Tuesday, September 26, 2006

கதைசொல்லியும் Gang fightsம்

(மீள்பதிவு)

எனக்கு எழுதுவதென்றாலே என்னவென்று தெரியாது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு இலக்கியத்திலோ, தமிழிலோ அவ்வளவு பரீட்சயமும் கிடையாது. அதற்கான நேரமும் கிடைத்ததில்லை. அவ்வாறு இருந்தற்காக வெட்கப்பட்டதும் கிடையாது. இப்ப நான் சொல்லப்போகின்ற இந்த கதைகூட எந்தவடிவத்தில் அடங்கும்- அடங்காது என்பது குறித்த எந்த பிரக்ஞையும் என்னிடமில்லை. ஏதோ என் நேற்றைகளை பதிவுசெய்யவேண்டுமென்று விரும்பி எழுதுகிறேன். அவ்வளவுதான்.
எல்லோருக்கும் ஏதாவதொரு கருத்தில் இடையீடு செய்யத்தானே அதிக விரும்பமிருக்கும். அதுபோல என்ரை கதையையும் இடையிலிருந்தே தொடங்குகின்றேன். வெயில் எரித்து வியர்வை உருகிய ஒரு கோடைக்காலம் அது. நானும் இன்னும் பல நண்பர்களுமாய் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் எங்கள் எதிர்க்குழுவில் உள்ளவங்கள் எங்கையோ கதை கேள்விப்பட்டு வந்திட்டாங்கள். தோளில் போட்டிருக்கும் சின்ன துவாயால் துவக்கை மறைச்சுக்கொண்டு விளையாடுற இடத்திற்கு ஆறேழு பேராய் நுழைஞ்சிட்டாங்கள். என்னையும் ஒரு நண்பனையும் தவிர எங்கட ரீமில் எவரும் காங் மெம்பர்ஸ் இல்லை. விளையாடின மற்றவையளுக்கு அடுத்து என்ன நிகழப்போகின்றதென்று விளங்கிட்டுது. பவுண்ரி லைனில் நின்ற என்னை மிட் ஓனில் வரச்சொல்லிச்சினம். அடிக்கவந்தவங்களும் ஏதோ இலட்சுமணன் சீதைக்கு கீறிய கோட்டைக்கண்டு பயப்பிடும் இராவணன்போல லைனிற்கு வெளியே நின்று ‘வாங்கடா வெளில’ என்று கத்தி தூஷணத்தால் அர்ச்சித்துக் கொண்டிருந்தாங்கள். நல்லவேளை உள்ளே நின்ற ஒருத்தரிற்ரை செல்போன் இருந்திச்சு. அவரைக்கொண்டு எங்கட காங்கிற்கு கோல் பண்ணி கெதியாய் வரச்சொன்னோம். பத்து பதினைஞ்சு நிமிடத்தில் அவங்களும் வந்திட்டாங்கள். சரி இன்டைக்கு நல்ல வாணவேடிக்கையென்டு நான் நினைச்சேன். எங்கட ஆக்கள் வாறதைக்கண்டதும் அவங்கள் வருகீறிட்டாங்கள். நாங்கள் விடவில்லை. காரெடுத்துக்கொண்டு துரத்தினோம். மறைஞ்சிட்டாங்கள். சரி தப்பிச்சிட்டாங்களென்று சலிச்சு, பிறகு நைட் கிளப்பிற்கு போய் டான்ஸ் ஆடிப்போட்டு திரும்பி வாறநேரத்திலதான் எனக்கு ஞாபகம் வந்தது, நாளைக்கு பெரியமாமாவின் மூத்தமகனிற்கு கலியாணம் எண்டு. அவர் இரவு வீடு சோடிக்க வரச்சொன்னவர். நேரமோ பதினொன்டரை ஆச்சுது. சரி சும்மா ஒருக்கா மாமா வீட்டைப்போயிட்டு முகத்தைக்காட்டி விட்டு வருவம் எண்டு நினைச்சு என்ர பிரண்ட்ஸ்சிட்டை சொன்னேன் மச்சானின்ரை வீட்டடியில் இறக்கிவிடச்சொல்லி. ஆனால் இவங்களோட இப்படியே நான்கு கார்கள் பவனிவர போயிறங்கினால் வீட்டிற்கு வெளியே நிற்கிற சொந்தக்காரர்கள் ஏதும் சொல்லக்கூடுமென்று, பக்கத்திலிருந்த பஸ் ஸ்ரொப்பில் இறக்கிவிடச்சொன்னேன். கொஞ்சதூரம் நடந்துபோயிருப்பேன். எங்கிருந்தோ வந்த ஒரு கறுப்புகார் என்னை உரசிக்கொண்டு வந்துநின்டுது. அவங்கள்தான் - எதிர்க்குழுவினர். ‘டேய் அடியுங்கடா’வென கத்தியபடி காரிற்குள்ளிருந்து குதித்தார்கள். சரி இண்டைக்கு முடிஞ்சன் எண்டு நினைச்சன். கிட்ட வைச்சு வெடி வைக்கிறது கொஞ்சம் கஷ்டம். அதோடு ஆரம்பகாலத்தில் முழங்காலிற்கு கீழே வெடிவைப்பதாகவும் வெட்டுவதெண்டால் கழுத்துக்கு கீழேதான் வெட்டுவதென்றும் பல குழுக்களிடையே எழுதப்படாத விதியாக இருந்தது. பேஸ்போல்மட்டையாலும், இரும்புச்செயினாலும் விளாசத்தொடங்கிவிட்டார்கள். அந்தநேரத்தில் மாமாவும் அங்கே நின்ற அண்ணாவும் வெளியே வந்திருக்கிறார்கள். யாரையோ அடிக்கிறான்கனெண்டு கத்திக்கொண்டு அவர்கள் ஓடிவாறது மங்கலாத் தெரிஞ்சது.
அவ்வளவுதான். அதற்குப்பிறகு ஆஸ்பத்திரியில் முழிக்கைக்கேதான் நினைவு வந்தது. மண்டையில் நல்லா அடிச்சுப்போட்டுட்டாங்கள். பதினொருதையல் என்று நேர்ஸ் சொன்னா. இன்னும் பல இடத்தில் சின்னச்சின்ன காயங்கள். எனக்கு நினைவுதெளிஞ்ச மறுநாள் பின்னேரத்தில் என்ர பிரண்ட்ஸ் வந்தாங்கள். அவங்களோடு அவளும் வந்திருந்தாள். ‘டேய் நீயெழும்பி வீட்டை போகமுன்னம் அவங்களில் இரண்டுபேரிற்கு வெடிவைக்காட்டி பாரு. ஒண்டுக்கும் யோசிக்காதையடா’ என்டாங்கள். அவங்கள் வாங்கிக்கொண்டு வந்த ஆப்பிள்ஸையும், ஒரேஞ்சர்ஸையும் அவள் என்னிடம் தந்தாள். சரி நாங்கள் போகப்போறம் பிறகு வாறமடாவெண்டு பிரண்ட்ஸ் வெளிக்கிட்டாங்கள். Hey guys, wait outside, catch you in a minute எண்டு அவள் சொல்லிப்போட்டு என்ரை கையை எடுத்து முத்தமிட்டு take care எண்டு சொன்னாள். அந்த நேரத்தில் அவள் கண்கள் கலங்கியிருந்ததையும், அதிலிருந்து சிதறிய ஒருதுளிக்கண்ணீர் என் கன்னத்தில் விழுந்து காதோரத்தால் உருகிக் கீழே வீழ்ந்ததும் நிகழ்ந்தது.
அறிவுரைகள் யாருக்குப் பிடிக்கும். இரத்தநாளங்களில் சந்தோஷம் துள்ளிப்பிரவாகரிக்கும் இளமைப்பருவத்தில் கட்டுக்களையறுத்து வெளிகளில் மிதக்கவல்லவா மனம் விரும்பும்? ஒருமுறை இப்படித்தான் இரண்டு யூனிவாசிட்டி அண்ணாமார்கள் வந்திச்சினம் ஏதோ கதைக்கோனுமென்டு. எங்களின் குழுச்சண்டைகளையும், சமூகத்தில் எங்களால் ஏற்படும் இடையூறுகளையும் பெருங்கதையாடல்களையும் கேள்விப்பட்டுத்தான் அவையள் வந்திருக்கோணும். நாங்கள் சொன்னோம் அண்ணை நீங்கள் எதென்டாலும் எங்களோட கதையுங்கள் ஒரு பிரச்சினையுமில்லை. ஆனால் பாரிற்கு கூட்டிட்டுப்போய் கொஞ்சம் பியர் வாங்கித்தாங்கோ, நீங்கள் சொல்றதையெல்லாம் கேட்கிறோமெண்டு. அவர்களும் சரி இவங்களை விட்டுத்தான் பிடிப்போமென்டு நினைச்சிருக்கக்கூடும். எங்களுக்கு பியர் எல்லாம் வாங்கித்தந்திச்சினம். பியர் உள்ளேபோனால் எங்கட நிலைமையைச் சொல்லத்தான் வேணுமோ. கத்தி குழறி பாடத்தொடங்கிவிட்டோம். அந்த அண்ணமாரும் இருந்து பாத்திட்டு வெறுத்துப்போய் சொல்லாமல் கொள்ளாமல் எழும்பிப்போயிட்டினம்.
இந்த நகரத்தில், உலகத்தில் வாழ்வதற்கு சிறந்த இடமென பிரகடனப்படுத்தப்பட்ட இந்த தேசத்தில் எங்கட பெடியளின்டை காங்குகள் எப்படித்தொடங்கியது என்பது பெரிய கதை. அதன் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் எனக்குப்பெரிதாய் தெரியாது. ஆனால் கொஞ்ச சம்பவங்கள் நினைவிலுண்டு. முதன்முதலில் வேற்றினத்தவரின் கேலிகளையும், அவதூறுகளையும் அடக்கத்தான் எங்கட பெடியள் குழுகுழுவாய்த் திரிஞ்சினம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது. என்னுடைய கல்லூரித்தோழன் ஒருவன் குளிர்நேரத்தில் பஸ்சில் ஏறுகையில், ஒரு இத்தாலியன்காரன் கெட்டவாசம் வருகிறது இந்த பாக்கியிடம் என்று நக்கல் சிரிப்போடு சொன்னான். பாக்கி என்டால் அது எங்களுக்கு, இந்தியனுக்கு, பாகிஸ்தான்காரனுக்கு அவர்கள் தரும் அன்பான அடைமொழி. கெட்டவாசம் என்று அவன் சொன்னது எங்களின் சமையல் வாசத்தை. சும்மா சொல்லக்கூடாது நாங்கள் நல்லாத்தானே வறுக்கி, புரட்டி,பொரிக்கிறனாங்கள். ஆனால் அவன் அப்படிச் சொன்னதற்கு என்னுடைய நண்பனுக்கு சரியான கோபம் வந்திட்டுது. இவங்களுக்கு பாடம் புகட்டோனுமெண்டு கறுவிக்கொண்டான். அப்போதெல்லாம் நான் நல்ல அப்பாவிப் பெடியன். சிறிலங்காவிலிருந்து கொஞ்சமாதங்கள் முன்புதான் வந்து இறங்கியிருந்தேன். இந்த வியம் மற்ற நண்பர்களுக்குத் தெரியவர, அவர்கள் எல்லோரும் திட்டம்போட்டு, அந்த இத்தாலியன்காரனிற்கு பஸ் நிறுத்தத்தில் பாடம் புகட்டுவதென்று தீர்மானித்தனர். அடியெண்டால் செம அடி. பனியெல்லாம் இரத்ததுளிகள். கனதமிழாக்கள் நிற்கேக்கைதான் அடிவிழுந்தது. எல்லாரும் சேர்ந்துதான் கொடுத்தோம். அந்த இத்தாலியன்காரனுக்கு அதிக அடிகொடுத்தவன்தான் எங்கள் கல்லூரியில் தோன்றிய முதல் குழுவிற்கு பிறகு தலைவன் ஆனான். சிலநாட்களில் பின் எங்கட கேர்ள்ஸை நக்கலடித்த வெள்ளையிற்கும் நல்லாய்க் கொடுத்தோம். அந்த பெண்கள் கூட்டத்தில் இருந்த கெட்டிக்கார,எடுப்பான பெண், கொடுத்த அடிகளுக்கு நன்றிக்கடனாய் அந்தத் தோழனையே நேசிக்கத்தொடங்கினாள். இப்படி எங்களுக்கு பாதுகாப்பாய் ஏனைய இனக்குழுமங்களால் ஏற்படும் இடைஞ்சல்களை கிள்ளியெறியெனவெனத் தொடங்கிய குழுக்கள்தான் இப்ப எங்களுக்குள்ளேயே அடிபட்டுக்கொண்டு தலைவிரிச்சாடுகிறோம். எவ்வளவு காலந்தான் மற்றவங்களோட அடிபடுறது. வேற்றினத்தவன் எல்லாருக்கும் விளங்கிட்டுது. இவங்கள் பலமானவர்களாய் இந்த பிரதேசத்தில் இருக்கிறார்கள். ஏன் வீணாய் வாலாட்டி இவங்களிட்டை அடிவாங்குவான் என்டிட்டு அவங்கள் அமைதியாகிட்டாங்கள். ஆனால் வீரம்பேசிய கைகள் சும்மா இருக்குமோ? அதோடு இப்படித்திரிஞ்சால்தான் வடிவானபெண்களை இலகுவாய் கைக்குள்ளை போடலாமென்ட பிலோசபியும் விளங்கிட்டுது. ஆனால் எங்கட பொம்பிளைப்பிள்ளைகள் சரியான கெட்டிக்காரிகள். அவர்கள் குழுக்களின் தலைவர்களை மட்டுமே விரும்பிச்சினம், தலைவர்களோடு திரியும் அடியாட்களை தூசென தட்டிவிட்டிச்சினம். எங்களுக்கோ சரியான நெருக்கடி. ஒரெயொரு வழி புதுசு புதுசாய் குழுக்கள் அமைத்து தலைவர்கள் ஆவதே. எங்கட முன்னோடியாய் பெரிசுகள் எல்லாம் ஊருக்கொரு சங்கம், ஊர்ப்பாடசாலைக்கொரு சங்கம் எண்டு அமைத்தால், அவையளின்டை வாரிசுகள் நாங்கள் சும்மாவா இருப்போம். இப்படித்தான் எனக்குத்தெரிஞ்ச வரையில் பல்வேறு குழுக்கள் புற்றீசலாய் இங்கே கிளம்பின.
அது ஒரு பின்னிரவுப்பொழுது. அம்மா, அப்பாவிற்கு ஏன் இடைஞ்சாலாயிருப்பானென்று தனியே நண்பர்களோடு தங்கியிருந்த காலமது. வழக்கமாய் வீட்டிலிருந்து இரவு பத்து பதினொரு மணிக்கு வெளிக்கிடுவேன். பிறகு அப்படியே நண்பர்களோடு சுற்றிவிட்டு வந்து படுக்க காலமை ஆறேழு மணியாகிவிடும். ஒவ்வொருநாளும் கல்லூரிற்கு மத்தியானத்திற்கு பிறகுதான் போவேன். பேசிப்பேசியே அமைதியாகிப்போன அப்பாவையும், ஏதும் பேசாமல் மௌனமாயிருக்கும் அம்மாவையும் ஏன் வாட்டுவான் என்று நான்தான் யோசித்து வெளியில் நண்பர்களோடு தங்க தீர்மானித்தேன். இதை வீட்டில் சொன்னபோது வழக்கம்போல அப்பா எதுவும் சொல்லவில்லை. அம்மா விக்கிவிக்கியழுது சேலைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்தாள். சத்தம் போட்டு அழுதால் அப்பா பேசக்கூடுமென்று அவா பயந்திருக்கக்கூடும். அண்ணா மட்டுந்தான், ‘என்னடா ஆச்சுது உனக்கெண்டிட்டு, ஏதும் தேவையென்றால் தொலைபேசியில் அழை’யென்றார். தங்கச்சியோடு கதைச்சே கனநாளாயிட்டுது. ஒரு இறுக்கமான மௌனத்தின் விடையசைப்பே அவளிடமிருந்து வந்தது. அப்படி பிரண்சோட இருந்த நேரத்தில்தான் புதுத்தோழியொருத்தியின் அறிமுகம் கிடைச்சது. என்ரை நண்பர்கள் கூலிஸ் என்றுதான் அவர்களைப் போன்ற பெண்களை அழைப்பார்கள். அவர்களின் அசைவுகளும், நடையுடைபாவனைகளும் நிறமும்கூட பொன்னிறமாய் இந்தியப்பெண்களையொத்து இருந்தது. நான் முதலில் நினைச்சேன் தமிழன், சிங்களவன் போல அவர்களுக்கும் அந்தப்பெயர் இனக்குறியீடோ என்று. பிறகுதான் தெரிஞ்சிது. கூலிஸ் என்றால் குடிக்கும் பியரிற்கும், பத்தும் சிகரட்டுக்கும், சிலவேளைகளில் அடிக்கும் கஞ்சாவிற்காகவும் தங்களோடு ஒட்டிக்கொள்ளும் கூலிப்பெண்கள் இவர்களென பட்டஞ்சூட்டியிருக்கிறான்களென்டு. பரவாயில்லை எங்கட பெடியள் கூலியென்று பெயரைவைத்து இப்படியாவது தமிழை வாழவைச்சுக் கொண்டிருக்கிறார்களென்று எங்கட தமிழாக்கள் சந்தோஷப்படலாம். அப்படி நண்பர்களோடு தங்கியிருந்த இரவொன்றில்தான் அவளை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது மின்னலும், இடியுமாய், பேரிச்சலுடன் மழை வெளியே பொழிந்துகொண்டிருந்தது. நாங்கள் நண்பர்கள் மூன்றுபேர். ஒரு அறையுள்ள அப்பார்மெண்ட். சரி இண்டைக்கு களிகால இரவுதான் என்று மனதிற்குள் கணக்குப்போட்டேன். இதற்குமுன் இதுகுறித்த எந்த அனுபவமும் இல்லை. தாங்கள் அவளின்ரை ரூமிற்குள் போயிட்டு வந்தாற்பிறகுதான் எனக்கு அனுமதியெண்டாங்கள். எனக்குரிய நேரம் வந்தது. கால்கள் சற்று நடுநடுங்க உள்ளே நுழைகிறேன். முகத்தை கால்களுக்கிடையில் புதைத்தபடி அவள் கட்டிலில் குந்தியிருந்தாள். அவளை நெருங்குகையில், Why you guys behave like animals? என்று பலகீனமான குரலில் கேட்டாள். என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவள் உதடுகள் வெடித்துக்கிடப்பதையும், கன்னத்தில், கழுத்திலெல்லாம் காயங்கள் கிடப்பதை காண்கிறேன். யாரோ என்ரை நெஞ்சுக்குள் கைவிட்டு பிசைவது போல ஒரு உணர்வு. விரல்கள் எல்லாம் எனக்கு குளிரில் உறைந்தமாதிரி நடுங்குகின்றன. அவளை மெல்ல அணைத்தபடி அவள் கூந்தலைக் கோதுகிறேன். நான் அவ்வளவு கெட்ட மிருகமல்லவென அவள் காதிற்குள் மெல்லியதாகச் சொல்கிறேன். பிறகு நாங்கள் எதையும் அளவோடு அனுபவிக்கத்தெரியாதவர்களெண்டும், பல்வேறுபட்ட மரபின் இழைகள் எம்மை இறுக்க பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்றெல்லாம் ஏதோவெல்லாம் உளறுகின்றேன். அவள் என்நெஞ்சில் முகம்புதைத்தபடியே தூங்கிப்போகிறாள்.
இதற்குப்பிறகுதான் அவளை ஆஸ்பத்திரியில் அடிவாங்கிக்கிடந்தபோது சந்தித்தேன். பெற்றோரோடு தங்கியிருந்த அவள் பிறகு ஒரேயடியாய் எங்கள் அப்பார்ட்மெண்டில் வந்து தங்கினாள். அவளிடம் இருந்த ஏதோவொன்று எனக்குப் பிடித்துப்போய்விட்டது. என்னுடைய நோஞ்சான் உடம்பையும், காதில் குத்தியிருந்த கடுக்கனையும்விட, அவளுக்கும் வேறெதுவோ என்னில் பிடித்திருக்கக்கூடும். ஒருமுறை நண்பர்களோடு பீச்சிற்கு போனநேரத்தில்தான் ‘என்னோடு சேர்ந்து வாழ்கிறீயா?’ எனக்கேட்டாள். ‘இப்ப மட்டும் என்னவாம்’ என்று நான் நக்கலாய் வினாவ, ‘இல்லை நானும் நீயும் மட்டும் வேறிடத்துக்குப்போய் சேர்ந்து தனிய இருப்பமா’ என்று கேட்டாள். நான் இதை என் நண்பர்களிடம் சொன்னேன். அவர்களுக்கு அவ்வளவாக இது பிடிக்கவில்லையென அவர்களின் முகத்தைப்பார்த்தே எனக்கு தெரிஞ்சுபோட்டுது. என்றாலும் அவர்களோடு நானிருந்த நன்றிக்கடனிற்காய் சம்மதித்தனர். நானும், அவளும் இப்படி தனியே வாழப்போயிருந்த ஐந்துமாதங்களிற்கும் சிலநாட்களுக்கும்பிறகு, என் தோழன் ஒருவனுக்கு எதிர்க்குழுவினர் வெடிவச்சு சீரியஸாயிருந்து பிறகு பரிதாபமாய் செத்துப்போனான்;. அதனையடுத்து எங்கள் குழுவில் பல பிணக்குகள், பிரச்சினைகள். பலர் என்னைப்போல குழுவைவிட்டு, வெளியே வந்து தனியே வாழ விருப்பப்பட்டனர். ஆரம்பகால தோழர் சிலரது கோபம் எல்லாம் என்மீது குவிந்தது. நான்தான் எங்கள் குழுவைச் சிதைத்த முதல் ஆளென முத்திரை குத்தினர். அந்த சமயத்தில்தான் தற்செயலாய் எங்கட பரமவைரிகளின் குழுவில் ஒருவனை நான் சந்திக்கையில் என் தோழர்கள் கண்டிருக்கிறார்கள். எனக்கு உண்மையில் அவன் எதிர்க்குழுவின் ஆளென்று தெரியாது. அவன் அங்கே புதுசாய் போய்ச் சேர்ந்திருக்கிறான். அவன் எங்களின் சொந்தக்காரன் என்றபடியால் அவனை தமிழ்க்கடையொன்றில் காண்கையில் கதைச்சனான். ஆனால் நான்தான் எதிரணியினரிற்கு தகவல்கொடுப்பதாய் என்தோழர்கள் சந்தேகப்படத்தொடங்கினார்கள்.
நேற்றைக்கு இப்படித்தான் என்தோழியோடு இங்கிலிஷ் படமொன்று பார்த்துவிட்டு வரேக்கை என்னுடைய நண்பர்களைக் கண்டேன். நல்ல குடிவெறியில் நின்றார்கள். எனக்குப் புரிஞ்சிட்டுது, இப்ப இவங்களோட கதைச்சால் வீண்பிரச்சனைதான் வருமெண்டு காரில் ஏறிக்கிளம்பினேன். அவள்தான் காரை ஒட்டினாள். என் நண்பர்களுக்கு தங்களை நான் உதாசீனம் செய்வதாய் என்மீது கோபம் வந்து வேறொரு காரிலேறி துரத்தத்தொடங்கினாங்கள். அவளுக்கு விளங்கிவிட்டது, இந்த நிலைமையில் இவங்களின் கையில் அகப்பட்டால் என் உயிரிற்கு உத்திரவாதமில்லையென்று. இறுக்கி ஆக்சிலேட்டரை மிதித்தாள். ஒரு வெடி காரின்பின்புறத்தில் விழுந்த சத்தம் கேட்டது. அவள் சடாரென்று சனநெருக்கடியற்ற இருண்ட தெருவொன்றுக்குள் விட்டு, ‘ஒடு, என்மேல் அன்புவைத்திருந்தால் நீ தப்பியோடு, எனக்கு என்னநடந்தாலும் திரும்பிவராதேயென்று’ கத்தினாள். நான் ஒடத்தொடங்கினேன். ஓரு வீட்டின் பெயர்தெரியாத செடிவேலிதாண்டி இன்னும் சிலவற்றை கடந்து ஒடினேன். என்றாலும் அவளை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனமிசையாததால் வேறொரு திசையில் திரும்பிவந்து அடர்ந்து கிடந்த ஒருபெருமரத்தின் கீழ் பதுங்கினேன். நண்பர்கள் வந்தார்கள். கத்திகளுடனும், பேஸ்போல்மட்டைகளுடனும், துப்பாக்கிகளுடன் என் காரை நெருங்கினார்கள்; நொறுக்கினார்கள். பேய்கள் உலாவுவதுபோல அவர்கள் நிழல்கள் பயமுறுத்தின. உள்ளேயிருந்த அவளிடம் நான் எங்கேயென கேட்டு வெளியே இழுத்து காலால் உதைத்தார்கள். அவள் என்னோடு முன்பு தங்கியிருந்த தோழன், ஒருவனின் கால்களைக் கட்டிப்பிடித்துக்கெஞ்சினாள். அவனுக்கு ஏதோ உறுத்தியிருக்கக்கூடும். ‘டேய் அவளை விடுங்கடா, வேறொரு சமயத்தில் அவன் கணக்கைத்தீர்த்துக் கொள்ளலாமென்று’ காரில் ஏறினான்.
இது நடந்தது நேற்றுத்தான். நான் இப்போது இருப்பது அவளது தோழியொருத்தியின் வீட்டில். இன்றைய பொழுதில் வாழ்வு சூனியமாயிருக்கிறது. திசையெல்லாம் கறுத்து யமனின் பவனி நிகழப்போவதாய் காலம் பயமுறுத்துகிறது. ஒருபக்கம் இறுகிப்போய், விகாரித்த நண்பர்களின் இன்னொருபக்கத்தில் மிகமென்மையான நெஞ்சிருப்பது யான் அறிவேன். காலத்தை வெறுத்து கையாலாகதவர்களாகிய அவர்களுக்குள் உள்ளூறும் மனிதம்பற்றி, நல்ல நட்பிற்காய் பின்விளைவுகள் எதையும் யோசிக்காது, கைகொடுக்கும் உண்மையான தருணங்கள் குறித்து என்னைப்போன்ற ஒரு சிலரே அறிவர்.

2001.06.21
நள்ளிரவு 1.12.
நன்றி: முற்றம், அக்கினிக்குஞ்சு, பதிவுகள், வைகறை

1 comment:

டிசே தமிழன் said...

1
Chandravathanaa says:
July 20th, 2006 at 1:10 am edit
இதை மீண்டும் ஒரு முறையாய் இன்று வாசித்து முடித்தேன்.
இதை முதன்முதலில் கனடாவுக்கு வந்து 6கிழமைகள் நின்று திரும்பிய சில வருடங்களில் வாசித்த போது ஒவ்வொரு சம்பவத்தையும் மனக்கண்ணில் கொண்டு வந்து பார்க்க முடிந்தது. கனடாவில் எமது இளைய சமுதாயத்தின் நடைமுறைகளை நேரிலே கண்ட போது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. திடீரெனக் கிடைத்த சுதந்திரத்தை அவர்கள் பயன் படுத்திய விதமும், திடீரென ஆக்கிரமித்த குடும்ப உறவுகள் இல்லாத தனிமையின் வெறுமையைப் போக்க அவர்கள் கூடிய விதங்களும் மிகவும் வருத்தத்துக்கு உரியவை.
இதை எழுதிய நீங்கள்தான் கதையின் கதாநாயகனாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி. இதை எழுதும் போது உங்கள் எழுத்தில் உங்களைப் புரிந்து கொண்ட தன்மை இருக்கிறது. இயலாமை உங்களை அறியாமலே உங்களை அழுத்தினாலும் அதனால் சில பல ஒவ்வாத செயற்பாடுகள் நடந்தாலும் உங்களிடம் மனிதம் இருந்திருக்கிறது.
அங்கு சுட்டவர்களும் வெட்டியவர்களும் மனிதமற்றவர்கள் என்றில்லை. ஏதோ ஓருவித விரக்தியும் தனிமையும் சேர்ந்து மனநிலை குழம்பியவர்கள் என்றே அவர்களைக் கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும் ஒரு அன்பான உறவைச் சந்தித்து அன்பின் அணைப்பைப் பெறும் போது மாறியிருப்பார்கள். சாதாரண மனிதர்களாகியிருப்பார்கள். தமது தவறுக்கு நியாயம் தேடுபவர்களாய் இருந்தாலும் கூட உள்ளுக்குள்ளே கண்டிப்பாக வருந்தியிருப்பார்கள்.
இன்றைய நீங்கள் கூட அந்த வடுக்களுக்குள் அகப்பட்ட ஒருவனின் சாயலே தெரியாமலே இதுவரை எழுத்தால் எனக்கு அறிமுகமாகி இருந்தீர்கள். இத்தனை எழுத்து வன்மை உள்ள எத்தனை இளைஞர்களை புலம் பெயர்தல் புரட்டிப் போட்டிருக்கிறது என்ற உண்மையை உணர முடியும் போது வருந்தாமல் இருக்க முடியவில்லை.
2
Chandravathanaa says:
July 20th, 2006 at 1:36 am edit
இளங்கோ
எனது கருத்து உங்களுக்குப் பொருந்தவில்லை என்று பட்டால் தயங்காமல் அழித்து விடுங்கள்.
நான் சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
இதை முதன்முதலாக வாசித்த போது இது என்னை மிகமிகப் பாதித்தது. எனது கணவரோடு இதைப் பற்றி நீண்ட நேரம் கதைத்தேன். புலம்பெயர் இளைஞர்களுக்காக மிகவும் வருந்தினேன். புலம்பெயர் இளைஞர்கள் மீது யாராவது குற்றம் கூறினால் எனக்கு அவர்கள் மேல் கோபம் வருவதற்கு இக்கதையும் ஒரு காரணம்.
தவறுகளை மட்டுமே பார்க்கும் எமது சமூகம் தவறுக்கான காரணங்களைப் பார்ப்பதில்லை.
நீங்கள் குறிப்பிட்ட
ஒருபக்கம் இறுகிப்போய், விகாரித்த நண்பர்களின் இன்னொருபக்கத்தில் மிகமென்மையான நெஞ்சிருப்பது யான் அறிவேன். காலத்தை வெறுத்து கையாலாகதவர்களாகிய அவர்களுக்குள் உள்ளூறும் மனிதம்பற்றி, நல்ல நட்பிற்காய் பின்விளைவுகள் எதையும் யோசிக்காது, கைகொடுக்கும் உண்மையான தருணங்கள் குறித்து….
இந்த வரிகளின் உண்மையைப் பலர் உணர்வதில்லை.
3
டிசே தமிழன் says:
July 20th, 2006 at 8:44 am edit
சந்திரவதனா, முதலாவது பின்னூட்டத்தை ஏற்கனவே அனுமதித்துவிட்டதனால் எந்தப் பின்னூட்டத்தை அனுமதிப்பது/விலத்துவது என்று சற்றுக்குழப்பமாய் இருப்பதால் (இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால்) இரண்டையும் அனுமதித்திருக்கின்றேன். தவறாக நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.
4
டிசே தமிழன் says:
July 20th, 2006 at 10:35 am edit
சந்திரவதனா,
பிரதியொன்று எழுதப்பட்டு பொதுவில் வைக்கப்பட்டுவிட்டால், வாசகர் தனக்குரிய பிரதியாய் வாசிக்கவும் விமர்சிக்கவும் உரிமையிருக்கிறது என்று நம்புவதால் நீங்கள் வைக்கும் கருத்துக்கள் எதையும் அகற்றவேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
நிற்க.
முதலாவது பின்னூட்டத்தையும் எனக்குத் தனிப்பட்டதாய் சொல்லப்பட்டதாய் நினைக்காது, பிரதியிலுள்ள கதைசொல்லிக்கு கூறப்பட்டதாகவே எடுத்துக்கொள்கின்றேன். எனவே நீங்கள் எழுதியதில் தவறேதும் இருப்பதாய் நினைக்கவில்லை. எழுதப்படும் ஆக்கங்களிலுள்ள விடயங்களில் உண்மையாய் நடந்தது / நடக்கவில்லை என்று அடிக்குறிப்பிடுவது கூட வாசிப்பவரின் வெளிக்குள் அத்துமீறுவதாய் இருக்கும் என்று நினைப்பதால் பல சமயங்களில் இவ்வாறான கேள்விகளைக் கடந்தே போயிருக்கின்றேன். இப்போது கூட அப்படிக் கடந்துபோகலாம் என்றாலும் -மெளனம் சம்மதமாய் போய்விடக்கூடும் என்பதால்- ஒரு சிறு குறிப்பாய் இந்தக்கதையில் எந்த இடத்திலும் நான் இல்லை என்பதைக் கூறிக்கொள்கின்றேன். இந்தக்கதைசொல்லியைப் போல இருந்திருந்தால் கூட அதற்காய் இன்றையபொழுதில் வருந்தியிருப்பேனே தவிர, இதை வெளிப்படையாகச் சொல்ல அவமானப்படவோ வெட்கப்படவோ செய்திருக்கமாட்டேன் என்பது மட்டும் உறுதியாய்த் தெரியும்.
இந்தக்கதையை எழுத ஆரம்பித்தபோது சரி/பிழை, நியாயம்/அநியாயம் என்று எந்த ஒருபக்கமும் சாய்ந்துவிடக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாயிருந்தேன். அப்படியிருந்தும் வளாக சஞ்சிகையில் இந்தக்கதை வெளிவந்தபோது, குழுக்களின் வன்முறைக்கு ஆதரவான கதை என்றுதான் விமர்சிக்கப்பட்டது (பதிவுகள் இணையத்தளத்திலும் சில நண்பர்கள் ஒரு சார்பாய் இருக்கின்றது என்று விவாதித்ததாய் நினைவுண்டு).
…..
மற்றும்படி, இத்தகைய விமர்சனங்களையும் விட, விளிம்புநிலை மனிதர்களாய் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த இளைஞர்கள் குறித்து அக்கறைப்பட உங்களைப் போன்ற பலர் சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பதுதான் எனக்கு முக்கியமாய்ப்படுகிறது. இதை முன்பு வாசித்து, முகங்கள் தெரியாமல் மின்னஞ்சல்களில் தொடர்புகொண்ட சிலரது உணர்வுகளும் உங்களைப் போன்றே இருந்திருக்கின்றன என்பதுவும் இதத்தைத் தந்திருந்தது.
5
Chandravathanaa says:
July 21st, 2006 at 5:07 am edit
முதலாவது பின்னூட்டத்தை ஏற்கனவே அனுமதித்துவிட்டதனால் எந்தப் பின்னூட்டத்தை அனுமதிப்பது/விலத்துவது என்று சற்றுக்குழப்பமாய் இருப்பதால் (இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால்) இரண்டையும் அனுமதித்திருக்கின்றேன். தவறாக நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.
எனது கருத்துக்களை நீங்கள் கருத்துக்களாகவே ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
அழிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு அது பிடிக்கவில்லையானால் மட்டுமே அழிக்கச் சொன்னேன்.
ஒன்றை அழித்திருந்தால் மற்றையது பொருந்தாமல் போயிருக்கும். இருப்பதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லாதவரை இரண்டுமே இருப்பது நல்லது.
கதைபற்றிய, உங்கள் கருத்துக்கள் பற்றிய… எனது மேலதிக எண்ணங்களைப் பின்னர் தருகிறேன்.
6
யாத்திரீகன் says:
July 21st, 2006 at 8:15 am edit
>>>> ஒருபக்கம் இறுகிப்போய், விகாரித்த நண்பர்களின் இன்னொருபக்கத்தில் மிகமென்மையான நெஞ்சிருப்பது யான் அறிவேன். காலத்தை வெறுத்து கையாலாகதவர்களாகிய அவர்களுக்குள் உள்ளூறும் மனிதம்பற்றி, நல்ல நட்பிற்காய் பின்விளைவுகள் எதையும் யோசிக்காது, கைகொடுக்கும் உண்மையான தருணங்கள் குறித்து….
7
டிசே தமிழன் says:
July 21st, 2006 at 2:26 pm edit
சந்திரவதனா: கதை பற்றிய உஙகள் கருத்து அறிய ஆவல்; எழுதுங்கள்.
யாத்ரீகன்: நீங்கள் கூறவந்தது எதுவோ இடைநடுவில் நின்றுவிட்டது போல :-).
8
மலைநாடான் says:
July 23rd, 2006 at 1:41 pm edit
புலத்தில் எங்கள் இளைய தலைமுறை குறித்த மிகச் சரியான நோக்குடன் வந்த சொற்பமான பதிவுகளில் இதுவும் அடங்கும் எனக் கருதுகின்றேன்.
//நாங்கள் எதையும் அளவோடு அனுபவிக்கத்தெரியாதவர்களெண்டும், பல்வேறுபட்ட மரபின் இழைகள் எம்மை இறுக்க பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள்//
இது எங்கள் சமுகம் குறித்ததுப் பார்க்கபட்ட ஒரு நுட்பமான பார்வை எனக்கருதுகின்றேன்.
//ஒருபக்கம் இறுகிப்போய், விகாரித்த நண்பர்களின் இன்னொருபக்கத்தில் மிகமென்மையான நெஞ்சிருப்பது யான் அறிவேன். காலத்தை வெறுத்து கையாலாகதவர்களாகிய அவர்களுக்குள் உள்ளூறும் மனிதம்பற்றி, நல்ல நட்பிற்காய் பின்விளைவுகள் எதையும் யோசிக்காது, கைகொடுக்கும் உண்மையான தருணங்கள் குறித்து என்னைப்போன்ற ஒரு சிலரே அறிவர்//
இதன் பொருட்டே இளைஞர்கள் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் உண்டு. இவர்களை அன்பு செய்தால், அவர்களிடமிருந்து ஆக்க பூர்வமான பல விடயங்களை எங்கள் சமுகம் பெற்றுக் கொள்ளலாம் என்பது எனது எண்ணம்.
டி.சே!
அருமையான ஒரு பதிவினைத் தந்தமைக்காக
உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
9
டிசே தமிழன் says:
July 24th, 2006 at 7:35 am edit
நன்றி மலைநாடன்.
10
Chandravathanaa says:
July 25th, 2006 at 2:03 am edit
இளங்கோ,
எப்போதுமே ஒரு கதை தன்னிலையில் இருந்து எழுதப் படும் போது கதைசொல்லியும் கதாசிரியரும் ஒருவரே என்ற பிரமை வாசகர்கள் மனதில் ஏற்பட்டு விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
நானே, சில சமூகப் பிரச்சனைகளை தன்னிலையில் நின்று எழுதியதால் அது என் வீட்டுப் பிரச்சனையோ என்ற கேள்விக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறேன். “இவ வீட்டில் இப்படித்தான்..” என்ற கேலிக்கும் ஆளாகியிருக்கிறேன். அப்போதெல்லாம் “இவர்கள் ஏன் இப்படிச் சிந்திக்கிறார்கள். இதை ஏன் ஒரு சமூகப் பிரச்சனையாகக் கருதுகிறார்கள் இல்லை” என்று வருந்தியிருக்கிறேன்.
ஆனால் இன்று நானே உங்கள் எழுத்தில் தடுமாறியிருக்கிறேன். நீங்கள் தன்னிலையில் நின்று எழுதியதால்.. அதுவும் உண்மை தழுவி எழுதியதால் கதைசொல்லியை நீங்களாகவே மனதுக்குள் வரித்துக் கொண்டு வாசித்து முடித்து எனது கருத்தையும் எழுதி விட்டேன்.
படர்க்கையில் ஒரு கதையை எழுதுவதையும் விட, தன்னிலையில் எழுதும் போது அந்தக் கதையின் வலு அதிகமாயிருப்பதையும் பல சமயங்களில் நான் கண்டிருக்கிறேன். உங்களது இந்தக் கதையும் தன்னிலையில் நின்று, நான் என்று எழுதப் பட்டதால் வாசிப்பவர்களிடம் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் மீது குற்றம் சொல்வதிலேயே குறியாயிருக்கும் பெரியவர்களில் பலர், புலம் பெயர்ந்ததால் கெட்டு விட்டார்கள் என்கின்ற வார்த்தைக் கோர்வையையும் மறக்காமல் அவ்வப்போது சொல்லிக் கொள்வார்கள். இன்றைய இளைஞர்களையும் விட அன்று புலம் பெயர்ந்த இளைஞர்களின் வாழ்வு மிகமிகக் கடினமானதாக இருந்தது என்பது பலருக்கும் தெரியாது. வா என்று வரவேற்க யாருமின்றிய நிலையில் புலத்தில் வாழ்வைத் தொடங்கியவர்கள் அவர்கள். அவர்களின் பிரச்சனைகள், ஏமாற்றங்கள், மனஉளைச்சல்கள்.. இவையெல்லாமே எமது சமூகத்தினரால் உணரப் பட வேண்டியவை. தொடரும் இளைய சமூகத்திடம் இப்படியான பாதிப்புக்கள் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியதும் எமது சமூகத்தின் கடமையே.
இது குறித்த ஒரு நோக்காகவே உங்கள் பதிவை நான் பார்க்கிறேன். வெட்டினார்கள், கொத்தினார்கள் என்று பார்ப்பதை விடுத்து, அவர்கள் ஏன் அப்படி ஆனார்கள், என்ற சிந்தனையோடு, அண்டி உள்ளவர்கள் அவர்களை அணுகுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் பதிவான அதற்கான சிந்தனையை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.
11
டிசே தமிழன் says:
July 25th, 2006 at 1:16 pm edit
சந்திரவதனா விரிவான பார்வைக்கு நன்றி.
…..
நீங்கள் குறிப்பிட்டமாதிரி தன்னிலையில் எழுதியதாலோ என்னவோ தெரியாது, இந்தக் கதையை வாசித்துவிட்டு ஒருசிலர் -உங்கள் மகன் இப்படியிருந்தவரா/இருக்கின்றாரா- என்று என் பெற்றோரிடமும் வினாவியது உண்டு :-).
…..
பொதுவாக அனேகர், இந்தமாதிரியான வன்முறைக் குழுக்களிருப்பது என்பது ஒரு குறிப்பிட்ட பருவத்தில்தான். ஆனால் அதைத் தாண்டி வருவதற்குள் உயிரையும் கொடுக்கவேண்டிவரலாம் என்பதே கொடூரமான யதார்த்தம்.