்கும் ஏதாவதொரு கருத்தில் இடையீடு செய்யத்தானே அதிக விரும்பமிருக்கும். அதுபோல என்ரை கதையையும் இடையிலிருந்தே தொடங்குகின்றேன். வெயில் எரித்து வியர்வை உருகிய ஒரு கோடைக்காலம் அது. நானும் இன்னும் பல நண்பர்களுமாய் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் எங்கள் எதிர்க்குழுவில் உள்ளவங்கள் எங்கையோ கதை கேள்விப்பட்டு வந்திட்டாங்கள். தோளில் போட்டிருக்கும் சின்ன துவாயால் துவக்கை மறைச்சுக்கொண்டு விளையாடுற இடத்திற்கு ஆறேழு பேராய் நுழைஞ்சிட்டாங்கள். என்னையும் ஒரு நண்பனையும் தவிர எங்கட ரீமில் எவரும் காங் மெம்பர்ஸ் இல்லை. விளையாடின மற்றவையளுக்கு அடுத்து என்ன நிகழப்போகின்றதென்று விளங்கிட்டுது. பவுண்ரி லைனில் நின்ற என்னை மிட் ஓனில் வரச்சொல்லிச்சினம். அடிக்கவந்தவங்களும் ஏதோ இலட்சுமணன் சீதைக்கு கீறிய கோட்டைக்கண்டு பயப்பிடும் இராவணன்போல லைனிற்கு வெளியே நின்று ‘வாங்கடா வெளில’ என்று கத்தி தூஷணத்தால் அர்ச்சித்துக் கொண்டிருந்தாங்கள். நல்லவேளை உள்ளே நின்ற ஒருத்தரிற்ரை செல்போன் இருந்திச்சு. அவரைக்கொண்டு எங்கட காங்கிற்கு கோல் பண்ணி கெதியாய் வரச்சொன்னோம். பத்து பதினைஞ்சு நிமிடத்தில் அவங்களும் வந்திட்டாங்கள். சரி இன்டைக்கு நல்ல வாணவேடிக்கையென்டு நான் நினைச்சேன். எங்கட ஆக்கள் வாறதைக்கண்டதும் அவங்கள் வருகீறிட்டாங்கள். நாங்கள் விடவில்லை. காரெடுத்துக்கொண்டு துரத்தினோம். மறைஞ்சிட்டாங்கள். சரி தப்பிச்சிட்டாங்களென்று சலிச்சு, பிறகு நைட் கிளப்பிற்கு போய் டான்ஸ் ஆடிப்போட்டு திரும்பி வாறநேரத்திலதான் எனக்கு ஞாபகம் வந்தது, நாளைக்கு பெரியமாமாவின் மூத்தமகனிற்கு கலியாணம் எண்டு. அவர் இரவு வீடு சோடிக்க வரச்சொன்னவர். நேரமோ பதினொன்டரை ஆச்சுது. சரி சும்மா ஒருக்கா மாமா வீட்டைப்போயிட்டு முகத்தைக்காட்டி விட்டு வருவம் எண்டு நினைச்சு என்ர பிரண்ட்ஸ்சிட்டை சொன்னேன் மச்சானின்ரை வீட்டடியில் இறக்கிவிடச்சொல்லி. ஆனால் இவங்களோட இப்படியே நான்கு கார்கள் பவனிவர போயிறங்கினால் வீட்டிற்கு வெளியே நிற்கிற சொந்தக்காரர்கள் ஏதும் சொல்லக்கூடுமென்று, பக்கத்திலிருந்த பஸ் ஸ்ரொப்பில் இறக்கிவிடச்சொன்னேன். கொஞ்சதூரம் நடந்துபோயிருப்பேன். எங்கிருந்தோ வந்த ஒரு கறுப்புகார் என்னை உரசிக்கொண்டு வந்துநின்டுது. அவங்கள்தான் - எதிர்க்குழுவினர். ‘டேய் அடியுங்கடா’வென கத்தியபடி காரிற்குள்ளிருந்து குதித்தார்கள். சரி இண்டைக்கு முடிஞ்சன் எண்டு நினைச்சன். கிட்ட வைச்சு வெடி வைக்கிறது கொஞ்சம் கஷ்டம். அதோடு ஆரம்பகாலத்தில் முழங்காலிற்கு கீழே வெடிவைப்பதாகவும் வெட்டுவதெண்டால் கழுத்துக்கு கீழேதான் வெட்டுவதென்றும் பல குழுக்களிடையே எழுதப்படாத விதியாக இருந்தது. பேஸ்போல்மட்டையாலும், இரும்புச்செயினாலும் விளாசத்தொடங்கிவிட்டார்கள். அந்தநேரத்தில் மாமாவும் அங்கே நின்ற அண்ணாவும் வெளியே வந்திருக்கிறார்கள். யாரையோ அடிக்கிறான்கனெண்டு கத்திக்கொண்டு அவர்கள் ஓடிவாறது மங்கலாத் தெரிஞ்சது.
அவ்வளவுதான். அதற்குப்பிறகு ஆஸ்பத்திரியில் முழிக்கைக்கேதான் நினைவு வந்தது. மண்டையில் நல்லா அடிச்சுப்போட்டுட்டாங்கள். பதினொருதையல் என்று நேர்ஸ் சொன்னா. இன்னும் பல இடத்தில் சின்னச்சின்ன காயங்கள். எனக்கு நினைவுதெளிஞ்ச மறுநாள் பின்னேரத்தில் என்ர பிரண்ட்ஸ் வந்தாங்கள். அவங்களோடு அவளும் வந்திருந்தாள். ‘டேய் நீயெழும்பி வீட்டை போகமுன்னம் அவங்களில் இரண்டுபேரிற்கு வெடிவைக்காட்டி பாரு. ஒண்டுக்கும் யோசிக்காதையடா’ என்டாங்கள். அவங்கள் வாங்கிக்கொண்டு வந்த ஆப்பிள்ஸையும், ஒரேஞ்சர்ஸையும் அவள் என்னிடம் தந்தாள். சரி நாங்கள் போகப்போறம் பிறகு வாறமடாவெண்டு பிரண்ட்ஸ் வெளிக்கிட்டாங்கள். Hey guys, wait outside, catch you in a minute எண்டு அவள் சொல்லிப்போட்டு என்ரை கையை எடுத்து முத்தமிட்டு take care எண்டு சொன்னாள். அந்த நேரத்தில் அவள் கண்கள் கலங்கியிருந்ததையும், அதிலிருந்து சிதறிய ஒருதுளிக்கண்ணீர் என் கன்னத்தில் விழுந்து காதோரத்தால் உருகிக் கீழே வீழ்ந்ததும் நிகழ்ந்தது.
அறிவுரைகள் யாருக்குப் பிடிக்கும். இரத்தநாளங்களில் சந்தோஷம் துள்ளிப்பிரவாகரிக்கும் இளமைப்பருவத்தில் கட்டுக்களையறுத்து வெளிகளில் மிதக்கவல்லவா மனம் விரும்பும்? ஒருமுறை இப்படித்தான் இரண்டு யூனிவாசிட்டி அண்ணாமார்கள் வந்திச்சினம் ஏதோ கதைக்கோனுமென்டு. எங்களின் குழுச்சண்டைகளையும், சமூகத்தில் எங்களால் ஏற்படும் இடையூறுகளையும் பெருங்கதையாடல்களையும் கேள்விப்பட்டுத்தான் அவையள் வந்திருக்கோணும். நாங்கள் சொன்னோம் அண்ணை நீங்கள் எதென்டாலும் எங்களோட கதையுங்கள் ஒரு பிரச்சினையுமில்லை. ஆனால் பாரிற்கு கூட்டிட்டுப்போய் கொஞ்சம் பியர் வாங்கித்தாங்கோ, நீங்கள் சொல்றதையெல்லாம் கேட்கிறோமெண்டு. அவர்களும் சரி இவங்களை விட்டுத்தான் பிடிப்போமென்டு நினைச்சிருக்கக்கூடும். எங்களுக்கு பியர் எல்லாம் வாங்கித்தந்திச்சினம். பியர் உள்ளேபோனால் எங்கட நிலைமையைச் சொல்லத்தான் வேணுமோ. கத்தி குழறி பாடத்தொடங்கிவிட்டோம். அந்த அண்ணமாரும் இருந்து பாத்திட்டு வெறுத்துப்போய் சொல்லாமல் கொள்ளாமல் எழும்பிப்போயிட்டினம்.
இந்த நகரத்தில், உலகத்தில் வாழ்வதற்கு சிறந்த இடமென பிரகடனப்படுத்தப்பட்ட இந்த தேசத்தில் எங்கட பெடியளின்டை காங்குகள் எப்படித்தொடங்கியது என்பது பெரிய கதை. அதன் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் எனக்குப்பெரிதாய் தெரியாது. ஆனால் கொஞ்ச சம்பவங்கள் நினைவிலுண்டு. முதன்முதலில் வேற்றினத்தவரின் கேலிகளையும், அவதூறுகளையும் அடக்கத்தான் எங்கட பெடியள் குழுகுழுவாய்த் திரிஞ்சினம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது. என்னுடைய கல்லூரித்தோழன் ஒருவன் குளிர்நேரத்தில் பஸ்சில் ஏறுகையில், ஒரு இத்தாலியன்காரன் கெட்டவாசம் வருகிறது இந்த பாக்கியிடம் என்று நக்கல் சிரிப்போடு சொன்னான். பாக்கி என்டால் அது எங்களுக்கு, இந்தியனுக்கு, பாகிஸ்தான்காரனுக்கு அவர்கள் தரும் அன்பான அடைமொழி. கெட்டவாசம் என்று அவன் சொன்னது எங்களின் சமையல் வாசத்தை. சும்மா சொல்லக்கூடாது நாங்கள் நல்லாத்தானே வறுக்கி, புரட்டி,பொரிக்கிறனாங்கள். ஆனால் அவன் அப்படிச் சொன்னதற்கு என்னுடைய நண்பனுக்கு சரியான கோபம் வந்திட்டுது. இவங்களுக்கு பாடம் புகட்டோனுமெண்டு கறுவிக்கொண்டான். அப்போதெல்லாம் நான் நல்ல அப்பாவிப் பெடியன். சிறிலங்காவிலிருந்து கொஞ்சமாதங்கள் முன்புதான் வந்து இறங்கியிருந்தேன். இந்த வியம் மற்ற நண்பர்களுக்குத் தெரியவர, அவர்கள் எல்லோரும் திட்டம்போட்டு, அந்த இத்தாலியன்காரனிற்கு பஸ் நிறுத்தத்தில் பாடம் புகட்டுவதென்று தீர்மானித்தனர். அடியெண்டால் செம அடி. பனியெல்லாம் இரத்ததுளிகள். கனதமிழாக்கள் நிற்கேக்கைதான் அடிவிழுந்தது. எல்லாரும் சேர்ந்துதான் கொடுத்தோம். அந்த இத்தாலியன்காரனுக்கு அதிக அடிகொடுத்தவன்தான் எங்கள் கல்லூரியில் தோன்றிய முதல் குழுவிற்கு பிறகு தலைவன் ஆனான். சிலநாட்களில் பின் எங்கட கேர்ள்ஸை நக்கலடித்த வெள்ளையிற்கும் நல்லாய்க் கொடுத்தோம். அந்த பெண்கள் கூட்டத்தில் இருந்த கெட்டிக்கார,எடுப்பான பெண், கொடுத்த அடிகளுக்கு நன்றிக்கடனாய் அந்தத் தோழனையே நேசிக்கத்தொடங்கினாள். இப்படி எங்களுக்கு பாதுகாப்பாய் ஏனைய இனக்குழுமங்களால் ஏற்படும் இடைஞ்சல்களை கிள்ளியெறியெனவெனத் தொடங்கிய குழுக்கள்தான் இப்ப எங்களுக்குள்ளேயே அடிபட்டுக்கொண்டு தலைவிரிச்சாடுகிறோம். எவ்வளவு காலந்தான் மற்றவங்களோட அடிபடுறது. வேற்றினத்தவன் எல்லாருக்கும் விளங்கிட்டுது. இவங்கள் பலமானவர்களாய் இந்த பிரதேசத்தில் இருக்கிறார்கள். ஏன் வீணாய் வாலாட்டி இவங்களிட்டை அடிவாங்குவான் என்டிட்டு அவங்கள் அமைதியாகிட்டாங்கள். ஆனால் வீரம்பேசிய கைகள் சும்மா இருக்குமோ? அதோடு இப்படித்திரிஞ்சால்தான் வடிவானபெண்களை இலகுவாய் கைக்குள்ளை போடலாமென்ட பிலோசபியும் விளங்கிட்டுது. ஆனால் எங்கட பொம்பிளைப்பிள்ளைகள் சரியான கெட்டிக்காரிகள். அவர்கள் குழுக்களின் தலைவர்களை மட்டுமே விரும்பிச்சினம், தலைவர்களோடு திரியும் அடியாட்களை தூசென தட்டிவிட்டிச்சினம். எங்களுக்கோ சரியான நெருக்கடி. ஒரெயொரு வழி புதுசு புதுசாய் குழுக்கள் அமைத்து தலைவர்கள் ஆவதே. எங்கட முன்னோடியாய் பெரிசுகள் எல்லாம் ஊருக்கொரு சங்கம், ஊர்ப்பாடசாலைக்கொரு சங்கம் எண்டு அமைத்தால், அவையளின்டை வாரிசுகள் நாங்கள் சும்மாவா இருப்போம். இப்படித்தான் எனக்குத்தெரிஞ்ச வரையில் பல்வேறு குழுக்கள் புற்றீசலாய் இங்கே கிளம்பின.
அது ஒரு பின்னிரவுப்பொழுது. அம்மா, அப்பாவிற்கு ஏன் இடைஞ்சாலாயிருப்பானென்று தனியே நண்பர்களோடு தங்கியிருந்த காலமது. வழக்கமாய் வீட்டிலிருந்து இரவு பத்து பதினொரு மணிக்கு வெளிக்கிடுவேன். பிறகு அப்படியே நண்பர்களோடு சுற்றிவிட்டு வந்து படுக்க காலமை ஆறேழு மணியாகிவிடும். ஒவ்வொருநாளும் கல்லூரிற்கு மத்தியானத்திற்கு பிறகுதான் போவேன். பேசிப்பேசியே அமைதியாகிப்போன அப்பாவையும், ஏதும் பேசாமல் மௌனமாயிருக்கும் அம்மாவையும் ஏன் வாட்டுவான் என்று நான்தான் யோசித்து வெளியில் நண்பர்களோடு தங்க தீர்மானித்தேன். இதை வீட்டில் சொன்னபோது வழக்கம்போல அப்பா எதுவும் சொல்லவில்லை. அம்மா விக்கிவிக்கியழுது சேலைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்தாள். சத்தம் போட்டு அழுதால் அப்பா பேசக்கூடுமென்று அவா பயந்திருக்கக்கூடும். அண்ணா மட்டுந்தான், ‘என்னடா ஆச்சுது உனக்கெண்டிட்டு, ஏதும் தேவையென்றால் தொலைபேசியில் அழை’யென்றார். தங்கச்சியோடு கதைச்சே கனநாளாயிட்டுது. ஒரு இறுக்கமான மௌனத்தின் விடையசைப்பே அவளிடமிருந்து வந்தது. அப்படி பிரண்சோட இருந்த நேரத்தில்தான் புதுத்தோழியொருத்தியின் அறிமுகம் கிடைச்சது. என்ரை நண்பர்கள் கூலிஸ் என்றுதான் அவர்களைப் போன்ற பெண்களை அழைப்பார்கள். அவர்களின் அசைவுகளும், நடையுடைபாவனைகளும் நிறமும்கூட பொன்னிறமாய் இந்தியப்பெண்களையொத்து இருந்தது. நான் முதலில் நினைச்சேன் தமிழன், சிங்களவன் போல அவர்களுக்கும் அந்தப்பெயர் இனக்குறியீடோ என்று. பிறகுதான் தெரிஞ்சிது. கூலிஸ் என்றால் குடிக்கும் பியரிற்கும், பத்தும் சிகரட்டுக்கும், சிலவேளைகளில் அடிக்கும் கஞ்சாவிற்காகவும் தங்களோடு ஒட்டிக்கொள்ளும் கூலிப்பெண்கள் இவர்களென பட்டஞ்சூட்டியிருக்கிறான்களென்டு. பரவாயில்லை எங்கட பெடியள் கூலியென்று பெயரைவைத்து இப்படியாவது தமிழை வாழவைச்சுக் கொண்டிருக்கிறார்களென்று எங்கட தமிழாக்கள் சந்தோஷப்படலாம். அப்படி நண்பர்களோடு தங்கியிருந்த இரவொன்றில்தான் அவளை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது மின்னலும், இடியுமாய், பேரிச்சலுடன் மழை வெளியே பொழிந்துகொண்டிருந்தது. நாங்கள் நண்பர்கள் மூன்றுபேர். ஒரு அறையுள்ள அப்பார்மெண்ட். சரி இண்டைக்கு களிகால இரவுதான் என்று மனதிற்குள் கணக்குப்போட்டேன். இதற்குமுன் இதுகுறித்த எந்த அனுபவமும் இல்லை. தாங்கள் அவளின்ரை ரூமிற்குள் போயிட்டு வந்தாற்பிறகுதான் எனக்கு அனுமதியெண்டாங்கள். எனக்குரிய நேரம் வந்தது. கால்கள் சற்று நடுநடுங்க உள்ளே நுழைகிறேன். முகத்தை கால்களுக்கிடையில் புதைத்தபடி அவள் கட்டிலில் குந்தியிருந்தாள். அவளை நெருங்குகையில், Why you guys behave like animals? என்று பலகீனமான குரலில் கேட்டாள். என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவள் உதடுகள் வெடித்துக்கிடப்பதையும், கன்னத்தில், கழுத்திலெல்லாம் காயங்கள் கிடப்பதை காண்கிறேன். யாரோ என்ரை நெஞ்சுக்குள் கைவிட்டு பிசைவது போல ஒரு உணர்வு. விரல்கள் எல்லாம் எனக்கு குளிரில் உறைந்தமாதிரி நடுங்குகின்றன. அவளை மெல்ல அணைத்தபடி அவள் கூந்தலைக் கோதுகிறேன். நான் அவ்வளவு கெட்ட மிருகமல்லவென அவள் காதிற்குள் மெல்லியதாகச் சொல்கிறேன். பிறகு நாங்கள் எதையும் அளவோடு அனுபவிக்கத்தெரியாதவர்களெண்டும், பல்வேறுபட்ட மரபின் இழைகள் எம்மை இறுக்க பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்றெல்லாம் ஏதோவெல்லாம் உளறுகின்றேன். அவள் என்நெஞ்சில் முகம்புதைத்தபடியே தூங்கிப்போகிறாள்.
இதற்குப்பிறகுதான் அவளை ஆஸ்பத்திரியில் அடிவாங்கிக்கிடந்தபோது சந்தித்தேன். பெற்றோரோடு தங்கியிருந்த அவள் பிறகு ஒரேயடியாய் எங்கள் அப்பார்ட்மெண்டில் வந்து தங்கினாள். அவளிடம் இருந்த ஏதோவொன்று எனக்குப் பிடித்துப்போய்விட்டது. என்னுடைய நோஞ்சான் உடம்பையும், காதில் குத்தியிருந்த கடுக்கனையும்விட, அவளுக்கும் வேறெதுவோ என்னில் பிடித்திருக்கக்கூடும். ஒருமுறை நண்பர்களோடு பீச்சிற்கு போனநேரத்தில்தான் ‘என்னோடு சேர்ந்து வாழ்கிறீயா?’ எனக்கேட்டாள். ‘இப்ப மட்டும் என்னவாம்’ என்று நான் நக்கலாய் வினாவ, ‘இல்லை நானும் நீயும் மட்டும் வேறிடத்துக்குப்போய் சேர்ந்து தனிய இருப்பமா’ என்று கேட்டாள். நான் இதை என் நண்பர்களிடம் சொன்னேன். அவர்களுக்கு அவ்வளவாக இது பிடிக்கவில்லையென அவர்களின் முகத்தைப்பார்த்தே எனக்கு தெரிஞ்சுபோட்டுது. என்றாலும் அவர்களோடு நானிருந்த நன்றிக்கடனிற்காய் சம்மதித்தனர். நானும், அவளும் இப்படி தனியே வாழப்போயிருந்த ஐந்துமாதங்களிற்கும் சிலநாட்களுக்கும்பிறகு, என் தோழன் ஒருவனுக்கு எதிர்க்குழுவினர் வெடிவச்சு சீரியஸாயிருந்து பிறகு பரிதாபமாய் செத்துப்போனான்;. அதனையடுத்து எங்கள் குழுவில் பல பிணக்குகள், பிரச்சினைகள். பலர் என்னைப்போல குழுவைவிட்டு, வெளியே வந்து தனியே வாழ விருப்பப்பட்டனர். ஆரம்பகால தோழர் சிலரது கோபம் எல்லாம் என்மீது குவிந்தது. நான்தான் எங்கள் குழுவைச் சிதைத்த முதல் ஆளென முத்திரை குத்தினர். அந்த சமயத்தில்தான் தற்செயலாய் எங்கட பரமவைரிகளின் குழுவில் ஒருவனை நான் சந்திக்கையில் என் தோழர்கள் கண்டிருக்கிறார்கள். எனக்கு உண்மையில் அவன் எதிர்க்குழுவின் ஆளென்று தெரியாது. அவன் அங்கே புதுசாய் போய்ச் சேர்ந்திருக்கிறான். அவன் எங்களின் சொந்தக்காரன் என்றபடியால் அவனை தமிழ்க்கடையொன்றில் காண்கையில் கதைச்சனான். ஆனால் நான்தான் எதிரணியினரிற்கு தகவல்கொடுப்பதாய் என்தோழர்கள் சந்தேகப்படத்தொடங்கினார்கள்.
நேற்றைக்கு இப்படித்தான் என்தோழியோடு இங்கிலிஷ் படமொன்று பார்த்துவிட்டு வரேக்கை என்னுடைய நண்பர்களைக் கண்டேன். நல்ல குடிவெறியில் நின்றார்கள். எனக்குப் புரிஞ்சிட்டுது, இப்ப இவங்களோட கதைச்சால் வீண்பிரச்சனைதான் வருமெண்டு காரில் ஏறிக்கிளம்பினேன். அவள்தான் காரை ஒட்டினாள். என் நண்பர்களுக்கு தங்களை நான் உதாசீனம் செய்வதாய் என்மீது கோபம் வந்து வேறொரு காரிலேறி துரத்தத்தொடங்கினாங்கள். அவளுக்கு விளங்கிவிட்டது, இந்த நிலைமையில் இவங்களின் கையில் அகப்பட்டால் என் உயிரிற்கு உத்திரவாதமில்லையென்று. இறுக்கி ஆக்சிலேட்டரை மிதித்தாள். ஒரு வெடி காரின்பின்புறத்தில் விழுந்த சத்தம் கேட்டது. அவள் சடாரென்று சனநெருக்கடியற்ற இருண்ட தெருவொன்றுக்குள் விட்டு, ‘ஒடு, என்மேல் அன்புவைத்திருந்தால் நீ தப்பியோடு, எனக்கு என்னநடந்தாலும் திரும்பிவராதேயென்று’ கத்தினாள். நான் ஒடத்தொடங்கினேன். ஓரு வீட்டின் பெயர்தெரியாத செடிவேலிதாண்டி இன்னும் சிலவற்றை கடந்து ஒடினேன். என்றாலும் அவளை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனமிசையாததால் வேறொரு திசையில் திரும்பிவந்து அடர்ந்து கிடந்த ஒருபெருமரத்தின் கீழ் பதுங்கினேன். நண்பர்கள் வந்தார்கள். கத்திகளுடனும், பேஸ்போல்மட்டைகளுடனும், துப்பாக்கிகளுடன் என் காரை நெருங்கினார்கள்; நொறுக்கினார்கள். பேய்கள் உலாவுவதுபோல அவர்கள் நிழல்கள் பயமுறுத்தின. உள்ளேயிருந்த அவளிடம் நான் எங்கேயென கேட்டு வெளியே இழுத்து காலால் உதைத்தார்கள். அவள் என்னோடு முன்பு தங்கியிருந்த தோழன், ஒருவனின் கால்களைக் கட்டிப்பிடித்துக்கெஞ்சினாள். அவனுக்கு ஏதோ உறுத்தியிருக்கக்கூடும். ‘டேய் அவளை விடுங்கடா, வேறொரு சமயத்தில் அவன் கணக்கைத்தீர்த்துக் கொள்ளலாமென்று’ காரில் ஏறினான்.
இது நடந்தது நேற்றுத்தான். நான் இப்போது இருப்பது அவளது தோழியொருத்தியின் வீட்டில். இன்றைய பொழுதில் வாழ்வு சூனியமாயிருக்கிறது. திசையெல்லாம் கறுத்து யமனின் பவனி நிகழப்போவதாய் காலம் பயமுறுத்துகிறது. ஒருபக்கம் இறுகிப்போய், விகாரித்த நண்பர்களின் இன்னொருபக்கத்தில் மிகமென்மையான நெஞ்சிருப்பது யான் அறிவேன். காலத்தை வெறுத்து கையாலாகதவர்களாகிய அவர்களுக்குள் உள்ளூறும் மனிதம்பற்றி, நல்ல நட்பிற்காய் பின்விளைவுகள் எதையும் யோசிக்காது, கைகொடுக்கும் உண்மையான தருணங்கள் குறித்து என்னைப்போன்ற ஒரு சிலரே அறிவர்.

2001.06.21
நள்ளிரவு 1.12.
நன்றி: முற்றம், அக்கினிக்குஞ்சு, பதிவுகள், வைகறை

கனவு

கத்தரிப்பூ விளக்குகள்
இரவைப் பாம்பெனக் கவ்வுகையில்
ஜந்துதலை நாகத்தின் நாவுகளிலிருந்து
தீர்ந்துபோகா காமசூத்ராவின்
கடைசிப்பக்கங்களை வாசிக்கும்
தாகத்துடன் இறங்கிவரும்
தேவதைகளின் ஆடைகள்
மேற்கிலிருந்து தென்கிழக்குநோக்கி நகரும்
வால்நட்சத்திரங்களாய் ஒளிர்கின்றன
மதுவும் இசையும்
வர்ணக்கலவையாய் வயிற்றினிலிறங்கி
கால்களில் தீ பற்றியெரிந்து
சாத்தான்கள் முகமூடி கிழிக்க
மப்பும் மந்தாரமாய் மழை
பொழியத் தொடங்குகிறது
தேவதைகள்
நவீன ஓவிய ஒப்பனைகள்
கலைந்துவிடாதிருக்கும் சிரத்தையெடுப்பினும்
தமக்கான கிறுக்கலின்
தூரிகையைத் தெரிவுசெய்யும்
சுதந்திரவெளி
கனிகின்ற களிகாலத்தின் பெருமிதத்தில்
பூனைமயிரின் வேரினிலிருந்து
நறுமணத்தை பரவவிடுகின்றனர்
கால்களில்
பொஸ்பரஸ் எரிமலையாய்ப் பொங்கினாலும்
தூரிகையில் வர்ணந்தெளிக்கும் குறுகுறுப்புத்திரண்டாலும்
இளவரசிகளின் அனுமதியின்றி
கங்குகளை அணைத்துவிடமுடியாது
பெரியண்ணர்கள் கண்காணிக்கின்றனர்;
ட்ராகன்கள்
தேவதைகளின் வளைவுகளில்
யார் தூரிகையால் முதலில் வரைவதெனும் போட்டியில்
இடிகளை முழங்கச்செய்து
வாட்களை மின்னலாக்கிப் போரிட்டு
கசியும் இரத்தத்தைப் பனியில்
துடைத்துவிட்டு
மீண்டும் நெருப்புக்கங்குகளை
பெருமிதத்துடன் பற்றவைக்கின்றன
விடிகாலை
நான்கு நாற்பத்துமூன்றில்
தம் நெருப்பை
ஏதோ ஒரு கோட்டில் ஓவியமாக்க உடன்பட்டு
அணைத்துக்கொள்ளும்
தேவதையும் சாத்தானும்
தெருவோரத்தில் அநாதரவாய் உறைந்துநிற்கும்
காரின் கண்ணாடியை
வீடற்ற ஒருவன் தட்டுகின்றபோது
அவசர அவசரமாய்
மனித ஒப்பனைகளை
அப்பிக்கொண்டு நகர
எல்லாம் கனவெனச் சிதறும்.

பங்குனி 28, 2006

Walk the Line

-திரைப்படம்-

‘You’ve got a way to keep me on your sideYou give me cause for love that I can’t hideFor you I know I’d even try to turn the tideBecause you’re mine, I walk the line’( …part of I walk the line lyric)

ஜோனி காஸ் (Johnny Cash) என்ற பிரபல்யம் வாய்ந்த நாட்டுப்பாடகரின் (Country musician) வாழ்வை சற்று புனைவுத்தன்மையுடன் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது. நாஷ்விலில் பிறந்து, மேற்கு ஜேர்மனியின் போர்க்காலச் சூழலில் பணியாற்றி மீளவும் ஊர் திரும்புகின்ற காஷிற்கு உருப்படியான வேலை எதுவும் கிடைக்காததால், பாடுவதில் ஆர்வம் காட்டத் தொடங்குகின்றார். தனது பாடல்களை இசைத்தட்டுக்களாய் வெளியிட ஒரு லேபிளைக்(label) கண்டுபிடிக்க, அந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரோ, நீ கோஸ்பலை (Gospal) பாடுவதாய் இருந்தால் வீட்டுக்குப் போய் பாடு, எனக்கு வேண்டியது வெளியே சந்தையில் விற்றுத்தீரக்கூடிய பாடல்கள் என்கிறார். இராணுவத்தில் பணியாற்றும்போது தனிமையும் துயரமும் தோய எழுதிவைத்திருந்த பாடல்களை, அந்த லேபிள் நிறுவனத்துக்காய் பாடத்தொடங்க பாடல்கள் பிரபல்யமாகின்றன (cry cry cry பாடல் அவற்றில் ஒன்று). தொடர்ந்து பல பாடல்கள் பாடி காஷ் பிரபல்யமடைய வெவ்வேறு நகரங்களுக்குச் சென்று பாடத்தொடங்குகின்றார். தொலைதூர நகரங்களில் பாடுவதில் பிஸியாக இருந்தாலும் சொந்த ஊரிலிருக்கும் மனைவி குழந்தைகளின் பிரிவிலும் பாடல்களை இயற்றிப் பாடுகின்றார். பிறகாலத்தில் மிகப்பிரபல்யம் வாய்ந்த பாடலான I walk the line பாடலும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அவரது மனைவியான விவியனை நினைவில் கொண்டே பாடப்படுகின்றது. இசைக்குழுவின் தொடர்ச்சியான பயணங்களாலும், சில நண்பர்களின் சகவாசத்தாலும் குடிக்கும், போதை மருந்துகளுக்கும் காஷ் அடிமையாகத்தொடங்குகின்றார். இதன் தொடர்ச்சியில் இசைப்பயணம் இடைநடுவில் இரத்துச் செய்யப்படுகின்றது. இவை உட்பட வேறுசில பிரச்சினைகளாலும் இவரது மனைவி விவியன் இவரைச் சிலவருடங்களுக்குள் விவாகரத்துச் செய்கின்றார்.
இதற்கிடையில் காஷுடன் இணைந்து பாடுவதற்காய் ரூர் போகும் ஜீன் கார்ட்டர் (June Carter) மீது காஷுக்கு ஈர்ப்பு வருகின்றது. ஒவ்வொருமுறையும் இவர் தன் விருப்பை ஜூனிடம் தெரிவிக்கும்போதும், ‘உனக்கு அருமையான மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்கள், அதை மறந்துவிடாதே’ என்று விவாகரத்தாகி குழந்தைகளுடன் வாழும் ஜூன் மறுதலிக்கின்றார். ஜூனின் பிடிவாதமும், தான் நிராகரிப்படுவதன் துயரமும் காஷை இன்னும் ஆழமாய் போதை மருந்துக்கும், குடிக்கும் அடிமையாக்குகின்றது. காஷின் மனைவி விவியன் காஷை விவாகரத்துச் செய்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாய் ஜூன் மீதான காஷின் அபரிதமான காதலும் ஒரு காரணமாய் படத்தில் காண்பிக்கப்படுகின்றது.
காஷிற்கும் ஜூனுக்கும் இடையில் பிறகு என்ன நிகழ்ந்தது, எப்படி காஷ் போதை மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டெழுந்து புகழ்பெற்ற இன்னும் பல பாடல்களைப் பாடினார் போன்ற இன்னபிற கேள்விகளுக்கான பதில்கள் படத்தின் நீட்சியில் அவிழ்க்கப்படுகின்றன.
(2)
ஜோனி காஷ், எல்வீஸ் (Elvis), பொப் டைலன்(Bob Dylan) போன்ற பாடகர்கள் பிரபல்யமாகிக் கொண்டிருந்த காலத்திலேயே நாட்டுப்பாடல்களில் கவனிக்கத்தக்கவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களோடு நட்பும் அவர்களின் சில ஆல்பங்களில் பாடல்களும் காஷ் பாடியுமிருக்கின்றார். இராணுவத்தில் பணியாற்றியதும், வன்முறையான தகப்பனைத் தன் குழந்தைப் பருவத்தில் கொண்டிருந்தமையும், சிறுவயதில் தனது சகோதரரை மில் ஒன்றின் விபத்தில் பலி கொடுத்த குற்றவுணர்வும் ஜோனி காஷின் பாடல்களுக்கு வலிமையும் வலியையும் கொடுத்திருக்கின்றன என்று அவரது பாடல் வரிகளை கவனமாய்க் கேட்பவர்களுக்குப் புரியும். துயரமும் தனிமையும் கசிய அன்புக்காய் ஏங்கும் ஒரு ஆத்மாவை ஒருவித ‘உச்சஸ்தாயிக்கு அண்மையான மெற்றாலிக் குரலில்’ ஒலிக்கும் காஷ் பாடல்களில் நாம் அடையாளங்கண்டு கொள்ளவும் முடியும்.
காஷ் பலரின் எதிர்ப்புக்களை மீறி சிறைக்கூடங்களுக்குச் சென்று பாடியது மட்டுமில்லாது, அங்கேயே லைவாய் (Live) புதுபாடல்களைப் பாடி இசைத்தட்டுக்களாய் வெளியிட்டுமிருக்கின்றார். தான் பாடும் அனைத்து நிகழ்ச்சியிலும், கறுப்புக் கோர்ட்டும் சூட்டும் அணிவதால் ‘Man in Black’ என்ற பட்டப்பெயரால் அவரது இரசிகர்களால்அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்( Man In Black என்று பாடிய ஒரு பாடலில் தனது ஆடையின் நிறத்துக்கான தேர்வுபற்றி விபரமாய்க் கூறுவார்). Cherokee இந்தியர்கள் மீது அன்பும் பரிவும் உடைய்ய காஷ், பல பாடல்களை அவர்களுக்காய் பாடியும் இருக்கின்றார்.
(3)
ஏற்கனவே தெரிந்த (உண்மை) கதையை- அடுத்ததாய் என்ன சம்பவங்கள் நிகழும் என்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரு விடயத்தை- பார்ப்பவர்களுக்கு சுவாரசியமாய் வழங்குவதென்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இவற்றை மீறி இந்தப் படத்தை அலுப்பின்றிப் பார்க்கக்கூடியதாய் இயக்கிய இயக்குநனரும் நடிகர் நடிகைகளும் கவனிக்கப்படக்கூடியவர்களே. Joaquin Phoenix நன்றாக நடித்துள்ளார். Reese Witherspoonனில், மிகச் சிறந்த நடிகை என்று ஒஸ்கார் விருது கொடுக்குமளவுக்கு சிறந்த நடிப்பை இந்தப்படத்தில் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை.
இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும்போது எனக்குள் நெடுங்காலமாய் அலைந்து திரியும் கேள்வியே மீண்டும் நினைவுக்கு வந்தது. காஷும் தனது மனைவி குழந்தைகள் என்று இருக்கும்போது இன்னொரு பெண்ணிடம் மையல் கொள்கின்றார். மையல் கொள்ளப்படும் பெண் ஒவ்வொருமுறை மறுக்கும்போதும் அதை அசட்டை செய்து மீண்டும் வேதாளம் முருங்கமரத்தில் ஏறுவதுபோல இரந்து நிற்பதும், ஒரு கலைஞருக்குரிய பலவீனம் என்று ஒதுக்குவதா அல்லது தனியொருவனின் விருப்பு என்று எடுத்துக் கொள்வதா என்று குழப்பமாய் இருந்தது. படைப்புக்களை கலைஞர்களிலிருந்து பிரித்துப்பார்பதற்கு இலகுவான வழியை பின்நவீனத்துவம் முன்வைக்கிறது. ஆசிரியர் இறந்துவிட்டார் (படைப்பைப் பார் படைப்பாளியைப் பார்க்காதே) என்ற கோட்பாட்டுக்குள் இந்தக் கேள்வியையும் அடக்கிவிடலாந்தான். அப்படியெனில் சமூகத்தில் இருக்கும் அழுக்குகளையும் கசடுகளையும் ஏற்றுக் கொள்ளும்/நம்பிக் கொள்ளும் அனைத்து மனிதர்களையும் நாம் கேள்வி கேட்பதற்கான காரணங்களை, அவர்களும் தாங்கள் செய்யும் ஏதோ ஒரு நல்லவிடயத்தைக் காரணங்காட்டி விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு நகர்ந்துவிடமுடியுந்தானே.
*’ஒரு பெண்ணைப் பிடித்தால் படுக்கைக்கு வருகின்றியா?’ என்று ஒரு இலக்கியவாதி கேட்டால், அதை ஒரு கலைஞனின் பலவீனமாயும், ஒரு சாதாரண மனிதன் கேட்டால் ஆபாசம் என்று எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் முரண்பாடாய் அல்லவாய் இருக்கும்? இவ்வாறான கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டிருந்தபோது Walk the Line பார்த்த அடுத்த நாள் Adrian Lyneன் Unfaithful பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. என்னுடைய கேள்விகளுக்கு அந்தப் படமும் தெளிவான பதில்களை முன்வைக்கவிட்டாலும் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாது எல்லோரும் பலவீனமுள்ள மனிதர்களே என்ற புரிதல் அத்திரைப்படத்தைப் பார்க்கும்போது வந்தது. Unfaithful படம் முடிகின்ற விதமும், இறுதியாய் நடைபெறும் உரையாடலும், பின்னணியில் விரியும் காட்சியும் ஒரு அழகான கவிதைக்கு நிகரானது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
* பொடிச்சியின் ஒரு பதிவின் பகுதியிலிருந்து….

(Tuesday, March 21st, 2006 at 9:59 am )
Thursday, June 1st, 2006 at 10:38 am

By டிசே தமிழன்
மதுக்குவளையின் விளிம்பிலமர்ந்த
எலுமிச்சையாய்
நிலவு மிதக்குமோர் பொழுதில்
ஒப்பனைகள் நீக்கி
மன்னிப்புக்கேட்கத் தொடங்குகின்றேன்
சட்டகங்களுக்குள் அகப்பட்டிருக்கும் மனிதர்களின்முன

வெளியே
இன்னமும் உருகிவழியும்
வெம்மையைத் தவிர்க்க
ஏசி நிறையுமென் அறையினுள்
நுழைகின்றான்
இவான் எனுமொரு சிறுவன

வெறுமையையும் முடிவிலா கவலையையும்
அறையினுள் அலையவிட்டு
மேசையில் குழந்தையொன்றின் குருதிதோய்ந்த உடலை
வெறித்துக்கொண்டிருப்பவனைக் கண்டு
பதட்டம் நிரம்புகிறது அவனது விழிகளில

குழந்தைமையை
அவன் தொலைத்துவிடாதிருக்கும்
கவனத்துடன் கரம்பற்றி
நடக்கத்தொடங்குகின்றோம்
கோரையும் நாலுமணிப்பூக்களும் நிறைந்த வரம்புகளினூட

வயல்கள் முடிந்து
பிள்ளையார் கோயில் முளைக்க
ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருக்கின்றாய்
கேணியின் மூன்றாவது படியில்
ந
விலத்திக்கொண்டு
போக நினைப்பதெல்லாம்
பிணியாய் ஒரு சுழலில்
சிக்கவைத்துக்கொண்டிருக்கும் அவலத்தை
உடைந்த கண்ணீர்த்துளியொன்றின்
உப்புக்கரிப்புடன் பகிர்கையில்…
செய்வதறியாது திகைத்து
என்னை ஆரத்தழுவ வருமுன்னை
அதிகாரம் குறுக்கிடுகிறது
அன்றைய பொழுது அஸ்தமித்துவிட்டதென்ற
வந்த இவான்
இடையில் எங்கே போனான்
என்ற பதட்டத்துடன்
நாம் வீடு திரும்புகையில்
முன்னர்
மேசையிலிருந்த குருதிதோய்ந்த குழந்தையின் படம்
இவானாய் மாறியிருந்தது
நெஞ்சில் ஆணிகளாய் அறைகிறத
குழந்தைகள் தொலைந்துகொண்டிருக்கும்
நாட்டை
பூர்வீகமாய்க்கொண்டவர்க்கு
நேசித்தல் என்பதுகூட
நம்மை நாமே சிதைத்து
உருவழிப்பதுதான்.

எல்லாம் ஒருநாள் கனவெனக் கலைந்து போகுமாம்!

என்னப்பா எழும்புங்கோவன்…..எத்தனை முறை வந்து எழுப்பிறது…எருமைமாடு மாதிரி படுத்திருக்கிறியள்
கொஞ்சநேரம் விடுமனப்பா…இப்பத்தான் அஸினைப் பற்றி ஒரு கனவு வந்தது…எப்ப பார்த்தாலும் சிவபூசையில் புகுந்த கரடிமாதிரி வந்து கனவைக் குழப்பும்.
என்ன அஸினைப் பற்றிக் கனவோ….அவாதானே உம்மடை தொல்லை தாங்காது கலியாணங்கட்டி இரண்டு குழந்தையும் பெற்று சந்தோசமாய் வாழ்கிறா…உமக்கு ஒருத்தர் நல்லாயிருக்கிறது பிடிக்காதே
எனக்கு இப்பவும் ஏழு வருசத்துக்கு முன் படங்களில் நடித்துக்கொண்டிருந்த அஸின்தான் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறா.
அதுசரி எப்பவும் உமக்கு மன்மதக்குஞ்சென்று நினைப்பு
சரி சரி புறுபுறுக்காதையும்….நீரும் என்னை லவ் பண்ணேக்கில ஆர்யாவைப் பார்த்து பார்த்து உருகித்தானே என்னையும் ஜிம்முக்குப் போ போ என்று துரத்தினனீர்..
அது சரி…ஜிம்முக்கு போனால் pacs வருமென்றால்… உமக்கு கண்டகிண்ட தலையிடி, இழுப்பு, இரத்தஅழுத்தம் எல்லோ வந்தது…
நான் என்னப்பா செய்ய… ஸல்சா, யோகா என்று அங்கும் இங்கும் பொம்பிளையப் பிள்ளைகள் ஒடித் திரிந்துகொண்டிருக்க, அவையளைப் பார்த்த பிரமிப்பில் ஒரேயடியாய் வெயிட்ஸை கூட எல்லோ தூக்கிவிடுகிறனான்…கடைசியில் எல்லா வருத்தமும் எனக்கு வந்துவிட்டது.
நான் தான் பிழை விட்டு விட்டேன்….மனுசர்தானே ஜிம்முக்கு போறது… உம்மையெல்லாம் அங்கே அனுப்பின என்ரை புத்தியைச் செருப்பாலை அடிக்கோணும்.
*************************************************************************************
இஞ்சையப்பா, இன்டைக்கு காலமை அம்மா கோயிலுக்குப் போகப்போறன் என்டவா அவாவை ஒருக்கா கொண்டுபோய் காரில் இறக்கிவிடுகிறிரே…
உம்மடை கொம்மாவையோ…எனக்கு வேற வேலை இல்லையோ…நீர்தானே சோத்து மாடு மாதிரிக் கிடக்கிறீர்… உந்த வேலைகளையாவது செய்யும்.. அத்தோடு அந்த மனுசியின்ரை கடியும் தாங்கேலாது
ஏனப்பா என்ன நடநது?
இல்லை…அன்டைக்கு தலைமயிரை சரியாய் முடியாமல் அவாவை கோயிலிலை இறக்கிவிடப்போனால், அவா சொல்கிறா….நான் அம்மன் கோயிலுக்குப் போறன்…இஞ்சை காரை ஓட்டிக்கொண்டு என்ரை அம்மாளாச்சியே காட்சியளிக்கிறா போலக் கிடக்கிறது என்டா…
ஹ..ஹ…ஹ
நான் அவாவுக்குச் சொன்னன்….அப்ப ஏன் நீங்கள் கோயிலுக்குப்போகிறியள்…உங்கடை மகனை காளியின்ரை காலுக்குள் நசுங்கி கிடக்கிற அசுரன் மாதிரித்தானே வைத்திருக்கிறன்…மற்றக்கால் சும்மாதான் கிடக்கிறது…வேண்டுமென்றால் அங்கை ஒரு இடந்தரட்டோ என்றேன்… அதற்குப்பிறகு மனுசி வாய் திறக்கிறதில்லை பாத்தியளோ.
ஏன் உம்மடை கொம்மா மட்டும் என்ன திறமோ…நான் உம்மடை வீட்டுக்கு வந்த முதல்நாளே…நான் மருமகனுக்கு அந்தமாதிரி ரீ போட்டுத்தாறேன் என்டு சொல்லிப்போட்டு சீனிக்குப் பதிலாய் உப்பைப் போட்டுக் கொண்டுவந்து தந்துவிட்டு மருமகனே தேத்தண்ணி எப்படி இருக்கு என்டு நக்கலாய்க் கேட்டதை மறக்கமுடியுமா என்ன?
எங்கடை அம்மாவுக்கு முதல் நாளிலேயே உமது வண்டவாளம் எல்லாம் தெரிந்துவிட்டது போல..
அதாவது பரவாயில்லை….மருமகனுக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு கோழி அடித்துக்கொடுக்கப்போறேன் என்று சொல்லிவிட்டு மனுசி என்னைத்தானே அந்தச் சேவலை துரத்திப் பிடித்து தா என்று கேட்டது….நான் அண்டைக்கு முழுதும் அந்தச் சேவலோடுதானே ஒடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனான்….
முந்தின காலத்திலே காளையை அடக்கினால்தான் தங்கடை பொம்பிளைப்பிள்ளையளை கலியாணஞ்கட்டிக்கொடுப்பினமாம்…உமக்குச் சேவலாவது பிடிக்கத் தெரிகிறதா என்று அம்மா போட்டி வைத்துப் பார்த்திருக்கிறா.
எனக்கு அண்டைக்கு வந்த ஆத்திரத்தில் வளவுக்கிலை கிடந்த உலக்கையாலே ஒரு போடு போட்டால் என்ன என்ற மாதிரி இருந்தது
என்ன சேவலுக்கா…
இல்லை உம்மடை கொம்மாவின்ரை மண்டையிலை.
*************************************************************************************
ஏனப்பா உமக்கு ஞாபகமிருக்கா…நாங்கள் லவ் பண்ணிக்கொண்டிருந்த காலத்தில் நான் எழுதித்தந்த கவிதை ஒன்று….
கவிதையோ…உம்மடை கவிதைகளை வாசிக்கத்தொடங்கினாப்பிறகுதான் அதுவரை கவிதைகளை நேசித்துக்கொண்டிருந்த எனக்கு கவிதைகள் மீது வெறுப்பே வந்தது…கண்டறியாத உம்மடை கவிதை…
நீர் முந்தி பெரிய வளையம் ஒன்டை உம்மடை காதில் போட்டியிருப்பீரே…அதுவின்ரை அழகைப்பார்த்துத்தானே எனக்கு முதலில் லவ்வே வந்தது.
உந்த அற்புதமான காரணத்தை வெளியிலை ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதையும்…கேட்கிற சனங்கள் கொதிப்பில் தங்களைத்தாங்களே செருப்பாலை அடிக்கத் தொடங்கப்போகுதுகள்.
ஆ…ஞாபகத்துக்கு வந்துவிட்டது கவிதை..
உன் காது வளையத்தில்
ஊஞ்சல் ஆடி
செவியினுள் நுழைந்து
மூளையில் புதைந்து
தலையில் மலர்ந்த்
காதல் பேன்
நான்.
எனக்கு உந்த புல்லரிக்க வைக்கின்ற கவிதை நினைவிலை இல்லை….ஆனால் உதை வாசித்த என்ரை தோழி சொன்ன ஒன்றுதான் இப்பவும் நினைவிலிருக்கிறது…
என்ன சொன்னவா அவா?
அந்தாளிட்டை சொல்லு…காதிலை எதுவும் நுழைந்தால் காதல் வராது…காதுக் குத்துதான் வரும்…எதுக்கும் ஒருக்காய் பைத்தியக்கார டொக்கரைப் பார்க்கச் சொல் என்டு…
அவா பொறாமையிலை அப்படிச் சொல்லியிருக்கிறா..
அது மட்டுமில்லை…இந்தக் கவிதை எழுதிற.. குடுகிறவன்கள் எல்லாம் சரியான கள்ளங்கள் அவங்களை மட்டும் நம்பிவிடாதே என்டும் சொன்னவா…ம்..ம்.. அப்பவே அவளின்டை அட்வைஸைக் கேட்டிருந்தால் நான் இப்படி படுகுழிக்குள் விழாது இருந்திருப்பேன்..
உமக்கு எப்பவும் என்ரை கவிதைபற்றி நக்கல்தான்…எனக்கு எத்தனை விசிறிமார் இருந்தினம் என்டு உமக்குத் தெரியுமோ?
விசிறிகளோ….கவனமாய் வைத்திருங்கோ…கோடைகாலத்தில் விசுக்க உதவும்…
உம்மளை கலியாணங்கட்டின சமயத்தில் கூட ஒரு இரசிகை எனக்கு கடிதம் எழுதிக் கேட்டிருந்தவா…நீங்கள் கவிதை எழுதாத நேரங்களில் என்ன செய்யிறனியள் என்டு..
நீர் என்ன சொன்னனீர்..?
கவிதை எழுதாத நேரத்தில் என்ரை மனுசிக்கு வெங்காயம் உரித்துக் கொடுக்கிறனான் என்டு உண்மையைத்தான் சொன்னனான்.
அது சரி…
அந்த இரசிகை எனக்கொரு கடிதம் திருப்பி எழுதியிருந்தா…
கவிதை எழுதும் இந்தக் கைகள்
நீல வானில் நட்சத்திரங்களுக்கும்
கதை சொல்லும் என்று கனா வளர்த்திருந்தேன்!
வேதனை வேதனை
தமிழுக்கு வந்த சோதனை சோதனை
வெங்காயம் உரிப்பதா கவிஞனின் கைகள்?
எடுத்து வருகிறேன் கத்தியை
எங்கே அந்த இராட்சசி?
வெட்டி நாலாய்
ஊறப்போடுகின்றேன்
ஊறுகாய்!
அவா இங்கை வந்திருந்தால் இரண்டு கொலைகள் விழுந்திருக்கும்…
ஏனப்பா அவா ஒராள்தானே வருவா?
முதலில் உம்மைப் போட்டுத்தள்ளிவிட்டுத்தானே…அவாவை ஊறுகாய் ஆக்கியிருப்பேன்.
*************************************************************************************
பின்னிணைப்பு:
அதுசரி நீர் முந்தி அஸினைச் சைட் அடித்துக்கொண்டிருந்த காலத்தில் புளோக்கிலோ கிழக்கிலோ ஏதோ அலம்பிக்கொண்டு திரியக்கிலை…கொஞ்ச நண்பர்கள் இருந்தவையள் என்டு சொன்னனீரெல்லோ…அவையளுக்கு எல்லாம் இப்ப என்ன நடந்தது..?.
அதொரு மெகா சீரியல் கதையப்பா….பெரியஎலி இப்ப…
யார் அவர்….பத்தாம் வகுப்பில் யாரோ ஒரு பிள்ளைக்குப் பூ ஆய்ந்து கொடுத்து அது பிறகு அவற்ரை காதில் பூவைச் சுற்றிவிட இராவணன் வெட்டில் குதிக்கப்போனாரே..அவரோ?
ஒமோம் அவர்தான்…அவருக்கு இப்ப இணையம் தொலைபேசி பத்திரிகை எதுவும் கிடைக்கச்செய்யாமல் அவற்ரை மகன் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறராம்….நாயை நாய்க் கூண்டுக்குள்ளை அடைச்ச மாதிரி தன்ரை நிலை நாய்ப்பிழைப்பாய் போச்சுது என்டு ஒரே புலம்பலாம் அங்கே.
அளவு கணக்கில்லாது கணணிக்கு முன்னால் இருந்து ஆடினால், கடைசியில் சேரவேண்டிய இடம் அதுவாய்த்தானே இருக்கும்.
அது சரி தங்கதேவி என்டு ஒருத்தர் தன்ரை சொந்தவிசயங்கள் பற்றிக் கவலைப்படாது, அப்பர் உழவாரத்தோடு திரிந்தமாதிரி ஊர் விவகாரம் பார்த்துக்கொண்டு திரிந்தவாவே…அவா இப்ப எங்கே?….
அதேயேன் கேட்கிறீர்…அவா இப்ப பெரிய எழுத்தாளினி எல்லோ… தமிழில் என்றில்லாது இங்கிலீஷ், ஸ்பானிஸ் என்டு எல்லா மொழிகளிலையும் கலக்கிக்கொண்டிருக்கிறா…
இப்ப Hawaiiயில் எலிசபத்து மகாராணி மாதிரியெல்லோ இராச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறா. எனக்குத்தான் ஒரே பொறாமையாய் இருக்கு…நானும் இப்படி ஆகியிருப்பேன்…என்ரை ‘எழுத்தெனும் தவத்தை’ நீர்தானே ‘லவ்’ என்னும் மோகினியைக் கொண்டு கலைத்தனீர்!
உமக்கு தவந்தான் கலைந்து…எனக்கு உம்மாலை முழுவாழ்க்கையும் எல்லோ பாழாய்ப்போனது.
அது சரி …அந்தத் தங்கத்தேவி வாயூற வாயூற சமையற்குறிப்புக்கள் எழுதுவாவே…உண்மையில் அவாவுக்கு சமைக்கத்தெரியுமா?
நாங்கள் எங்கள் குடும்ப இரகசியத்தை வெளியில் ஒருத்தருக்கும் சொல்லிறதில்லை.
நாசமாய்ப்போன உங்கடை குடும்ப இரகசியத்தை நீரே வைத்துக்கொள்ளும்…. ட்ராகன் ஒன்று ஒருத்தர் ஒற்றைக் கண்ணோடு பறந்து கொண்டு திரிந்தாரே அவருக்கு என்ன ‘ஆச்சு’…?.
அது ஒரு பெரிய கதையப்பா…தான் புத்தரைப் போல ஆகப்போகின்றேன் என்று செர்ரி மரத்துக்குக் கீழே போய் இவர் குந்த வாற போற சனம் எல்லாம் இவருக்கு மாலை மரியாதை கொடுத்திருக்கிறது. அப்ப அந்த வழியாலா போன மழலை இவரைக் கண்டுவிட்டு ஒரு சவால் செய்திருக்கிறது….தன்ரைக் கேள்விக்குப் பதில் சொன்னால் இப்படியே மரத்துக்குக் கீழே இருக்கலாம் இல்லாவிட்டால் இந்த இடதை விட்டு ஓடிவிடவேண்டும் என்று …இவரும் மழலைதானே என்று வழமையான ஆகா ஆகா என்ற சிரிப்பைச் சிந்தியபடி தயாராயிருக்கிறார்…..மழலை கேட்டதாம்…கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்று…? இவர் அண்டைக்கு தலையைச் சொறிந்துகொண்டு ஓடினது கடைசியில் இல்லறவாழ்வு என்னும் கிணற்றில் தொபுக்கடீர் என்று விழும்வரை நீண்டதாம். இப்பவும் இவரது துணைவியார் எப்பவாவது கோழியிலிருந்து முட்டை வந்ததா…..என்று ஆரம்பித்தாலே காணுமாம்…எள்ளும் கொள்ளுமாய் இவர் முகத்தில் கோபம் வெடிக்குமாம்.
பாவம்…எப்பவும் சிரித்துக்கொண்டிருந்தவர் இப்படிச் சிடுமூஞ்சியானதுக்கு உம்மைமாதிரி ஆக்கள்தான் காரணமாக்கும்.
*************************************************************************************
ஒரு அப்பாவி பாரிஆள் இருந்தாரே…எல்லோரும் சேர்ந்து அந்த ஆளைப்போட்டு கடித்துக்கொண்டிருப்பியளே…
ஓமோம்..அவர் உறுமிமேளத்தை அடிப்பதைவிட்டுவிட்டு மகிழ்ச்சிக்கடலில் நீராடிக்கரைக்கு வந்து இப்ப அவர்தானே அந்த மாகாணத்து ப்ரிமியர்… இவர் சரியான அமைதிப்பேர்வழி எண்டபடியால், அந்த நகரச் சனங்களை மூச்சுக்கூட சத்தமாய் விடக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளாராம். அதாலே சனம் இப்ப விடுகின்ற மூச்சை கூட சொப்பிங் பாக்கில் இழுத்துப் பிடித்து நிரப்பி அவதிப்படுகிதுகளாம்.
என்னதொரு கொடுமை….!
ம்…ம்…ம்
ஒரு இரட்டையர் உம்மைப் போட்டு கிழிகிழியென்று கிழித்துக்கொண்டிருப்பார்களே…அவங்கள் எங்கே இப்ப ?
சந்துரு தன்ரை ஆளைப் பார்க்க தொடங்கினதிலிருந்து அவற்ரை நிலை ரைற்றானிக் கப்பல் மாதிரி கவிழத்தொடங்கிவிட்டது…இப்ப ஓர் வளர்ப்புப் பிராணி மாதிரி வாலையாட்டிக்கொண்டு அந்த அம்மணிக்குப்பின்னால் திரிகிறராம்.. என்டாலும் அந்த ஆள் என்னை மாதிரியில்லாது சந்தோசமாய்தான் இருக்கிறார்.
என்ன?
ஆனால் வசந்துருதான், இப்ப சாமியாராகப் போய்விட்டார்…
ஏனப்பா காதல் கீதலில் எதுவும் பிரச்சினையோ?
ச்சாச்சா…அப்படி இல்லை…காதலால்தான் சாமியார் ஆகினம் என்டால் எத்தனை முறை நான் சாமியார் ஆகியிருக்கோணும்.
நான் சொன்னது ஒழுங்கான சாமியார் பற்றி.. உம்மளை மாதிரி கள்ளச்சாமி ஆகிறாக்களைப் பற்றி அல்ல.
சாமியாரானாலும் வசந்துரு நல்லதொரு கவிஞராகவும் ஆகிவிட்டார்..
பரவாயில்லை..அந்த ஆளாவது ஏதோ உருப்படியாய் ஒரு விசயம் செய்திருக்கிறது…
உருப்படியான விசயமோ…பொடிச்சியோடு கவிதை ஒழிப்பு இயக்கந் தொடங்கின இவர் same side goal போட்டதால், பொடிச்சியின்ரை இயக்கம் இவருக்கு ப்யூஸ் எடுக்கத் திரியுதாம.
ப்யூஸ் எடுக்கிறதெண்டால்…?
இவருக்கு மூளையின் எந்த நரம்பு கவிதை எழுத ஊக்குவிக்குதோ அதைப் பிடுங்கி விடுவதுதான்…
அய்யய்யோ பாவம் அவர்…!
அலாஸ்காக்கரடி தத்தெடுத்த மணியண்ணையைத் தெரியுமெல்லோ. அவர்….
காணும் காணும் நிப்பாட்டும்…எனக்கு இப்பவே மூச்சு விடக்கஸ்டமாய்க் கிடக்கிறது…
நான் தான் அப்பவே சொன்னேனே…எங்கடை அந்தக்காலத்துக்கதை ஒரு மெகா சீரியல் என்டு…
என்ன செய்ய…. உம்மளை லவ் பண்ணின காலத்திலிருந்து, எனக்கு எல்லாமே லேட்டாய்தானே விளங்கிறது. ஆனால் உமக்கு மட்டுந்தான் இப்படி வியாதி இருக்கிறது என்டு இவ்வளவு காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்ப பார்த்தால் உம்மளோடு சேர்ந்த ஆக்களுக்கும் நீர் தொத்துவியாதி மாதிரி உம்மடை பழக்கத்தை எல்லாம் பரப்பியிருக்கின்றீர் என்டது மட்டும் உந்தக்கதைகளைக் கேட்கும்போது தெளிவாய்த் தெரிகிறது.
யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்பதே எனது வாழ்க்கைத் தத்துவம்.
ஆ….கவிஞனைத்தான் அடித்துத் துரத்திவிட்டேன் என்று நிம்மதியாயிருந்தேன்….இப்ப தத்துவக்காரரும் வாறாரோ…கொஞ்சம் பொறும். இடியப்ப உரலை எடுத்துக்கொண்டு வாறன்.


(Wednesday, April 12th, 2006 at 1:02 pm)


…………………………

ஏழு குறிப்புக்கள்

(1)
உன் விரல்கள்
வயலினை தொட்டகணத்தில்
மின்னல் தெறிப்பில்
வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கத் தொடங்கின
அறையெங்கும

தங்கள்பாட்டில் பறக்கும்
பூச்சிகளின் சுதந்திரம்
எனை உறுத்தி
சிறகுகளை பிச்சுப்போட
கொடுமை தாளாத
வயலின்
மலைப்பாம்பாகி
நெரிக்கிறது கழுத்த

கனவா என்று
விழிக்கின்றேன் நான்
இல்லை
நிஜந்தான் என்கிறது
என் வார்த்தை தினம் கொல்ல
உதிரும் உன் கண்ணீர்த்துளிகள்.

(2)
பதின்மங்களில் முகிழ்கையில்
எப்போது வளாகம் என்கிறார்கள்
வளாகத்தில் உலாவுகையில்
எப்போது வேலை என்கிறார்கள்
வேலையில் ஸ்திரமாகையில்
எப்போது கல்யாணம் என்கிறார்கள்
துணையுடன் பொழுதைக் கழிக்கையில்
எப்போது குழந்தைகள் என்கிறார்கள

அனைத்துக் கேள்விகளுக்கும்
விடையறியாது தவிப்பினும்
திருப்பிக் கேட்க
ஏதேனும் ஒரு கேள்வியையாவது
வாய்வசம் வைத்துக்கொள்ளுங்கள

அதுதான்
உறுதி செய்யும்
பிறருக்கு
வெறுப்பை ஊட்டி
உங்கள் இருப்பை.

(3)
குறிப்பிட்ட நேரத்தில் வேலை
குறிப்பிட்ட நேரத்தில் உறக்கம்
குறிப்பிட்ட நேரத்தில் கணணியின் முன்னமர்தல்

எல்லாம் ஒழுங்கு தவறாத இலயத்தில்
நிகழ்ந்துவிடுகின்ற
கொலைகளும் தான்.

(4)
திறக்கப்பட்ட
ஒரு புத்தகத்தின்
இரண்டு கதாபாத்திரங்களானோம்
நாம

தாபத்தோடும்
நேசத்தோடும்
வக்கிரங்களோடும்
சுவாரசியமாய் நகர்ந்தது கத

மூடிவைக்கப்பட்ட புத்தகத்தின்
முடிவு
இப்போது நினைவினில்ல
திரும்ப
பக்கஙகளுக்குள் நுழையவும் முடியாது
வாசித்து முடிக்கையில்
இருந்த உணர்வு
கண்ணீரா உவகையா என்றும் தெரியாத

அவதி
காதல்.

(5)
விடுதலைப் போராட்டங்கள்
அற்புதமானவ

எனக்கான உலகம் விரிந்தபோது
எல்லாப் புரட்சிகளின் பின்னும்
இரத்தம் படிந்த வரலாறு
மினுங்கியது வலித்தத

இயல்பாய் ஏற்பதா
எதிர்த்துக் கேள்வி கேட்பதா
திணறித் தவிப்பினும்
புரட்சிகள் அவசியமென்பதை
உரத்துக் கூறுவதில்
உறுத்தல் எதுவுமில்ல

அவலமும் குரூரமும்
சுவடுகள் பதிக்கா
ஒரு புரட்சியை
எவரேனும் ஒருவர் நிகழ்த்திக் காட்டுகையில்
தற்கொலை செய்துகொள்வார்
கடவுள்.

(6)
இப்போது
அதிகம் குடிக்கிறேன்
வீட்டுக்கும் குறித்த
நேரத்துக்குச் சென்று சேர்ந்துவிடுவதுமில்ல

சமூகம் மீதான
கோபமே
எனது குடியென்று
யாரேனும் ஒரு கவிஞன்
எழுதியிருக்கவும் கூடும

எனக்கு அப்படியில்லை;
கொண்டாடிக்கொண்டிருக்கின்றேன்
சமூகத்துடன் ஒன்றிவாழ முடியா
என் சுயத்தை
போதையுடன்.

(7)
குழந்தைகள்
காணாமற் போகின்றார்கள்
கடத்தப்படுகின்றார்கள்
காவும் கொள்ளப்படுகின்றார்கள

87களில்
கொடுமிருளாய் துரத்திய
சம்பவங்களில்
எனது பிரார்த்தனை
என்றுமே வளர்ந்துவிடக்கூடாது
என்ப்தாய் இருந்தத

இன்றும்
எத்தனை குழந்தைகள்
பாயில் மூத்திரம்பெய்தபடி
இரவுகளை வெறித்துப்பார்க்கின்றனவோ…?

(நண்பன் கார்த்திக்கிற்கு)
(Thursday, June 15th, 2006 at 9:54 am)

Magic Seeds by V.S.Naipaul

நாவல் பற்றிய சில குறிப்புகள்

(1)
மத்திய வயதிலிருக்கும் விலி சந்திரனின் (Willie Chandran) வாழ்க்கையின் ஒரு பகுதியை இந்நாவல் கூறுகின்றது. இந்தியாவில் பிறந்து படிப்பின் நிமிர்த்தம் இங்கிலாந்து சென்று, அங்கே போர்த்துக்கீசியய பின்புலமுள்ள ஒரு பெண்ணைத் திருமணஞ் செய்து, பதினெட்டு வருடங்கள் ஆபிரிக்காக்கண்டத்தில் வசித்த விலி சந்திரன், உரிய அனுமதியின்றி ஜேர்மனியிலுள்ள தனது சகோதரி சரோஜினியுடன் தங்கி நிற்பதுடன் நாவல் ஆரம்பிக்கின்றது. சரோஜினி மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தும் திரைப்பட முயற்சிகளில் ஈடுபாடுடையவர்.அவ்வாறான செயற்பாடுகளால் பல (இடதுசாரி) தலைமறைவு இயக்கங்களுடன் நேரடித்தொடர்புகளும் உடையவர்.
வாழ்க்கையின் பெரும் பகுதியை நோக்கமில்லாது கழித்து mid-life crisisல் அவதிப்படும் சந்திரனை, இந்தியாவுக்குச் சென்று அங்கே ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடும் ஒரு இயக்கத்துடன் இணைந்து செய்ற்படக சரோஜினி ஆலோசனை கூறுகின்றார். சந்திரனுக்கு தனிப்பட்ட ரீதியாக எந்த அடக்குமுறைக்கும் பாதிக்கப்படாதுவிட்டாலும் ஒருவித ஆர்வத்த்தாலும், வாழ்க்கையின் வெறுமையாலும் இந்தியாவுக்குச் சென்று ஒரு இயக்கத்துடன் இணைகின்றார்.

சந்திரன் இந்தியா சென்று இயக்கமொன்றில் சேர்கின்றபோது, சரோஜினி வழிகாட்டிய இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டு இருக்க, சந்திரன் பிரிந்த இருகுழுக்களில் ஒன்றில் இணைகிறார். ஆனால் அது இவர் நினைத்த தலைமையின் கீழ் இயங்கிய (கண்டபலியின் கொள்கைகளுக்கு) நேர்மாறாக இருப்பதைக் கண்டு சலித்தாலும் வேறு வழியில்லாது அவர்களுடன் இணைந்து போராடுகின்றார். ஆரம்பத்தில்- பொலிஸ் பதிவுகள்- எதுவுமில்லாததால் ஒரு தகவலாளியாக இயக்கத்துக்குச் செயற்படுகின்றார். வேறு இரகசிய இடங்களிலிருந்து வரும் ஆயுதங்களை இயக்கத்தின் கரங்களுக்கு மாற்றவும், நிதியைச் சேகரிக்கவும் இன்னொரு போராளியுடன் நகரத்தில் சில வருடங்களைக் கழிக்கின்றார்.. பிறகு பொலிஸ் சந்திரனின் நண்பரைக் கைதுசெய்து, சந்திரனுக்கும் வலைவிரிக்க, நகரை விட்டு நீங்கி, இயக்கத்தின் தலைமை இருந்த காட்டுக்குள் இருந்து செயற்படத் தொடங்குகின்றார். இவர் சார்ந்த இயக்கத்தில் இருப்பவர்கள் அனேகர் இவரைப் போல மத்திய வயதில் இருப்பவர்களாகவும்- சிலர் இயக்கத்தில் 30,40 வருடங்கள் இருப்பவர்களாயும்- என்றோ ஒரு நாள் தாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் புரட்சி நிகழ்ந்துவிடும் என்ற கனவை இறுகப்பற்றிப் பிடித்தவர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு உயர் சாதிக்காரர்கள் இயக்கத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களாகவும், தீர்மானங்களை எடுப்பவர்களாய் இருப்பதுவும் சந்திரனுக்கு ஆச்சரியமளிக்கிறது.

நகரங்களுக்கும் தங்கள் செயற்பாடுகளை விரிவாக்கவேண்டும் என்று விரும்பிய இயக்கத்தின் தீர்மானம், அரசு, பொலிஸ் போன்றவற்றின் கண்காணிப்பால் மாற்றமடைகிறது. தாங்கள் தங்கியிருக்கும் காடுகளை அண்டிய கிராமஙகளை முதலில் மீட்டெடுத்து அங்கிருக்கும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு நாடு முழுதும் புரட்சியை விரிவாக்க திட்டதை மாற்றி அமைக்கின்றனர்.

இயக்கம் பண்ணையாட்களிடம் இருந்து நிலங்களை மீட்டெடுத்து ஒடுக்கப்பட்டவர்களுக்காய் கொடுத்தாலும், அவர்கள் காலம் காலமாய் பழக்கப்பட்ட பழக்கத்திலிருந்து மாறமுடியாது, இது பண்ணையாட்களின் நிலம் எங்களால் பயிரிடமுடியாது என்று ஒவ்வொருமுறையும் கூறிக்கொள்கின்றனர். இவர்களை, ஆயுதங்களை வைத்து மிரட்டினால்தான் மாறுவார்கள் என்றும், பொலிஸை சுட்டுக்கொன்றால்தான் இயக்கம் என்ற ஒன்று இருக்கிறது என்று நமபுவார்கள் என்றும் சந்திரன் தனக்குள் அலுத்துக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் சந்திரன் இயக்கத்தை விட்டு இன்னொரு தோழருடன் தப்பியோடி பொலிஸில் சரணடைகின்றார். தனக்கு சொற்ப சிறைத்தண்டனையே கிடைக்கும் என்று நம்பிய சந்திரனுக்கு பத்து வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட சந்திரன் சோர்வும் வெறுமையும் அடைகிறார். இதற்கிடையில் இவரது சகோதரியும் தங்கள் தகப்பன் மரணத்தின் விளிம்பில் இருப்பதைக்கண்டு இந்தியாவுக்கு வருகின்றார். பிறகு தந்தையாரும் இறந்துவிட, அவர் நடத்திய ஆச்சிரமத்தை நடத்தப்போவதாயும் இனி இந்தியாவில் தங்கப்போவதாயும் சிறையிலிருக்கும் சந்திரனுக்கு சரோஜினி கூறுகின்றார்.

இலண்டனில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சந்திரன் வெளியிட்ட ஒரு புத்தகத்தின் பதிப்பாளரின் உதவியால், குறைந்த கால சிறைத்தண்டனையுடன் சந்திரன் விடுதலையாகின்றார். பிறகு தனது கடந்தகால கசப்பான நினைவுகளைத் தாங்கிக்கொண்டு இங்கிலாந்திலிருக்கும் நண்பரொருவரின் வீட்டில் சென்று தங்குகின்றார்.
அங்கே அந்த நண்பருடன் நடைபெறும் நீண்ட உரையாடல்களும், வாழ்க்கை என்பது என்ன என்ற மாதிரியான கேள்விகளளுககு விடைகளைத் தேடுவவதாயும், அந்த நண்பரின் மனைவியுடன் (தகாத) உறவும் புதியவேலையும், முதலாளித்துவ உலகைப் புரிந்துகொள்வதுமாயும் நாவல் நீள்கிறது.

(2)
ஆரம்பத்தில் சுவாரசியமாகப் போகும் நாவல் பின்பகுதியில் மிக மெதுவாக நகர்ந்து, தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தை குறைக்கிறது. கவனமாக உற்றுப்பார்த்தால், வாசகர்களை ஆரம்பத்தில் எந்த அபிப்பிராயங்களை உருவாக்காமல் நாவலுக்குள் இழுத்துவிட்டு, அத்தியாங்கள் நீள நீள தனது வலதுசாரிக் கொள்கைகளை நாவலின் ஆசிரியன் திணிக்கத் தொடங்குவது கண்கூடு. நாவலின் ஆரம்ப அத்தியாயத்தில் ஜேர்மனியில் இருக்கும் தமிழர்கள் வ்ருகின்றார்கள். சந்திரனும் சரோஜினியும் மூன்றாம் உலகநாடுகளின் (தேசிய) போராட்டங்களைப் பற்றி உரையாடும்போது, ரோசாப்பூக்களை விற்கும் தமிழனைப் பார்த்து இந்த ரோசாப்பபூக்கள் எல்லாம் இவர்களின் நாட்டில் ஆயுதங்களாய் மாறும் என்ற மாதிரி சரோஜினி கூறினாலும், விமர்சனங்களை மீறி அவர்கள் போராடுவதற்கான நியாயங்களும் காரணங்களும் இருக்கின்றன என்கிறார். நாவலின் நீட்சியில் நாவலாசிரியர் தனது சொந்தக்கருத்துக்களை கதாபாத்திரங்களில் திணித்தாலும், சரோஜினியை ஒரு இடதுசாரி நம்பிக்கை உள்ள ஒருவராக அடையாளப்படுத்துவதால், தமிழர் போராட்டம் அரையும் குறையுமான மேற்கத்தைய புரிதல்களிலிருந்து தப்பிவிடுகின்றது.

வாழ்க்கையின் அரைவாசிக்கும் மேற்பட்ட காலத்தை வெளிநாடுகளில் வசித்த ஒருவர், முறையான காரணங்கள் இன்றி இந்தியாவுக்கு போராடப்போவதும், எந்தக் கேள்வியும் இல்லாது அவரை இயக்கம் ஏற்றுக்கொள்வதும், ஊர்/நகர மக்களும் வித்தியாசம் காட்டாது இயல்பாய் பழகுவதும் நாவலில் மட்டுமே நடக்ககூடிய விடயம். நாவலாசிரியர் ஒரு தெளிவான காரணத்தைக் காட்டாது சந்திரனின் பாத்திரத்தை -ஏதோ ஷொப்பிங்கு போவதுபோல- போராடவும் போவதாய் காட்சிப்படுத்தும்போதே நாவலின் சரிவும் ஆரம்பித்துவிடுகின்றது. எப்படி தங்கள் கொள்கைகள், கருத்துக்களை பரப்ப ஒரு கதைக்களன் தேவைப்படுகின்றதோ, அப்படியே நைபாலும் தனது நம்பிக்கைளை விதைக்க நைபாலும், சந்திரன் என்ற முக்கிய பாத்திரத்தையும், இந்தியத் துணைக்கண்டத்தையும் பயன்படுத்திக்கொள்கிறார் (இப்படி தனது நம்பிக்கைகளைத் திணித்து நாவலாய் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் நாவாலசிரியர் ஒருவரும் ஞாபகத்துக்கு வருவதை இந்தக்கணத்தில் தவிர்க்கமுடியவில்லை).

இங்கிலாந்தில் வாழும் வாழ்வுதான் யதார்த்தமான வாழ்வு எனவும், தத்துவங்களால், புரட்சிகளால் ஆகப்போவதில்லை ஒன்றுமில்லையெனவும் இறுதியில் நாவலை முடித்துவிடுகின்றார் நாவலாசிரியர். தனது தந்தை ஏழை மக்களுக்காய் நடத்திக்கொண்டிருந்த ஆச்சிரமத்தை தன்னால் தொடர்ந்து நடத்த முடியாது இருக்கின்றதென சரோஜினியும் முடிவில் நம்பிக்கை இழந்துவிடுகின்றார். ஆரம்பத்தில் கட்டியமைக்கப்படுகின்ற அனைத்து நம்பிக்கைகளும் இறுதியில் தகர்ந்துவிடுவதாய்க் காட்டுவது தனி மனிதர்களின் வீழ்ச்சி என்பதைவிட, மூன்றாம் உல நாடுகளில் எதையும் செய்தல் சாத்தியமில்லை என்ற தொனிதான் எல்லாவற்றையும் மீறி ஒலிக்கிறது. ரின்னாட்ட்டில் (Trindnad) பிறந்து இங்கிலாந்தில் பெரும்பகுதியைக் கழித்து, பிரிட்டிஷ் இராணியில் செல்லப்பிள்ளை பரிசான நைற் (Knight) விருதைப் பெற்ற ஒருவரிடமிருந்து மூன்றாம் உலப்பிரச்சினைகளையும் அங்குள்ள மக்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதுகூட ஒருவகையில் தவறுதானோ.

(Thursday, March 16th, 2006 at 10:03 am)

நீரில் கரையும் சொற்கள்

xx.xx.20xx
இசையில் ஓவியத்தில் இலக்கியத்தில் அமிழ முன்முடிவுகள் அவசியமற்றது. ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது எழுத்தாளரின் பெயரும் அடையாளமும் இன்றி வாசித்தால்தான் அந்தப்படைப்பில் முற்றாக அமிழ்ந்து போகமுடியும் என்று எப்போதோ வாசித்த கவிதை நினைவுக்கு வருகின்றது. உண்மையில் இந்த தன்மை எனக்குள்ளும் தலைதூக்கியபடிதான் இருக்கின்றது. விமர்சனங்களை வாசித்து வாசித்து எல்லாவற்றையும் விமர்சனக்கண்ணோடு பார்த்துக்கொண்டு வாழ்வின்/படைப்பின் அரிய தருணங்களைத் தவறவிடுகின்றேனோ என்று யோசிப்பதுண்டு. இலக்கியத்தைவிட எத்தனையோ அற்புதமான விடயங்கள் வாழ்வில் இருக்கின்றன. அவற்றில்தான் அதிகம் அமிழ்ந்துபோக விரும்புகின்றேன். ஒரு பயணியாய் இலக்கியப் படைப்புக்களை வாசித்துவிட்டு அவற்றிற்கு பின்னாலுள்ள அரசியலை உதறித்தள்ளி விட்டுப்போக விரும்புகின்றேன். பிடித்திருந்தால் மனதில் நிறுத்திக்கொண்டும், பிடிக்காவிட்டால் புன்னகைத்தபடியும் வாழ்வில் நகர விரும்புகின்றேன். ஆனால் அது எந்தளவில் சாத்தியம்/சாத்தியமின்மை என்பது புரியவில்லை.
……………………………………………….
xx.xx.20xx
நீ சிலவேளைகளில் குழந்தையாய், பலவேளைகளில் உக்கிரமான காளியாய் விசுவரூபம் எடுக்கிறாய். நீ பேசுகின்ற/உபயோகிக்கின்ற மொழி, பல தடவைகளில் நான் கேள்விப்படாத மொழியாக இருக்கிறது. இந்த உக்கிரமான மொழியைத்தான் எனது அம்மாவும் அக்காவும் பேசவிரும்பி தங்களுக்குள் அடக்கிக்கொண்டிருக்கவும் கூடும். உனது தனித்துவமான இந்த மொழி எந்த நேரமும் இதத்தைத் தருகின்றது என்று பொய் சொல்லமாட்டேன். சிலவேளைகளில் அவையென் மனக்குளத்தில் கல்லெறிந்து அலையலையாய் கேள்விகளை உருவாக்குகின்றன. என்னை, எனது பார்வைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற பதட்டத்தை எனக்குள் அடிக்கடி ஏற்படுத்துகின்றன.
………………………………………………
xx.xx.20xx
இரத்த ஆறு பெருகிக்கொண்டிருக்கும் நோயுற்ற நாட்டிலிருந்து பிரசவிக்கப்பட்ட நாங்கள் வண்ணத்துப்பூச்சிகளையும், புல்வெளிகளையும், பூக்களையும் பேசிக்கொண்டிருத்தல் எவ்வளவு இயல்பானது - இயல்பற்றது என்பதனைவிட இவ்வாறான நெகிழ்வான கனவுகளும் இல்லாவிட்டால் நாமும் எப்போதோ மனப்பிறழ்வானவர்களாய் ஆகியிருக்கவும் கூடும் என்ற அச்சந்தான் என்னில் உறைகிறது.
……………………………………………….
xx.xx.20xx
ஒரு குழந்தையால் எப்படி தனது அழுகைக்கான காரணத்தை வாய்திறந்து சொல்லமுடியாதோ….ஒரு சகமனிதர் தான் உணர்கின்ற வலியை எப்படி வார்த்தைகளால் விபரிக்கமுடியாதோ…அப்படித்தான் பலபொழுதுகளில் ஒருவரை எப்படி ஆழமாய் உள்ளார்த்தமாய் நேசிக்கின்றோம் என்பதையும் அந்த நபருக்கு வெளிப்படுத்துவிடமுடியாது. துரோகங்களையும் பழிவாங்கல்களையும் அப்படியே இன்னொரு சகமனிதருக்கு பிரதிபலித்துக் காட்டுவதற்கான அனைத்து வழிகளையும், முயற்சிகளையும் அறிந்து வைக்கின்ற நாம், உறவுகளை ஆழமாய் பிணைத்து வைத்திருக்கக்கூடிய அன்பை முழுமையாக வெளிப்படுத்தும் வழிமுறைகள் பற்றி அதிகம் கவலைப்படாமல் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடுவதுதான் மிகவும் அவலமானது.
……………………………………………….
xx.xx.20xx
சூரியன் இந்த நாளை மிக மிக வேகமாய் விழுங்கிக்கொண்டிருக்கின்றது. Patioவில் இருந்து மூன்று பியர்களும், ஒரு 5oz ஷொட்டும் அடித்து முடிக்க மழை பொழியத் தொடங்குகிறது. நாம் சிலிர்த்த/ நம்மால் சிலிர்க்கவைக்கப்பட்ட பெண்களைப் பற்றிப் பேசும்போது மனம் முழுதும் நிரம்பும் விகசிப்பும் நிதானமும் ஏன் நண்பா நாம் அரசியல் பேசும்போது மட்டும் வருவதில்லை? முகமெல்லாம் இருண்டு உலகின் கடைசிக்கணம் மாதிரியல்லவா நாம் குரைக்கத் தொடங்கிவிடுகின்றோம். உனக்கு ஏறிவிடுகின்றது; கெட்ட வார்த்தைகள் கலந்து உனக்கான அரசியலைப் பேசத்தொடங்குகின்றாய். வழமைபோல நானும் ஒமோம் போட்டபடி கேட்டுக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இன்றோ இடைமறித்து உரையாடத் தொடங்குகின்றேன். உனது குரல் உனக்குரிய தார்மீக ஆவேசத்துடன் உயரத்தொடங்குகின்றது. மழையில் அரையும் குறையுமாய் நனைந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் எம்மைப் பார்த்து waitress பெண், Why don’t you guys come inside and talk here? என்கிறார். நண்பா, நமக்குள் இருக்கும் விமர்சனங்கள்/பலவீனங்களை மீறி, நமக்குரிய ஒரே ஆதர்சனம் ‘சே’ என உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதுபோல நமக்கான கடைசி நம்பிக்கையாய் இன்னமும் நம்மில் தேக்கிக்கொண்டிருப்பது மார்க்சிசத்தையும், பெரியாரியத்தையும் என்பதையும், இதோ விழுந்துகொண்டிருக்கும் இந்த மழைத்துளிகளும், பச்சை patioவுக்கு கருமை வர்ணம் பூசும் இந்த இரவும் மிக நன்கு அறியும்.
……………………………………………….
xx.xx.20xx
நாம் இன்று பயணிக்கும் தெருக்களில், நாளை நம் சுவடுகள் அனைத்தையும் மரணம் தடயங்களில்லாது வாரிக்கொண்டுபோய்விடும் என்று எப்போதாவது யோசித்திருக்கின்றீர்களா? அந்த நினைப்பு என்னைக் கலங்க வைத்திருக்கிறது. இவ்வளவுதானா வாழ்வு என்று இடம் பொருள் ஏவல் அனைத்தையும் துறந்து பயமுறுத்தியிருக்கிறது. கலக்கத்தை மீறி அதுதான் வாழ்வின் அழகே என்று சிலிர்த்தெழுந்து, பலவீனங்களுடன் ம்னிதர்களை இன்னும் நேசிக்க வைக்கிறது. மனிதர்களை எந்தவளவுக்கு நேசிக்கின்றேனோ அந்தவளவுக்கு மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கவும் விரும்புகின்றேன்.
……………………………………………….
xx.xx.20xx
நள்ளிரவைத் தாண்டி மணித்தியாலங்கள் கடந்திருக்கும் இந்தப்பொழுதில், மனிதர்களும், கொட்டிய பனியும் உறங்கிக்கிடக்கும் இந்தக்கணத்தில், உன்னைப் பற்றிய நினைவுகள் என அறையில் ஒரு வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கத் தொடங்குகின்றது. உனக்கான என் பிரியத்தைக் கூற எந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தாலும் நான் விரும்பும் நெகிழ்வும் உயிர்த்திருத்தலும் இல்லாதிருப்பதைக் கண்டு ஒருவித சலிப்பு வருகின்றது. உன்பொருட்டேனும், இதுவரை கற்றிராத ஏதோவொரு புதுமொழியைக் கற்று, அந்தமொழியின் வனப்புமிகு வார்த்தைகளை ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் முதற்சொற்களைப்போல உனக்குச் சொல்லவேண்டும் போல ஆசை நிரம்புகின்றது.


(Thursday, August 3rd, 2006 at 10:50 pm)

Friday, September 22, 2006

கனடீய தமிழ் இளைஞர் யுவதிகளின் இருத்தல்கள்

-விவாதத்திற்கான சில புள்ளிகள்-

(Wednesday, August 16th, 2006 at 9:35 am )

புலம்பெயர் வாழ்வானது இளைஞர், யுவதிகளின் வாழ்வியற்பாங்கில் பெரும் மாற்றத்தையும், காலம் காலமாய் இதுதான் எங்கள் கலாச்சாரம் என்று கொண்டுவந்த தொன்மங்களின் அடிவேரையும் ஆட்டங்காணச்செய்துள்ளது. இரட்டைக்கலாச்சாரத்தில் உழலவேண்டிய காலத்தின் நிர்ப்பந்தத்தால், அதிகம் மனச்சிதைவுட்குட்பட்டு எது தனக்குரிய திசையென்று அறியமுடியாது ஏதிலியாய் அலைந்துகொண்டிருக்கிறது இன்றைய கனடீய தமிழ் இளைஞர் சமுதாயம். வன்முறையும், தற்கொலைகளும் கனடீய தமிழ் இளைஞர் சமுதாயத்தில் ஆழமாய் பதியஞ்செய்யப்பட, சின்ன முரண்பாடுகளுக்கே ஆயுதம் து¡க்கிக்கொண்டு இளைஞர்கள் திரிவதும், சாதாரண மனஅவசங்களிற்கே தற்கொலையே முடிவென இளைஞர் யுவதிகள் நாடுவதுமாய் இன்றைய யதார்த்தம் இருக்கிறது.

கனடீய தமிழ் இளைஞர் வன்முறையானது ஒரு வலைப்பின்னலைப்போன்றது போன்ற மாயையை வேற்றின மக்கள் மத்தியில், பத்திரிகைகள் உருவாக்கி விட்டனவென்றால், அது குறித்து சரியானவளவில் அக்கறைப்படாத அல்லது அவசியமற்றதென விலக்கிவைத்த எங்கள் தமிழ் சமுதாயத்தை நோக்கியே சுட்டுவிரல்நீட்டல் மிக உத்தமம். இளைஞர் வன்முறை குறித்து, ஒரு ஆய்வுநோக்கில் கனடீய தமிழ் இளைஞர் அமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை மிக முக்கியமெனலாம். அந்த ஆய்வு, வன்முறை குழுக்கள் எவ்வாறு தோன்றுகின்றனவென்றும், அவை எந்தநோக்கில் கட்டுப்படுத்தப்படக் கூடியனவென்றும், பெற்றோர், வெகுசன ஊடகங்களின் பங்கு என்பன என்னவென்றும், ஒரு விவாதத்தை தொடர்வதற்கான மிகமுக்கியமான புள்ளிகளையும் விட்டுச்சென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் பத்திரிகைகளும், மக்களும் அது வழங்கிய அவதானங்களில் ஒன்றான, விடுதலைப்புலிகளுக்கும், இங்குள்ள இளைஞர் வன்முறை குழுக்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லையென்பதை மட்டுமே பிரதானப்படுத்தி, பிற நல்ல விடயங்களை தவறவிட்டமை மிகந்த கவலைக்குரியது.

இளைஞர் வன்முறையானது அநேகர் நினைப்பதுபோல, இங்குள்ள இரண்டு மிகப்பெரிய வன்முறைக்குழுக்களைச் சுற்றி மட்டுமே வருகின்றன என்பது மிகவும் தவறு. அதுவானது இன்று பரவிப்படாந்து, உயர்கல்லூரியிலுள்ள வளரிளம்பருவத்தின் ஆரம்பக்கட்டத்திலுள்ள இளைஞர்கள் வரை எட்டியுள்ளது. இந்த வன்முறையானது தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இளைஞர்களாலோ அல்லது குழுக்களாலோ எதிர்காலத்தில் எடுத்துச்செல்லப்படப்போவதில்லை. அதுவானது ஒரு குறிப்பிட்ட வயதுள்ளவர்களால் மட்டும் தொடர்ந்து எடுத்துச்செல்லப்படப்போகின்றது. வன்முறைக்குழுக்களில் ஆரம்பகால உறுப்பினர்களாய் இருந்தவர்களில் பலர், இன்று திருமணஞ்செய்து அல்லது குழுக்களைவிட்டு மிக அமைதியான முறையில் வாழ்க்கை நடத்த விரும்புகின்றவர்களாய் இருக்கின்றனர். ஆனால் ஆய்வில் குறிப்பிடப்பட்ட ஒரு இளைஞன் சொல்வதுபோல், ‘எனது நெருங்கிய உறவினர் ஒரு வன்முறைக்குழுவில் இருந்தார். அத்துடன் இந்த குழுக்களுடன் தொடர்பும் கொள்ளவேண்டாமெனவும் எச்சரித்திருந்தார். என்கின்றபோதும் என்னால் அதை விலத்திச்செல்லமுடியவில்லை, நான் ஒரு இளைஞர் குழுவில் இன்று இருக்கின்றேன்’ என்கின்றான். எனவே ஏலவே கூறியதுமாதிரி, இளைஞர் வன்முறைக்குழுக்கள் ஆனவை ஒரு குறிப்பிட்ட வயதில் (பொதுவாய் 16 வயதிற்கும் 25 வயதிற்கும் இடையில். உள்ளவர்களாயே தொடர்ந்து எடுத்துச் செல்லப்படப்போகின்றது என்பதைக்கருத்தில்கொண்டு இவைகுறித்த அக்கறையை எமது சமுகமும், ஊடகவியலாளர்களும், குடிப்பதற்கும் குரைப்பதற்கும் எனவிருக்கும் ஊர்ச்சங்கங்களும், பாடசாலைச் சங்கங்களும் வளர்த்துக்கொள்ளல் நல்லது.

யுவதிகள் தற்கொலைசெய்யும் அளவும் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது என்பது
அனைவருக்குந்தெரிந்த ஓர் உண்மை. ஆனால் தற்கொலைகள் நடக்கும்போது அவை குறித்து பேசுவதும் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாய் அக்கறை கொள்ளாது இருப்பதும் நமக்குச் சாதாரணமாகிவிட்டது. காதல் என்பது புனிதமானதென்ற மாயைக்குள் சிக்கிக்கொண்ட பல யுவதிகள், அவை இடைநடுவில் தோல்வியுறுகையில் இவ்வாறான முடிவுகளை எடுப்பதும், மற்றும் உயர்கல்வி கற்று பட்டம் எடுத்தல் மட்டுமே வாழ்க்கையென யாழ்ப்பாண மேலாதிக்கசக்திகளின் மிச்சங்களினாலும் இவ்வாறான முடிவுகளை எடுக்கத்து¡ண்டப்படுகின்றனர். தற்கொலைகள் குறித்த விழிப்புணர்ச்சி அண்மைக்காலத்தில் சற்று அதிகரித்திருப்பதும், அவ்வாறான மனஅவசங்களுக்கு உட்பட்டவர்கள் மனந்திறந்து பேசுவதற்கு சில துறைசர்ந்த சமூகசேவகர்கள் தங்கள் நேரங்களை ஒதுக்க முன்வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களுக்கு விரிந்துகிடக்கும் வெளியுலக வாழ்வின் மிகச்சிறிய பகுதியையே யுவதிகள் அனுபவிக்க அனுமதிக்கப்படுகின்றனர் எனபதுவும், வீட்டில் கனவுகளுடன் அல்லது ஏமாற்றங்களுடன் தனித்துநிற்கும் பெண்களே இவ்வாறான முடிவுகள் எடுக்க முனைகின்றனர் என்றும் நான் நேரில், இணையதளங்களில் சந்தித்த தோழியர் பலர் கூறிய கருத்துக்கள் நினைவில் கொள்ளத்தக்கவை. இன்றைய புலம்பெயர்வாழ்வில் யுவதிகளை அவதானிக்கையில், அவர்கள் இன்னமும் ஈழத்து மிச்சசொச்ச காலாச்சார, பண்பாட்டுத்தொன்மங்களுடன் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பது தெளிவான உண்மை. ஆகக்குறைந்தது, பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை ஒரளவு கண்காணிப்புடன் அவர்களுக்கு பிடித்ததைச் செய்ய அனுமதிப்பதும் இரட்டைக்கலாச்சாரத்தில் சிக்கித்திணறும் அவர்களுக்கு தமிழ்க்கலாச்சாரம் மட்டுமே உயர்ந்ததென்று திணிக்காமல் இருப்பதுவும் மிகவும் நல்லது (இங்கே தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் இரண்டாகப் பிரித்துப் பார்க்கவே விரும்புகின்றேன்).

ஏலவே சிலாகிக்கப்பட்ட வன்முறை, தற்கொலை ஆகிய இரண்டு விடயங்களுக்கு, இளைஞர், யுவதிகளின் திறமைகள் எங்கள் சமுதாய்த்தால் சிறந்தமுறையில் அடையாளங்காணப்படாமையுமே ஒரு காரணம் எனலாம். எனக்குத்தெரிந்தளவில் இளைஞர் குழுக்களில் இருப்பவர்களில் பலர் பன்முகப்பட்ட ஆளுமைகளுடன் இருக்கினறனர். ஆனால் அவற்றை தட்டிக்கொடுக்கவேண்டிய நாம் அவர்கள் நல்லவை அல்லாதவை செய்யும்போது மட்டும் கிளாந்தெழுந்து பேசுவபர்களாய் இருக்கிறோம் (உதாரணத்திற்கு அவர்களில் பலர் மேற்கத்தைய நடனங்கள் ஆடுவதில், பாடல்கள் பாடுவதில் மிக வல்லவராய் இருக்கின்றனர்). எங்கள் கலாச்சாரம் அவைகளல்ல என்று முகாரி பாடுவதைவிட, அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை எந்தவழியிலேனும் வெளிக்கொணரவேண்டிய பொறுப்பு நமக்குண்டு.

இந்தக்கட்டுரையில் இளைஞர் வன்முறையும், யுவதிகள் தற்கொலைகள் குறித்தும் மட்டுமே பேசப்பட்டனவெனினும் கனடீய இளைஞர், யுவதிகளின் இருத்தல்கள், வேறுபல மிகச்சிறந்த வழிகளில் இந்த புலம்பெயர்ந்த மண்ணில் பதிவுசெய்யப்படுகினறனவென்பதும் கவனத்தில்கொள்ளப்படவேண்டும்.

(நன்றி :பதிவுகள் - 2002ம் ஆண்டளவில் எழுதப்பட்டது)

அவளுக்காய் ஒரு மழைப்பொழுதில் எழுதியவை

(Tuesday, May 9th, 2006 at 11:38 am )

பசுமை விரித்த புல்வெளியில்
மஞ்சளாய் பூத்திருக்கிறது
நேசம்
வலசை போய்
மரங்களில் வந்தமரும் பறவைகளின்
சிறகில் மிதக்கின்றன
எல்லைக்கோடில்லா
நிலப்பரப்புக்கள
மதியப்பொழுதில்
பெயரறியா நிலப்பரப்பை
உதிர்க்கும் பறவை
எனக்காய் விட்டுப்போகின்றது
நெடுந்தூரப்பிரிவின்
வாதையை.
……………………..
எழுதிமுடிக்கும்
என் ஒவ்வொரு வாக்கியத்திலும்
தெறிக்கிறது இரத்தம்
என்கிறாய
மழைபொழிந்து
குழந்தைகள் குதூகலிக்கவேண்டிய
நிலப்பரப்பை
குருதியலைகள் மூர்க்கமாய்
கரைத்துக்கொண்டிருக்கின்றத
ஒரு முத்தத்தையும்
இன்னொரு முத்ததையும் பிரிப்பது
வினாடிகள் அல்ல
விரலிழுக்கும் துப்பாக்கி விசை.
……………………
சிறு பாலம்
நேற்றுப் பெய்த மழையில்
சிலிர்த்தபடி பாயும் சிற்றாறு
வெறுமையைக் கசியவிடுகின்ற
மரப் பெஞ்(சு)
வெயிலில் காய்ந்தபடியிருக்கும்
இரண்டு ஊஞ்சல்கள்
ஓடித்திரியும் முயல்கள்
இவற்றுடன் கூடவே நான
பருவங்கள் மாற மாற
காத்திருக்கின்றோம்.
இயற்கை:
ஒதுக்கிவைப்பதில்லை அகதிகளை
நேற்றுவரை என்னசெய்தாய் யென்றும்
கேள்விகளைக் கேட்பதுமில்லை
நீ இயற்கை
(அல்லது என்னோடு எப்போதும் இருப்பவள்).
……………
நகரம் பிதுக்கித்தள்ளுகிறது
தனக்கான அவதிகளினூடு
என்னையும
ஒரு செர்ரிப்பூ
உதிர்ந்து
நிலத்தை வந்தடைவதற்குள்
மலைபோல குவிகின்றன
கட்டவேண்டிய கடன் பில்கள
நான் ஓடவேண்டும்
அல்லது ஓடிக்கொண்டிருப்பதாய்
நடிக்கவாவது தெரிந்திருக்கவேண்டும
நகரம்
ஏற்றுக்கொள்வதில்லை
வீடற்றவர்களை மட்டுமின்றி
மனதில் ஈரலிப்புள்ளவர்களையும்.
நீயொரு
மரம் நடமுயல்கின்றாய்
எனக்குள
தரிசாகிக்கொண்டிருக்கும் மனதில்
அவ்வளவு இலகுவல்ல
தளிரொன்று அரும்புவது.
…………
வாசித்து முடிக்கா
புத்தகங்கள்….
எனக்குள்
கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்றா
பதட்டத்தை உருவாக்கின்ற
தேநீரருந்திக்கொண்டிருக்கும் ஓர்பொழுதில்
என்றென்றைக்குமாய்
முடிந்துவிடா பிரதியாய்
நமது இருப்பு
நீளவேண்டுமென்கிறாய
ஒரு புத்தகத்தையே
சுவாரசியமாய் வாசிக்கத்தெரியாதவன்
உயிருள்ள பிரதியை…..?
உன் விரல்கள்
பற்றியிருக்கும்
என் கரம் நடுங்குறும்
குற்றவுணர்வு இன்னும் கூடி.
……….
ஒரு காதல்சோடி
கடந்துபோன பாதையில் நடக்கத்தொடங்கும்
ஒருவன் - இன்று
யாரோடு முரண்படுவது
யாருக்கு முகத்தைத் திருப்பிக்காட்டுவது எனும்
நாளாந்த பட்டியலை மறந்துவிடுகின்றான
முடிதிருத்துபவனின்
கத்தரிக்கோல்விரல்கள்
சிருஷ்டிக்கும் கலைதேடி
வெயிலின் விழிகளும்
கண்ணாடிதாண்டி நீளும
ஆண்களுக்கான சலூனில்
தற்செயலாய் நுழைந்துவிடும்
ஒரு பெண்
எல்லா ஒழுங்கையும்
கலைத்துவிட்டுச் செல்கின்றாள்
நினைவு ஒருபறவையாகி
உன்னைச்சேருமிக்கணத்தில்
ஒரு நட்சத்திரம் உன் கூந்தலில்
அமரட்டும்.

தாய்

(March 08,2006)

உன்னுடன் துணைவர முடியாது
என் எல்லை முடிகிறது
காரிலிருந்து நீ இறங்குவாய்
இனி என்னுடைய பிள்ளையை வெளியுலகம் எடுத்துக்கொள்ளும்.
நீ இயல்பெனக் கொண்ட உன்னுடைய மௌனத்தை
இனி இவர்கள் என்ன செய்வார்கள்…
மென்மையான இந்த பூக்களின் இதழ்களை
எப்படி நாசம் செய்வார்கள். ..
நீ இறங்கிச் செல்வதை நான் வெறுக்கிறேன்- இத்தோடு
என் உரிமை பறிகிறது
அருகிருந்து, என்னுடைய உடம்பினுள் கை போட்டு,
இதயத்தை இழு…த்துவிட்டு ஏதோ செல்கிறது
இதயம் அவ்விடத்தில், ஸ்தம்பிக்கிறது என் உலகம்-
நீ நடக்கிறாய்
உன் புதிய பாடசாலை, உத்தரவாதங்கள் தராது
என் வெறித்த விழிகளை திமிருடன் நெரிக்கிறது
இவ் உயர் பாடசாலையில்
சிறுவர்களின் ஆண் குறிகளை
பெண்களின் உதடுகள் உறிஞ்சுமாம்…
நோஞ்சான் பையன்களை
பயில்வான் மாணவர்கள் போட்டு அடிப்பார்களாம்…
கேள்வியுற்றவைகளை நினைத்தபடி
நான் என்ன செய்வேன்
கொஞ்சமும் முதிர்ச்சியற்று,
உன் கரம் பற்றி
உன் வகுப்பறைகளுக்கு கூட வந்து
உன்னுடன் இருந்து, நீ பேசாதபோது ‘அவர்களுக்கு’ விளக்கம் சொல்லி,
உனக்கு என்னென்ன பிடிக்கும் என்று சொல்லி, நீ நன்றாக வரைவாய் என்று சொல்லி,
உன்னுடன் எல்லோரும் ஏன் நண்பர்களாக வேண்டும் என்று சொல்லி… இன்று முழுதும்
இனி ஒவ்வொரு நாளும் உன்னுடன் கூடவர விரும்புகிறேன், உனக்குப் பாதுகாப்பாய், உனது பலமாய்…
கொடியவர்களே! ஏன் என்னைத் தடுக்கிறீர்கள்.
நொடிக்கொருதரம் பாத்துப் பாத்து, பொத்தி பொத்தி வளர்த்த என் மகவை, என்னைப் போல கவனிப்பீர்களா? அவனருகாமையில் செல்கையில் உங்களது வாகனங்களின் வேகத்தை தயவுசெய்து குறைப்பீர்களா? மேலும்,
அவனுடைய ஆண் குறியை, சிறந்த ஓவியனுக்குரிய அவனது கரங்களை, அவனது அலட்சியத்தை
அவனதழகிய விழிகளை தயவு செய்து துவம்சம் செய்யாதிருப்பீர்களா?
அவன் அன்பால் மூடப்பட்ட குழந்தை.
உலகைப் புதிப்பிக்க போகிற இன்னொரு உயிரம். பேராபத்துகளை வெல்கிற வயதை அவன் அடையவில்லையே…
அலட்சியமாக வளர்ந்துவிட்டான்.
*
பொடிச்சியின் வ்லைப்பதிவிலிருந்து நன்றியுடன் இந்தப் பதிவை மீள்பிரசுரிக்கின்றேன். எழுதியவர் தனது பெயரை வெளியிடவிரும்பவில்லை என பொடிச்சி முன்பு ஒருமுறை கூறியிருந்ததாய் நினைவு. இதைவிட ஒரு அருமையான கவிதையை எழுதி, இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது தாயாருக்கு பரிசாகக் கொடுத்துவிடவும் முடியாது.

Thursday, September 21, 2006

ஆழியாள் X சல்மா X மைதிலி

Wednesday, July 19th, 2006 at 10:31 am

ஆழியாள், சல்மா, மைதிலி போன்றவர்களின் கவிதைகளை (தொகுப்புக்களை) ஒரே நேரத்தில் வாசிக்கும்போது, அவர்கள் தங்களுக்கான மொழியில் (பெண்மொழியா?) தமது ஆளுமைகளுடன் கவிதைகளை தந்திருக்கின்றனர் என்று புரிகிறது. முக்கியமாய், எந்த ஆண் கவிஞர்களின் பாதிப்பு அதிகமின்றியும், தமக்கான சுயத்துடன், தமது மொழியில் சொல்லவேண்டும் என்ற பிரக்ஞையுடனும் எழுதியிருக்கின்றார்கள். இவர்களுக்கான உலகில் தனிமை மிகவும் நிரம்பியிருப்பதாய் அநேக கவிதைகள் சொல்கின்றன. மற்றும், பாலியல் உறவு என்பது மிகப்பிரமிக்கத்தக்கதாய் நமது ஆண் கவிஞர்களும், கதைஞர்களும் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கையில் அதை வேறொரு கோணத்தில் வலிகளுடன், வடுக்களுடனும் இவர்களது படைப்புக்கள் பேசுகின்றன. சல்மாவின் ‘இரண்டாம் ஜாமத்துக்கவிதை’ பேசும் பாடுபொருளை, மைதிலியின், ‘என்னுள்ளே’ என்று 89களிலே எழுதப்பட்டுள்ள கவிதையும் பேசுகிறது.
சல்மா,
‘சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுபார்த்துக்கொண்டிருந்தது’
என்று எழுதிப்போக…
மைதிலியோ,
‘தோட்டாக்கள் நிறைந்த
துப்பாக்கி விசையில்
பதிந்த விரல்
வன்மம் நிறைந்த கண்களுடன்
ஒரு சிறுத்தை…
பாய்தலிற்கு முந்திய தோற்றம்
இவையனைத்தையும் கண்காணித்தபடி
ஒரு பிணந்தின்னிக் கழுகு’
என்று ஒரு உறவொன்று நிகழ்வதற்கு முன்னும் பின்னுமான பொழுதுகளை இவ்விரு கவிதைகளும் மிகுந்த பீதியுடன் பதிவு செய்கின்றன.
இதைவிட இன்னும் உக்கிரமாய் ஆழியாளின் கவிதை…,
‘அழகிய மன்னம்பெரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என…’
சொல்லி,
‘…அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்துகொண்டேன்’
என்று எழுதிச் செல்கிறார். அதிலும், ‘அதே அதே’ என்று திருப்பித் திருப்பி எழுதப்படும் வார்த்தைகள் தரும் பொருள் ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டியது.
இதேபோல மைதிலியின் இன்னொரு கவிதையில்,
‘கனமிக்க கைப்பிடியில்
நொறுங்குகிறது உடல்
வியர்வை பொங்கி வழிய
அழுத்தல்
வருத்தல்
முத்தமிடல் கூட ஆவேசமாய்
அவன் தனது பேனாவால்
தாள்களில் கிறுக்குவதுபோல
தனக்குரிய சீப்பால்
தலையை அழுத்தி வாரிக்கொள்வது போல
தாடி சீவுகிற சவரக் கத்தியை
கவனமாய்க் கையாள்வதைப் போல
எல்லாம் முடிந்து அமைதியாய் தூங்குகிறான் அருகே
என் இத்தகைய நாளைய
காதலும் கனிவும்
இதந்தரு மென்னுணர்வுகளும்
பொங்கியெழுந்த குறியின்முன்
ஒழுகிக் கிடக்கிறது
கட்டிலின் கீழே’
என்ற இந்தக்கவிதை உட்பட அநேக பெண்கவிஞர்களின் கவிதைகள் பாலியல் உறவை மிகுந்த வலியுடனும், விலத்தியிருந்தும் பதிவு செய்கிறன. அதிலும் முக்கியமாய், உறவு கொள்ளும் ஆண் தனக்குரிய நிறைவை, சந்தோசத்தை அடைகின்றவனாய் சித்தரிக்கப்படுவதும்,பெண் உறவில் முழுமையடையாது தவிப்பதாய் சித்தரிக்கப்படுவதும் கவனிக்கப்படவேண்டியது.
நான் வாசித்த, பாலியல் உறவுகள் பற்றி ஆண்வயப்படுத்தப்பட்ட எல்லாக் கவிதைகளும் பாலியல் உறவின் நிறைவைக் கொண்டாடுகின்றவையாகத்தான் இருக்கின்றனவே தவிர, எதிர்ப்பாலின் உணர்வுகளை அக்கறையுடன் அவதானிப்பதாயோ, அங்கென்ன நிகழ்ந்திருக்கக்கூடும் என்று கவலைப்படுவதாயோ இருந்ததாய் நினைவினில்லை. சற்று விதிவிலக்காக ஒரு பெண்ணின் மனநிலையில் எழுதப்பட்ட, றஷ்மியின், ‘பத்தாவதும் ஈற்றாவதுமான முத்தம்’ என்ற கவிதை இன்னும் அபத்தமாய் எழுதப்பட்டிருக்கிறது.
சல்மாவின் அதிகம் வாசிக்கப்பட்டதும் சர்ச்சிக்கப்படுவதுமான, ‘ஒப்பந்தம்’ கவிதையில்
‘உன்னிடமிருந்து/கலங்கலானதே எனினும்/ சிறிது அன்பைப் பெற’ என்னவெல்லாம் செய்யத்தயாராகின்றேன் என்ற கவிதை தரும் அதிர்விற்கு நிகராய், ஆழியாளின் ‘நிலுவை’ கவிதை வித்தியாசமான உணர்வைத் தருகிறது. ஓர் உறவை முறித்து, எல்லாவற்றையும் திருப்பித் தருகின்ற ஒரு காதலனிடம், நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி ஓர் காதல்துணை சொல்கிறார்…
‘உன் முகட்டில் சுவடாய்ப்
பதித்த
என் காட்டு ரோஜா உணர்வுகளையும்,
அள்ளியள்ளித் தெளித்து
பூப் பூவாய்ப் பரவிய
திவலைக் குளிர்ச்சியையும்
எப்படி மறுதலிப்பாய்?
எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்?
என்று கேட்டுவிட்டு,
கடிதத்திலா?
காகிதப்பொட்டலத்திலா?
இதில் நான்
உனக்கிட்ட உதட்டு முத்தங்களையோ
நீ எனக்குள் செலுத்திய
ஆயிரத்தெட்டுக் கோடி விந்தணுக்களையோ
நான் கணக்கில் எடுத்துச்
சேர்க்கவில்லை என்பது
மட்டும்
நமக்குள்
ஒரு புறமாகவே இருக்கட்டும்’.
என்று முடிகிறது. இவையெல்லாம் ஓர் அதிர்ச்சிக்காய் எழுதப்பட்டிருக்கும் என்று எழுதும் அறிவுஜீவிகளை விடுத்துவிட்டு பார்த்தால் கூட, இப்படி எந்த ஆண் கவிஞராலும் எழுத முடியுமா என்பது சந்தேகமே (நாளை வாறவா என்னைப் பற்றி என்ன நினைப்பா என்ற நினைப்பு இருக்கும்; இல்லாவிட்டால், ‘என் மனைவிக்கு’ என்று நன்றி அல்லது சமர்ப்பணம் செய்யும் மனதிற்குக் களங்கம் செய்துவிடும் அபாயம் இருக்கும் என்று தவிர்த்துவிடத்தான் செய்வர்).
சல்மாவின் தனிமை பற்றிய கவிதைகள் ஆழ்ந்த வாசிப்புக்குட்படுத்தக்கூடியன (இதைப் பலபேர் பலதடவைகளில் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்).
புறக்கணிப்பு
கூடு தேடிச் செல்லும்
பறவைக் கூட்டம்
பொருட்படுத்துவதேயில்லை
எனது வீட்டுத் தோட்டதின்
ஒற்றை மரத்தினை
என்கின்ற சாதாரண வார்த்தைகளைக் கொண்டமைந்த இந்தச் சிறுகவிதைகூட தனிமை பற்றிய உணர்வை இலகுவில் நம்மில் ஏற்றிவிடுகிறது.
அதே போல், மைதிலியின் கவிதையொன்று,
இப்போது எஞ்சியிருப்பது
களைப்படைந்த முகம்
குறிதேடியலையும் கண்களால்
சலிப்படைந்துபோன
சிறுமென் இதயம்
யோனி முலைகளற்ற பெண்ணை
யாரும் காதல் செய்வாரா?…”
என்று காயப்பட்டு தனிமையிலிருக்கும் பெண்ணொருத்தியின் தனிமையையும் பிரியத்தையும் நேரடியாய் வினாவுகிறது.
நமக்கு (ஆண்களுக்கு) பெண்களின் முலைகள் வைன்கோப்பைகளையும், நீலோற்பல அரும்புகளையும் மட்டுந்தான் நினைவு படுத்துகிறன, ஆனால் அவற்றிற்கு சொந்தமான பெண்களுக்கோ, அவை பலவேறுவிதமான வலிகளையும், இடையூறுகளையும் இன்னமும் நினைவுபடுத்தியபடி இருக்கின்றன என்பதைத்தான் இந்தப் பெண்கவிஞர்களின் கவிதைகள் அடையாளங்காட்ட முயல்கின்றன.
ஆழியாளின், ‘விடுதலையின் பெயரால்’ கவிதை ஒரு Programming languageல் எழுதப்பட்ட (if, if not) வித்தியாசமான முயற்சி. அதிலும் இறுதியாய் மனிதனைவிட நாய் பல்வேறுவழிகளில் சிறத்தது என்று கூறிவிட்டு,
‘Expected Output
ஆகவே மனிதனை மனிதன் என்றே
ஏசிப் பழகுங்கள்
ஏசுங்கள் - நம் வன்முறையின் பெயரால்.’
என்று ஒருவித நையாண்டியுடனும் இயலாமையுடனும் முடிகிறது.
இந்த மூன்று பேரினதும் தொகுப்புக்களை வாசித்தபோது, தனித்தனி கவிதையாக வாசித்தபோது, இருந்த பல கவிதைகளின் உக்கிரம் தொகுப்பாய் வாசிக்கும்போது குறைந்ததுமாதிரி தெரிந்தது. அது முழுத்தொகுப்பாய் கவிதைகள் வருவதன் பலவீனமாய் இருக்கக்கூடும். சல்மாவின், ‘ஒப்பந்தம்’, இரண்டாம் ஜாமத்துக் கதை’, ‘நம் உறவைப் பற்றிச் சில குறிப்புக்கள்’ கவிதைகளும் ஆழியாளின், ‘நிலுவை’, ‘தடை தாண்டி’, ‘மன்னம்பேரிகள்’, ‘விடுதலையின் பெயரால்’ போன்றவைகளும், மைதிலியின் ‘பொருள்’, ‘மாலை’, ‘அது உண்மைதான்’ போன்ற கவிதைகளும் அவர்களின் தொகுப்பில் மிகமுக்கியமான கவிதைகளாகும்.
மேலே இந்தக்கவிஞர்களின் ஒத்த பாடுபொருளுடைய கவிதைகள் இங்கே கவனப்படுத்தப்பட்டதே தவிர, அந்தந்தக் கவிஞர்கள் அவரவர்களுக்குரிய தனித்துவங்களுடனும், பின்னணிச் சூழல்களுடனும் கவிதைகள் எழுதியிருக்கின்றார்கள் என்பதுவும், ஒருத்தரை மற்றவருடன் ஒப்பிட்டு நீ உசத்தி-தாழ்த்தி என்று வகைப்படுத்தும்/பட்டியலிடும் எண்ணமும் எனக்கில்லை என்க.
இறுதியாய் சின்னக்குறிப்புக்கள் ஆசிரியர்களுக்கு…
1. ‘யோனி முலைகளற்ற பெண்ணை யாரும் காதல் செய்வாரா?’ என்று வினாவுகின்ற மைதிலியின் கவிதைத்தொகுப்பு, யோனியும் முலைகளை அடையாளப்படுத்துகின்ற முன்னட்டைப்படத்துடன் வந்திருப்பது முரண். முன்னட்டை ஆசிரியர் அங்கீகரிப்புடன் வந்திருந்தால் அவர் அதுபற்றி என்ன சொல்லவிரும்புகிறார் என்று அறிய ஆவல்.
2. ஆழியாளின் தொகுப்பில் மொழிபெயர்ப்புக்களும் இருக்கின்றன. அதை எப்படி ஆழியாள் தனது கவிதைத் தொகுப்பில் இடம்பெறச்செய்யமுடியும்? இப்படிச் செயவதால் அந்த மொழிபெயர்ப்புக்களை உங்களது கவிதைகள் எனச் சொந்தம் கொண்டாடுகின்றீர்கள் எனக்கருத இடமிருக்கிறதல்லவா?

June, 2004
………………………………………………………………………………………….
எழுதுவதற்கு உதவியவை:
-ஆழியாளின், ‘உரத்துப் பேச’
-மைதிலியின், ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்’
-சல்மாவின், ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’
-தான்யாவின், ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் நூலை முன்வைத்து’ என்ற கட்டுரை

-----------------------------------------------
நன்றி: பதிவுகள் இணையத்தளம்
(வெவ்வேறு இடங்களில் எழுதப்பட்டதை ஓரிடத்தில் சேகரிப்பதற்காய்)