Tuesday, September 26, 2006

செவ்வரத்தம்பூத்தெரு

‘உன்னைப்போல் மனங்கலங்க வைக்கின்ற யுத்தகால அனுபவங்களெதுவும் எனக்கு வாய்த்திராத போதும், தடயங்களைத் தொலைத்தவளாய் மரணத்தின் விளிம்புகளில் நின்றுகொண்டு நாளைய இருப்புக்குறித்த எந்தவித எதிர்பார்ப்புக்களுமில்லாமற்போன கணங்களைக் கடந்தவள்தான், நானும். இனம்புரியாத பயங்களால் நிரம்பித் தளும்பிக் கொண்டிருக்கும் மனதோடு தொடர்ந்தும் வாழ்வது எங்ஙனம் சாத்தியம்.. வாழ்வு இத்தனை வெறுப்பிற்குரியதா.. என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றுகின்றபோது …’
(பழைய கடிதமொன்றிலிருந்து…)

பிணியும் சோர்வும்
வேண்டாவெறுப்பாய் புணர்ந்து
ஆஸ்த்மா ஒரு அவதியாய் உடலில்
இறங்கிக்கொண்டிருக்கையில்
ரீவியில் கசியும் பாடல்களின்
தனிமை நிரப்பி
சுவடுகளைப் பதிக்கத் தொடங்குகின்றேன்
செவ்வரத்தம்பூக்கள் நிறைந்தவுனது தெருவில
உதிர்ந்து கிடக்கும்
பூக்களைப் பொறுக்கும் சிறுமிகளின்
ரிபன்களிலிருந்து படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
அமர்ந்துகொள்கின்றன
ஆற்றினுள் வனமாய் கூந்தலை விரித்த
தேவதைகளின் விழிகளில
பிதுர்த்தோதும் பிக்குகள்
இரத்தத்தைக் குவளைகளில் நிரப்பி
படைப்பதைச் சகிக்காது
விகாரைவிட்டு நீங்கும் புத்தர்
பின்னவிகிதத்தில் மிளிரும்
உன்வீட்டுக்கு தானும் வரலாமா என்கிறார
உலகமுருளும் வேகத்தில்
உதைத்துத் துரத்தப்பட்டு
தெருவோரவாசியான பெரியார்
பழைய நண்பர் புத்தருடன்
இணைந்து நடக்க
வெசாக் விளக்குகளை
எரித்தபடி வரும் சிறார்களின்
ஆடல்களிலும் பாடல்களிலும்
நெகிழ்ச்சியுறும்
அவ் மாலைப்பொழுத
திரும்பவும்
விகாரைக்குப்போகப் பிரியப்படா புத்தருக்கு
மிதிவெடியில்
ஒற்றைக்காலிழந்த ஊர்வைரவர்
புகலிடம் கொடுத்து
ஆடிய களைப்பை நீக்க அழைத்துச் செல்கிறார்
கள்ளுக்கொட்டிலுக்க
நதியாகவும் பனிவெளியாகவும்
தகிக்கும் பாலைவனமாயும்
விரிந்து வித்தைகாட்டும்
நம் உடல்கள்
எழுதத்தொடங்கும்
காவியத்தின் முடிவை
சுற்றி வளைக்கும் துப்பாக்கிகளுக்கு
காணிக்கையாக்கி
மீண்டும் நுழைகின்றோம்
நமக்கான சவப்பெட்டிகளுக்குள்.

2006.05.03

1 comment:

இளங்கோ-டிசே said...

1
Flying_dragon says:
May 3rd, 2006 at 1:25 pm edit
இந்த முறை வைரவரும் சேர்ந்துட்டாரா? :-)
2
டிசே தமிழன் says:
May 3rd, 2006 at 4:24 pm edit
வைரவர், தன்னுடைய வாகனமாயிருக்க எனக்கு அனுமதி தந்ததனால்… :-)
3
yaro says:
May 3rd, 2006 at 5:02 pm edit
என்ன அடிக்கடி அழிசு அழிச்சு திருப்பி போடுறீங்களோ?……
4
கானா பிரபா says:
May 3rd, 2006 at 6:04 pm edit
டி ச
நல்ல கவிதை, முகப்புக் கடிதம் அதனைச் சிறப்பாக அணிசெய்கின்றது.
வாழ்துக்கள்.
ஒரு சந்தேகம், முன்னைப்போல உங்களின் வேடிக்கை, வினோத மற்றும் குறும்புப் படைப்புக்களைக்காணோமே? என்ன பிரச்சனை?
உங்கட பழையகால (?) வாலிபப்படைப்புக்களை இன்னும் தாங்கோவன்.
5
சின்னக்குட்டி says:
May 3rd, 2006 at 7:36 pm edit
நல்லாயிருக்கு…வாழ்த்துக்கள்…
6
கார்திக்வேலு says:
May 3rd, 2006 at 8:15 pm edit
நல்ல கவிதை
7
டிசே தமிழன் says:
May 4th, 2006 at 8:07 am edit
யாரோ, பிரபா, சின்னக்குட்டி மற்றும் கார்திக்வேலு…. உங்கள் பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
…..
/என்ன அடிக்கடி அழிச்சு அழிச்சு திருப்பி போடுறீங்களோ?/
‘யாரோ’, படித்துக்கொண்டிருந்த முன்னொருகாலத்திலை இலத்திரனியல் பாடங்கள் எடுக்கும்போது டைனமிக்ஸ் (dynamics) என்று ஒரு பகுதியை பாடத்திட்டத்தில் புகுத்தி என்னை இரத்தக்கண்ணீர் அடிக்கடி விடச்செய்வார்கள்…அந்த ‘இன்பத்தை’ உங்களைப்போன்ற வலைப்பதிவு நண்பர்களிடமும் பகிர வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்காதா என்ன?
….
/ஒரு சந்தேகம், முன்னைப்போல உங்களின் வேடிக்கை, வினோத மற்றும் குறும்புப் படைப்புக்களைக்காணோமே? என்ன பிரச்சனை?
உங்கட பழையகால (?) வாலிபப்படைப்புக்களை இன்னும் தாங்கோவன். /
பிரபா, எல்லாம்…. எதிர்கால ‘இடியப்ப உரல்’ பீதியில் முன்னெச்சரிக்கையாய் அடக்கிவாசிக்கின்றேன் என்க :-). நேரங்கிடைக்கும்போது சில ‘அனுபவங்களை’ எழுத முயற்சிக்கின்றேன். நன்றி.