Tuesday, September 26, 2006

எல்லாம் ஒருநாள் கனவெனக் கலைந்து போகுமாம்!

என்னப்பா எழும்புங்கோவன்…..எத்தனை முறை வந்து எழுப்பிறது…எருமைமாடு மாதிரி படுத்திருக்கிறியள்
கொஞ்சநேரம் விடுமனப்பா…இப்பத்தான் அஸினைப் பற்றி ஒரு கனவு வந்தது…எப்ப பார்த்தாலும் சிவபூசையில் புகுந்த கரடிமாதிரி வந்து கனவைக் குழப்பும்.
என்ன அஸினைப் பற்றிக் கனவோ….அவாதானே உம்மடை தொல்லை தாங்காது கலியாணங்கட்டி இரண்டு குழந்தையும் பெற்று சந்தோசமாய் வாழ்கிறா…உமக்கு ஒருத்தர் நல்லாயிருக்கிறது பிடிக்காதே
எனக்கு இப்பவும் ஏழு வருசத்துக்கு முன் படங்களில் நடித்துக்கொண்டிருந்த அஸின்தான் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறா.
அதுசரி எப்பவும் உமக்கு மன்மதக்குஞ்சென்று நினைப்பு
சரி சரி புறுபுறுக்காதையும்….நீரும் என்னை லவ் பண்ணேக்கில ஆர்யாவைப் பார்த்து பார்த்து உருகித்தானே என்னையும் ஜிம்முக்குப் போ போ என்று துரத்தினனீர்..
அது சரி…ஜிம்முக்கு போனால் pacs வருமென்றால்… உமக்கு கண்டகிண்ட தலையிடி, இழுப்பு, இரத்தஅழுத்தம் எல்லோ வந்தது…
நான் என்னப்பா செய்ய… ஸல்சா, யோகா என்று அங்கும் இங்கும் பொம்பிளையப் பிள்ளைகள் ஒடித் திரிந்துகொண்டிருக்க, அவையளைப் பார்த்த பிரமிப்பில் ஒரேயடியாய் வெயிட்ஸை கூட எல்லோ தூக்கிவிடுகிறனான்…கடைசியில் எல்லா வருத்தமும் எனக்கு வந்துவிட்டது.
நான் தான் பிழை விட்டு விட்டேன்….மனுசர்தானே ஜிம்முக்கு போறது… உம்மையெல்லாம் அங்கே அனுப்பின என்ரை புத்தியைச் செருப்பாலை அடிக்கோணும்.
*************************************************************************************
இஞ்சையப்பா, இன்டைக்கு காலமை அம்மா கோயிலுக்குப் போகப்போறன் என்டவா அவாவை ஒருக்கா கொண்டுபோய் காரில் இறக்கிவிடுகிறிரே…
உம்மடை கொம்மாவையோ…எனக்கு வேற வேலை இல்லையோ…நீர்தானே சோத்து மாடு மாதிரிக் கிடக்கிறீர்… உந்த வேலைகளையாவது செய்யும்.. அத்தோடு அந்த மனுசியின்ரை கடியும் தாங்கேலாது
ஏனப்பா என்ன நடநது?
இல்லை…அன்டைக்கு தலைமயிரை சரியாய் முடியாமல் அவாவை கோயிலிலை இறக்கிவிடப்போனால், அவா சொல்கிறா….நான் அம்மன் கோயிலுக்குப் போறன்…இஞ்சை காரை ஓட்டிக்கொண்டு என்ரை அம்மாளாச்சியே காட்சியளிக்கிறா போலக் கிடக்கிறது என்டா…
ஹ..ஹ…ஹ
நான் அவாவுக்குச் சொன்னன்….அப்ப ஏன் நீங்கள் கோயிலுக்குப்போகிறியள்…உங்கடை மகனை காளியின்ரை காலுக்குள் நசுங்கி கிடக்கிற அசுரன் மாதிரித்தானே வைத்திருக்கிறன்…மற்றக்கால் சும்மாதான் கிடக்கிறது…வேண்டுமென்றால் அங்கை ஒரு இடந்தரட்டோ என்றேன்… அதற்குப்பிறகு மனுசி வாய் திறக்கிறதில்லை பாத்தியளோ.
ஏன் உம்மடை கொம்மா மட்டும் என்ன திறமோ…நான் உம்மடை வீட்டுக்கு வந்த முதல்நாளே…நான் மருமகனுக்கு அந்தமாதிரி ரீ போட்டுத்தாறேன் என்டு சொல்லிப்போட்டு சீனிக்குப் பதிலாய் உப்பைப் போட்டுக் கொண்டுவந்து தந்துவிட்டு மருமகனே தேத்தண்ணி எப்படி இருக்கு என்டு நக்கலாய்க் கேட்டதை மறக்கமுடியுமா என்ன?
எங்கடை அம்மாவுக்கு முதல் நாளிலேயே உமது வண்டவாளம் எல்லாம் தெரிந்துவிட்டது போல..
அதாவது பரவாயில்லை….மருமகனுக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு கோழி அடித்துக்கொடுக்கப்போறேன் என்று சொல்லிவிட்டு மனுசி என்னைத்தானே அந்தச் சேவலை துரத்திப் பிடித்து தா என்று கேட்டது….நான் அண்டைக்கு முழுதும் அந்தச் சேவலோடுதானே ஒடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனான்….
முந்தின காலத்திலே காளையை அடக்கினால்தான் தங்கடை பொம்பிளைப்பிள்ளையளை கலியாணஞ்கட்டிக்கொடுப்பினமாம்…உமக்குச் சேவலாவது பிடிக்கத் தெரிகிறதா என்று அம்மா போட்டி வைத்துப் பார்த்திருக்கிறா.
எனக்கு அண்டைக்கு வந்த ஆத்திரத்தில் வளவுக்கிலை கிடந்த உலக்கையாலே ஒரு போடு போட்டால் என்ன என்ற மாதிரி இருந்தது
என்ன சேவலுக்கா…
இல்லை உம்மடை கொம்மாவின்ரை மண்டையிலை.
*************************************************************************************
ஏனப்பா உமக்கு ஞாபகமிருக்கா…நாங்கள் லவ் பண்ணிக்கொண்டிருந்த காலத்தில் நான் எழுதித்தந்த கவிதை ஒன்று….
கவிதையோ…உம்மடை கவிதைகளை வாசிக்கத்தொடங்கினாப்பிறகுதான் அதுவரை கவிதைகளை நேசித்துக்கொண்டிருந்த எனக்கு கவிதைகள் மீது வெறுப்பே வந்தது…கண்டறியாத உம்மடை கவிதை…
நீர் முந்தி பெரிய வளையம் ஒன்டை உம்மடை காதில் போட்டியிருப்பீரே…அதுவின்ரை அழகைப்பார்த்துத்தானே எனக்கு முதலில் லவ்வே வந்தது.
உந்த அற்புதமான காரணத்தை வெளியிலை ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதையும்…கேட்கிற சனங்கள் கொதிப்பில் தங்களைத்தாங்களே செருப்பாலை அடிக்கத் தொடங்கப்போகுதுகள்.
ஆ…ஞாபகத்துக்கு வந்துவிட்டது கவிதை..
உன் காது வளையத்தில்
ஊஞ்சல் ஆடி
செவியினுள் நுழைந்து
மூளையில் புதைந்து
தலையில் மலர்ந்த்
காதல் பேன்
நான்.
எனக்கு உந்த புல்லரிக்க வைக்கின்ற கவிதை நினைவிலை இல்லை….ஆனால் உதை வாசித்த என்ரை தோழி சொன்ன ஒன்றுதான் இப்பவும் நினைவிலிருக்கிறது…
என்ன சொன்னவா அவா?
அந்தாளிட்டை சொல்லு…காதிலை எதுவும் நுழைந்தால் காதல் வராது…காதுக் குத்துதான் வரும்…எதுக்கும் ஒருக்காய் பைத்தியக்கார டொக்கரைப் பார்க்கச் சொல் என்டு…
அவா பொறாமையிலை அப்படிச் சொல்லியிருக்கிறா..
அது மட்டுமில்லை…இந்தக் கவிதை எழுதிற.. குடுகிறவன்கள் எல்லாம் சரியான கள்ளங்கள் அவங்களை மட்டும் நம்பிவிடாதே என்டும் சொன்னவா…ம்..ம்.. அப்பவே அவளின்டை அட்வைஸைக் கேட்டிருந்தால் நான் இப்படி படுகுழிக்குள் விழாது இருந்திருப்பேன்..
உமக்கு எப்பவும் என்ரை கவிதைபற்றி நக்கல்தான்…எனக்கு எத்தனை விசிறிமார் இருந்தினம் என்டு உமக்குத் தெரியுமோ?
விசிறிகளோ….கவனமாய் வைத்திருங்கோ…கோடைகாலத்தில் விசுக்க உதவும்…
உம்மளை கலியாணங்கட்டின சமயத்தில் கூட ஒரு இரசிகை எனக்கு கடிதம் எழுதிக் கேட்டிருந்தவா…நீங்கள் கவிதை எழுதாத நேரங்களில் என்ன செய்யிறனியள் என்டு..
நீர் என்ன சொன்னனீர்..?
கவிதை எழுதாத நேரத்தில் என்ரை மனுசிக்கு வெங்காயம் உரித்துக் கொடுக்கிறனான் என்டு உண்மையைத்தான் சொன்னனான்.
அது சரி…
அந்த இரசிகை எனக்கொரு கடிதம் திருப்பி எழுதியிருந்தா…
கவிதை எழுதும் இந்தக் கைகள்
நீல வானில் நட்சத்திரங்களுக்கும்
கதை சொல்லும் என்று கனா வளர்த்திருந்தேன்!
வேதனை வேதனை
தமிழுக்கு வந்த சோதனை சோதனை
வெங்காயம் உரிப்பதா கவிஞனின் கைகள்?
எடுத்து வருகிறேன் கத்தியை
எங்கே அந்த இராட்சசி?
வெட்டி நாலாய்
ஊறப்போடுகின்றேன்
ஊறுகாய்!
அவா இங்கை வந்திருந்தால் இரண்டு கொலைகள் விழுந்திருக்கும்…
ஏனப்பா அவா ஒராள்தானே வருவா?
முதலில் உம்மைப் போட்டுத்தள்ளிவிட்டுத்தானே…அவாவை ஊறுகாய் ஆக்கியிருப்பேன்.
*************************************************************************************
பின்னிணைப்பு:
அதுசரி நீர் முந்தி அஸினைச் சைட் அடித்துக்கொண்டிருந்த காலத்தில் புளோக்கிலோ கிழக்கிலோ ஏதோ அலம்பிக்கொண்டு திரியக்கிலை…கொஞ்ச நண்பர்கள் இருந்தவையள் என்டு சொன்னனீரெல்லோ…அவையளுக்கு எல்லாம் இப்ப என்ன நடந்தது..?.
அதொரு மெகா சீரியல் கதையப்பா….பெரியஎலி இப்ப…
யார் அவர்….பத்தாம் வகுப்பில் யாரோ ஒரு பிள்ளைக்குப் பூ ஆய்ந்து கொடுத்து அது பிறகு அவற்ரை காதில் பூவைச் சுற்றிவிட இராவணன் வெட்டில் குதிக்கப்போனாரே..அவரோ?
ஒமோம் அவர்தான்…அவருக்கு இப்ப இணையம் தொலைபேசி பத்திரிகை எதுவும் கிடைக்கச்செய்யாமல் அவற்ரை மகன் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறராம்….நாயை நாய்க் கூண்டுக்குள்ளை அடைச்ச மாதிரி தன்ரை நிலை நாய்ப்பிழைப்பாய் போச்சுது என்டு ஒரே புலம்பலாம் அங்கே.
அளவு கணக்கில்லாது கணணிக்கு முன்னால் இருந்து ஆடினால், கடைசியில் சேரவேண்டிய இடம் அதுவாய்த்தானே இருக்கும்.
அது சரி தங்கதேவி என்டு ஒருத்தர் தன்ரை சொந்தவிசயங்கள் பற்றிக் கவலைப்படாது, அப்பர் உழவாரத்தோடு திரிந்தமாதிரி ஊர் விவகாரம் பார்த்துக்கொண்டு திரிந்தவாவே…அவா இப்ப எங்கே?….
அதேயேன் கேட்கிறீர்…அவா இப்ப பெரிய எழுத்தாளினி எல்லோ… தமிழில் என்றில்லாது இங்கிலீஷ், ஸ்பானிஸ் என்டு எல்லா மொழிகளிலையும் கலக்கிக்கொண்டிருக்கிறா…
இப்ப Hawaiiயில் எலிசபத்து மகாராணி மாதிரியெல்லோ இராச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறா. எனக்குத்தான் ஒரே பொறாமையாய் இருக்கு…நானும் இப்படி ஆகியிருப்பேன்…என்ரை ‘எழுத்தெனும் தவத்தை’ நீர்தானே ‘லவ்’ என்னும் மோகினியைக் கொண்டு கலைத்தனீர்!
உமக்கு தவந்தான் கலைந்து…எனக்கு உம்மாலை முழுவாழ்க்கையும் எல்லோ பாழாய்ப்போனது.
அது சரி …அந்தத் தங்கத்தேவி வாயூற வாயூற சமையற்குறிப்புக்கள் எழுதுவாவே…உண்மையில் அவாவுக்கு சமைக்கத்தெரியுமா?
நாங்கள் எங்கள் குடும்ப இரகசியத்தை வெளியில் ஒருத்தருக்கும் சொல்லிறதில்லை.
நாசமாய்ப்போன உங்கடை குடும்ப இரகசியத்தை நீரே வைத்துக்கொள்ளும்…. ட்ராகன் ஒன்று ஒருத்தர் ஒற்றைக் கண்ணோடு பறந்து கொண்டு திரிந்தாரே அவருக்கு என்ன ‘ஆச்சு’…?.
அது ஒரு பெரிய கதையப்பா…தான் புத்தரைப் போல ஆகப்போகின்றேன் என்று செர்ரி மரத்துக்குக் கீழே போய் இவர் குந்த வாற போற சனம் எல்லாம் இவருக்கு மாலை மரியாதை கொடுத்திருக்கிறது. அப்ப அந்த வழியாலா போன மழலை இவரைக் கண்டுவிட்டு ஒரு சவால் செய்திருக்கிறது….தன்ரைக் கேள்விக்குப் பதில் சொன்னால் இப்படியே மரத்துக்குக் கீழே இருக்கலாம் இல்லாவிட்டால் இந்த இடதை விட்டு ஓடிவிடவேண்டும் என்று …இவரும் மழலைதானே என்று வழமையான ஆகா ஆகா என்ற சிரிப்பைச் சிந்தியபடி தயாராயிருக்கிறார்…..மழலை கேட்டதாம்…கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்று…? இவர் அண்டைக்கு தலையைச் சொறிந்துகொண்டு ஓடினது கடைசியில் இல்லறவாழ்வு என்னும் கிணற்றில் தொபுக்கடீர் என்று விழும்வரை நீண்டதாம். இப்பவும் இவரது துணைவியார் எப்பவாவது கோழியிலிருந்து முட்டை வந்ததா…..என்று ஆரம்பித்தாலே காணுமாம்…எள்ளும் கொள்ளுமாய் இவர் முகத்தில் கோபம் வெடிக்குமாம்.
பாவம்…எப்பவும் சிரித்துக்கொண்டிருந்தவர் இப்படிச் சிடுமூஞ்சியானதுக்கு உம்மைமாதிரி ஆக்கள்தான் காரணமாக்கும்.
*************************************************************************************
ஒரு அப்பாவி பாரிஆள் இருந்தாரே…எல்லோரும் சேர்ந்து அந்த ஆளைப்போட்டு கடித்துக்கொண்டிருப்பியளே…
ஓமோம்..அவர் உறுமிமேளத்தை அடிப்பதைவிட்டுவிட்டு மகிழ்ச்சிக்கடலில் நீராடிக்கரைக்கு வந்து இப்ப அவர்தானே அந்த மாகாணத்து ப்ரிமியர்… இவர் சரியான அமைதிப்பேர்வழி எண்டபடியால், அந்த நகரச் சனங்களை மூச்சுக்கூட சத்தமாய் விடக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளாராம். அதாலே சனம் இப்ப விடுகின்ற மூச்சை கூட சொப்பிங் பாக்கில் இழுத்துப் பிடித்து நிரப்பி அவதிப்படுகிதுகளாம்.
என்னதொரு கொடுமை….!
ம்…ம்…ம்
ஒரு இரட்டையர் உம்மைப் போட்டு கிழிகிழியென்று கிழித்துக்கொண்டிருப்பார்களே…அவங்கள் எங்கே இப்ப ?
சந்துரு தன்ரை ஆளைப் பார்க்க தொடங்கினதிலிருந்து அவற்ரை நிலை ரைற்றானிக் கப்பல் மாதிரி கவிழத்தொடங்கிவிட்டது…இப்ப ஓர் வளர்ப்புப் பிராணி மாதிரி வாலையாட்டிக்கொண்டு அந்த அம்மணிக்குப்பின்னால் திரிகிறராம்.. என்டாலும் அந்த ஆள் என்னை மாதிரியில்லாது சந்தோசமாய்தான் இருக்கிறார்.
என்ன?
ஆனால் வசந்துருதான், இப்ப சாமியாராகப் போய்விட்டார்…
ஏனப்பா காதல் கீதலில் எதுவும் பிரச்சினையோ?
ச்சாச்சா…அப்படி இல்லை…காதலால்தான் சாமியார் ஆகினம் என்டால் எத்தனை முறை நான் சாமியார் ஆகியிருக்கோணும்.
நான் சொன்னது ஒழுங்கான சாமியார் பற்றி.. உம்மளை மாதிரி கள்ளச்சாமி ஆகிறாக்களைப் பற்றி அல்ல.
சாமியாரானாலும் வசந்துரு நல்லதொரு கவிஞராகவும் ஆகிவிட்டார்..
பரவாயில்லை..அந்த ஆளாவது ஏதோ உருப்படியாய் ஒரு விசயம் செய்திருக்கிறது…
உருப்படியான விசயமோ…பொடிச்சியோடு கவிதை ஒழிப்பு இயக்கந் தொடங்கின இவர் same side goal போட்டதால், பொடிச்சியின்ரை இயக்கம் இவருக்கு ப்யூஸ் எடுக்கத் திரியுதாம.
ப்யூஸ் எடுக்கிறதெண்டால்…?
இவருக்கு மூளையின் எந்த நரம்பு கவிதை எழுத ஊக்குவிக்குதோ அதைப் பிடுங்கி விடுவதுதான்…
அய்யய்யோ பாவம் அவர்…!
அலாஸ்காக்கரடி தத்தெடுத்த மணியண்ணையைத் தெரியுமெல்லோ. அவர்….
காணும் காணும் நிப்பாட்டும்…எனக்கு இப்பவே மூச்சு விடக்கஸ்டமாய்க் கிடக்கிறது…
நான் தான் அப்பவே சொன்னேனே…எங்கடை அந்தக்காலத்துக்கதை ஒரு மெகா சீரியல் என்டு…
என்ன செய்ய…. உம்மளை லவ் பண்ணின காலத்திலிருந்து, எனக்கு எல்லாமே லேட்டாய்தானே விளங்கிறது. ஆனால் உமக்கு மட்டுந்தான் இப்படி வியாதி இருக்கிறது என்டு இவ்வளவு காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்ப பார்த்தால் உம்மளோடு சேர்ந்த ஆக்களுக்கும் நீர் தொத்துவியாதி மாதிரி உம்மடை பழக்கத்தை எல்லாம் பரப்பியிருக்கின்றீர் என்டது மட்டும் உந்தக்கதைகளைக் கேட்கும்போது தெளிவாய்த் தெரிகிறது.
யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்பதே எனது வாழ்க்கைத் தத்துவம்.
ஆ….கவிஞனைத்தான் அடித்துத் துரத்திவிட்டேன் என்று நிம்மதியாயிருந்தேன்….இப்ப தத்துவக்காரரும் வாறாரோ…கொஞ்சம் பொறும். இடியப்ப உரலை எடுத்துக்கொண்டு வாறன்.


(Wednesday, April 12th, 2006 at 1:02 pm)


…………………………

1 comment:

டிசே தமிழன் said...

1
MixEdApe says:
April 12th, 2006 at 1:25 pm edit
:ninaippu:
2
MixEdApe says:
April 12th, 2006 at 1:29 pm edit
உன் கடிவதையை நீயெழுது
என் கடிவதையை நான் எழுதுவேன்
இன்னும் மிஞ்சினால் நேரம்
நம் மூக்குக்கும் முதுகுக்கும்
முறிவேற்படாமல் மிஞ்சின
முழுப்பேர் கவிதையையும்
நாம் எழுதுவோம்
:visil:
3
Mathy Kandasamy says:
April 12th, 2006 at 2:07 pm edit
:ninaippu:
//ஆனால் உமக்கு மட்டுந்தான் இப்படி வியாதி இருக்கிறது என்டு இவ்வளவு காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உம்மளோடு சேர்ந்த ஆக்களுக்கும் நீர் தொத்துவியாதி மாதிரி உம்மடை பழக்கம் எல்லாம் பரப்பியிருக்கின்றீர் என்டது மட்டும் உந்தக்கதைகளைக் கேட்கும்போது தெளிவாய்த் தெரிகிறது.//
:p
4
Mathy Kandasamy says:
April 12th, 2006 at 2:11 pm edit
அண்ணேஏஏஏ,
சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்குது. உப்பிடியான கதைகளைக் கொஞ்சம் சொல்லிட்டுப் போட்டிருந்தியளெண்டா, கவனமா சனங்கினம் பக்கத்திலை இருக்காத நேரத்திலை படிப்பமெல்லோ. இப்ப, இந்தப் பெட்டைக்கென்ன விசர்கிசர் பிடிச்சிற்றுதோ எண்டு பாக்கிற ஆக்களுக்கு என்ன பதில் சொல்ல? மகேஸ்வரா!!!
இன்னொரு விசயம்:
//அவா இப்ப பெரிய எழுதாளினி எல்லோ… தமிழில் என்றில்லாது இங்கிலீஷ், ஸ்பானிஸ் என்டு எல்லா மொழிகளிலையும் கலக்கிக்கொண்டிருக்கிறா…//
இதுக்கு நீர் என்னை நல்ல சாத்துச் சாத்தியிருக்கலாம்…
ஹவாயை எல்லாம் நினைவுபடுத்தாதையும். வசந்த காலங்களப்பா அவை. நிம்மதியா இருந்த நாட்கள். சில சனங்களையெல்லாம் சந்திக்காமல் நிம்மதியாக சுருட்டுக் குடித்துக் கொண்டிருந்த அற்புதமான நாட்கள். :P
5
Plying_Dragon says:
April 12th, 2006 at 2:28 pm edit
:cool:
அந்த இடியாப்ப உரலாலை போடும்போது, எனக்காகவும் சேர்த்து நாலு போட வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் சகோதரிக்கு.. செவிசாய்ப்பாரா?
:faint:
6
yaro says:
April 12th, 2006 at 3:03 pm edit
:), :(, :p, :O, :rol:, :faint:, :dj:, :visil:, :doubt:, :ninaippu:, :clown:, :stop:, :q, :anti:, :adi:, :dance:, :elvis:, :kelvi:, :alien:, :nalla:, :che:, :shy:, :Angel:, :devil1:, :devil2:, :cool:, :cheers:, :devil1:
7
முனியாண்டி says:
April 12th, 2006 at 3:51 pm edit
விழுந்து சிரி சிரின்னு சிரிச்சிக்கிட்டு இருக்கேன்.
//ஒரு அப்பாவி பாரிஆள் இருந்தாரே//
ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்…
பக்கத்தில ஒரு இம்சையை வைச்சிக்கிட்டு இதெல்லாம் சாத்தியமேயில்லை. இந்த வாரம் தொல்லையைக் கட்டுறதுக்கு பெட்டியக்கட்ட ஆரம்பிச்சாச்சி.
முனியாண்டி
8
Padma Arvind says:
April 12th, 2006 at 4:06 pm edit
பாவம் உங்கல் கிண்டலில் மாட்டிக்கொண்டு அகப்படுபவர்கள் எல்லாரும். சிரிக்க வைத்த பதிவு
9
MixEdApe says:
April 12th, 2006 at 4:55 pm edit
சும்மா எல்லாத்தையும் கொப்பி பண்ணி யாரோ மாதிரி நானும் போட்டுப் பாக்கத்தான். நல்லா இருந்தாச் சொல்லுங்கோ. இடியப்ப உரல் உம்மடை கையில இருந்தா வேண்டாம் என்னை விட்டுடும் ராசா.
:), :(, :p, :O, :rol:, :faint:, :dj:, :visil:, :doubt:, :ninaippu:, :clown:, :stop:, :q, :anti:, :adi:, :dance:, :elvis:, :kelvi:, :alien:, :nalla:, :che:, :shy:, :Angel:, :devil1:, :devil2:, :cool:, :cheers:, :devil1:
10
selvanayaki says:
April 12th, 2006 at 5:00 pm edit
உங்களிடமிருந்து வித்தியாசமாய் ஒரு ஜாலியான பதிவு. சிரிச்சுக்கொண்டு இருக்கறன் நானும்:)
11
டிசே தமிழன் says:
April 12th, 2006 at 10:37 pm edit
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
….
இங்கிருக்கும் சிரிப்பிகளோடு விளையாடும் உரிமை குழந்தைகளுக்கு மட்டும் உரித்தாம். வளர்ந்த குழந்தைகளுக்கு இனி அனுமதியில்லையாம்!
12
வசந்தன் says:
April 12th, 2006 at 11:37 pm edit
//சாமியாரானாலும் வசந்துரு நல்லதொரு கவிஞராகவும் ஆகிவிட்டார்..//
ஓய்!
என்னப்பா உது புதுச் சோதனை?
எங்க பிடிச்சனீர் உந்தக் கதைய?
இதால உம்மட முழுப்பதிவுமே பொய்யாப்போகப்போகுதில்லோ?
13
yaro says:
April 13th, 2006 at 1:29 am edit
//என்னப்பா உது புதுச் சோதனை?
எங்க பிடிச்சனீர் உந்தக் கதைய?
இதால உம்மட முழுப்பதிவுமே பொய்யாப்போகப்போகுதில்லோ? //
:dance:
முழுவதும் உண்மை…….
:devil1:
14
டிசே தமிழன் says:
April 13th, 2006 at 9:28 am edit
வசந்தன், எதிர்காலம் என்ன எங்களின் கையிலா இருக்கிறது…எதுவுமே நடக்கலாம் என்க. ஆனால் உமக்கு கவிஞரானதைவிட சாமியார் ஆனதுதான் உறுத்துகிறது போல. சரி, நீரும் என்னை மாதிரியே கள்ளச் சாமியார் ஆகப் போகிறீர் என்றால்…நான் என்ன செய்ய :cheers:?
…..
யாரோ நீங்கள் எந்த நீரோ என்று இன்னும் குழப்பாமாயிருப்பதால் இப்போதைக்கு என்னால் பிடில் வாசிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன் :O.
15
வசந்தன் says:
April 13th, 2006 at 10:16 am edit
நான் கேட்டது, வசந்துரு கவிஞனான கதைய. உது வசந்துரு மேல சுமத்தப்படுற அபாண்டமான பழி. அவருக்கிருக்கிற நற்பெயரைக் கெடுக்கிற முயற்சி.
16
வசந்தன் says:
April 13th, 2006 at 10:24 am edit
அது யாரோவோ?
உந்த ஆட்டம் போடுற நபர் ஆரெண்டு தெரியாதோ? முழுக்க உண்மை எண்டு சொன்னதுக்கால தன்னைப்பற்றிச் சொன்னதுகளும் உண்மை எண்டு ஒத்துக்கொள்ளிற மாதிரியெல்லோ கிடக்கு.
கவிதை எழுதிக் கிழிக்க நானென்ன வேலை வெட்டியில்லாதவனோ? :visil:
17
டிசே தமிழன் says:
April 13th, 2006 at 10:58 am edit
/உந்த ஆட்டம் போடுற நபர் ஆரெண்டு தெரியாதோ? முழுக்க உண்மை எண்டு சொன்னதுக்கால தன்னைப்பற்றிச் சொன்னதுகளும் உண்மை எண்டு ஒத்துக்கொள்ளிற மாதிரியெல்லோ கிடக்கு./
வசந்தன், பாவம் அந்த ‘யாரோவை’ வம்புக்கு இழுக்காது விடுமப்பா…..அந்த ஆள் இப்பவே எதிர்காலத்தை நினைத்து குலைநடுங்கத்தொடங்கிவிட்டார் போல :(.
….
/கவிதை எழுதிக் கிழிக்க நானென்ன வேலை வெட்டியில்லாதவனோ?/
கவிஞருக்கு உணர்ச்சியும் வேண்டும்; உணர்ச்சிவசப்படவும் தெரிந்திருக்கவேண்டும் என்று சொல்லுவினம். பார்த்தீரோ…உமக்கு நல்லாய் உணர்ச்சிவசப்படத் தெரிகிறது….நல்ல சகுனந்தானே! :ninaippu:
18
yaro says:
April 13th, 2006 at 11:17 am edit
//யாரோ நீங்கள் எந்த நீரோ என்று இன்னும் குழப்பாமாயிருப்பதால் இப்போதைக்கு என்னால் பிடில் வாசிக்க முடியாமைக்கு வந்துகின்றேன் //
குழப்ப வெண்டியதில்லை மகனே :cool:
எதுவுமே வாசிக்க வேண்டாம்…….
\\அது யாரோவோ?
உந்த ஆட்டம் போடுற நபர் ஆரெண்டு தெரியாதோ? முழுக்க உண்மை எண்டு சொன்னதுக்கால தன்னைப்பற்றிச் சொன்னதுகளும் உண்மை எண்டு ஒத்துக்கொள்ளிற மாதிரியெல்லோ கிடக்கு.\\
என்னை மேலே சொன்ன ஆட்களுடன் போட்டு குழப்பி மண்டையை உடைக்காதே மகனே :p
//கவிதை எழுதிக் கிழிக்க நானென்ன வேலை வெட்டியில்லாதவனோ?//
இதெண்டா கடைந்தெடுத்த உண்மை :devil1:
19
sayanthan says:
April 15th, 2006 at 12:26 am edit
//இப்ப ஓர் வளர்ப்புப் பிராணி மாதிரி வாலையாட்டிக்கொண்டு அந்த அம்மணிக்குப்பின்னால் திரிகிறராம்//
அடச்சே.. பிறைவசியே கெட்டுப்போச்சு.. எப்பிடியப்பா.. இப்பிடியெல்லாம்..
20
தங்கமணி says:
April 19th, 2006 at 1:25 am edit
ரொம்ப நாளைக்குப் பிறகு வந்து படித்ததில் சிரிப்பும் மகிழ்வுமாய்ப் போயிற்று. நீங்களும் கனவு காணத்தொடங்கிவிட்டீர்களா? நல்லது.
அது கனெக்டிகெட்காரருக்கு மட்டுமானது என்று நினைத்திருந்தேன்! :)