Tuesday, September 26, 2006

‘உயிர்ப்பு' அரங்கப்பட்டறையின் மூன்று நாடகங்கள்

‘உயிர்ப்பு’ அரங்கப்பட்டறை மூன்று நாடகங்களைக் கடந்த சனிக்கிழமை யோர்க்வூட் நூலகத்தில் அரங்கேற்றியிருந்தது. அரங்கேற்றப்பட்ட ‘மீறல்களின் கடைசி யாத்திரை’, ‘விளையாட்டு’, ‘அதன் வருகைக்காய்’ ஆகிய மூன்று நாடகங்களையும் சுமதி ரூபன் என்ற படைப்பாளியே நெறியாள்கை செய்திருந்தார். முதலாவது நாடகமான ‘மீறல்களின் கடைசி யாத்திரை’யில், சமுகத்தால் ஒடுக்கப்பட்டு தனக்குள்ளும் ஒடுங்கிக்கிடக்கும் தனது தாயை மகள் அன்பான, ஒடுக்குமுறைகளற்ற, சட்டங்களென்ற தண்டிக்கும் கருவிகள் எதுவுமற்ற இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லப்பிரியப்படுகின்றார். சடங்குகளாலும், மரபின் தளைகளாலும் தண்டிக்கப்பட்டு ‘விதவை’ என அடையாளப்படுத்தப்படுகின்ற தனது தாயை, மகள் அவையெதுவும் பிணைக்காத இயல்பான உலகமொன்றிற்கு அழைத்துச் செல்ல முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அத்தாய் ஏதோவொரு காரணங்காட்டி நிராகரிப்பதாகவும், இறுதியில் மகளுடன் அந்த இன்னொரு உலகை நோக்கி நகர்வதுமாகப் பிரதி எழுதப்பட்டிருக்கின்றது. ஒரு யூற்றோப்பியா (utopia) சமூகத்தைக் கற்பனாவாதமாய் சிருஷ்டித்திருக்கும் பார்வையைத் தந்தாலும், அவ்வாறான உலகம் எதுவுமில்லையென்பதை நெறியாள்கையாளரின் நாடகம் தொடங்குவதற்கு முன்னரான குறிப்பைக்கொண்டு பார்வையாளர் விளங்கிக்கொள்ளமுடியும். எனினும் அந்தக்குறிப்பை அலட்சியப்படுத்துமொரு தேர்ந்த இரசிகர், இறுதியில் உடைவதாய்க் காட்டப்படும் கற்பனாவாதத்தை இருவிதப் பின்னணிகளில் விளங்கிக்கொள்ள முடியும். உடைகின்ற உலகினை, மகள் சிருஷ்டித்த உலகின் வீழ்ச்சியாகவோ அல்லது அத்தாய் வாழ்ந்த -ஒடுக்கப்பட்டிருந்த உலகின்- நிர்மூலமாகவோ எடுத்துக்கொள்ளலாம். பிரதிக்குக்கு அப்பாலும் பார்வையாளர் மேலும் யோசிக்கின்றவெளியை இந்த நாடகம் தருகின்றதெனினும், ஒரு சிறுவட்டத்துக்குள்ளேயே தொடர்ந்து பாத்திரங்கள் சுழன்று கொண்டிருப்பது இந்நாடகத்தின் பலவீனம் என்றுதான் கூறவேண்டும். சற்றே திசை திரும்பினாலும் அலுப்பூட்டவும் தொய்ந்துபோகவும் கூடிய பிரதியை, இறுதிவரை நகர்த்திச் சென்ற நடிகர்களே இந்த நாடகத்தில் கவனத்துக்குரியவர்கள். அந்தவகையில் பவானியும், சத்தியாவும் பாராட்டுக்குரியவர்கள்.
இரண்டாவது நாடகமான ‘விளையாட்டு’, மேலைத்தேய நாடகப்பிரதியொன்றின் (இங்கிலாந்து நாடகாசிரியர் Anthony Shafferன் Sleuth) ஒரு தழுவல் வடிவமாகும். பெண் எழுத்தாளரொருவருக்கும், அவரது முன்னாள் துணைவருடன் தற்போது திருமணபந்தத்தில் இணைந்திருக்கும் இன்னொரு பெண்ணுக்குமிடையில் சிக்கல்களைச் சிதறவிட்டபடி இந்நாடகம் நகர்கின்றது. சற்று மனோநிலை பாதிக்கப்பட்ட எழுத்தாளர் பாத்திரம் தன்னையே சுயவிமர்சனம் செய்துகொள்வதாயமைந்த காட்சிகள் இரசித்துச் சுவைக்கக்கூடியவை. மனோவியாதி முற்றியநிலையில் அப்பெண் எழுத்தாளர், மற்றைய பெண்ணை விளையாட்டாகச் சித்திரவதைப்படுத்தி பிழைகளை உணரச்செய்வதும், இறுதியில் விளையாட்டுப் பொம்மையாகி வலி உணர்ந்த அதே பெண் எழுத்தாளர் பாத்திரத்தை நுட்பமாகப் பழிவாங்குவதுமாய் நாடகம் நிறைவுபெறுகிறது. நாடகத்தின் இடைநடுவில் சுட்டுக்கொல்லப்படுவதாய்க் காட்டப்படுகின்ற பெண், உண்மையில் சுட்டுக்கொல்லப்படுகின்றாரா அல்லது அதுவும் பெண் எழுத்தாளரைப் பீடித்துள்ள மனோவியாதியின் இன்னொரு விகாரந்தானாவென பார்வையாளர் தெளிவாக ஊகிக்கமுடியாதிருப்பது நாடகத்தின் பலவீனமாய்த்தான் தெரிகிறது. இங்கும் நாடகப்பிரதியின் பலவீனத்தை மீறி இரு அனுபவம் வாய்ந்த நடிகர்களான சுமதி ரூபனாலும், பவானியாலும் நாடகம் கட்டியெழுப்பப்படுகிறது. அதிலும் முக்கியமாக மேடையை அலட்சியப்படுத்தி ஒதுக்கி, அது பற்றிய பிரக்ஞை சிறிதுமின்றி இயல்பாய் நடித்திருந்த பவானியின் நடிப்பு விதந்து குறிப்பிடத்தக்கது. முதலாவது நாடகமான ‘மீறல்களின் கடைசி யாத்திரை’யிலும் பாத்திரமேற்று நடித்திருந்த பவானி, முன்னைய நாடகத்தின் சுவடுகள் எதுவுமின்றி வேறொரு பாத்திரமாய் உடனேயே மாறி சிறப்பாக நடித்திருந்தமை கவனிக்கத்தக்கது.
மூன்றாவது நாடகமான ‘அதன் வருகைக்காய்’, வெவ்வேறு காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொண்ட மூன்று தனிமனிதர்களைப் பற்றிப் பேசுகின்றது. ஒரு குடும்பப்பெண், பதின்மவயதுப் பெண், அறிவுஜீவிப் பெண் ஆகிய மூவர் சமூகத்தில் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் சமூகத்துடனான அவர்களது முரண்பாடுகள் குறித்து கவிதைகளின் புனைவுடன் சேர்ந்து இந்த நாடகப்பிரதி பேசுகின்றது. நாடகம் ஆரம்பமாகின்ற இடமே அருமையானது. பிணமாகிவிட்ட மூன்று பாத்திரங்களும் உயிர்த்தெழுந்து செம்மஞ்சள் நிறத்துடனான (இங்கே மரணம் படிமமாக்கப்படுகின்றது) பொருளொன்றை எதிர்பார்த்துக்காத்திருப்பதாய் அடிக்கடி உரையாடிக்கொள்கிறார்கள். இம்மூன்று பாத்திரங்களும் வெளியில் தாங்கள் மகிழ்வுடனிருப்பதாய்க் கூறிக்கொண்டாலும், ஆழமான கேள்விகளின் நீட்சியில் தமது மனதின் வெறுமையை உணர்ந்து தாம் உண்மையில் சந்தோஷமாய் இல்லையென்பதைத் தங்களளவில் உணர்கின்றார்கள். வளரிளம்பெண்ணினுடாக வெகுசன ஊடகங்கள் கற்பிக்கின்ற உடல் அளவுகள்/அழகுகள், மாதாந்திர உடற்பிரச்சினைகள், ஆண் துணைகளைத் தேடிக்கொள்ளும் சிக்கல்கள் என்பவற்றை மிக நேர்த்தியாக நெறியாள்கையாளர் கவனப்படுத்தியிருப்பார். அதேபோன்று தன்னைச் சமூகத்திலிருந்து விடுவித்துக்கொண்டு சமூகம் குறித்த விமர்சனங்களை முன்வைக்கின்ற அறிவுஜீவிப்பெண்ணினுடாக சில்வியா பிளாத், ஆன் செக்ஸ்டன், செல்வி, சிவரமணி, கலா போன்றவர்களின் கவிதைகள் வெளிப்படுத்தப்பட்டு மிக அழகாகப் பார்வையாளருக்கு வழங்கப்படுகிறது. எழுதப்பட்ட காலத்திலேயே சர்ச்சைக்குள்ளான கலாவின் கவிதையை பொதுத்தளத்தில் எந்த சங்கடமுமின்றி வெளிப்படுத்தி நடித்த தர்சினியும், அந்தக் கவிதையைப் பயன்படுத்திய சுமதி ரூபனும் பாராட்டுக்குரியவர்களே. இந் நாடகப்பிரதியின் தீவிரத்துக்கு நிகராய் அதன் பாத்திரங்களாய் இயல்பாய் மாறி நடித்த தர்சினியும், ஷாலினியும், யசோதராவும் புலம்பெயர் நாடகச்சூழலில் தேர்ந்த நடிகர்களாவார்கள் என்ற நம்பிக்கையைத் தருகின்றார்கள். இறுதியில் தாம் விரும்பிய செம்மஞ்சள் நிறத்தாலான மரணத்தைக்கண்ட இந்த மூன்று பாத்திரங்களும் மீண்டும் சவப்பெட்டிகளில் துயின்றுவிடத் திரும்பினாலும், நாடகம் முடிந்தபின்னும் பார்வையாளருக்குப் பலவித அதிர்வுகளைக் கொடுத்தபடியிருப்பதில் இந்தப் பிரதி வெற்றி பெறுகின்றது. இந்த நாடகத்தில்தான் நெறியாள்கையாளரும், பிரதியாளருமாகிய சுமதி ரூபன் தனிப்பட்ட கவனத்துடன் பிரகாசிக்கின்றார்.
நெறியாள்கையாளராக சுமதி ரூபனின் முதலாவது நாடக அரங்கேற்றம் இதுதானென (நான்) நினைக்கின்றேன். ஒரு நாடகமாயன்றி, மூன்று தனித்தனி நாடகங்களை ஒரே மேடையில் அரங்கேற்றுவதற்குக் கடுமையான உழைப்பும் அதிக நேரமும் தேவைப்பட்டிருக்கும். மேலும், ஒரு நாடகத்தின் சாயல் இன்னொரு நாடகத்தில் பிரதிபலிக்காமலிருப்பதற்கு நெறியாள்கையாளர் இயன்றளவில் முயன்றிருப்பதை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். நாடகப் பிரதிகள் பலவீனமாயிருக்கும் இடத்தில் திறமை வாய்ந்த நடிகர்கள் பிரதியின் பலவீனத்தைப் பார்வையாளருக்கு உணரச்செய்யாது அநயாசமாய் நடித்துப்போகின்றமையினால் நடித்த நடிகர்களும் கவனத்துக்குரியவர்களே. இந்த நாடகங்களைப் பார்க்கும்போது, நடிகரென்ற சுமதி ரூபனை விட நெறியாள்கையாளரென்ற சுமதி ரூபன் இனிவரும் காலங்களில் இன்னமும் பிரகாசிப்பாரெனும் நம்பிக்கை வேர்விடுகின்றது. அதிலும் திறமையான - இயல்பாகவே பாத்திரங்களுடன் ஒன்றிப்போய் விடுகின்ற - நடிகர்கள் சிலர் கிடைத்திருப்பதற்கு நெறியாள்கையாளர் என்றளவில் சுமதி ரூபன் நிறைவுகொள்ளலாம். நாடகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது பலவிடங்களில் அரங்க அமைப்பு மிக வெளியாகவும், நடிகர்களின் அசைவு இல்லாது பெரும்பகுதி வெறுமையாகவுமிருந்ததை இந்த நாடக அரங்கேற்றத்தின் முக்கிய பலவீனமாய்க் கொள்ளவேண்டும். அதுவும் முதலாவது நாடகமான ‘மீறல்களின் கடைசி யாத்திரை’யில் தாயும் மகளும் உரையாடுகின்ற அத்தனை சந்தர்ப்பங்களிலும் அரங்கத்தின் பெரும்பகுதி வெறுமையாகவேயிருந்தமை, பார்வையாளர்களை நாடகத்தோடு முற்றுமுழுதாக ஒன்றவிடாமல் தடுத்திருந்தது. மேலும், மூன்று நாடகங்களிலும் ஒரேவிதமான உரையாடல் (கிட்டத்தட்ட கேள்வி - பதில் முறையான) பயன்படுத்தப்பட்டதை இயன்றளவு தவிர்த்திருக்கலாம் (’அதாலை?’ ‘அதாலை? என்று ஒரு பாத்திரம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க, எதிர்ப்பாத்திரம் தொடர்ந்து உரையாடுவது ஒரு பொதுவான அம்சமாய் எல்லா நாடகங்களிலும் இடம்பெற்றிருந்தது). மூன்று நாடகங்களை ஒரே மேடையில் ஏற்றுவதன் சிரமங்கள் புரிந்தாலும், இலகுவில் விலத்தக்கூடிய இப்படியான விடயங்களைத் தவிர்த்திருந்தால் நாடகங்கள் இன்னும் செழுமை பெற்றிருக்கும். இத்தகைய சில பலவீனங்கள் காணப்பட்டாலும், அரங்கேற்றப்பட்ட மூன்று நாடகங்களும் பார்வையாளருக்கு நிச்சயமொரு மனநிறைவையும், பலவிதமான கேள்விகளின் அதிர்வுகளையும் கொடுத்திருக்கும். பெண் நெறியாள்கையாளர், அநேக பெண் நடிகர்களென (பின்னணியில் சில ஆண்கள் ஒலி/ஒளி மேடையமைப்பில் இருந்தாலும்) கிட்டத்தட்ட - பெரும்பான்மையாக - பெண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டதென்று இம்முயற்சியினை அடையாளப்படுத்த பங்குபற்றியவர்கள் விரும்பாதுவிட்டாலுமேகூட பெண்கள், பெண் பிரச்சினைகளென்று அவர்களை ஒதுக்கிவிடுகின்ற நமது சமூகத்தில் இவ்வாறான முயற்சிகள் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரக்கூடியவை.
நாடகங்களின் அரங்கேற்ற முடிவில் நடிகர்கள் நேரடியாகப் பங்குபற்றும் கலந்துரையாடல் நடந்தது. பல்வேறு வகையான விமர்சனங்களும், பாராட்டுக்களும் இந்நாடகங்கள் குறித்து முன்வைக்கப்பட்டன. நாடகமென்பது அனைவருக்கும் விளங்கக்கூடியவகையில் வழங்கப்பட வேண்டுமென்றும், இறுதியில் தெளிவான முடிவொன்றினைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் சிலர் விவாதித்தனர். எந்தப் படைப்பாளியும் தன்னைச் சுற்றி நிகழும் அநீதிகளுக்கு எதிராய் உடனடியாய் கேள்விகள் எழுப்பியிருக்கின்றாரா என்று கவனிக்கவேண்டுமே தவிர, அநீதிகளுக்கெதிரான தீர்வுகளையும் அவர்கள்தான் முன்வைக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது அவசியமற்றது. மேலும், கவிதை போன்ற படைப்புக்கள் மையத்துடனோ/தெளிவான கருத்துடனோ எழுதப்படுகின்ற காலங்கள் வழக்கொழிந்து வருகின்ற நிலையில் முடிந்த முடிவொன்றுடன் நாடகங்கள் அமையவேண்டுமென பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதும் நியாயமாகாது. எந்தவொரு சிறந்த படைப்பும் அதன் பிரதிக்கு அப்பால் இன்னுமொரு பிரதியை வாசகர் மனதில் உருவாக்குவதன் மூலமே வெற்றியடைகின்றது. அந்தவகையில் சுமதி ரூபனின் நாடகங்கள் நாடகம் முடிந்தபின்பும் சில கேள்விகளை எழுப்பிக்கொண்டிருப்பது நெறியாள்கையாளரினதும், நடிகர்களினதும், பிரதிகளினதும் வெற்றி எனத்தான் கொள்ளவேண்டும். இனிவரும் காலங்களில் ‘உயிர்ப்பு’ அரங்கப்பட்டறை இன்னும் சிறப்பான நாடகங்களைத் தருமென்ற நம்பிக்கையை இந்த மூன்று நாடகங்களும் பார்வையாளருக்கு விட்டுச்செல்வதுதான் இந்த மேடையேற்றத்தின் முக்கிய அடையாளம் எனலாம்.
(அரையும் குறையுமாய் எழுதிய இந்தப்பதிவை நேரமெடுத்து திருத்தித் தந்த நண்பருக்கு என் தனிப்பட்ட அன்பும் நன்றியும்.)

(Thursday, March 30th, 2006 at 10:26 am )

No comments: