Tuesday, September 26, 2006

மழைக்காலம்

மழையைச் சந்திக்கும் எப்போதும் நினைவில் வருவது இரண்டு விடயங்கள்தான். தடிமன் வந்துவிடுமோ என்ற பயமும், அவளைப் பறறிய நனவிடை தோய்தலும்தான். மழையை- காதலுடன், மனதை வருட வைக்கும் நினைவுகளுடன், துளித்துளியாய் மனதில் பொழியவைக்கும் எழுத்துக்களை எழுதாத படைப்பாளிகள் மிகக் குறைவே என்றாலும் மழைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஒழுகாத கூரையில்லாத வீட்டை உடையவர்களும், வீடற்று தெருவில் உறங்குபவர்களும் மழையுடன் வேறுவிதமான உறவுகளைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.
ஊரில் இருந்தபோது நோயின் நிமிர்த்தம் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டதால் மழையில் ஒருநாளும் ஆசை தீர நனைந்ததில்லை. ஓடுகளில் கல்லால் எறிவது போல பேரிரைச்சலுடன் விழும் மழைத்துளிகளைக் கேட்டபடி, வீட்டுக்கூரையின் மூலைகளில் பீலியைப்போல(?) வழிந்து ஓடுகின்ற நீரை விடுப்புத்தான் பார்த்திருக்கின்றேன். மேலும் ஓலையால் வேயப்பட்டிருந்த எங்கள் குசினியின் இடுக்குகளுக்குள்ளால் விழும் மழைத்துளிகள், அம்மா செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாணத்தால் மெழுகும் தரையை குழிகளாக்குவதையும் பார்த்துமிருக்கின்றேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் அம்மா குண்டுத்தோசை சுடும்போது ஒவ்வொரு குழிகளிலும் தோசைமாவை வார்க்கும்போது பொங்கி தோசை வருவதைப் போல இந்தக் குழிகளிலும் நீர் விழுந்து விழுந்து சிலவேளை குமிழிகளை உருவாக்கின்றனவோ என்றுதான் உவமித்துக்கொள்வேன்.
மழைக்காலங்களில் நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணிகள் மீது ஏனோ இனந்தெரியாத பரிவு வந்துவிடுகின்றது. தங்கள் உடலைச் சிலிர்க்கவைக்க மழைத்துளிகளை உதறுகின்ற நாயை, கோழிக் குஞ்சுகளை, ஆட்டுக்குட்டிகளை மிக விருப்புடன் அதிக வேளைகளில் பார்த்துக் கொண்டிருப்பதுண்டு . அதுவும் சிலவேளைகளில் மழை பெருமழையாக உருமாறும்போது வீட்டுப் பிராணிகள் எங்கள் வீட்டு விறாந்தைக்கு பெற்றோரால் புலம்பெயர வைக்கப்படுகையில் இன்னும் நெருக்கமாய் அவற்றின் அசைவுகளை அவதானிக்க முடிந்திருக்கின்றது. மழை தொடர்ந்து பெய்கின்றபோது பாடசாலையும் இல்லாது வீட்டுக்குள் முடங்குகின்றபோது புத்தகங்களோடு விட்டுவிட்டு சில உரையாடல்களை நிகழ்த்த முடிந்ததில் ஒருவிதமான இதம் இருக்கிறது. வீட்டின் ஒரு அறை முழுதும் புத்தகங்களே நிரம்பியிருக்கும். அப்பா, நூலகங்களில் வருட இறுதிகளில் புத்தகங்கள் ஏலத்துக்கு போகும்போது விகடன், கல்கி, கல்கண்டு, கலைக்கதிர் (?), சினிமாப் புத்தகங்கள் என்று அள்ளிக்கட்டி கொண்டு வருவார். இவ்வாறான மழைப் பொழுதுகளில் அந்தப்புத்தகங்களை விறாந்தையில் வாரம்,மாதம் என்ற ஒழுங்கில் அடுக்கி பரப்பி மகிழ்வதுதான் எனது பொழுதுபோக்காய் இருக்கும். அப்படிச் செய்வது என்றுமே அலுக்க்காத விசயமாக இருந்திருக்கின்றது. அப்பாவுக்கு இருந்த புத்தகங்களின் மீதான வாஞ்சையும், அக்காவுக்கு வாசிப்பில் இருந்த தீராத மோகமும்தான் என்னைப் புத்தகங்கள் வாசிக்கத்தூண்டியிருக்கலாம் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது.. இப்படி எடுக்கப்பட்ட சஞ்சிகைகள் அத்தியாயம் அத்தியாயமாய் கட்டப்பட்டுத்தான், சாண்டியல்யனின் கடல் புறா, யவனராணி, சுஜாதாவின் பலகதைகள்(கரையெல்லம் செண்பகப்பூ இப்போதும் நினைவிலிருப்பது) போன்றவற்றை வாசிக்க முடிந்திருக்கிறது. இப்படி தொடராய் வந்தவற்றை அதுவும் ஓவியங்களுடன் வாசிப்பதில் இனம்புரியாத மகிழ்ச்சியும், உயிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.
மழைக்காலத்தில் மறக்கமுடியாத இன்னொரு நினைவு என்னவென்றால், அளவெட்டியையும் அமபனையையும் இணைக்கும் வீதியில் சைக்கிளோட்டிப் போவது. அந்த வீதியால போகும்போது இரண்டு பக்கமும் பசுமையாய் விரிந்திருக்கும் வயல்களில் இலயிக்காமல் எவரும் அவ்வளவு இலகுவில் கடந்துவிடமுடியாது. கமம் செய்வதற்கு நிலம் என்று எங்களுக்கு எதுவும் இல்லாதபோதும் வயல் மீது இருக்கும் என் காதல் அளவற்றது. அம்மாவோடு வீட்டில் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு புல்லுச் செருக்குவதாய்ப் போவதிலிருந்து… அறுவடைகள் முடிந்தபின் மிளகாய்ச்செடிகளை இன்னபிற பயிர்களை விறகுக்காய் சேகரிப்பதிலிருந்து… ஊரில் இருந்தவரை எனக்கு வயல்களோடு நெருக்கமான பிணைப்பு இருந்திருக்கின்றது. அவ்வாறான ஒரு பொழுதில்தான் அண்ணா வாங்கிகொண்டுவந்த கொத்துரொட்டியை வாழைத்தோட்டம் ஒன்றில் முதன் முதலாய் சாப்பிட்டதும்… இன்னும் பசுமையாய் இருக்கிறது. இந்த குண்டும் குழியுமான -தாரையே தசாப்தங்களாய் காணாத- வீதியால் போகும்போது, என் வயதொத்தவர்கள் அல்லது குறைந்தவர்கள் வாழைக்குற்றிகளை, முறிந்து மிதக்கும் மரக்கிளைகளை படகாக்கி மழைக்காலங்களில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க பார்க்க ஆசை நுரை நுரையாகப் பொங்கத்தொடங்கும் (வழமையான நிலப்பிரசினைகளால் ஒவ்வொருத்தரும் நிலத்தை வெட்டி வெட்டி வீதி சிறுத்துக் கொண்டுபோனது இன்னொரு சுவாரசியமான விடயம்). நோயின் காரணத்தாலும் பெற்றோர் கண்டு விட்டால் என்னாகும் என்ற பயத்தாலும் வீதியில் நின்று அவர்களை இரசித்துவிட்டு கையசைத்துவிட்டு நகர்ந்தபடி இருந்திருக்கின்றேனே தவிர அவர்களோடு அசைதீர மழைநீரில் ஒருநாளும் சேர்ந்து விளையாடியது கிடையாது.
புலம்பெயர்ந்து வந்தபின்னும் மழையில் ஆசைதீர ஒருநாளும் நனைந்ததில்லை. அவள் -நான் இன்று முழுவதுமாய் மழையில் நனைந்தேன்- என்று சிலிர்த்துக் கூறியபோது என்னால் ஏன் இப்படி ஒருபோதும் இருக்கமுடியவில்லை என்றுதான் எண்ணத்தோன்றியது. வீட்டையே உலகமாய் திணிக்கப்படும் பெண்களுக்கு மழை -என்னால் புரிந்துகொள்ளமுடியாத- பல மொழிகளை அவர்களுக்காய்ப் பேசவும் கூடும். ஒரு மழைப்பொழுதில் பிறர் பற்றிய பிரக்ஞையின்றி நனைதல் என்பது ஒரு பெண்ணுக்கு மிகபெரும் சுதந்திரமாயும் இருக்கலாம். அவள் -உன்னோடு நனையும் ஒரு மழைப்பொழுதுக்காய் காத்திருக்கின்றேன்- என்கின்றாள். மழையை வீட்டுக்குள் இருந்து மட்டும் இரசித்துக்கொண்டிருப்பவனுக்கு அது எவ்வ்ளவு சாத்தியம் சாத்தியமின்மை என்று தெரியாதபோதும் என்றேனும் ஒருநாள் அவளோடு மழையில் முழுதாய் நானும் நனைந்துவிடக்கூடும் போலத்தான் தோன்றுகின்றது.
அப்போது…அந்தப் பொழுதை என்ன பெயரிட்டு அழைப்போம் கண்ணே?
…………………….
-நீர்- பற்றி எழுதப்பட்ட… நினைவுக்கு வந்த இரண்டு கவிதைகள்
நீர்
~ரமேஷ்-பிரேம்
1.
கண்கள் கலங்கி
முகமே குளமான
நீர் நிலை
ஆழம் காண மூழ்கின்றேன்
இரவில் அமிழ்ந்து தரை படிந்த நிலாவில்
பாதம் பதிய
வசதியாகத் தியானத்தில்
அமர்ந்து விடுகின்றேன்
தியானவெளியாகவும் மையப்போதமாகவும் குளம்
ஆனால் இது
அந்தரத்தில் மிதக்கிறத
2.
மழையைப் போல நீ
எனக்கு எல்லாம் தந்தாய
3.
தூறலாய்த் தொடங்கி
படிப்படியாக வலுத்து
ஒவ்வொரு இழையாக இணைந்து
சலசலவென ஓடோடி
தியானத்தின் உச்சியிலிருந்து உன்னை
அவிழ்த்துக் கொண்டிருக்கிறாய்
அருவ
4.
நீ நடந்து செல்லும் பாதையெல்லாம்
ஈரம்
அது உனது பண்பு
என் உடலெங்கும் பலவாகி ஓடுவது
ஒரேயொரு ஆற
5.
கடலைப் போல ஒரு
உடல் நீ
கவிதையைப் போல ஒரு
கடல் ந
6.
குளம் மழை அருவி ஆறு கடல்
எல்லாம் நீ
இப் பெயர்களில் பொருந்தும்
வடிவம் நான
7.
குளம் தியானம்
மழை குதூகலம்
அருவி கொண்டாட்டம்
ஆறு திருவிழா
கடல் கலவி - எல்லாம்
மனசெனச் சுழலும் ஒரு துள
9.
மழையைப் போல நீ
எனக்கு எல்லாம் தந்தாய

நன்றி: கறுப்பு வெள்ளைக் கவிதை
(Friday, May 26th, 2006 at 8:55 am)

1 comment:

டிசே தமிழன் said...

1
சாந்தகுணசீலதேவன் says:
May 26th, 2006 at 9:29 am edit
மழைத்தூறலிலே கடற்கரையோரமாக நடப்பது நமக்குப் பிடித்தது.
2
Flying_Dragon says:
May 26th, 2006 at 12:32 pm edit
ரமேஷ் பிரேமின் கவிதைகள் கொஞ்சம் நமக்கு தூரத்திலேயே இருப்பதாய் தெரிகிறது. அங்கே இருப்பதுதான் சரியான்னு கேட்டா ஆமாம்னு சொல்லிடுவேன் :-) மழையை பற்றிய தோய்தல் நல்ல இருக்கு.
3
சின்னக்குட்டி says:
May 26th, 2006 at 12:45 pm edit
மழைக்காலத்தை பற்றிய பதிவு நன்றாயிருக்கிறது
4
Padma Arvind says:
May 26th, 2006 at 1:25 pm edit
அருமையாக எழுதி இருக்கிறீர்கள். தூறலில் நடந்து போவது இன்பம் என்றாலும் மழை என்றால் ஒழுகுவதை சேர்க்க ஆங்காங்கே வைத்திருக்கும் வாளிகளும்,தெரியாமல் காலில் இடறி தண்ணீர் கொட்ட வாங்கும் வசவுகளும்தான் நினைவுக்கு வருகிறது.அதிலும் பெரிய குடையை யார் வகுப்பில் வைத்துகொள்வது என்று ஒரு சண்டையே நடக்கும். கடைசியில் அண்ணனிடம்தான் குடை இருக்கும்.
என் மகனை நானும் நனையவிடுவதில்லை:)
5
டிசே தமிழன் says:
May 26th, 2006 at 1:26 pm edit
சாந்தகுணசீலதேவன் (என்ன பெயரப்பா, எழுதவே எனக்கு மூச்சு முட்டுகிறது), ப்ளையிங் ட்ராகன் மற்றும் சின்னக்குட்டி பின்னூட்டங்களுக்கு நன்றி.
…..
சாகுசீதே: உங்களுக்கு சீனாவிலோ, கொங்கொங்கிலோ மழை தூறும்போது காலாற நடந்த ஞாபகம் வருகிறது போ
ப்ளையிங் ட்ராகன்: நீங்கள் பறக்கும்போது நனையாத ‘மழையா’ என்ன? நீங்கள் மனிதராய் இப்போது இல்லை என்று தெரிந்தோ என்னவோ உங்கள் பின்னூட்டத்தை எல்லாம் என்னுடைய தளம் spamற்கு அனுப்புகிறது. என்ன செய்ய நான் :-( ?
6
டிசே தமிழன் says:
May 26th, 2006 at 1:44 pm edit
பத்மா பின்னூட்டத்துக்கு நன்றி.
….
/என் மகனை நானும் நனையவிடுவதில்லை/
எல்லாப் பெற்றோர்களுக்கும் பிள்ளைகள் மீது அளவுகடந்த பிரியம் இருக்குந்தானே. இபோதும்கூட பழைய ஞாபகத்தில் எனது அம்மாவும் மழை பொழியும் நாள்களில் அதைப் போட்டுக்கொண்டு போ, இதை எடுத்துக்கொண்டு போ என்றுதான் கூறுவார் :-).
7
சாந்தகுணசீலதேவன் says:
May 26th, 2006 at 2:02 pm edit
ம்ம்ம்…. இல்லையே இங்கேயும் அங்கேயும் நடந்ததல்லவா ஞாபகம் வருகிறது.
8
டிசே தமிழன் says:
May 26th, 2006 at 2:34 pm edit
முதலாவது படம் விளங்குகிறது. இரண்டாவது படம்…..? படித்த இடமா?
9
சாந்தகுணசீலதேவன் says:
May 26th, 2006 at 2:41 pm edit
:kelvi:
10
டிசே தமிழன் says:
May 26th, 2006 at 2:46 pm edit
நான் தான் கூட நினைத்து குழம்பிவிட்டேனாக்கும் :(. இரவு பியர் அடித்தால் எல்லாம் சரியாகிவிடும் :).
11
சாந்தகுணசீலதேவன் says:
May 26th, 2006 at 2:56 pm edit
இல்லை இரண்டுமே சரிதான்.
வசித்ததும் படித்ததுமே
12
Mathy Kandasamy says:
May 26th, 2006 at 3:01 pm edit
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் டீசே. அலைமோதும் நினைவுகள் என்னுடைய பதிவிலும் வரக்கூடும்.
13
Mathy Kandasamy says:
May 26th, 2006 at 3:03 pm edit
// பியர் அடித்தால் எல்லாம் சரியாகிவிடும் . //
ங்கே!!! அண்ணேஏஏஏ.. முதல்ல ஒரு வைன் கூலரையெண்டாலும் குடியுங்கோ. அதுக்குப்பிறகு பியர்-கியரெண்டு கியரில்லாமல் போவம்.. :P
14
யாரொ says:
May 26th, 2006 at 3:34 pm edit
டி ஜே, மிகவும் ரசிக்கத்தக்க நடையில் எழுதியுள்ளீர்கள்…. ஊரில் மழையில் நனைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை, அதுவே பழக்கமன பின் நனைய சந்தர்ப்பம் கிடைத்த பொழுதுகளிலும் மனம் நனைய விடுவதில்லை…. :(
அவளும் நீங்களும் நனையும் அந்த நாள் விரைவில் வர கடாவது… :Angel:
15
ஷ்ரேயா says:
May 26th, 2006 at 7:40 pm edit
ஐயோ பாவம் டிசே நீர். மழையில நனையக் கிடைக்கேல்லையா? த்சு த்சு! (நக்கலுக்குச் சொல்லயில்ல) :)
வாய்ப்புக் கிடைத்தால், மழை பெய்கையில் கடற்கரையில் நின்று பாருங்கள்.. அதுவும் கும்மாளம் போடக்கூடிய காய்களோடு! வலு முசிப்பாத்தி.
மற்றும்படி மழைக்குப் பிறகு அதன் போதோ, உறைக்கிற சுண்டலும், சுடச்சுட இஞ்சிப் பிளேன்ரீயும் சொர்க்கமென்றறிக! :visil:
16
ஷ்ரேயா says:
May 26th, 2006 at 7:43 pm edit
ஒரு கோடு தவறி விட்டது. இப்பிடி இருந்திருக்க வேண்டும்:
மற்றும்படி மழைக்குப் பிறகு / அதன் போதோ, உறைக்கிற சுண்டலும், சுடச்சுட இஞ்சிப் பிளேன்ரீயும் சொர்க்கமென்றறிக! :visil:
17
டிசே தமிழன் says:
May 27th, 2006 at 5:19 pm edit
மதி, யாரோ மற்றும் ஷ்ரேயா நன்றி.
….
/ஒரு வைன் கூலரையெண்டாலும் குடியுங்கோ. அதுக்குப்பிறகு பியர்-கியரெண்டு கியரில்லாமல் போவம்.. /
தங்கத்தீக்கு முன்னால் குடிக்கக்கூடாது என்ற மரியாதை மட்டுந்தான் இதற்குக் காரணம். மற்றும்படி வெளியில் போனால், வேறு ஆளாம் :-).

/ ஊரில் மழையில் நனைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை, அதுவே பழக்கமன பின் நனைய சந்தர்ப்பம் கிடைத்த பொழுதுகளிலும் மனம் நனைய விடுவதில்லை…. /
உண்மைதான் யாரோ. இப்படி பழக்கப்பட்ட பலவிசயங்களை மீறுதல் என்பது கூட சற்றுக்கடினமான விடயம்தான்.
…..
/ஐயோ பாவம் டிசே நீர். மழையில நனையக் கிடைக்கேல்லையா?/
‘மழை’ ஷ்ரேயா நானும் மழையில் நனைந்ததில்லை என்று பின்னூட்டம் எழுதியிருந்தால்தான் எனக்கு அதிசயமாய் இருந்திருக்கும் :-).
/மற்றும்படி மழைக்குப் பிறகு அதன் போதோ, உறைக்கிற சுண்டலும், சுடச்சுட இஞ்சிப் பிளேன்ரீயும் சொர்க்கமென்றறிக!/
இதை -மழையில் நனையாமல்- மழைபெய்துகொண்டிருக்கும்போது வீட்டுக்குள் இருந்து வேடிக்கை பார்த்தபடி செய்திருக்கின்றேன் :-(.
18
வசந்தன் says:
May 27th, 2006 at 8:05 pm edit
//அவளும் நீங்களும் நனையும் அந்த நாள் விரைவில் வர கடாவது// - யாரொ.
டி.சே யை பலிக் கடாவாக்கும் முயற்சிக்கு வருந்துகிறேன்.;-(
//மழை பெய்கையில் கடற்கரையில் நின்று பாருங்கள்.. அதுவும் கும்மாளம் போடக்கூடிய காய்களோடு! வலு முசிப்பாத்தி.
//
ஷ்ரேயா,
உது எந்தக் காய்கள்?
நான் சொன்ன காய்களோ? ;-)
19
யாரொ says:
May 28th, 2006 at 2:57 pm edit
வசந்தகுமரா அது கடவது எண்டு வந்திருக்க வேண்டுமாக்கும்…
//டி.சே யை பலிக் கடாவாக்கும் முயற்சிக்கு வருந்துகிறேன்.;-(
//
டி ஜெ ஐ கவுக்க போறீர் போல…. :dance:
20
Chandravathanaa says:
May 28th, 2006 at 3:52 pm edit
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்
21
மலைநாடான் says:
May 28th, 2006 at 5:11 pm edit
டி.சே. நீங்கள் 768 லைன்போலகிடக்கு. அளவெட்டி அம்பனையெல்லாம் அளக்கிறியள்?
22
ஷ்ரேயா says:
May 28th, 2006 at 6:43 pm edit
வசந்தன் - நீர் எப்ப காய்களப் பற்றிக் கதைச்சனீர்? “பேய்க்” காய்களோ? :doubt:
23
சாந்தகுணசீலதேவன் says:
May 28th, 2006 at 9:28 pm edit
பேய்க்காயளோ? :faint:
:ninaippu:
வட்டுக்காயளாக்கும் :adi:
24
டிசே தமிழன் says:
May 29th, 2006 at 7:00 am edit
பின்னூட்டங்களுக்கு நன்றி.
….
/ஷ்ரேயா,
உது எந்தக் காய்கள்?
நான் சொன்ன காய்களோ? ;-) /
வசந்தன், நானும், ஷ்ரேயா அந்தக்’காயை’ப்பற்றித்தான் கதைக்கின்றாவோ என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகு பன்மையில் இருக்க, ஏன் எனக்கு வேண்டாத வம்பு என்று அடக்கி வாசித்தேன்.
/ நீர் எப்ப காய்களப் பற்றிக் கதைச்சனீர்? “பேய்க்” காய்களோ?/
பாரும், இப்பவும் விளங்காது அப்பாவியாக இருக்கின்ற ஷ்ரேயாவை வம்புக்கு இழுக்காது விடுவதுதான் நமக்கு நல்லது :-).
….
/நீங்கள் 768 லைன்போலகிடக்கு. அளவெட்டி அம்பனையெல்லாம் அளக்கிறியள்? /
அடடா, ஞாபகமறதியின் அடுக்குகளில் புதைந்திருந்த பேரூந்தினையும் நினைவுபடுத்திவிட்டீர்கள் மலைநாடன். நீங்களும் அந்தப்பக்கம் அலைந்து திரிந்திருக்கின்றீர்கள் போல :-).
25
செல்வராஜ் says:
May 29th, 2006 at 7:20 am edit
மழைக்கால நினைவலைகளை மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் டிசே. உங்கள் நினைவுகளும், அவற்றை எழுதிய பாங்கும், எழுத்தின் நடையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
நான் நனைந்திருக்கிறேன். ஆனாலும் நிறையச் சமயங்களில் நனையமுடிந்ததில்லை என்ற ஆதங்கமும் இருந்திருக்கிறது. சென்ற வாரங்களில் மிதமாய்த் தூறிய ஒருநாளில் என் ஐந்து வயதினளிடம் ‘நனையலாம் வா’ என்று அழைத்தேன். மாட்டேன் என்று ஓடிவிட்டாள். நனையக்கூடாது என்ற பிறரது பாடம் ஆழப் பதிந்து விட்டது போலும்.
உங்கள் உரையே முழுமையாக இருக்கிறது. இறுதியில் இருக்கிற ரமேஷ்-பிரேம் கவிதை அவசியம் இல்லை. உண்மையில் அது இல்லாமல் இருந்திருந்தாலே இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
26
ஷ்ரேயா says:
May 29th, 2006 at 7:43 am edit
//அப்பாவியாக இருக்கின்ற ஷ்ரேயாவை //
:faint: :O)
27
வசந்தன் says:
May 29th, 2006 at 10:14 am edit
//வசந்தன் - நீர் எப்ப காய்களப் பற்றிக் கதைச்சனீர்? “பேய்க்” காய்களோ? //
ஷ்ரேயா,
அதேதான். ஆனா அந்தப் பேய்க்காயளுக்குள்ள தனியாப்பிரிச்சு கொஞ்ச காய்கள் பற்றிக் கதைச்சிருப்பன், ‘உன்ர காய், என்ர காய்’ எண்டு கண்டியளோ? (அது பிறகு, துண்டு, சரக்கு எண்டு பின்னூட்டத்தில விரிவடைஞ்சு கொண்டு போனது வேற விசயம்)
சாந்தகுணசீலதேவரே,
வட்டுக்காய் எண்டு சொல்லி இன்னுமின்னும் என்னை இளமையாக்கிறதுக்கு நன்றி. (என்னைத்தானே சொன்னியள்?)
28
வசந்தன் says:
May 29th, 2006 at 10:18 am edit
//வசந்தகுமரா அது கடவது எண்டு வந்திருக்க வேண்டுமாக்கும்…//
அப்ப ‘யாரொ’ எண்டது சரிதான் போல.
ஆனால் டி.சே, ‘யாரோ’ எண்டதைத்தான் பிழையா எழுதிப்போட்டியள் எண்டு நினைச்சிட்டார்போல. (முந்தி அந்தப்பேரில ஒராள் பின்னூட்டங்களில வாறவர்). ஆனாலும் ஒண்டுக்குப் பலதடவை ஒரேமாதிரி எழுதி நீங்கள் எழுதிறதுதான் சரியெண்டு நிரூபிச்சிட்டியள்.
29
டிசே தமிழன் says:
May 29th, 2006 at 1:23 pm edit
நன்றி செல்வராஜ். ரமேஷ்-பிரேமின் கவிதையை ஒரு நண்பருக்கு அனுப்புவதற்காய் தட்டெழுத்துச்செய்து வைத்திருந்தேன். இந்தப்பதிவை எழுத அதுவும் நினைவுக்கு வர இணைத்திருந்தேன்.
….
/ சென்ற வாரங்களில் மிதமாய்த் தூறிய ஒருநாளில் என் ஐந்து வயதினளிடம் ‘நனையலாம் வா’ என்று அழைத்தேன். மாட்டேன் என்று ஓடிவிட்டாள். நனையக்கூடாது என்ற பிறரது பாடம் ஆழப் பதிந்து விட்டது போலும். /
தவறாக நினைக்கமாட்டீர்கள் என்றால், நீங்கள் எழுதிய இதை வாசித்தபோது நேற்று வாசித்துக்கொண்டிருந்த முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்றுதான் எனக்கு ஞாபத்துக்கு வந்தது.
தம் மக்கள் மழலை மொழி
‘டுட்டு’ என்று ஒருத்தன் குறிப்பிடும் ரயிலை
‘டாட்டா’ என்பானாம் இன்னொருத்தன்.
‘சாச்சா’ என்பாளாம் சாப்பாட்டை ஒருத்தி.
பிஸ்கட்டை ‘அக்கி’ என்று சொல்பவளும்,
‘பைபை’ என்று பைக்கை சொல்பவளும்.
டிவியை ‘டிடி’ என்பவனுமாக
வித்தியாசங்களால் நிறைந்திருக்கிறது
குழந்தைகளின் உலகம்.
எல்லாவற்றையும் எல்லாரும்
ஒரே மாதிரி சொல்வதற்கு பள்ளிக்கூடத்தில்
சொல்லித்தருவோம் அவர்களுக்கு.
(நன்றி: அகி)
…..
ஷ்ரேயா, வசந்தன் :-).
30
சின்னக்குட்டி says:
May 29th, 2006 at 3:31 pm edit
//சுஜாதாவின் பலகதைகள்(கரையெல்லம் செண்பகப்பூ இப்போதும் நினைவிலிருப்பது//
உந்த கரையெல்லாம் செண்பகப்பூ கதை பெயர் மாற்றம் செய்து தமிழ் திரை படமாக வந்ததென்று நினைக்கிறன்…….என்ன படமென்று ஞாபகம் வருதில்லை
31
மலைநாடான் says:
May 29th, 2006 at 3:45 pm edit
//நீங்களும் அந்தப்பக்கம் அலைந்து திரிந்திருக்கின்றீர்கள் போல //
பின்ன…
அது கவிதையல்ல. வாழ்க்கையின் வரிகள்.
32
ஷ்ரேயா says:
May 29th, 2006 at 6:14 pm edit
அடட! அந்.ந்..ந்..ந்தப் பேய்க்காய்களா? :)
நான் குறிப்பா இன்ன காய்களெண்டு சொல்லேல்ல (நானொரு அப்பாவி கண்டீரோ!!).. ஆனா நீர் சொன்ன காய்களை டிசே விரும்பக்கூடும்! :dance:
33
செல்வராஜ் says:
May 29th, 2006 at 9:20 pm edit
எல்லாவற்றிற்கும் எப்போதும் கைவசம் கவிதை வைத்துக் கொண்டு சுற்றுவீர் போலிருக்கிறது! :-)
கவிதை நன்றாக இருக்கிறது. என்னவோ செய்கிறது!
34
டிசே தமிழன் says:
May 30th, 2006 at 8:32 am edit
/உந்த கரையெல்லாம் செண்பகப்பூ கதை பெயர் மாற்றம் செய்து தமிழ் திரை படமாக வந்ததென்று நினைக்கிறன்……./
சின்னக்குட்டி, சுஜாதாவின் சில கதைகள் திரைப்படமாக வெளிவந்திருக்கின்றன (உ+ம்:விக்ரம்) என்று அறிந்திருக்கின்றேன். இந்தக் கதையும் திரைப்படமாய் வந்திருக்கிறது என்று அறிவது எனக்கு புதிய விடயம்.
…..
/அது கவிதையல்ல. வாழ்க்கையின் வரிகள். /
மலைநாடன், அந்த அனுபவங்கள் குறித்து நீங்கள் எழுதினால், நாங்களும் அடடா என்று மனதுக்குள் புகைந்து பொறாமைப்படலாம் அல்லவா :-)?
…..
/ஆனா நீர் சொன்ன காய்களை டிசே விரும்பக்கூடும்! /
அதுவும் சரிதான் ஷ்ரேயா :-).
…..
செல்வராஜ் :-).