Thursday, September 21, 2006

ஆழியாள் X சல்மா X மைதிலி

Wednesday, July 19th, 2006 at 10:31 am

ஆழியாள், சல்மா, மைதிலி போன்றவர்களின் கவிதைகளை (தொகுப்புக்களை) ஒரே நேரத்தில் வாசிக்கும்போது, அவர்கள் தங்களுக்கான மொழியில் (பெண்மொழியா?) தமது ஆளுமைகளுடன் கவிதைகளை தந்திருக்கின்றனர் என்று புரிகிறது. முக்கியமாய், எந்த ஆண் கவிஞர்களின் பாதிப்பு அதிகமின்றியும், தமக்கான சுயத்துடன், தமது மொழியில் சொல்லவேண்டும் என்ற பிரக்ஞையுடனும் எழுதியிருக்கின்றார்கள். இவர்களுக்கான உலகில் தனிமை மிகவும் நிரம்பியிருப்பதாய் அநேக கவிதைகள் சொல்கின்றன. மற்றும், பாலியல் உறவு என்பது மிகப்பிரமிக்கத்தக்கதாய் நமது ஆண் கவிஞர்களும், கதைஞர்களும் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கையில் அதை வேறொரு கோணத்தில் வலிகளுடன், வடுக்களுடனும் இவர்களது படைப்புக்கள் பேசுகின்றன. சல்மாவின் ‘இரண்டாம் ஜாமத்துக்கவிதை’ பேசும் பாடுபொருளை, மைதிலியின், ‘என்னுள்ளே’ என்று 89களிலே எழுதப்பட்டுள்ள கவிதையும் பேசுகிறது.
சல்மா,
‘சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுபார்த்துக்கொண்டிருந்தது’
என்று எழுதிப்போக…
மைதிலியோ,
‘தோட்டாக்கள் நிறைந்த
துப்பாக்கி விசையில்
பதிந்த விரல்
வன்மம் நிறைந்த கண்களுடன்
ஒரு சிறுத்தை…
பாய்தலிற்கு முந்திய தோற்றம்
இவையனைத்தையும் கண்காணித்தபடி
ஒரு பிணந்தின்னிக் கழுகு’
என்று ஒரு உறவொன்று நிகழ்வதற்கு முன்னும் பின்னுமான பொழுதுகளை இவ்விரு கவிதைகளும் மிகுந்த பீதியுடன் பதிவு செய்கின்றன.
இதைவிட இன்னும் உக்கிரமாய் ஆழியாளின் கவிதை…,
‘அழகிய மன்னம்பெரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என…’
சொல்லி,
‘…அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்துகொண்டேன்’
என்று எழுதிச் செல்கிறார். அதிலும், ‘அதே அதே’ என்று திருப்பித் திருப்பி எழுதப்படும் வார்த்தைகள் தரும் பொருள் ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டியது.
இதேபோல மைதிலியின் இன்னொரு கவிதையில்,
‘கனமிக்க கைப்பிடியில்
நொறுங்குகிறது உடல்
வியர்வை பொங்கி வழிய
அழுத்தல்
வருத்தல்
முத்தமிடல் கூட ஆவேசமாய்
அவன் தனது பேனாவால்
தாள்களில் கிறுக்குவதுபோல
தனக்குரிய சீப்பால்
தலையை அழுத்தி வாரிக்கொள்வது போல
தாடி சீவுகிற சவரக் கத்தியை
கவனமாய்க் கையாள்வதைப் போல
எல்லாம் முடிந்து அமைதியாய் தூங்குகிறான் அருகே
என் இத்தகைய நாளைய
காதலும் கனிவும்
இதந்தரு மென்னுணர்வுகளும்
பொங்கியெழுந்த குறியின்முன்
ஒழுகிக் கிடக்கிறது
கட்டிலின் கீழே’
என்ற இந்தக்கவிதை உட்பட அநேக பெண்கவிஞர்களின் கவிதைகள் பாலியல் உறவை மிகுந்த வலியுடனும், விலத்தியிருந்தும் பதிவு செய்கிறன. அதிலும் முக்கியமாய், உறவு கொள்ளும் ஆண் தனக்குரிய நிறைவை, சந்தோசத்தை அடைகின்றவனாய் சித்தரிக்கப்படுவதும்,பெண் உறவில் முழுமையடையாது தவிப்பதாய் சித்தரிக்கப்படுவதும் கவனிக்கப்படவேண்டியது.
நான் வாசித்த, பாலியல் உறவுகள் பற்றி ஆண்வயப்படுத்தப்பட்ட எல்லாக் கவிதைகளும் பாலியல் உறவின் நிறைவைக் கொண்டாடுகின்றவையாகத்தான் இருக்கின்றனவே தவிர, எதிர்ப்பாலின் உணர்வுகளை அக்கறையுடன் அவதானிப்பதாயோ, அங்கென்ன நிகழ்ந்திருக்கக்கூடும் என்று கவலைப்படுவதாயோ இருந்ததாய் நினைவினில்லை. சற்று விதிவிலக்காக ஒரு பெண்ணின் மனநிலையில் எழுதப்பட்ட, றஷ்மியின், ‘பத்தாவதும் ஈற்றாவதுமான முத்தம்’ என்ற கவிதை இன்னும் அபத்தமாய் எழுதப்பட்டிருக்கிறது.
சல்மாவின் அதிகம் வாசிக்கப்பட்டதும் சர்ச்சிக்கப்படுவதுமான, ‘ஒப்பந்தம்’ கவிதையில்
‘உன்னிடமிருந்து/கலங்கலானதே எனினும்/ சிறிது அன்பைப் பெற’ என்னவெல்லாம் செய்யத்தயாராகின்றேன் என்ற கவிதை தரும் அதிர்விற்கு நிகராய், ஆழியாளின் ‘நிலுவை’ கவிதை வித்தியாசமான உணர்வைத் தருகிறது. ஓர் உறவை முறித்து, எல்லாவற்றையும் திருப்பித் தருகின்ற ஒரு காதலனிடம், நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி ஓர் காதல்துணை சொல்கிறார்…
‘உன் முகட்டில் சுவடாய்ப்
பதித்த
என் காட்டு ரோஜா உணர்வுகளையும்,
அள்ளியள்ளித் தெளித்து
பூப் பூவாய்ப் பரவிய
திவலைக் குளிர்ச்சியையும்
எப்படி மறுதலிப்பாய்?
எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்?
என்று கேட்டுவிட்டு,
கடிதத்திலா?
காகிதப்பொட்டலத்திலா?
இதில் நான்
உனக்கிட்ட உதட்டு முத்தங்களையோ
நீ எனக்குள் செலுத்திய
ஆயிரத்தெட்டுக் கோடி விந்தணுக்களையோ
நான் கணக்கில் எடுத்துச்
சேர்க்கவில்லை என்பது
மட்டும்
நமக்குள்
ஒரு புறமாகவே இருக்கட்டும்’.
என்று முடிகிறது. இவையெல்லாம் ஓர் அதிர்ச்சிக்காய் எழுதப்பட்டிருக்கும் என்று எழுதும் அறிவுஜீவிகளை விடுத்துவிட்டு பார்த்தால் கூட, இப்படி எந்த ஆண் கவிஞராலும் எழுத முடியுமா என்பது சந்தேகமே (நாளை வாறவா என்னைப் பற்றி என்ன நினைப்பா என்ற நினைப்பு இருக்கும்; இல்லாவிட்டால், ‘என் மனைவிக்கு’ என்று நன்றி அல்லது சமர்ப்பணம் செய்யும் மனதிற்குக் களங்கம் செய்துவிடும் அபாயம் இருக்கும் என்று தவிர்த்துவிடத்தான் செய்வர்).
சல்மாவின் தனிமை பற்றிய கவிதைகள் ஆழ்ந்த வாசிப்புக்குட்படுத்தக்கூடியன (இதைப் பலபேர் பலதடவைகளில் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்).
புறக்கணிப்பு
கூடு தேடிச் செல்லும்
பறவைக் கூட்டம்
பொருட்படுத்துவதேயில்லை
எனது வீட்டுத் தோட்டதின்
ஒற்றை மரத்தினை
என்கின்ற சாதாரண வார்த்தைகளைக் கொண்டமைந்த இந்தச் சிறுகவிதைகூட தனிமை பற்றிய உணர்வை இலகுவில் நம்மில் ஏற்றிவிடுகிறது.
அதே போல், மைதிலியின் கவிதையொன்று,
இப்போது எஞ்சியிருப்பது
களைப்படைந்த முகம்
குறிதேடியலையும் கண்களால்
சலிப்படைந்துபோன
சிறுமென் இதயம்
யோனி முலைகளற்ற பெண்ணை
யாரும் காதல் செய்வாரா?…”
என்று காயப்பட்டு தனிமையிலிருக்கும் பெண்ணொருத்தியின் தனிமையையும் பிரியத்தையும் நேரடியாய் வினாவுகிறது.
நமக்கு (ஆண்களுக்கு) பெண்களின் முலைகள் வைன்கோப்பைகளையும், நீலோற்பல அரும்புகளையும் மட்டுந்தான் நினைவு படுத்துகிறன, ஆனால் அவற்றிற்கு சொந்தமான பெண்களுக்கோ, அவை பலவேறுவிதமான வலிகளையும், இடையூறுகளையும் இன்னமும் நினைவுபடுத்தியபடி இருக்கின்றன என்பதைத்தான் இந்தப் பெண்கவிஞர்களின் கவிதைகள் அடையாளங்காட்ட முயல்கின்றன.
ஆழியாளின், ‘விடுதலையின் பெயரால்’ கவிதை ஒரு Programming languageல் எழுதப்பட்ட (if, if not) வித்தியாசமான முயற்சி. அதிலும் இறுதியாய் மனிதனைவிட நாய் பல்வேறுவழிகளில் சிறத்தது என்று கூறிவிட்டு,
‘Expected Output
ஆகவே மனிதனை மனிதன் என்றே
ஏசிப் பழகுங்கள்
ஏசுங்கள் - நம் வன்முறையின் பெயரால்.’
என்று ஒருவித நையாண்டியுடனும் இயலாமையுடனும் முடிகிறது.
இந்த மூன்று பேரினதும் தொகுப்புக்களை வாசித்தபோது, தனித்தனி கவிதையாக வாசித்தபோது, இருந்த பல கவிதைகளின் உக்கிரம் தொகுப்பாய் வாசிக்கும்போது குறைந்ததுமாதிரி தெரிந்தது. அது முழுத்தொகுப்பாய் கவிதைகள் வருவதன் பலவீனமாய் இருக்கக்கூடும். சல்மாவின், ‘ஒப்பந்தம்’, இரண்டாம் ஜாமத்துக் கதை’, ‘நம் உறவைப் பற்றிச் சில குறிப்புக்கள்’ கவிதைகளும் ஆழியாளின், ‘நிலுவை’, ‘தடை தாண்டி’, ‘மன்னம்பேரிகள்’, ‘விடுதலையின் பெயரால்’ போன்றவைகளும், மைதிலியின் ‘பொருள்’, ‘மாலை’, ‘அது உண்மைதான்’ போன்ற கவிதைகளும் அவர்களின் தொகுப்பில் மிகமுக்கியமான கவிதைகளாகும்.
மேலே இந்தக்கவிஞர்களின் ஒத்த பாடுபொருளுடைய கவிதைகள் இங்கே கவனப்படுத்தப்பட்டதே தவிர, அந்தந்தக் கவிஞர்கள் அவரவர்களுக்குரிய தனித்துவங்களுடனும், பின்னணிச் சூழல்களுடனும் கவிதைகள் எழுதியிருக்கின்றார்கள் என்பதுவும், ஒருத்தரை மற்றவருடன் ஒப்பிட்டு நீ உசத்தி-தாழ்த்தி என்று வகைப்படுத்தும்/பட்டியலிடும் எண்ணமும் எனக்கில்லை என்க.
இறுதியாய் சின்னக்குறிப்புக்கள் ஆசிரியர்களுக்கு…
1. ‘யோனி முலைகளற்ற பெண்ணை யாரும் காதல் செய்வாரா?’ என்று வினாவுகின்ற மைதிலியின் கவிதைத்தொகுப்பு, யோனியும் முலைகளை அடையாளப்படுத்துகின்ற முன்னட்டைப்படத்துடன் வந்திருப்பது முரண். முன்னட்டை ஆசிரியர் அங்கீகரிப்புடன் வந்திருந்தால் அவர் அதுபற்றி என்ன சொல்லவிரும்புகிறார் என்று அறிய ஆவல்.
2. ஆழியாளின் தொகுப்பில் மொழிபெயர்ப்புக்களும் இருக்கின்றன. அதை எப்படி ஆழியாள் தனது கவிதைத் தொகுப்பில் இடம்பெறச்செய்யமுடியும்? இப்படிச் செயவதால் அந்த மொழிபெயர்ப்புக்களை உங்களது கவிதைகள் எனச் சொந்தம் கொண்டாடுகின்றீர்கள் எனக்கருத இடமிருக்கிறதல்லவா?

June, 2004
………………………………………………………………………………………….
எழுதுவதற்கு உதவியவை:
-ஆழியாளின், ‘உரத்துப் பேச’
-மைதிலியின், ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்’
-சல்மாவின், ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’
-தான்யாவின், ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் நூலை முன்வைத்து’ என்ற கட்டுரை

-----------------------------------------------
நன்றி: பதிவுகள் இணையத்தளம்
(வெவ்வேறு இடங்களில் எழுதப்பட்டதை ஓரிடத்தில் சேகரிப்பதற்காய்)

2 comments:

இளங்கோ-டிசே said...

15 Responses to “ஆழியாள் X சல்மா X மைதிலி”

1
KARTHIRAMAS says:
July 19th, 2006 at 10:59 am
// பாலியல் உறவு என்பது மிகப்பிரமிக்கத்தக்கதாய் நமது ஆண்கவிஞர்களும், கதைஞர்களும் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கையில் அதை வேறொரு கோணத்தில் வலிகளுடன், வடுக்களுடனும் இவர்களது படைப்புக்கள் பேசுகின்றன.//
முக்கியமான கருத்தை குறித்ததற்கு நன்றி.

2
டிசே தமிழன் says:
July 19th, 2006 at 1:35 pm
கார்த்திக், நீங்கள் இப்ப கொஞ்சம் கூலாகிவிட்டதுபோலத் தெரிகிறது :-)
…..
இந்தப் பதிவோடு தொடர்பில்லாதுவிட்டாலும், வாசிக்கவேண்டிய பகுதி ஒன்று இங்கே.

3
Chandravathanaa says:
July 19th, 2006 at 4:41 pm
நல்ல பார்வை

4
டிசே தமிழன் says:
July 20th, 2006 at 12:58 am
நன்றி சந்திரவதனா.

5
கார்திக்வேலு says:
July 23rd, 2006 at 2:31 am
நல்ல பதிவு டிசே
“பெண்மொழி” என்று தனியாக அடையாளப்படுத்திக் கொள்வது
ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது.அதை எப்படி கையாள்வது என்பது பெண்களிடமே விடப்பட வேண்டும்…அதை எப்போது
எப்படிக் கடந்து வரவேண்டும் என்பதும் அவர்கள் சுய முடிவாகவே
இருத்தல் தான் சரி (தலித் எழுத்துக்கும் இது பொருந்தும்).
பெண்கள் பற்றிய மதிப்பீடுகளை பெண்களே கட்டமைப்பதற்கும்
இது வரை ஆண்கள் பெண்களை பற்றி அமைத்து வந்த மதிப்பீடுகளுக்கும்
நிறைய வித்தியாசம் உண்டு.
சில நிகழ்வுகளை பெண்களால் ஆண்களைவிட இயல்பாக வெளிப்படுத்த
முடியலாம்.
பல பெண்கவிஞர்கள் உடல்மொழியை ஒரு வலுவான கருவியாகப் பயன்படுத்துவதாகச் சொல்கின்றனர்.All the hype is how the society / men react to such writing , this reaction in itself is the tool they are in search of.


6
டிசே தமிழன் says:
July 23rd, 2006 at 11:32 pm edit
பின்னூட்டத்துக்கு நன்றி கார்த்திக்வேலு.
…..
/பெண்கள் பற்றிய மதிப்பீடுகளை பெண்களே கட்டமைப்பதற்கும்
இது வரை ஆண்கள் பெண்களை பற்றி அமைத்து வந்த மதிப்பீடுகளுக்கும்
நிறைய வித்தியாசம் உண்டு/
உண்மைதான். ஆனால் இத்தனை காலமும் ஆண்கள் பாலியல் உறவுகளையும், காமத்தையும் எழுதிக்கொண்டிருந்தபோது எந்தக்கேள்வியும் கேட்காத நம் இலக்கியவாதிகள்/இன்ன பிறர், இப்போது பெண்கள் இவற்றையெல்லாம் எழுத/கேள்வி கேட்க ஆரம்பிக்கும்போது மட்டும், சமூகத்தில் மகாபாதகம் நடந்துவிட்டதாய் குதித்துக்கொண்டிருப்பதுதான் முரண்நகை.

7
கார்திக்வேலு says:
July 24th, 2006 at 12:01 am edit
அதே சமயம் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.”உடல்மொழி” ஒரு கவன ஈர்ப்பாகவே, ஒரு தனிப்பட்ட அடையாளத்திற்காகவோ , அங்கீகாரத்திற்காகவோ பயன்படுத்தப்பட்டு இலக்கின்றிப் போய்விடக் கூடாது.
இறுதியில் பார்க்கப்போகையில் எல்லா படைப்பும்
நல்ல கவிதை , சுமாரான கவிதை , மோசமான கவிதை என்றே வகைக்கப்படும்.
[என் கருத்தில் “நல்ல கவிதை” என்பதை மட்டும் நாம் வரையறுத்து அங்கீகரித்தால் போதும் …. நல்ல கவிஞன் என்பது தானாகப் பின்னால் உணரப்படும்]

8
shankar pratap says:
July 24th, 2006 at 12:19 pm edit
[Sorry for posting in English, Will definately learn to type in tamil for the next comment but please let me record my views in English this time.]
I was so deeply hurt by the hypocracy in these poems and the way they can mislead young men. They try to create a impression that what all women want in is love, care, tenderness and all such poetic stuffs from men.
A young boy who tries to understand women through these poems will have to face rude realities once he encounter real women, and what they need out of a relationship.
First of all, There is no dearth of love, care and understanding from men, You engage with less aggressive,poetic men you will get it.
But being driven by deeply rooted mating-instincts, women tend to engage in relationship with succesful,powerfull,intelligent,fit males, they are tempted and pushed by nature to choose such successful,fit men over the so called soft types.
The successful alfa male is ‘mostly’ aggressive, or intelligent, and he is aware that he is an alfa male and has his potential mates waiting in line. What do we expect here to happen…?
9
கார்திக்வேலு says:
July 25th, 2006 at 8:29 am edit
Shankar ,
What u are highlighting is a “relationship” and issue and as above we have dealt with this only from the angle of freedom of “expression”.
“Mate selection” patterns might be true as per the biological theories ,but that does not exclude the emotional compatability factor in any relationship , and in no way the writers themselves represent any sizeable sampling of female population nor is there any empirical or scientific reasoning to their views.
(Also how many women in India society have an option to select their partner in the true sense ?)
Young men reading this are affected as much as they are affected by the provocative female representation in other forms of media esp movies.
COming to such poems , though some of them might feel plastic and rhetoric ..it should be allowed to evolve and if its good it will stand the test of time.
It is just a matter of women writers exploring areas and creating a language which “they” feel is unique and representative voice of women.

10
டிசே தமிழன் says:
July 25th, 2006 at 8:34 am edit
பின்னூட்டத்துக்கு நன்றி சங்கர் பிரதாப்,
…..
இவ்வாறான கவிதைகளை எழுதும் பெண்களால்தான் இளைய சமுதாயம் கெடுகின்றது என்று நீங்கள் கூறுவதை எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வது என்றும் தெரியவில்லை. இந்தப்பெண் படைப்பாளிகளின் மூலம் வருவது சாதாரண கிளுகிளுப்பு விசயங்கள் அன்றி அவர்களது வலிகளும் வேதனைகளும் என்பது ஒருபுறமிருக்க, தீவிரமாய் எழுதிக்கொண்டிருப்பதே விரல் விட்டு எண்ணக்கூடிய -இந்தப்பெண்களின்- மூலம், இளஞ்சமுதாயம் பாதிக்கப்படும் என்பது எந்தளவு யதார்த்தம் என்பதும் தெரியவில்லை. காலங் காலமாய் பெண்களைச் சினிமாப் பாடல்களில் சித்தரிக்கப்படுவதை பார்த்தபடியும்….., வெளியிடப்படும் ஆண்களின் காதற்பிரிவுக்கவிதைகளில் பெண்களைத் திட்டி திட்டி எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் செய்தும்….. அதைத்தாண்டியும், இளஞ்சமூதாயம் பெண்களை புரிந்துகொள்ள முயல்கின்றதுதானே. எனவே உங்கள் வாதப்படி இந்தக்கவிதைகள் கிப்போகிரசியாக இருந்தாலும், எதை எடுக்கவேண்டும்/விலத்தவேண்டும் என்று புரிந்துகொள்ளகூடிய இளந்தலைமுறை என்றும் இருக்கும் என்றே நம்புகின்றேன். எனவே இந்தப்பெண்களை அவர்களின்பாட்டில் எழுதவிடுவோம். கார்த்திக் வேலு சொன்னமாதிரி -‘இறுதியில் பார்க்கப்போகையில் எல்லா படைப்பும் நல்ல கவிதை , சுமாரான கவிதை , மோசமான கவிதை என்றே வகைக்கப்படும்.’-. எனவே தரமான கவிதை/தரமற்ற கவிதை என்று அவற்றை விமர்சிப்போம்; அதில் எந்தப் பிழையுமில்லை. எழுதுகின்ற பெண்களும் காது கொடுத்து இவ்வாறான விமர்சனங்களை கேட்டுக்கொள்வார்கள் என்றே நானும் ந்மபுகின்றேன்.
…..
மற்றும்படி நீங்கள் கூறுகின்றமாதிரி, உறவுகள் பற்றி எழுதப்பட்ட பெண்களின் அநேக கவிதைகளில் ஏன் ஒருவித நம்பிக்கையின்மையும், துயரமும் படிந்து கிடக்கிறது என்று நானும் நினைப்பதுண்டு. ஒவ்வொருதரும் அவரவர் அளவில் தனித்துவமானவர்களே. ஆண்களில் பலருக்கு காதலும் காமமும் மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் கொடுப்பதை வாசித்து இயல்பாய் ஏற்றுக்கொள்வதைப் போல, சில பெண்களுக்கு உறவுகள் சோகத்தையும் நம்பிக்கையீனத்தையும் கொடுக்கிறதென்றால் அதையும் ஏற்றுக்கொண்டு வாசிப்பதில் எனக்கு எந்த மனத்தடையுமிருந்ததில்லை.
…….
மேலே எழுதியதெல்லாம் முடிந்த முடிவுகள் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டதுமல்ல. என்னளவில் இவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது, அவ்வளவே. நன்றி.

11
டிசே தமிழன் says:
July 25th, 2006 at 8:44 am edit
Shakar,
While I was writing a reply to your comment, Karthik Velu posted one of his too. I mostly agree with Karthik Velu’s points. Hope you won’t mind, bec few of my points are overlapping with Karthik Velu’s points too.

12
shankar pratap says:
July 28th, 2006 at 7:17 am edit
Young men reading this are affected as much as they are affected by the provocative female representation in other forms of media esp movies.
I agree with you on this, For me the effect of these poems are just the negation of what effects created by a provocative female representation in movies.
Meaning the movies tend to portray females as mind-less bodies, and these poems portray females as body-less minds. truth lies somewhere between.
I totaly agree on your and DJ’s view on freedom of expression, These poems are good starting points and i hope one day there will be poems that celebrate sex in a positive AND truthful way.
Ripping off the rich vocabulary with which these poems are composed, Don’t you think these poems are similer to T.Rajendhar’s anti-women dialogues, Just that it is anti-men here…?
Dear DJ,
Let me officially record my admiration for your blog first of all. I am one of those many silent visitors who never post.
சொன்னமாதிரி -‘இறுதியில் பார்க்கப்போகையில் எல்லா படைப்பும் நல்ல கவிதை , சுமாரான கவிதை , மோசமான கவிதை என்றே வகைக்கப்படும்.’-. எனவே தரமான கவிதை/தரமற்ற கவிதை என்று அவற்றை விமர்சிப்போம
In total agreement with you on this.
ஆண்களில் பலருக்கு காதலும் காமமும் மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் கொடுப்பதை வாசித்து இயல்பாய் ஏற்றுக்கொள்வதைப் போல, சில பெண்களுக்கு உறவுகள் சோகத்தையும் நம்பிக்கையீனத்தையும் கொடுக்கிறதென்றால் அதையும் ஏற்றுக்கொண்டு வாசிப்பதில் எனக்கு எந்த மனத்தடையுமிருந்ததில்லை.
Very true, I should start reading poems as just poems, Disassociating the subject from it. This comes naturally to you because you are a poet your self, For stupid-consumer-of-poetry like me , i think it takes a lot of effort, But guess i will reach there one day.
Thanks for reading my comment and your reply.
-Shankar Pratap

13
டிசே தமிழன் says:
July 31st, 2006 at 11:57 pm edit
ஷங்கர் நன்றி.

14
செந்தழல் ரவி says:
August 1st, 2006 at 12:59 am edit
///கூடு தேடிச் செல்லும்
பறவைக் கூட்டம்
பொருட்படுத்துவதேயில்லை
எனது வீட்டுத் தோட்டதின்
ஒற்றை மரத்தினை///
இதை (மட்டும்) ரசித்தேன்…

15
டிசே தமிழன் says:
August 4th, 2006 at 7:37 pm edit
வருகைக்கு நன்றி இரவி.

Anonymous said...

புணரும் மிருகமாய் நீ

அந்த நிமிடங்களில் நீ
நீயாக இருக்கவில்லை
உன்னுள் இருந்த மதுபோதை
ஒருபுறம் காமப் பசி மறுபுறம்
இரண்டின் வெளிப்பாட்டில்
நீ புணரும் மிருகமானாய்
காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்கு கசிய மறுத்தது
உன் விடாப்படியான போராட்டதினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண்குறி
ஒன்று...இரண்டு....மூன்று என
என் யோனித் துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலை விட மனது வலித்தது
உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது
வழமையின் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக் காற்றின்
மது நெடி சாட்டையடித்தது...
எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனதில் நிழலாடியது
இதைத்தானா
"பெண் பொறுப்பதற்கு
பிறந்தவள்" என்றாய் அம்மா?
உன் உயிரின் கடைசிச் சொட்டு
பலம் வரை பொறுத்திருந்தேன்
அப்பாடா..
உன் நீர் கசிந்து
நீ மனிதனாய்
என்ன உணர்ந்தாயோ
"பசிக்குதா?" என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின்
குரல் தழும்ப
"வலிக்குது" என்றேன்
எந்தப் பதற்றமும் இல்லாமல்
"ஸாரிடா செல்லம்" என்றாய்...
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர்த்துளிகள்
மெளனமாய் வழிந்தன...
சில நிமிட மெளனங்கள்...
எங்கே என் தலை கோதி
என்னை வருடிக் கொடுப்பாயோ
என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது...
உன் தாகம்
உன் தேவை- தீர்ந்ததால்
உனக்கு உறக்கம்
என் வலி
என் அழுகை-ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன்.

-மாதுமை சிவசுப்ரமணியம்

உடலியல், காமம் குறித்துப் பெண்கள் பேசும் போது, அவை பெரும்பாலும் எத்தகைய வலிகளையும், மனக் குமுறல்களையும் கொண்டிருந்தாலும், 'கிளுகிளுப்பு'களுக்காக சர்ச்சைக்குள்ளாக்கப்படுகின்றன

காலச்சுவடு இதழ் நடத்திய பெண்கவிஞர்களுக்கான போட்டியில் பரிசுபெற்ற கவிதை இது. மாதுமை சிவசுப்ரமணியம் எழுதிய இக்கவிதையில் பாலியல் நிகழ்வுகளைத் தாண்டிய வலியினை உணர முடிகிறது.

இந்த கவிதையும் அழகாக விமர்சிக்கின்றதல்லவா...எனது பாடசாலை சேர்ந்த அக்காவின் கவிதை இது..திருகோணமலை சேர்ந்த இந்த எழுத்தாளரையும் விமர்சிக்க தோன்றுகிறது