Tuesday, September 26, 2006

தபாலில் வந்த சொர்க்கம்

நியூ புக்லாண்ட்னினூடாக இணையத்தில் புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம் என்றறிந்தபோது காணாததைக் கண்ட கெலிதான் எனக்கு வந்தது. தமிழ்நாட்டு நண்பர்கள் சோற்றை ஒவ்வொரு கறிகளுடன் கறியுடன் சாப்பிடுவதுபோல கவிதைகள் தனிய, கட்டுரைகள் தனிய என்று ஓடர் செய்து விருந்துண்ணுவோம் என்று தீர்மானித்து, கவிதைத் தொகுப்புகள் எனக்கு; கட்டுரைத் தொகுப்புக்கள் உனக்கு; என்று எனக்கும் ஒரு நண்பருக்குமாய் சேர்த்து வாங்கியிருந்தேன்.
இன்று சொர்க்கம் தபாலில் வந்து சேர்ந்தது. நண்பருக்கு கிடைக்கமுன்னர் எனக்குக் கிடைக்கவேண்டும் என்ற அவாவில் சுண்டக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால்பணம் (மறந்திருந்த சொலவடையை ஞாபகப்படுத்திய அம்மாவுக்கு நன்றி) என்பதையும் அசட்டை செய்து, எனக்கு வான் மூலமும் அவருக்கு கப்பல் மூலமும் புத்தகங்கள கிடைக்க ஏற்பாடு செய்திருந்தேன்.
எனக்குக் கிடைத்த இன்பத்தைக் கண்டு நீங்களும் இன்புறுங்கள் என்பதற்காய் இந்தாங்கோ பிடியுங்கோ பட்டியல்…! (சிலருக்கு வயிற்றெரிச்சல் வரும் என்பதும் எனக்குத் தெரியும். என்ன செய்ய better next time என்று வாழ்த்தி உங்கள் கண்ணீரைத் துடைத்துவிடுகின்றேன் :-) ).

(1) கொலை மற்றும் தற்கொலை பற்றி - ரமேஷ்-பிரேம் (நம்மாளுகள் இல்லாமல் விருந்து விருந்தாகுமா?)
(2) உப்பு - ரமேஷ் - பிரேம்
(3) இரவு மிருகம் - சுகிர்தராணி
(4) அகி - முகுந்த் நாகராஜன்
(5) தவளை வீடு - பழனிவேள்
(6) கல் விளக்குகள் - என்.டி.ராஜ்குமார்
(7) நீலி - மாலதி மைத்ரி
(8) நீர் வெளி - அய்யப்ப மாதவன்
(9) நாகதிசை - ராணிதிலக்
(10) தந்துகி - ஆதவன் தீட்சண்யா
(11) பிறகொருநாள் கோடை - அய்யப்ப மாதவன்
(12) சொற்கள் உறங்கும் நூலகம் - யவனிகா சிறிராம்
(13) அரூப நஞ்சு - அழகிய பெரியவன்
(14) எதிர்ப்புக்கள் மறைந்து தோன்றும் இடம் - லக்ஷ்மி மணிவண்ணன்
(15) கடவுளின் நிறுவனம் - யவனிகா சிறிராம்
(16) வலியோடு முறியும் மின்னல்- ஜெ.பிரான்சிஸ் கிருபா
(17) அய்யப்பன் கவிதைகள் - என்.டி.ராஜ்குமார் (தமிழில்)
(18) மீண்டும் கடலுக்கு - சேரன் (நூலகம் இணையத்தளத்தில் கிடைக்கிறது)
(19) சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகள்-மூலமும் உரையும் - ந.முருகேச பாண்டியன்
(20) அதீதனின் இதிகாசம் - பிரேம்- ரமேஷ்
சும்மா உடனே மேலோட்டமாய் தொகுப்புக்களை புரட்டியபோது, இந்தப் பின்னட்டை எழுத்துக்கள் முகத்தில் அறைந்தன…
பறையர் சக்கிலியர் பள்ளர் சேரி
அல்லது
அம்பேத்கர் காலனியே
என் கிரகம் உலகம் நாடு
மாநிலம் மாவட்டம் வட்டம் ஒன்றியம்கூட
அவையே
அவற்றால் ஒதுக்கப்பட்டு
புறத்தே இருப்பவை எவையானாலும்
நானறியாதவை மற்றும்
நானறியக்கூடாதென்று நீங்கள் விரும்பியவை
-ஆதவன் தீட்சண்யா

(Tuesday, May 23rd, 2006 at 4:53 pm )

1 comment:

டிசே தமிழன் said...

1
வசந்தன் says:
May 23rd, 2006 at 5:25 pm edit
//தமிழ்நாட்டு நண்பர்கள் ஒவ்வொரு கறிகளுடன்//
நல்ல அவதானிப்பு.
எங்கட குழைச்சடிக்கிற சாப்பாட்டு முறையால அவங்களிட்ட நக்கலடிபட்டிருக்கிறன்.
சாப்பாட்டு முறையில நான் மாற்றிக்கொண்ட ஒரேவிசயம், பொதுவிடத்தில சாப்பிட்டு முடிய கைசூப்பிறதைத்தான்.
2
மலைநாடான் says:
May 23rd, 2006 at 6:17 pm edit
அப்ப இனி கொஞ்ச நாளைக்கு இங்காலப் பக்கம் வரமாடளா ?
3
ஷ்ரேயா says:
May 23rd, 2006 at 7:04 pm edit
//சிலருக்கு வயிற்றெரிச்சல் வரும் என்பதும் எனக்குத் தெரியும். என்ன செய்ய better next time என்று வாழ்த்தி உங்கள் கண்ணீரைத் துடைத்துவிடுகின்றேன் :-)//
நறநற!!
4
kana Praba says:
May 23rd, 2006 at 7:11 pm edit
இணையம் மூலம் புத்தகம் வாங்குவதற்கு எவ்வளவு நாட் பிடிச்சது?
அனுப்பும் செலவு நியாயமானதாக் இருந்ததா?
சொல்லுங்கோவன்.
5
ஈழநாதன் says:
May 23rd, 2006 at 7:17 pm edit
அப்ப நானும் ஒரு பட்டியலும் படமும் போடவேண்டுமென்கிறீர் என்ன?
6
டிசே தமிழன் says:
May 23rd, 2006 at 8:00 pm edit
/எங்கட குழைச்சடிக்கிற சாப்பாட்டு முறையால…/
வசந்தன், நீர் இப்படிச்சொல்லத்தான் சென்ற வாரவிறுதியில் நடந்த சம்பவமொன்று நினைவுக்கு வருகின்றது. வளாகத்தில் படித்த தோழியொருத்தியின் திருமண வைபவத்தில், பெடியங்கள் நாங்கள் சாப்பாட்டை - சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரைப்போல வருமா-மாதிரி சொந்தக்கையால் குழைந்து/குழைத்து வெட்டிக்கொண்டிருக்க, வந்திருந்த தோழியர் எல்லாம் முள்ளுக்கரண்டியால்- கரண்டிக்கு நொந்திடும் கணக்கில்-அள்ளியள்ளிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். வழமைபோல வாயைச் சும்மா வைத்திருக்காமல், பாத்தியளா, பெடியங்கள் நாங்கள்தான் ‘தமிழ்க்கலாச்சாரத்தை’ காப்பாற்றுகின்றோம் என்று வாய் தவறிச் சொல்லிவிட்டேன். பிறகு நடந்ததை எல்லாம் என் ‘கெளரவம்’ மேலும் உயர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவும், சபைநாகரிகம் கருதியும் இங்கே வாய்மூடி மெளனிக்கின்றேன்.
7
டிசே தமிழன் says:
May 23rd, 2006 at 8:11 pm edit
/அப்ப இனி கொஞ்ச நாளைக்கு இங்காலப் பக்கம் வரமாடளா ? /
அடடா சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள், மலைநாடன். ஏற்கனவே நீங்கள் குறிப்பிட்ட விடயத்தை தீர்மானித்திருந்தேன். இப்ப இப்படி கவிதை, கட்டுரைத் தொகுப்பு என்று வந்திறங்கினால்….ஆகா அதுதானே சொர்க்கம்!
……
ஷ்ரேயா, உங்களை நீண்டகாலத்திற்கு பிறகு வலைப்பதிவில் காண்பதால் உங்கள் ‘நறநற’ கோபத்தையெல்லாம் கணக்கில் எடுக்கமாட்டேன் என்க :-).
…..
/இணையம் மூலம் புத்தகம் வாங்குவதற்கு எவ்வளவு நாட் பிடிச்சது?
அனுப்பும் செலவு நியாயமானதாக் இருந்ததா?/
பிரபா, அவுஸ்திரேலியாவில் என்னவிலையில் புத்தகங்கள் விற்கப்படுகின்றன என்று தெரியாவிட்டாலும், கனடாவில் நாங்கள் கடையில் வாங்குவதை விட அரைவாசிச் செலவுக்கும் குறைவாகவே எனக்கு முடிந்தது. வான் மூலம் என்றபோது மூன்று வாரங்கள் எடுத்தது. கப்பல் என்றால் இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் கூட எடுக்கலாம். வான் மூலம் எடுத்ததால் மொத்தப் புத்தகச் செலவில் 1/3 பங்கை வான் தபாற்செலவுக்காய் கொடுக்கவேண்டியதாயிற்று. கொஞ்சம் பொறுமையாய் புத்தகங்களுக்காய் காத்திருப்பீர்கள் என்றால் கப்பல் மூலம் அனுப்பச் சொல்லி வாங்குங்கள். மிகக் குறைந்த செலவாய் இருக்கும் (வான் செலவு கிட்டத்தட்ட 5 மடங்கு கப்பல் செலவோடு ஒப்பிடும்போது என்று நினைக்கின்றேன்). அடுத்து சிறுகதைத் தொகுப்புக்களும், நாவல்களும் வாங்குவதாய் உத்தேசித்துள்ளேன். அவற்றை கப்பலில் எடுப்பதாகவே உத்தேசம் (இந்தத் தொகுப்புக்களை வாசித்து முடிக்கவும் அது வந்து சேரவும் நேரம் சரியாக இருக்கும் :-) ). மற்றது முக்கியமான விடயம், நியூபுக்லாண்ட் பொறுப்பாளர்கள் - நல்ல customer friendlyயாய்- எனது அனைத்துக்கேள்விகளுக்கும் மின்னஞ்சலில் பதிலளித்தார்கள்/பதிலளித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
/அப்ப நானும் ஒரு பட்டியலும் படமும் போடவேண்டுமென்கிறீர் என்ன? /
தலையிருக்கும்போது வால் ஆடக்கூடாது என்று சொன்னது இப்பத்தான் விளங்கிது அண்ணா :-).
8
சாந்தகுணசீலதேவன் says:
May 23rd, 2006 at 9:30 pm edit
நான் இந்தப்பதிவை வாசிக்கவில்லை என்று இத்தால் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
ஒவ்வொரு கறிகளுடனாம்…. உதுக்கெல்லாம் உந்தப்புத்தகம் ஒவ்வொண்டுக்கும் காசு அனுப்பமுதல் தமிழ் இலக்கணப்புத்தகத்துக்குக் காசு அனுப்பியிருக்கவேணும். ;-)
9
டிசே தமிழன் says:
May 23rd, 2006 at 11:47 pm edit
/ஒவ்வொரு கறிகளுடனாம்/
அது ஒவ்வொரு கறிகள்ளுடனாம் என்றிருந்திருக்கவேண்டும். கள்ளின் மயக்கத்தில் ‘ள்’ ஜ விழுங்கிவிட்டேனாம் :-).
…..
பகிடியை விட்டுச்சொன்னால், ஜந்தாறு வருடங்களுக்கு முன்னரே ஒரு நண்பர், நுஃமான் எழுதிய ஏதோ ஒரு இலக்கணப் புத்தகத்தை கொஞ்சம் பொறுமையாய்ப் படிக்கும்படி வலியுறுத்தியிருந்தார். இன்னும் அதே நிலையில்தான் இருக்கின்றேன் என்பதுதான் அவலமும் அவமானமும் நிறைந்த விடயம் :-(.
10
வசந்தன் says:
May 24th, 2006 at 1:36 am edit
டி.சே,
முன்னொருவர் சொன்ன இலக்கணப்பிழையைச் சரிவரப் புரிந்துகொண்டீரா அல்லது நக்கலுக்குத்தான் திரும்பவும் சொன்னீரா எண்டு தெரியேல.
புரியவில்லையென்றால் முதலிருந்த பிழையே பரவாயில்லை. விளக்கம் படுமோசம்.
“ஒவ்வொரு கறியுடனும்”
ஆனால் சாந்தகுணசீலனும் தேவனும் புணருவினமா மாட்டினமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்.
11
வசந்தன் says:
May 24th, 2006 at 1:40 am edit
உந்தக் ‘கை சூப்பிற பழக்கம்’ ஒரு நெருக்கத்தைத் தாறதை உணர்ந்திருக்கிறியளா?
‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படடத்தில நந்திதாவின்ர புருசன் சாப்பிட்டு முடிய கை சூப்புவார். மணிரத்தினம் சும்மா வச்ச காட்சியா? அல்லது யாழ்ப்பாணத்தான் சாப்பிட்டு முடிய கை சூப்புவான் எண்டு வைச்சாரா?
12
Suman says:
May 24th, 2006 at 3:00 am edit
What’s the URL of new book land on internet?
13
டிசே தமிழன் says:
May 24th, 2006 at 7:48 am edit
வசந்தன், தவறு விளங்கியதுதான் (பத்தாம் வகுப்பு வரை படித்த தமிழ் இன்னும் கைவிடவில்லை :-)). நேற்றிரவு நித்திரை வந்த அலுப்பில் அதை மாற்றாமல் போய்விட்டேன். இப்போது மாற்றிவிட்டேன். குறிப்பிட்டுச் சொன்னதற்கு மீண்டும் நன்றி.
….
/What’s the URL of new book land on internet? /
Suman here you go:http://www.newbooklands.com
14
டிசே தமிழன் says:
May 24th, 2006 at 8:04 am edit
‘சங்கப்பெண் கவிஞர்கள்…’ தொகுப்பை வாசித்துக்கொண்டிருந்தபோது, ந.முருகேசபாண்டியன், ….தாய்வழிச் சமூகமாய் இருந்த சமூகம் ஆண் வழிப்பட்ட சமூகமாய் மாறிவிட்டது ..’ என்று முன்னுரையில் எழுதியிருக்க வழமை போல என் வேதாளம் முருங்கைமரத்தில் ஏறிவிட்டது. பதின்மத்தில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ வாசித்ததிலிருந்து தாய் வழிச் சமூகம் ஆதியில் இருந்தது என்று மூளையில் பதிந்து விட்டாலும் (இப்போதும் கூட அதில் பெரிய மாற்றமில்லை), இங்கே மானுடவியல்/சமூகவியல் படிக்கும் நண்பர்களிடம் உரையாடும்போது தங்கள் பாடத்திடடத்தில் தாய்வழிச் சமூகம் இருந்தற்கான எந்தக் குறிப்புகளையும் தாங்கள் படித்ததில்லை என்றே கூறியிருந்தனர். உண்மையில் தாய் வழிச் சமூகம் exist ஆகியிருந்ததா? அல்லது நாங்கள் மட்டுந்தான்அதை புனைவாய் காவிக்கொண்டு திரிகின்றோமா? நண்பர்கள் இதுகுறித்து தங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொண்டால் சரியான விடை சொல்லும் ஒருவருக்கு (வேதாளம் என்று கூறிவிட்டபடியால்) நான் வாங்கிய புத்தங்களில் ஒரு புத்தகத்தை வாசித்துமுடித்தவுடன் அனுப்பிவிடுகின்றேன் :-).
15
சாந்தகுணசீலதேவன் says:
May 24th, 2006 at 9:27 am edit
அட(ப்)பாவிகளே! சாந்தகுணசீலதேவன் சமக்கிரகத்திலே ‘சாந்தம்’, ‘குணம்’, ‘சீலம்’, ‘தேவன்’ என வாழ்கின்றால் கூடுகையிலே ஒற்றுமிகான். ஆனால், ‘ஒவ்வொரு கறியுடன்” என்பதுகூடச் சரியா என யோசியுங்கோவன் தம்பிமார
அதுசரி உம்மடை சிமிலி டான்செல்லாம் எங்கையப்பு போச்சுது?
தாய்வழிசமூகம் பற்றின கேள்வி சரியான கேள்வி. வால்கா காலத்திலையிருந்தே எனக்கும் ஒரு கேள்விதான்
16
FlyingDragon says:
May 24th, 2006 at 9:56 am edit
அப்பு , முகுந்த் நாகராஜ் கவிதைகளைப்பற்றி ஆகா ஓகோவென இணையத்திலே பேசிக்கிறார்களே, இரண்டொன்றை பதிவிலே போட்டு, “கவிஞரின்(நீர்தானப்பு) ஏன் நல்லாருக்குன்னா?” என்ற விளக்கத்தையும் கொடுத்தால், வான் வழிச் செல்வு செஞ்சதுக்கு கொஞ்சம் பிராயசித்தமா நாங்களும் ஓசியிலே வாசிப்போமில்லையோ? ;-)
நான் கேள்விபட்டவரைக்கும் கேரளாவிலேதான் ஒருநூற்றாண்டுக்கு முன்கூட தாய்வழிச்சமூகம் இருந்ததா ஜெயமோகனோ ஆரோ எழுதினாதா ஞாபகம்… புனைவா பூனைவாலா எண்டெல்லாம் எனக்குத்தெரியாது.. ஆராச்சும் கேரளவல்லிய பெண்குட்டியிடம் கேட்டுத்தெளிக. ;-)
//சாந்தகுணசீலதேவன் சமக்கிரகத்திலே ‘சாந்தம்’, ‘குணம்’, ‘சீலம்’, ‘தேவன்’ என வாழ்கின்றால்//
பல ஆக்ஸி மோரான்களை இப்படித்தான் ஒன்னாச் சேர்ப்பார்களோ தெரியலை. ;;-)
மதி வந்து எம்.கண்ணன் பேச்சை கேட்டியா என்று முதுகுலை சாத்தறதுக்குள்ளை ஓடுமின் உறுமின் ;-)
17
டிசே தமிழன் says:
May 24th, 2006 at 10:21 am edit
/ ‘ஒவ்வொரு கறியுடன்” என்பதுகூடச் சரியா என யோசியுங்கோவன் தம்பிமாரே
/
இதென்னடாப்பா பெரிய கரைச்சலாய்ப் போச்சுது. நாவில்தான் சனி ஓடிவிளையாடும்
என்பார்கள். எனக்கு என்னுடைய விரலோடும் சனிபகவான் ஓடித்திரிகின்றார் போல :-(.
….
/தாய்வழிசமூகம் பற்றின கேள்வி சரியான கேள்வி. வால்கா காலத்திலையிருந்தே எனக்கும் ஒரு கேள்விதான் /
சாகுசீதே அண்ணரே, நீங்களே எங்களைக் கைவிட்டால் நாங்கள் யாரிடம் போய் எங்கள் சந்தேகத்தைத் தீர்ப்பதாம் :-(?
18
டிசே தமிழன் says:
May 24th, 2006 at 10:53 am edit
/முகுந்த் நாகராஜ் கவிதைகளைப்பற்றி ஆகா ஓகோவென இணையத்திலே பேசிக்கிறார்களே, இரண்டொன்றை பதிவிலே போட்டு, “கவிஞரின்(நீர்தானப்பு) ஏன் நல்லாருக்குன்னா?” என்ற விளக்கத்தையும் கொடுத்தால், வான் வழிச் செல்வு செஞ்சதுக்கு கொஞ்சம் பிராயசித்தமா நாங்களும் ஓசியிலே வாசிப்போமில்லையோ? ;-)/
ப்ளையிங் ட்ராகன், நானும் இணையத்தில் கேள்விப்பட்டுத்தான் ‘அகி’யை வாங்கினனான். சென்ற மாதமோ அதற்கு முதலிலோ வந்த உயிர்மையில் அவருடைய கவிதைகள் வந்திருந்ததாயும் நினைவு. இன்னும் தொகுப்பை வாசிக்கத் தொடங்கவில்லை. ஆனால் இரண்டு வருடத்துக்குள் 139 கவிதைகள் எழுதியிருக்கின்றார் என்று பார்த்தபோது கொஞ்சம் அதிசயமாய்த்தான் தெரிந்தது.
….
நேற்று வாசித்து முடித்த புத்தகம் என்றால் சுகிர்தராணியின் ‘இரவு மிருகம்’ தான். இதையெல்லாம் எழுதலாமா என்று அவரின் ஒன்றிரண்டு கவிதைகளை வைத்து அடிபடும் கலாச்சாரக்காவலர்கள் முழுத்தொகுப்பையும் வாசித்திருப்பார்களோ என்ற ஜயம்தான் இந்தத் தொகுப்பை வாசித்துமுடித்தபோது வந்தது. மிக இயல்பாய் இதமாய் -உடலை கொண்டாடும்- பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. எனக்கு நனறாகப் பிடித்திருந்தது.
…..
/ஆராச்சும் கேரளவல்லிய பெண்குட்டியிடம் கேட்டுத்தெளிக. ;-)/
எனக்குத் தெரிந்த ஒரேயொரு கேரளக்குட்டி அஸின் தான். அவாவையும் நீண்ட நாள்களாய்ப் படங்களில் காணவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றேன். இப்படி எழுதி என்பிரிவின் துயரை இன்னும் கூட்டிவிடவேண்டாம் :-).
19
கார்திக்வேலு says:
May 25th, 2006 at 8:28 pm edit
டிசே ,
இந்த புத்தகப்பட்டியலில் எனக்குப் பரீட்சையமில்லாத பல எழுத்தாளர்கள் உள்ளனர்.இப்புத்தகங்கள் பற்றியான உங்கள் கருத்துக்களை பின்னொரு சமயம் நீங்கள் பதிந்தால் மிக்க பயனாய் இருக்கும்.
சிமிலி (smiley )-சரியான தமிழ் வார்த்தை என்ன ?
20
கார்திக்வேலு says:
May 25th, 2006 at 10:25 pm edit
I’ve heard Kerala Nairs until recently practiced ..a form of matrichial society and the offsprings use their maternal house name (tharavads ) in their names .(This is just an informal information).
But our “wikiandavar” says it falls under “matrifocality” and not true “matriarchy”
http://en.wikipedia.org/wiki/Matriarchy
//ஆராச்சும் கேரளவல்லிய பெண்குட்டியிடம் கேட்டுத்தெளிக//
எனக்கும் இதுவே சரி என்று படுகிறது :-)
21
ஈழநாதன் says:
May 25th, 2006 at 11:17 pm edit
அண்ணை கேரளாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் ஒற்றுமையா புட்டு இருக்கிறதைப் போல இந்த தாய்வழிச் சமுதாயத்தையும் சுட்டிக்காட்டுவதைப் படித்த ஞாபகம்.வால்காவிலிருந்து கங்கை வரை எழுதிய ராகுல சங்கிருத்தியாயன் அந்த நூல் உண்மைகளை வைத்து எழுதியதென்று குறிப்பிட்டதோடு நின்றுவிடாமல் ஆதாரங்களும் கொடுத்திருக்கலாம்.செங்கை ஆழியான் கூட குவேனி நாவலில் தாயை முதன்மையாகக் கொண்ட சமுதாய அமைப்பை பற்றிக் குறிப்பிடுகிறார்.சிவத்தம்பி கூட எங்கேயோ குறிப்பிட்டிருக்கிறார் தேடிப்பார்த்துச் சொல்கிறார்
22
ஈழநாதன் says:
May 25th, 2006 at 11:26 pm edit
கானா பிரபா நான் கேள்விப்பட்டவரை திலீப்குமாரும் தற்போது நியூ புக் லாண்ட்சும் மிகக்குறைந்த அனுப்பும் செலவில் புத்தகக்களை அனுப்புகிறார்கள்.நியூ புக்லாண்ட்சின் இணையப்பக்கத்திற்குப் போய் உங்களுக்கு விருப்பமான புத்தகங்களை கடன் அட்டை மூலம் பணம் செலுத்தி வாங்கலாம் கிட்டத்தட்ட 30000 புத்தகங்கள் இருப்பதாக அதன் ஊழியர் மின்னஞ்சலில் சொன்னார் அதேபோன்று இணையத்தளத்தில் இல்லாத நூல்களைக் கூட நீங்கள் தனியாகக் கேட்டு வாங்கலாம்.
உங்களுக்கு அவசரம் இல்லையென்றால் கப்பற் பொதியாகவே பெற்றுக்கொள்ளுங்கள் விமானத்திற்குச் செலவு செய்யும் பணத்தில் நான்கு புத்தகம் மேலதிகமாக வாங்கலாம் என்ன வந்துசேர ஒன்று ஒன்றரை மாதங்கள் எடுக்கும்
23
டிசே தமிழன் says:
May 25th, 2006 at 11:37 pm edit
/இப்புத்தகங்கள் பற்றியான உங்கள் கருத்துக்களை பின்னொரு சமயம் நீங்கள் பதிந்தால் மிக்க பயனாய் இருக்கும்./
கார்திக்வேலு, இயலுமாயின் எழுத முயற்சிக்கின்றேன்.
/சிமிலி (smiley )-சரியான தமிழ் வார்த்தை என்ன ? /
சிரிப்பி, சிரிப்பான் என்று சில நண்பர்கள் பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள். சரியான தமிழ்ச்சொல்லை யாராவது வந்து சொன்னால் நானும் உங்கள் சாட்டில் அறிந்துகொள்ளலாம்.

ஈழநாதன், கார்திக்வேலு தாய்வழிச்சமூகம் குறித்த தகவல்களுக்கு நன்றி. ஆனால் இப்படி தாய்வழிச்சமூகம் இருந்திருந்தால் ஏன் அவைபற்றிய குறிப்புக்களை மேலைத்தேய கல்வித்திட்டத்தில் சேர்க்கவில்லை என்பது இன்னுமொரு வினா (நானறியாமல் இங்கே எங்கேயாவது தாய்வழிச்சமூகம் குறித்த குறிப்புக்கள் பாடத்திட்டத்தில் இருக்கக்கூடும். நண்பர்கள் அதைக்குறிப்பிட்டுச் சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்).

கேரளாவில் தாய்வழிச்சமூகம் இருந்தது என்று அனேகர் கூறுகின்றீர்கள். எனக்கு இது புதிய விடயம். அதனால்தான் என்னவோ… என் உள்மனது பாவனாவையோ அஸினையோ பின் தொடரும் நிழலாய் தொடரச்செய்து அவர்களின் மூலமாக உண்மையை உலகிற்கு உணர்த்தச்சொல்கிறதோ தெரியவில்லை :-).