Tuesday, September 26, 2006

நிசப்தம் நிரம்பிய
அறையிலிருந்து
துயரம் சிறகிழந்த வண்ணத்துப்பூச்சியாய்
படபடக்க
வரலாற்றின் இரத்தம் கசியும்
விளிம்புப்பக்கங்களை இன்னமும் வாசித்தறியா
சிறார்கள் ஒடிப்பிடிக்கிறார்கள்
தட்டுத்தடுமாறி பிணியென
தம் கடந்தகாலங்களை சுமந்தவர்களின்
நினைவுகள் மூச்சுத்திணறடிக்க
எனக்கான நியாயத்தராசை
பேப்பர்களின் பக்கங்களை புரட்டி
சமோசா சுவைத்து
புதைக்கத்தொடங்குகின்றேன் நடுக்கத்துடன்
‘துப்பாக்கி பிடிக்காத எவருடனும்
பேசத்தயாரென்றவனின்’ கடைசி நேர ஆன்மாவின் அவலம்
அனைத்து விமர்சனங்களையும் மீறி
அறைய
பேப்பர் எழுத்துக்கள்
ஒரு துவக்கை வரையத்தொடங்குகின்றது
புன்னகை மலர்ந்து சிறகுகள் விரித்து
வராண்டாக்களில் அலறிப் பிடித்தோடும் சிறார்களின்
பளிங்கு மனத்தோடு
எதன் பொருட்டோ தங்கள் இளமைக்காலங்களை
ம்க்களுக்காய் புதைத்துவிட்டு வந்தவர்களை
அணைத்துவிடமுயலும்
என்னை எனது ஆவி
கூர்மையான கண்களால் அவதானித்தபடி
காலகளுக்கடியில் இரையும் பாதாள இரயிலாய்
ந்கர்ந்துகொண்டிருக்கின்றது
மதுவின் முதல் துளியில் மிதக்கும்
எல்லாமாகவிருக்கும் அவளின் புன்னகையை
துடைத்து கசப்பை அருந்திக்கொண்டிருக்கும்
என்னைக் குறிபார்க்கும் துவக்கின்
விசை அழுத்தப்பட
வெடித்துச் சிதறும் துகள்களிருந்து
உயிர்த்தெழும் இயக்கப்பெடிபெட்டைகளின்
ஜீன்கள்
பொலிவியா மழைக்காடுகளிளில்
க்யூபாச் சுருட்டுக்களைப் பிடித்தபடி
தாம் போராடிய பூர்விக நிலங்களின் வரைபடங்களைத் தேடியலைய
மக்கள் பத்துச் சதம் கூட்டிய
பஸ் ரிக்கட்டுக்களைப் பற்றியே கதைக்கின்றார்கள்
பாதாள இரயில்களில்.

(ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்தின் நீட்சியில்)

1 comment:

டிசே தமிழன் said...

1
MixEdApe says:
April 2nd, 2006 at 10:23 pm edit
அறியா ஆன்மாக்களின் அஞ்சலிக்கூட்டங்களின் பின்னாக
அறுத்துக்கொண்டு எழுகிறது
எழுதுகிறது
இலக்குள்ளவாத்துக்களின்…மன்னிக்கவும்…
இலக்கியவாதிகளின் பேனா
பேணி நிறைய கண்மையெடு/ழுத்து
அமுக்கி அமுக்கிப் பிழிந்தெழுத
பிறக்கிறது அவர்க்குள் இலக்கியம்.
ஓர் இலக்கியம்…
இலக்கோடு…
ஒரு சமூகத்துக்கு ஒன்றே போதுமென
உமிழ்கிறது அனலும் கனலும்
கண்ணீரும் இலக்கியமும்
சலமும் மலமும்
சரிநிகரென்றென்றே
களமாடாமல் மாடத்துவிளக்கும் தூண்ட
காலெடுத்து எழாமல், மஞ்சத்துத்தலைமாட்டு
விளக்கணைத்துத் தூங்கையிலே
புடுங்கிப் பிறக்கிறது
மூக்குள்ளே விட்ட தும்பொன்று
துள்ளித்தந்த தும்மலிலே,
நம்மிலக்கியவாதியின் கனவில்
ஒரு சமூகத்துக்கு ஒரு வரலாறு
ஒரு வரலாற்றுக்கு ஓர் இலக்கியம்
இடக்கியம்…. பம் மாத்து
கம்மென்றிரு.
:devil1:
2
Mathy Kandasamy says:
April 2nd, 2006 at 10:40 pm edit
பாட்டும் எசப்பாட்டுமா?
சரிசரி!
:devil2:
3
MixEdApe says:
April 2nd, 2006 at 11:06 pm edit
எசப்பாட்டில்லை ஏப்பாட்டு :elvis:
முடிச்சுப்போட்டதை
மூண்டிடத்தில் முறிச்சுப்போட்டால்
கவி டை
:dance:
4
டிசே தமிழன் says:
April 3rd, 2006 at 7:52 am edit
எசப்பாட்டோ ஏப்பாட்டோ உளறுவதை நிப்பாட்டு என்கிறமாதிரித்தான் எனக்குத் தெரிகிறது :).

அங்காலை அவர்கள் ஒருபக்கத்தை மட்டும் பேசுகிறார்கள்…. இங்காலை போனால் இவர்கள் யதார்த்ததைக் குழிதோண்டி மூடிவிட்டு (ஒரு சிலரைத் தவிர) தங்கடை ‘நியாயத்தை’ மட்டும் பேசுகிறார்கள். வந்த ஊரை விட சில வருடஙகளுக்கு முன் இருந்த ஊரில் இருந்திருந்தால், நிகழ்வுகளைக் கேட்டறிந்தபடி…படைப்புக்களை வாசித்தபடி…ஒரு பொல்லாப்புமில்லை என்று நிம்மதியாய் இருந்திருக்கலாம். எல்லாம் என்ரை ‘விதி’ :(.
….
‘மாப்பிள்ளை’ பிடித்தால் ரொரண்டோவில்தான் பிடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிற தங்கத்தீயிற்கு இதெல்லாம் சொன்னால் புரியுமா என்ன? சரவணபவனும் அஞ்சப்பரும் இரண்டு நாடகங்களும் மட்டுமே இந்நகர் வாழ்க்கை என்டு இந்தப்பிள்ளை நினைத்துக்கொண்டு திரியுது :stop:.
5
Mathy Kandasamy says:
April 3rd, 2006 at 8:13 am edit
//மாப்பிள்ளை பிடித்தால் ரொரண்டோவில்தான் பிடிப்பேன் //
இது அநியாயம்! இப்பிடி பெல்ட்டுக்குக்கீழ அடிச்சா என்ன பதில் சொல்ல? :(
//வந்த ஊரை விட சில வருடஙகளுக்கு முன் இருந்த ஊரில் இருந்திருந்தால், நிகழ்வுகளைக் கேட்டறிந்தபடி…படைப்புக்களை வாசித்தபடி…ஒரு பொல்லாப்புமில்லை என்று நிம்மதியாய் இருந்திருக்கலாம். எல்லாம் என்ரை ‘விதி’ //
இப்பிடி இருந்துகொண்டு,
//சரவணபவனும் அஞ்சப்பரும் இரண்டு நாடகங்களும் மட்டுமே இந்நகர் வாழ்க்கை என்டு இந்தப்பிள்ளை நினைத்துக்கொண்டு திரியுது //
இப்பிடி வந்துபோறதுதான் உடலுக்கும் மனதுக்கும் சேமமான விசயம் எண்டு இருக்கிறது அண்ணைக்குத் தெரியாதோ? புதுசாக் கரடி விடுறீங்க.. :stop: :anti:
மற்ற எல்லாரையும்விட இப்ப இந்த இலக்கியக் காரர் இருக்கிறதாலையும் இருக்குமிடமே சொர்க்கம் என்ற தீர்மானத்துக்கும் வந்திருக்கிறமாம். அந்தத் தீர்மானத்தை அப்பப்ப அசைச்சுப் பாக்கிறது சில நண்பர்களின்ற பொழுதுபோக்குமாம்! :che:
6
MixEdApe says:
April 3rd, 2006 at 8:15 am edit
தம்ப்ர
உமக்கில்லை உபதேசம். “ஒரு தேசத்துக்கு ஒரு வரலாறு; ஒரு வரலாற்றுக்கு ஓர் இலக்கியம்” என்ற உபதேசிக்காய்களுக்கு :shy:
“அஃது என்ன “மாப்பிள்ளை பிடித்தால் ரொரண்டோவில்தான் பிடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிற தங்கத்தீ” என்ற கதை? அதை நீர் எமக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும்” என்று ஸப்ரமஞ்சம் மூட்டைப்பூச்சியைக் கேட்டதை உஜ்ஜயனி மஹாராஜா விக்கிரமாதித்தன் கேட்டான் :visil:
7
MixEdApe says:
April 3rd, 2006 at 8:27 am edit
/இந்த இலக்கியக் காரர் இருக்கிறதாலையும்/
அடடா!! இவ்வியாதி தங்களுக்கும் வந்து முற்றிவிட்டதா? அந்த ஆனானப்பட்ட சுந்தரராமனையோ வெங்கட் ராமனையோ விடவில்லையே? தங்களைமட்டுமா தானேபோவென விடும்? விதி வலியது!! எத்தைத்தின்றால் இப்பித்தம் தெளியும்?!! :adi:
விரைவிலே ஒரு புத்தகவெளியீடு ரொரொண்டோவிலோ டொராண்டோவிலோ நீங்கள் செய்யவேண்டும். பதிவுகளிலே போட்டதிலே பத்தினைக் கட்டிப்போட்டாலே போதும். முகவுரை, முதுகுறை, அணிந்துரை, அணியாதுறை வேண்டுமானால், பறக்கும் ட்ராகனோ, பதுங்கும் பேரிலிகளோ தரத் தயாராகவுள்ளார்கள். இத்தைத் தின்றாலானேனும் இப்பித்தம் தெரியலாம்..அதாவது, தெளியலாம் :devil2:
8
டிசே தமிழன் says:
April 3rd, 2006 at 8:51 am edit
/இது அநியாயம்! இப்பிடி பெல்ட்டுக்குக்கீழ அடிச்சா என்ன பதில் சொல்ல? /
தங்கத்தீ, நீங்கள் சரவணபவன் ‘காபி’ குடித்த பதிவில் ‘திருப்ப வரவேண்டும் போல இருக்குடா‘ என்றெழுத அது குடித்த ‘காபிக்கா’ இல்லை வேறெதுக்கா என்ற குழப்பத்தில் இப்படி எழுதிவிட்டேன். சிபிலிங்கின் ‘டங்’ சிலிப்பானால் மறந்து மன்னித்துவிடுவதாம் குடும்பத்துக்கு நல்லதாம் :).
9
Plying_Drag_on says:
April 3rd, 2006 at 8:59 am edit
//எத்தைத்தின்றால் இப்பித்தம் தெளியும்?!! //
எத்தைத் தின்றாலும் பித்தம் தெளியாது புத்தா! எட்டி நிக்கத் தெரியோணும்..
லேசல்ல , இறங்கவேண்டிய சந்திப்பில மட்டும்தான் இறங்கணும், எல்லா நிறுத்தங்களிலும் இறங்கி ஏறினா இப்படித்தான் பித்தம்..
தங்கத்தீயை இப்படி போட்டுப்பாக்கனும்னு என்ன ஆசையோ! அது பாவம் விதியை நோவதா , எளக்கியத்தை நோவதான்னு ரொரண்ரோவுக்கும்..மோன்றியாலுக்கு ரிலே ரேசு போய்ய்க்கீட்டு இருக்க்.. தங்கத்தீ நாமிருக்க பயமேன். ;-)
10
Plying_Drag_on says:
April 3rd, 2006 at 9:04 am edit
//மதுவின் முதல் துளியில் மிதக்கும்
எல்லாமாகவிருக்கும் அவளின் புன்னகையை
துடைத்து கசப்பை அருந்திக்கொண்டிருக்கும்
என்னைக் குறிபார்க்கும் துவக்கின்
விசை அழுத்தப்பட// :cheers:
அண்ணை, தீவிர கவிதை வகைக்குள் வரேல்லை, ஆனால் தீவிரவாத கவிதை வகைக்குள் வருதெண்டு ஆராச்சும் பட்டியலுக்குள்ளற அடைச்சு பேட்டி கொடுக்கப்போறாங்கள்..:cool:
11
Plying_Drag_on says:
April 3rd, 2006 at 9:06 am edit
ஏப்பண்ணை சங்கதி தெரியுமோ, பின்னூடத்துல எழுதறதெல்லாம் கவிதை வகைக்குள்ள வராதாக்கும்
:visil:
12
MixEdApe says:
April 3rd, 2006 at 10:31 am edit
அதுதானே? பின்னூடமென்ன ஊட்டமான பின்(அப்)ஊடகமோ என்ன? :shy:
பேட்டி குடுத்தாலும் பறவாயில்லை; பிறகு பெட்டியிலை வைச்சும் குடுப்பமெண்டாத்தான் பிரச்சனை :faint:
13
Dragon_on_Fly says:
April 3rd, 2006 at 10:57 am edit
தவறு “பின்னூடல்” என்று சொல்லியிருக்கனும் :clown:
14
Dragon_on_Fly says:
April 3rd, 2006 at 11:36 am edit
9-ஆம் கமண்டு தமிழன் சொன்னது என்று நினைத்துச் சொன்னது பார்த்தால் ஏப்பண்ணை சொன்னதா? ஹி ஹி
15
டிசே தமிழன் says:
April 3rd, 2006 at 8:25 pm edit
/ தீவிரவாத கவிதை வகைக்குள் வருதெண்டு ஆராச்சும் பட்டியலுக்குள்ளற அடைச்சு பேட்டி கொடுக்கப்போறாங்கள்../
ட்ராகன் ப்ரோ, பட்டியல் எல்லாம் மனிசருக்காம், நம்மைப் போன்ற வெள்ளாடுகளுக்கு எப்போது பட்டிக்குள் அடங்குவது, வெளியேறித்திரிவது என்பதுதான் தலையாய பிரச்சினை.