Tuesday, September 26, 2006

(1)
சி.புஸ்பராஜாவுக்கான இரண்டாவது நினைவஞ்சலிக் கூட்டம் சென்ற சனிக்கிழமை மாலைப் பொழுதில் நிகழ்ந்தது. சாம் (அசை) சிவதாசன், சேரன், ‘காலம்’ செல்வம், கரிகாலன், கற்சுறா போன்றோர் தங்கள் நினைவுகளை/கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். சிவதாசன், ‘ஈழப் போராடத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலின் ஊடாக தனக்கு அறிமுகமான புஸ்பராஜாவைப் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, ‘காலம்’ செல்வம் எக்ஸில் நண்பர்களால் இறுதிக்காலத்தில் புஸ்பராஜா மாறிவிட்டார் என்று ஏதோ இலக்கிய அரசியல் குறித்து தனது பேச்சினிடையே அதிகம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். தமிழகத்தில் தினமலரில் கூட சி.புஸ்பராஜாவாவின் மரணச்செய்தி வந்தது எவ்வளவு பெரிய விடயம் என்று செல்வம் சற்று பெருமிதப்பட்டமாதிரி–எனக்கு- தோன்றியது. தினமலர் போன்றவை உண்மையான அக்கறையில் புஸ்பராஜாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா அல்லது ‘வேறு சில காரணங்களுக்காய்’ முக்கியம் கொடுக்கின்றதா என்று செல்வம் ஆறுதலாய் யோசித்துப் பார்த்தால் அவருக்கு நன்மை பயக்கும். அதேபோல் -நானறிந்தவளவில்- இதுவரை புலம்பெயர்ந்த ஈழத்தவர் என்றவகையில் கலைச்செல்வன், உமாகாந்தன் போன்றவர்கள் காலமானபோது கூட முகப்பில் அவர்களின் படங்களைப் பிரசுரிக்காத திண்ணை இணையதளம் ஏன் புஸ்பராஜாவுக்கு மட்டும் முக்கியம் கொடுத்தது என்று அவதானித்தால் ‘ஆழமான அரசியல் புள்ளிகள்’ சிலருக்கு விளங்கக்கூடும்.
செல்வத்துக்கு, எக்ஸிலின் ‘ஒன்றுமறியாய்ப் பெடியங்களோடு’ புஸ்பராஜா பிற்காலத்தில் சேர்ந்து திரிந்தது அவ்வளவாய்ப் பிடிக்கவில்லையென்றாலும், புஸ்பராஜா ஆர்வத்துடன் இப்படியொரு புத்தகத்தை எழுதியதற்கு இந்தப் புதிய நண்பர்களின் ஊக்கமே காரணம் என்ற யதார்த்தம் புரிந்ததற்காய் அவரைப் பாராட்டத்தான் வேண்டும். சேரனின் படைப்புக்களையோ இன்னபிற விடயங்களையோ விமர்சிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற ‘பலரில்’ ஒருவராய் செல்வமும் இருப்பதை அவரது உரையினூடு அவதானிக்கமுடிந்தது.. சேரனின் படைப்புக்களுக்கான இடம் என்றும் தமிழ் இலக்கியத்தில் உண்டு. அதை எவரும் மறுக்கப்போவதில்லை. ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பு தவிர்க்கவே முடியாது இருந்த கவிதைகளை இப்போதும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதன் அரசியல் ஏன் என்பதும் (எனக்குப்) புரியவில்லை. இரண்டாயிரம் ஆண்டளவில் சேரனின் கவிதைகளை தொகுப்பாய் வாசிக்கின்ற, சேரன் ஈழத்தில் கண்டதை விடவும் அதிகம் போரின் கோரத்தைச் சந்தித்த என்னைப் போன்றவர்களுக்கு சேரனின் அரசியல் கவிதைகள் பெரிதாய் எந்தப் பாதிப்பையும் தந்துவிடவில்லை என்பதே உண்மை (சேரன் 90ம் ஆண்டளவிலேயே கனடாவுக்கு இடம்பெயர்ந்தவர்). தான் பேசுகின்ற ஒவ்வொரு கூட்டத்திலும் எவரோ ஒருவரின் கவிதைகளை உதாரணம் காட்டுகின்ற ‘காலம் செல்வத்துக்கு, சேரனைத் தாண்டி இரண்டு புதிய தலைமுறைகள் வந்துவிட்டன என்பதைப் பற்றி நினைவுபடுத்தத் தேவையில்லையென நினைக்கின்றேன். மேலும் செல்வத்தைப் போன்றவர்கள் ஏன் ஈழத்தில் அ.யேசுராசா, கருணாகரன் போன்றவர்களோ புலம்பெயர் தேசத்தில் கி.பி.அரவிந்தன், அ.இரவி போன்றவர்களோ புதிய தலைமுறைப் படைப்பாளிகளை உருவாக்க ஆர்வம் காட்டுவதைப்போல சேரன் அக்கறை கொள்ளவில்லை என்பது பற்றியோ, அல்லது சு.ராவின் பாதிப்பிலிருந்து வந்தோம் என்று ஒரு புதிய தலைமுறை தமிழகத்தில் கூறுகின்றமாதிரி சேரனின் பாதிப்பிலிருந்துதான் நாங்கள் வந்தோம் என்று ஏன் இன்றைய இளைய தலைமுறை ஈழத்திலோ அல்லது புலம்பெயர் தேசத்திலோ குறிப்பிடவில்லையெனவும் தங்களுக்குள் கேள்வி எழுப்பி விடைகளைத் தேடுதலும் சாலவும் சிறந்ததாக இருக்கும்.
கரிகாலன் அந்தக்காலத்துக் கூட்டணிக்காரர் என்பதால், எனக்கு வாழ்க்கையில் பார்க்கக்கிடைக்காத- கூட்டணிக்காரரின் உரையை கேட்கமுடிந்தது. அவர் பேசப்பேச ஒரு காலத்தில் கூட்டணியில் தீவிரமாய் இயங்கிய எனது தந்தையாரும் இப்படித்தான் முந்தி இருந்திருக்க்கூடும் என்ற எண்ணம்தான் நினைவில் ஓடியது. கரிகாலன் பேசிய கருத்துக்கள் எதிலும் என்னால் உடன்படமுடியாவிட்டாலும், இயக்கங்களின் உடகொலைகள், இயக்கத் தலைமைகள் பற்றிய சில குறிப்புக்கள் என்னளவில் புதியவையாக இருந்தன. உரையின் முடிவில் உணர்ச்சிப் பெருக்கில் இந்தியா இல்லாமல் எமக்கு எதுவும் இல்லை என்று முடித்தார் பாருங்கள், அந்த இடந்தான் அற்புதம். எனது தந்தையாரும் இப்படியான நிலைப்பாட்டில் இருப்பவர் என்பதால் எனக்கு இது பெரிதாய் ஆச்சரிமளிக்கவில்லை என்றாலும், ஏதோ இந்திய அரசாங்கம் இந்த பிடி பிடி என்று எல்லாவற்றையும் கொடுப்பதுமாதிரியும் ஈழத்தில் இருப்பவர்கள் ‘உன்ரை ஒண்டும் வேண்டாம்’ என்று முகஞ்சுழித்து பின் பக்கத்தைக் காட்டி கொண்டு போவது மாதிரியும் இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதுதான் எரிச்சலூட்டுகின்ற விடயம்.
சேரன், இயக்கங்களில் இருந்தவர்கள் புஸ்பராஜாவைப் போல தங்கள் சாட்சியங்களை ஆவணப்படுத்தவேண்டும் என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார். ஆகக்குறைந்தது தாங்கள் சம்பந்தப்பட்ட இயக்கங்களின் கதைகளையாவது கோவிந்தன்,செழியன் மாதிரி எழுதவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். கற்சுறா, ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ வெளிவந்த அடுத்தடுத்த கிழமைகளிலேயே அதன் தகவற்திரிப்புகளை விளக்கி இன்னொரு புத்தகம் உமாகாந்தன், அசுரா, தேசதாசன்(?) கோவை மகேசன் (?) போன்றவர்களால் வெளியிடப்பட்டதைக் குறிப்பிட்டார் (நூலின் பெயர் இப்போது நினைவுக்கு வரவில்லை). ஏற்கன்வே முன்பு ஒரிடத்தில்குறிப்பிட்டமாதிரி, வரலாறும், உண்மைகளும் அவரவர்க்கு ஏற்ப வேறுபடத்தான் செய்யும் என்று இவ்வாறான நூல்களை வாசிக்கின்ற நாமனைவரும் சாந்தியடையவேண்டியதுதான்.
உரைகளின் முடிவில், பார்வையாளர்களாக வந்திருந்தவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள். புஸ்பராஜாவுடன், அவர் தமிழ் மாணவர் பேரவையை ஆரம்பித்தபோது அதனோடு இயங்கிய நண்பர்களின் பகிர்ந்த கருத்துக்கள் முக்கியமானவை. கடும் விமர்சனம் இருந்தாலும் வரதராஜப்பெருமாளின் குடும்பச்சூழ்நிலையை அறிகின்றபோது ஏழ்மையான குடும்பத்திலிருந்து வளர்ந்து நாட்டின் உயர் பதவியைப்பிடித்த பிரேமதாசாவை, வரதராஜப்பெருமாளுடன் மனம் ஏனோ ஒப்பிட்டுப்பார்க்கச் செய்தது. புஸ்பராஜாவாவின் சகோதரியான புஸ்பராணியும் ஈழ்ப்போராட்டத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளார் என்பதை புஸ்பராஜாவின் நூலினூடும், சிலரின் பேச்சுக்களினூடும் அறிய முடிந்தது.. காலமும் சூழலும் இயைந்து கொடுத்து புஸ்பராணியும் தனது போராட்ட கால வாழ்க்கையைப் பதிவு செய்வார் என்றால் அது ஒரு முக்கிய ஆவணமாய் இருக்கக்கூடும். பெண்ணின் பார்வையில் விரியும் சாத்தியமுள்ள அந்தச் சாட்சியம் பல விடயங்களை/பலரின் முகமூடிகளை கிழிக்க உதவவும் கூடும்.
சக்கரவர்த்தி, புஸ்பராஜாவின் நினைவஞ்சலிக்கூட்டத்துக்காய் கொடுக்கப்பட்ட பிரசுரத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட கேள்வி ஒன்றுடன் வந்தார். நினைவுக்கூட்டத்தை நடத்தியவர்கள், புஸ்பராஜா கொடுத்த தனது இறுதிச் சாட்சியத்தை நினைவஞ்சலிப் பிரசுரத்தில் பாவித்திருந்தனர். அதில், ‘… எனது நாட்டின் பேரின்வாத அரசியல்வாதிகளிடமும், எனது மண்ணுக்காய்ப் போராடுபவர்களையும், இதர குழுக்களையும் இந்த நேரத்தில் நான் இரு கரங்களையும் கூப்பிக் கேட்பது தயவு செய்து கொலைகளை நிறுத்துங்கடா..’என்று வருகிறது…. தனக்கு எல்லாம் விளங்குகிறது, ஆனால் மண்ணிற்காய் போராடுபவர்கள் யார் என்பதும் இதர குழுக்கள் என்பது யாவர் என்பது குறித்தும் யாரேனும் விளக்கம் தரமுடியுமா என்று சக்கரவர்த்தி சபையைப் பார்த்துக்கேட்டாரே பாருங்கள், ஒரு கேள்வி… பாவம் பிரசுரித்த நண்பர்கள் என்ன செய்வார்கள். புஸ்பராஜா சொன்னதைச் சொன்னமாதிரித்தானே போடமுடியும்…தங்களுக்கேற்றமாதிரி வெட்டிப் போட அவர்கள் என்ன தணிக்கைக் குழுவா வைத்திருக்கின்றார்கள்? புஸ்பராஜாவின் புத்தகம் குறித்தோ அவரது தனிப்பட்ட வாழ்வு குறித்தோ ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருக்க எங்கிருந்துதான் இப்படிப்பட்ட ‘புத்திசாலித்தனமான கேள்விகள்’ இந்தப் படைப்பாளிகளுக்கு வருகின்றதோ தெரியவில்லை. ஆனால் பிறர் மீது விமர்சனம் வைக்கின்ற சக்கரவர்த்தி, ‘வைகறை’யில் ‘காலம்’ செல்வத்துக்கு அவர் வைத்த விமர்சனத்துக்கு ‘காலம்’ செல்வம் தன்னிலை விளக்கம் தந்தபிறகும், அது குறித்து மன்னிப்போ வேறெதுவோ பேசாது அந்தவிடயத்தை -மவுனமாய்- சாதுர்யமாய்க் கடந்து போனது ஒரு ‘நடுநிலைவாதி’க்கு வேண்டிய அடிப்படைப்பண்பு என நாம் எடுத்துக்கொள்ளலாமா? என்பதை சக்கரவர்த்திதான் தெளிவுபடுத்தவேண்டும். மற்றும்படி சக்கரவர்த்தி கண்ணை மூடிக்கொண்டு -யதார்த்த சூழ்நிலைகளை மறந்து- பால்குடித்தால் கொஞ்சம் செல்லமாய் அதட்டிப்பார்ப்போம் என்பதற்காய், அவர்களின் தோழரான புஸ்பராஜாவே விகடனுக்குக் கொடுத்த பேட்டியிலிருது ஒரு பகுதியை எடுத்துத்தருகின்றேன்.
‘ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரை இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களிலிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.’
இந்த நினைவஞ்சலிக்கூட்டத்தில் தர்சனும், பா.அ.ஜயகரனும் வைத்த (எனக்கு விதிவிலக்காய்ப்பட்ட) கருத்துக்கள்தான் முக்கியமாய் இருந்தது. தர்சன், எல்லோரும் புஸ்பராஜாவின் ஒரு பக்க்கத்தை மட்டுமே கூறிக்கொண்டிருக்கின்றீர்கள், ஆனால் அவர் பதிவு செய்யாத ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் படுகொலைகள் குறித்தோ, அவர்கள் கட்டாயப்படுத்தி சிறார்களைத் தமிழ் தேசிய இராணுவத்தில் சேர்ந்த பக்கங்களையோ புஸ்பராஜா சாட்சியப்படுத்தாததை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார். முக்கியமாய் புலிகள் சிறார்களைப் படையில் சேர்க்கின்றார்கள் என்று விமர்சனம் செய்கின்ற எவரும் ஏன் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி மிகப்பலவந்தமாய் சிறார்களை சேர்த்தது குறித்து கேள்விகளோ ஆவணப்படுத்தல்களோ செய்யவில்லை என்றும், புஸ்பராஜாவின் தீராநதிப்பேட்டியில் இராணுவம் என்றால் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்யத்தான் செய்வார்கள் என்று சப்பை கொட்டியதையும் கேள்விக்குட்படுத்தி…இவ்வாறான பலவீனமான பக்கங்களையும் இணைத்துத்தான் புஸ்பராஜா அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது கவனிக்கத்தக்கது (இதையேதான் நானும் கூற விளைந்ததும் கூட). ஒரு ஆதிக்க சாதியப் பிரதியாய் இருந்தாலும் -ஒரு நண்பரின் வீட்டில் கண்டு சில அத்தியாயங்கள் மட்டுமே வாசித்து முடித்த- ‘மறைவில் ஜந்து முகங்கள்’ என்ற நாவல்(?) ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினர் செய்த கொலைகளையும்/பாலியல் வன்புணர்ச்சிகளையும் ஓரளவுக்கு ஆவணப்படுத்துகின்றது என்று நம்புகின்றேன்.
பா.அ.ஜயகரன், இந்தியாவை ஒற்றைப்படையாக கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்த கரிகாலனுக்கு நல்லதொரு பதிலை வழங்கியிருந்தார். தமிழக மக்களின் தார்மீக ஆதரவின் வலுவை விளங்கிக்கொண்டாலும் இந்திய அரசாங்கத்தின் இராஜ தந்திர விடயங்களை மறந்து பேசிக்கொண்டிருப்பது ஆபத்தானது என்றார். முக்கியமாய், இந்தியா ஏன் எல்லா இயக்கங்களுக்கும் தமிழகத்தில் பயிற்சி கொடுத்தது என்பதன் பின்னணி உண்மைகளையும், இந்தியாவினதும் றோவினதும் சாதுர்யமான காய் நகர்த்தல்கள் குறித்தும் இயக்கங்களில் இருந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்…அரசியல் சூழலின் யதார்த்தம் புரியாது எல்லாவற்றுக்கும் இந்தியா இந்தியா என்று கட்டியழுவதால் எந்தப் பிரயோசனமும் ஈழத்தமிழருக்கு வந்துவிடப் போவதில்லை என்று ஜயகரன் கூறியது கவனிக்கத்தக்க விடயம். இவ்வாறான ஒத்த கருத்து, முன்னாள் இயக்கங்களிலிருந்த -புலிகளை இன்று கடுமையாக விமர்சிக்கின்ற- தோழர்கள் பலரிடம் கூட இருப்பதைப் பல சமயங்களில் அவதானித்திருக்கின்றேன் என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். புஸ்பராஜாவும் ஈழப்போராட்டத்தில் இந்தியாவின் பங்கு குறித்து ஒரு நூலை அவரது இறுதிக் காலத்தில் எழுத விரும்பியதாக அறிகின்றேன். அவர் நேர்மையாக தனது கருத்துக்களை முன்வைத்து எழுதி அது நூலாக வெளிவந்திருப்பின் இன்று புஸ்பராஜாவைத் தலையில் வைத்துப் பாராட்டும் இந்தியா ரூடேயும், தினமலரும், பிற இந்தியத் தேசியவாதிகளும் புஸ்பராஜாவைத் தொடர்ந்து கொண்டாடியிருப்பார்களா என்பதுவும் கேள்விக்குரியது.
கரிகாலன் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு இடைக்கிடை கருத்துக்கள் கூறினாலும், ஒரு கட்டத்தில் இரண்டு தமிழ் எம்பிக்களின் கொலையில் றோ தனது கைவரிசையைக் காட்டியது என்பதை(யாவது) ஒப்புக்கொண்டார். மேலும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினரின் கொலைகள் உட்பட பிற இயக்கங்களின் பழைய சகோதர/உடகொலைகள் குறித்து கதைக்ககூடாது என்று கலந்துரையாடலில் ஒரு கருத்து வைக்கப்பட்டதை எந்தளவுக்கு -என்னளவில்-ஏற்றுக்கொள்ளமுடியுமென்று தெரியவில்லை. ஆரம்பத்தில் நடந்த கொலைகளைக் கண்டித்தும், கவனிக்காதும் விட்டதன் சாபந்தானே இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கும் படுகொலைகளுக்கு ஒரு காரணமாய் இருக்கிறது என்பதை மறுத்துவிடமுடியுமா என்ன? இந்தச் சகோதரக் கொலைகளை செய்வதற்கு ஆரம்பத்தில் தம்பிமார்களை உருவேற்றி அனுப்பிவைத்ததே கூட்டணி அண்ணர்மார்கள் என்றுதானே ‘சாட்சியமும்’ நமக்குச் சொல்கிறது.
இந்திய றோவின் ஈழத்தினுள்ளும் நீளும் கரங்கள் குறித்து அண்மையில் கூட ஒரு (மும்பாயில் நிகழ்ந்த) சம்பவத்தினூடு. அம்பலத்தப்பட்டிருக்கின்றது. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூலில் குறிப்பிடப்படுகின்ற ஒருவர், நாங்கள் ஈழத்தில் இருந்தவரை எங்கள் குடும்ப நண்பராக இருந்தவர் (புஸ்பராஜாவுடன் சேர்ந்து அவரும் ஆர்மபத்தில் தீவிரமாய் இயங்கியவர், புலிகளின் தலைமைக்கு ஆரம்ப போராட்டகாலங்களில் மிக நெருக்கமாயிருந்தவர், பிறகு இயக்கங்களின் அழித்தொழிப்பில் வெறுத்துப்போய் முற்றாக இயக்க அரசியலைவிட்டு விலகியிருந்தவர்) . அவர் ஒருமுறை (எனது சகோதரர்களிடம்) கூறிய சமபவந்தான் இப்போதும் நினைவுக்கு வருகின்றது. 83ம் ஆண்டுக் கலவரம் முடிந்தபின் ஒரு நபர் தெல்லிப்பளை-காங்கேசன்துறைப் பகுதியில் பல வருடங்களாய் தான் எங்கேயிருந்து வந்தேன் என்ற அடையாளங்களை மறைத்து வாழ்ந்து வந்திருக்கின்றார். பிறகு 87ம் ஆண்டள்வில் இந்திய இராணுவம் ஈழத்துக்கு வந்தபோது அந்த நபர் ஒரு இராணுவத்தொகுதியிற்கே தலைமை தாங்கிய அதிகாரியாக இருந்தமையைக் கண்டபோது தனக்கு வியப்பேற்பட்டதாக அந்த குடும்ப நண்பர் கூறியிருக்கின்றார். எப்படியெல்லாம் இந்திய அரசு சாமர்த்தியமாய்-பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என- ஆரம்பத்திலேயே செயற்படத்தொடங்கியிருக்கின்றது என்பதை அறிவது பெரிய கடினமான விடயமுமல்ல. ஆக, இன்னமும் ஏதோ இராஜீவ் காந்தியின் கொலையுடன் தான் இந்திய அரசுகளின் ஈழத்தமிழர் மீதான ‘உண்மையான அனுதாபம்’ அனைத்தும் ஒரேநாளில் மாறிப்போனது என்று பேச ஆரம்பிப்பவர்கள் றோவினது நெடுங்காலத் திட்டங்கள் குறித்தும், பல இயக்கங்களை ஒரே நேரத்தில் வளர்த்துவிட்ட காரணங்கள் ஆரம்பிக்கின்ற புள்ளிகளிருந்தும் விவாதிக்க ஆரம்பிப்பதே சரியாக இருக்கும். அது ஈழப்போராட்டத்துக்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்ற உண்மையான புள்ளிகளைக் கண்டடைய ஏதேனும் ஒருவிதத்தில் உதவவும்கூடும். அதே சமயம் பெரும்பான்மையான தமிழக மக்களின் தார்மீக ஆதரவை இழக்கதொடங்கிய முக்கியபுள்ளி இராஜீவ் காந்தியின் கொலையுடந்தான் ஆரம்பிக்கின்றது என்பதையும் நாமும் நேர்மையாக ஒப்புக்கொள்ளலாம்.
(2)
இவையெல்லாவற்றையும்விட எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும், உமாகாந்தன், கலைச்செல்வன், சி.புஸ்பராஜா போன்றவர்களின் மரணங்கள், இலக்கியக்கூட்டங்களில் சந்திக்கும் நண்பர்களை நாளை பார்க்கமுடியுமா என்ற சந்தேகங்களை எனக்குள் விதைத்தபடியே இருக்கிறது. அண்மையில்கூட எனக்கு மிகப்பிடித்தமான ஒரு படைப்பாளி தன் உடல் நலம் குறித்த அக்கறையில்லாது ஐரோப்பா நாடொன்றில் திரிகின்றார் என்று கேள்விப்பட்டபோது (இந்தியாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்ததாயும் அறிந்தேன்), இந்த விசருகளுக்கு துவக்கை முன்னுக்கு காட்டி உடல் நலத்தில் கவனமாய் இருங்கோடா என்று சொன்னால்தான் காதில் விழுமோ என்றுதான் யோசிக்கத் தோன்றியது. மேலும் ‘காலம்’ செல்வமாய் இருந்தாலென்ன, கற்சுறாவாய் இருந்தாலென்ன, எத்தகை விமர்சனங்கள் அவர்கள் மீது வைத்தாலும் முகங்களைச் சுழித்துத் திரும்பாது தொடர்ந்து உரையாடுவதற்கான வெளிகளைத் தருபவர்கள் என்றளவில் மேலே விமர்சிக்கப்பட்ட அனைத்து நண்பர்கள் மீதும் தனிப்பட்ட மதிப்பு எனக்குண்டு என்பதையும் குறிப்பிடவே விளைகின்றேன்.
(3)
இந்தப் பதிவுக்கு அவசியமற்றதும், என்னள்வில் அவசியமானதுமான ஒரு குறிப்பு!
இந்திய அரசு- இந்திய மக்கள் என்று பிரித்துப் பார்ப்பதை எப்படி விளங்கப்படுத்துவது, தமிழக மக்களின் உண்மையான ஈழத்தமிழர் மீதான அக்கறையை எப்படி தெளிவாக வரையறுப்பது என்று குழம்பிக்கொண்டிருந்தபோது சோபாசக்தியின் ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அதில் தமிழக மக்களைப் பற்றிக் குறிப்பிடும் விசயங்கள் மிகத் தெளிவாக இருப்பதால் அந்தப் பகுதியை நன்றியுடன் இங்கே உபயோகின்றேன்.
‘ஈழப் போராட்டத்துக்கு தமிழகத் தோழர்கள் செய்த பங்களிப்புகளும் அளப்பெரியன. அத் தோழர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக தீயில் எரிந்தார்கள். மாணவர்களும் இளைஞர்களுமாகத் திரண்டு ஈழ அகதிகளுக்குப் பெரும் உதவிகளைச் செய்தார்கள். பல தோழர்கள் ஈழப் போராட்டத்தின் நியாயங்களைப் பரப்புரை செய்வதையே தமது வாழ்நாள்ப் பணியாகக் கொண்டார்கள். பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்று ஈழத்தில் களப் போராளிகளாகவும் சில தமிழகத் தோழர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஈழப் போராட்டத்துக்கு பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்ததால் எண்ணுகணக்கற்ற தோழர்கள் சிறைக் கொட்டடிகளில் ஆண்டு கணக்காக அடைக்கப்பட்டார்கள். வாக்கு, மனம், காயம் எனச் சகலத்தையும் தமிழ்ப் போராட்டத்துக்கு ஒப்படைத்த சில தோழர்கள் சகோதரப் படுகொலைகளைத் தொடர்ந்து விரக்தியடைந்து தோழர் பாவரசுவைப் போல மனநோயாளிகளாக மாறிக் காணாமலேயே போய்விட்டார்கள். ஆக இவை எல்லாம் சேர்ந்தது தான் ஈழப்போராட்டத்தின் வரலாறு.’
குறிப்பு: மேலே கூட்டத்தில் உரையாடப்படட விடயங்கள் -குறிப்புகள் எதுவும் எடுக்காது- எனது நினைவில் இருந்தே எழுதுகின்றேன். ஏதேனும் குறிப்புகள் தவறெனச் சுட்டிக்காட்ட்படும்போது திருத்திக்கொள்ளவும், மன்னிப்புக்கேட்கவும் ஆயத்தமாகவே இருக்கின்றேன் எனக்கொள்க.

1 comment:

டிசே தமிழன் said...

1
Mathy Kandasamy says:
April 5th, 2006 at 9:23 pm edit
பல விதயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள் டீசே. நன்றி.
2
Suresh Kannan says:
April 5th, 2006 at 11:45 pm edit
DJ
Thx for this post.
3
வசந்தன் says:
April 6th, 2006 at 2:36 am edit
பதிவுக்கு நன்றி டி.சே.
இங்கு இன்னொரு விசயம் சொல்ல வேணும்.
கட்டாய ஆட்சேர்ப்புப் பற்றி புலிகள் மீது “இந்தியத் தன்மையோடு” விமர்சனம் செய்யும் எவருமே, இதையெல்லாம் ஈழத்தில் தொடக்கி வைத்ததே பெரியண்ணன் தான் என்தை உணர்ந்துகொண்டாவது மேற்கொண்டு பேசலாம். அதைவிட இரண்டு ஆட்சேர்ப்புக்குமே மிகப்பெரிய வித்தியாசமுள்ளது. புலிகளின் ஆட்சேர்ப்பையும் இந்தியாவுடன் “புரட்சி”யாளர்கள் சேர்ந்து செய்த “கட்டாய” ஆட்சேர்ப்பையும் எந்தத்தளத்திலும் வைத்து ஒப்பிடவே முடியாது. துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்டு, துப்பாக்கி முனையிலேயே பயிற்சியளிக்கப்பட்டு, துப்பாக்கி முனையிலேயே களத்து அனுப்பிக் கொல்லப்பட்டவர்களின் இரத்தத்தைத்தாண்டித்தான் எங்களுக்கு அவர்களால் அகிம்சை, ஜனநாயகம் பற்றியெல்லாம் போதிக்கப்படுகிறது.
**********************
சோபாவின் கட்டுரையை இணைப்பைத் தந்ததுக்கு நன்றி. தம்பி பற்றி மனிதர் பின்னியெடுக்கிறார்.
எனக்கு தம்பி வெளிவரமுதலே “கோழைதான் ஆயுதம் தூக்குவான்” என்று எம்மவருக்கே செவ்வி கொடுத்த சீமானைத் தலையில் தூக்கிவைத்து ஆடியபோதே எல்லாம் கிழிந்துவிட்டது. வியாபாரத்தில் இன்னொரு தங்கர் பச்சானோ என்றுதான் யோசிக்கிறேன்.
4
Kanags says:
April 6th, 2006 at 6:19 am edit
டீசே, நல்ல பதிவு. நன்றி.
வசந்தன்,
//புலிகளின் ஆட்சேர்ப்பையும் இந்தியாவுடன் “புரட்சி”யாளர்கள் சேர்ந்து செய்த “கட்டாய” ஆட்சேர்ப்பையும் எந்தத்தளத்திலும் வைத்து ஒப்பிடவே முடியாது//
சரியாகச் சொன்னீர்கள். இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு நேரத்தில் யாழில் இருந்தவன் என்ற முறையில் இந்தக் கூற்று நூறுக்கு நூறு உண்மை.
5
டிசே தமிழன் says:
April 6th, 2006 at 8:27 am edit
மதி, சுரேஷ் கண்ணன், வசந்தன், கனக்ஸ் பின்னூட்டங்களுக்கு நன்றி.
….
/அதைவிட இரண்டு ஆட்சேர்ப்புக்குமே மிகப்பெரிய வித்தியாசமுள்ளது. புலிகளின் ஆட்சேர்ப்பையும் இந்தியாவுடன் “புரட்சி”யாளர்கள் சேர்ந்து செய்த “கட்டாய” ஆட்சேர்ப்பையும் எந்தத்தளத்திலும் வைத்து ஒப்பிடவே முடியாது./
வசந்தன், கனக்ஸ்!
உங்களைப்போலவே, நானும் இந்த விடயத்தை ஈழத்தில் நேரில் இருந்து கண்டவன் என்றவகையில் நிச்சயம் வேறுபடுத்திப் பார்க்கமுடிகிறது. கட்டாய இராணுவச் சேர்ப்புக்காலத்தில் சிறுவனாய் -நான்- இருந்தபொழுதும், இந்த விடயம் எனது சகோதரர்கள்/அவர்களின் நண்பர்கள்/தெரிந்த உறவுகளில் ஏற்படுத்திய ஆழமான பாதிப்புக்களைப் பற்றி மிக விரிவான தளத்தில் எவ்வளவோ பேசலாம்.
6
karupy says:
April 7th, 2006 at 1:54 pm edit
டீசே நிகழ்சிக்குப் போன முடியாமல் போய் விட்டதே என்று மனம் வருந்தினேன். நண்பர்கள் ஏதோ புலம்பிக்கொண்டிருந்தார்கள். ஏதுவோ நடந்திருக்கின்றது என்பது மட்டும் அரசல் புரசலாகப் புரிந்து கொண்டது. ஆனால் தாங்கள் கூட்டத்தையே என் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள் நன்றி.
7
Mathy Kandasamy says:
April 7th, 2006 at 3:30 pm edit
//துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்டு, துப்பாக்கி முனையிலேயே பயிற்சியளிக்கப்பட்டு, துப்பாக்கி முனையிலேயே களத்து அனுப்பிக் கொல்லப்பட்டவர்களின் இரத்தத்தைத்தாண்டித்தான் எங்களுக்கு அவர்களால் அகிம்சை, ஜனநாயகம் பற்றியெல்லாம் போதிக்கப்படுகிறது.
//
This is news to me. I would really appreciate it, if detailed posts could be written.
(sorry no tamil font. too lazy to type in suratha. :( )
8
டிசே தமிழன் says:
April 8th, 2006 at 10:58 am edit
கறுப்பி பின்னூட்டத்துக்கு நன்றி.
வசந்தனைப் போன்ற நண்பர்கள் உங்களை வலைப்பதிவுப் பக்கம் நீண்டநாள்களாய்க் காணவில்லையே ஏன் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். நேரம் கிடைக்கும்போது வலைப்பதிவுகளில் எதையாவது எழுதலாமே.
….
மதி,கட்டாய இராணுவச்சேர்ப்பு இன்னபிற விடயங்களை எழுதலாம்(வசந்தன் எழுதக்கூடும்) என்றாலும் ஏழெட்டு வயதுகளில நேரில் கண்ட விசயங்களைவிட வேறெதுவும் பட்டும்படாமலும்தான் எங்களுக்கு அந்த வயதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றுக்கப்பால் ‘முறிந்த பனை’ நூல் சிலவிடயங்களை ஆவணப்படுத்துகின்றது என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.
9
வசந்தன் says:
April 12th, 2006 at 11:41 pm edit
கட்டாய ஆட்சேர்ப்பு, கட்டாயப் பயிற்சி, கட்டாயப்படுத்திக் களமுனை அனுப்பிக் கொல்லப்பட்டவைகளை புதுசாகச் சொல்லவில்லை.
என் கேள்வி, இவற்றுக்கெல்லாம் புரட்சிகர அமைப்பு மட்டுமே பொறுப்பென்ற மாதரி சிலர் சொல்லிக்கொள்வதுதான். ஏன் இவையனைத்துக்கும் இந்தியாவுக்கு இருக்கும் பொறுப்பை யாரும் பேசுவதில்லை?
அவர்களும் இதுபற்றித் தங்களுக்குத் தெரியாதது போலவே பாவனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எய்தவனிருக்க அம்பை நோவானேன் என்துதான்.