Friday, September 22, 2006

கனடீய தமிழ் இளைஞர் யுவதிகளின் இருத்தல்கள்

-விவாதத்திற்கான சில புள்ளிகள்-

(Wednesday, August 16th, 2006 at 9:35 am )

புலம்பெயர் வாழ்வானது இளைஞர், யுவதிகளின் வாழ்வியற்பாங்கில் பெரும் மாற்றத்தையும், காலம் காலமாய் இதுதான் எங்கள் கலாச்சாரம் என்று கொண்டுவந்த தொன்மங்களின் அடிவேரையும் ஆட்டங்காணச்செய்துள்ளது. இரட்டைக்கலாச்சாரத்தில் உழலவேண்டிய காலத்தின் நிர்ப்பந்தத்தால், அதிகம் மனச்சிதைவுட்குட்பட்டு எது தனக்குரிய திசையென்று அறியமுடியாது ஏதிலியாய் அலைந்துகொண்டிருக்கிறது இன்றைய கனடீய தமிழ் இளைஞர் சமுதாயம். வன்முறையும், தற்கொலைகளும் கனடீய தமிழ் இளைஞர் சமுதாயத்தில் ஆழமாய் பதியஞ்செய்யப்பட, சின்ன முரண்பாடுகளுக்கே ஆயுதம் து¡க்கிக்கொண்டு இளைஞர்கள் திரிவதும், சாதாரண மனஅவசங்களிற்கே தற்கொலையே முடிவென இளைஞர் யுவதிகள் நாடுவதுமாய் இன்றைய யதார்த்தம் இருக்கிறது.

கனடீய தமிழ் இளைஞர் வன்முறையானது ஒரு வலைப்பின்னலைப்போன்றது போன்ற மாயையை வேற்றின மக்கள் மத்தியில், பத்திரிகைகள் உருவாக்கி விட்டனவென்றால், அது குறித்து சரியானவளவில் அக்கறைப்படாத அல்லது அவசியமற்றதென விலக்கிவைத்த எங்கள் தமிழ் சமுதாயத்தை நோக்கியே சுட்டுவிரல்நீட்டல் மிக உத்தமம். இளைஞர் வன்முறை குறித்து, ஒரு ஆய்வுநோக்கில் கனடீய தமிழ் இளைஞர் அமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை மிக முக்கியமெனலாம். அந்த ஆய்வு, வன்முறை குழுக்கள் எவ்வாறு தோன்றுகின்றனவென்றும், அவை எந்தநோக்கில் கட்டுப்படுத்தப்படக் கூடியனவென்றும், பெற்றோர், வெகுசன ஊடகங்களின் பங்கு என்பன என்னவென்றும், ஒரு விவாதத்தை தொடர்வதற்கான மிகமுக்கியமான புள்ளிகளையும் விட்டுச்சென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் பத்திரிகைகளும், மக்களும் அது வழங்கிய அவதானங்களில் ஒன்றான, விடுதலைப்புலிகளுக்கும், இங்குள்ள இளைஞர் வன்முறை குழுக்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லையென்பதை மட்டுமே பிரதானப்படுத்தி, பிற நல்ல விடயங்களை தவறவிட்டமை மிகந்த கவலைக்குரியது.

இளைஞர் வன்முறையானது அநேகர் நினைப்பதுபோல, இங்குள்ள இரண்டு மிகப்பெரிய வன்முறைக்குழுக்களைச் சுற்றி மட்டுமே வருகின்றன என்பது மிகவும் தவறு. அதுவானது இன்று பரவிப்படாந்து, உயர்கல்லூரியிலுள்ள வளரிளம்பருவத்தின் ஆரம்பக்கட்டத்திலுள்ள இளைஞர்கள் வரை எட்டியுள்ளது. இந்த வன்முறையானது தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இளைஞர்களாலோ அல்லது குழுக்களாலோ எதிர்காலத்தில் எடுத்துச்செல்லப்படப்போவதில்லை. அதுவானது ஒரு குறிப்பிட்ட வயதுள்ளவர்களால் மட்டும் தொடர்ந்து எடுத்துச்செல்லப்படப்போகின்றது. வன்முறைக்குழுக்களில் ஆரம்பகால உறுப்பினர்களாய் இருந்தவர்களில் பலர், இன்று திருமணஞ்செய்து அல்லது குழுக்களைவிட்டு மிக அமைதியான முறையில் வாழ்க்கை நடத்த விரும்புகின்றவர்களாய் இருக்கின்றனர். ஆனால் ஆய்வில் குறிப்பிடப்பட்ட ஒரு இளைஞன் சொல்வதுபோல், ‘எனது நெருங்கிய உறவினர் ஒரு வன்முறைக்குழுவில் இருந்தார். அத்துடன் இந்த குழுக்களுடன் தொடர்பும் கொள்ளவேண்டாமெனவும் எச்சரித்திருந்தார். என்கின்றபோதும் என்னால் அதை விலத்திச்செல்லமுடியவில்லை, நான் ஒரு இளைஞர் குழுவில் இன்று இருக்கின்றேன்’ என்கின்றான். எனவே ஏலவே கூறியதுமாதிரி, இளைஞர் வன்முறைக்குழுக்கள் ஆனவை ஒரு குறிப்பிட்ட வயதில் (பொதுவாய் 16 வயதிற்கும் 25 வயதிற்கும் இடையில். உள்ளவர்களாயே தொடர்ந்து எடுத்துச் செல்லப்படப்போகின்றது என்பதைக்கருத்தில்கொண்டு இவைகுறித்த அக்கறையை எமது சமுகமும், ஊடகவியலாளர்களும், குடிப்பதற்கும் குரைப்பதற்கும் எனவிருக்கும் ஊர்ச்சங்கங்களும், பாடசாலைச் சங்கங்களும் வளர்த்துக்கொள்ளல் நல்லது.

யுவதிகள் தற்கொலைசெய்யும் அளவும் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது என்பது
அனைவருக்குந்தெரிந்த ஓர் உண்மை. ஆனால் தற்கொலைகள் நடக்கும்போது அவை குறித்து பேசுவதும் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாய் அக்கறை கொள்ளாது இருப்பதும் நமக்குச் சாதாரணமாகிவிட்டது. காதல் என்பது புனிதமானதென்ற மாயைக்குள் சிக்கிக்கொண்ட பல யுவதிகள், அவை இடைநடுவில் தோல்வியுறுகையில் இவ்வாறான முடிவுகளை எடுப்பதும், மற்றும் உயர்கல்வி கற்று பட்டம் எடுத்தல் மட்டுமே வாழ்க்கையென யாழ்ப்பாண மேலாதிக்கசக்திகளின் மிச்சங்களினாலும் இவ்வாறான முடிவுகளை எடுக்கத்து¡ண்டப்படுகின்றனர். தற்கொலைகள் குறித்த விழிப்புணர்ச்சி அண்மைக்காலத்தில் சற்று அதிகரித்திருப்பதும், அவ்வாறான மனஅவசங்களுக்கு உட்பட்டவர்கள் மனந்திறந்து பேசுவதற்கு சில துறைசர்ந்த சமூகசேவகர்கள் தங்கள் நேரங்களை ஒதுக்க முன்வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களுக்கு விரிந்துகிடக்கும் வெளியுலக வாழ்வின் மிகச்சிறிய பகுதியையே யுவதிகள் அனுபவிக்க அனுமதிக்கப்படுகின்றனர் எனபதுவும், வீட்டில் கனவுகளுடன் அல்லது ஏமாற்றங்களுடன் தனித்துநிற்கும் பெண்களே இவ்வாறான முடிவுகள் எடுக்க முனைகின்றனர் என்றும் நான் நேரில், இணையதளங்களில் சந்தித்த தோழியர் பலர் கூறிய கருத்துக்கள் நினைவில் கொள்ளத்தக்கவை. இன்றைய புலம்பெயர்வாழ்வில் யுவதிகளை அவதானிக்கையில், அவர்கள் இன்னமும் ஈழத்து மிச்சசொச்ச காலாச்சார, பண்பாட்டுத்தொன்மங்களுடன் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பது தெளிவான உண்மை. ஆகக்குறைந்தது, பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை ஒரளவு கண்காணிப்புடன் அவர்களுக்கு பிடித்ததைச் செய்ய அனுமதிப்பதும் இரட்டைக்கலாச்சாரத்தில் சிக்கித்திணறும் அவர்களுக்கு தமிழ்க்கலாச்சாரம் மட்டுமே உயர்ந்ததென்று திணிக்காமல் இருப்பதுவும் மிகவும் நல்லது (இங்கே தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் இரண்டாகப் பிரித்துப் பார்க்கவே விரும்புகின்றேன்).

ஏலவே சிலாகிக்கப்பட்ட வன்முறை, தற்கொலை ஆகிய இரண்டு விடயங்களுக்கு, இளைஞர், யுவதிகளின் திறமைகள் எங்கள் சமுதாய்த்தால் சிறந்தமுறையில் அடையாளங்காணப்படாமையுமே ஒரு காரணம் எனலாம். எனக்குத்தெரிந்தளவில் இளைஞர் குழுக்களில் இருப்பவர்களில் பலர் பன்முகப்பட்ட ஆளுமைகளுடன் இருக்கினறனர். ஆனால் அவற்றை தட்டிக்கொடுக்கவேண்டிய நாம் அவர்கள் நல்லவை அல்லாதவை செய்யும்போது மட்டும் கிளாந்தெழுந்து பேசுவபர்களாய் இருக்கிறோம் (உதாரணத்திற்கு அவர்களில் பலர் மேற்கத்தைய நடனங்கள் ஆடுவதில், பாடல்கள் பாடுவதில் மிக வல்லவராய் இருக்கின்றனர்). எங்கள் கலாச்சாரம் அவைகளல்ல என்று முகாரி பாடுவதைவிட, அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை எந்தவழியிலேனும் வெளிக்கொணரவேண்டிய பொறுப்பு நமக்குண்டு.

இந்தக்கட்டுரையில் இளைஞர் வன்முறையும், யுவதிகள் தற்கொலைகள் குறித்தும் மட்டுமே பேசப்பட்டனவெனினும் கனடீய இளைஞர், யுவதிகளின் இருத்தல்கள், வேறுபல மிகச்சிறந்த வழிகளில் இந்த புலம்பெயர்ந்த மண்ணில் பதிவுசெய்யப்படுகினறனவென்பதும் கவனத்தில்கொள்ளப்படவேண்டும்.

(நன்றி :பதிவுகள் - 2002ம் ஆண்டளவில் எழுதப்பட்டது)

1 comment:

பின்னூட்டங்கள் said...

1
shan says:
August 16th, 2006 at 10:35 am edit
:doubt:
2
செல்வராஜ் says:
August 16th, 2006 at 2:31 pm edit
டிசே, கனடீயத் தமிழ்ச்சூழலில் இந்தப் பிரச்சினை இருப்பது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. முக்கியமான ஒன்று தான். பரவலாய் ஒரு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டியது அவசியமே.
//..பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை ஒரளவு கண்காணிப்புடன் அவர்களுக்கு பிடித்ததைச் செய்ய அனுமதிப்பதும் இரட்டைக்கலாச்சாரத்தில் சிக்கித்திணறும் அவர்களுக்கு தமிழ்க்கலாச்சாரம் மட்டுமே உயர்ந்ததென்று திணிக்காமல் இருப்பதுவும் மிகவும் நல்லது//
அந்த விழிப்புணர்வை உண்டாக்குவதற்கு மேற்சுட்டிய அறிவு நிச்சயம் தேவை. சுயவாழ்வில் இதனை நினைவில் கொள்ள நான் முயல்கிறேன்.
3
டிசே தமிழன் says:
August 16th, 2006 at 10:22 pm edit
shan :kelvi:
…..
செல்வராஜ், இங்கு புலம்பெயர்ந்து வந்த சீனா, இத்தாலிய மக்கள் ஆரம்பத்தில் தங்களைப் புதிய கலாச்சாரம்/வாழ்க்கைப் பாங்குடன் தகவமைத்துக்கொள்வதில் அடைந்த சிக்கல்களைப் போலத்தான் (ஈழத்)தமிழ்ச்சமுதாயமும் இன்றைய பொழுதுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது என்று நினைக்கின்றேன். தனிமனிதர்களிலிருந்து அமைப்புக்கள்வரை அனைவரும் இந்த விடயங்கள் குறித்து அக்கறையும்/விழிப்புணர்வும் கொண்டிருத்தலே சறுக்கல்/வீழ்ச்சிகளிலிருந்து இளைஞர், யுவதிகளை விரைவில் எழவைக்கும் என்று நம்புகின்றேன்.
4
selvanayaki says:
August 16th, 2006 at 10:52 pm edit
புலம்பெயர் வாழ்வில் இது ஒரு முக்கியமான பிரச்சினை என்றே கருதுகிறேன் டிசே. இளைய தலைமுறைக்கு இதுசார்ந்த சரியான புரிதலை வழங்கும் பக்குவத்தை முதலில் பெற்றோர்களே அடைந்திருக்கவேண்டுமோ! திணிக்கப்படுகிறதைவிடவும் தானாகப் புரிந்துகொள்ளப்படுதலே சிறப்பாக இருக்கமுடியுமென உணர்த்துகிறது உங்கள் இப்பதிவு. பெற்றோர் என்ற முறையில் நானெல்லாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறையவே இருக்கின்றதெனவும் உணர்த்துகிறது. நன்றி.
5
டிசே தமிழன் says:
August 17th, 2006 at 8:33 am edit
பின்னூட்டத்துக்கு நன்றி செல்வநாயகி.
…….
பெற்றோருக்கு கடமைகள் இருக்கின்றன என்பதோடு பிள்ளைகளும் தனிப்பட்டவளவில் தமக்கான் விழிப்புணர்வை ஏற்படுத்தலும் அவசியம் என்று நினைக்கின்றேன். முக்கியமாய் பெற்றோர் இருவரும் வேலை செய்கின்ற பிள்ளைகளுக்கு தமது நேரத்தை எப்படி/யாருடன் செலவழிப்பது போன்ற கவனம் அதிகம் தேவை என்று நினைக்கின்றேன். பொதுவாய் ஒரு பெரும் வட்டத்துக்குள் இந்தப் பிரச்சினைகளையோ அதற்கான தீர்வுகளையோ இலகுவாய் அடக்கிவிடமுடியாது என்றாலும் -ஒரு காலத்தில் இவற்றிற்கு Victim ஆகிவிடக்கூடியவனாய் இருந்தவன் என்றளவில்- சிறு கதையாடல்களையாவது இவை குறித்து ஆரம்பிப்பது என்னளவில் மிக முக்கியம் என்று நினைக்கின்றேன்.
6
Flying_Dragon says:
August 17th, 2006 at 9:00 am edit
:cool:
Yo .. But I think there are other problems such as livelyhood,joint family, no girlfriend_depression might take priority..
But Generally agrrrrreee what you say yo..
7
johan-paris says:
August 17th, 2006 at 10:13 am edit
இப்பிரச்சனை முற்றாகப் பெற்றோரின் தவறால் ஏற்படுகிறது. “பணம்” என்பதே குறி!; யாருக்காக இப்பணத்தைத் தேடுகிறார்களோ! அந்தப் பிள்ளைகளைச் சரியாக ஆதரித்து வளர்க்க நாதியற்றோராக ; வேலை வேலை என அலைந்து; முதலுக்கே மோசத்தை ஏற்ப்படுத்துகிறார்கள். பலர் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவதில்லை. அடிக்கடி ஒப்பிட்டுப் பேசி;அவர்களிடமுள்ள திறமைகளை அங்கீகரிக்காது. அடுத்ததவரைப் புகழ்ந்து வெறுப்பேற்றும் பணியையே தினமும் செய்பவர்களாக இருக்கிறார்கள். இந்த இரட்டைக் கலாச்சாரம் பெரிய தொந்தரவு. பெற்றோரா? தோழர்களா? சொல்வது சரியெனும் திண்டாட்டம். இதைவிடச் சிலபெற்றோர் நம் நாட்டுச் சாதிப் பாகுபாட்டையும் சொல்லி;எல்லோருடனும் சேர அனுமதிப்பதில்லை,அதே வேளை வாழும் நாட்டு வெள்ளைகளுடன் சேர்ந்தால் பெருமை கொள்வது. என அவர்களைக் குழப்புவது. உயிரின் ,கிடைத்த வாழ்வின் பெருமதியைச் சிறுவயது முதல் புகட்டத் தவறியதென - புகலிடங்களில் பிள்ளைகள் எதிர் நோக்க உள்ள பிரச்சனைகளுக்கு மெள்ள மெள்ளத் தயார் படுத்தாமல் விட்டதால் ,அவர்களுக்கு சிறு பிரச்சனையைக் கூட முகம் கொடுக்க முடியாதோராக்கிவிட்டது. நான் பெற்றோரையே குறைகூறுவேன்.
யோகன் பாரிஸ்
8
டிசே தமிழன் says:
August 17th, 2006 at 2:27 pm edit
/But I think there are other problems such as livelyhood,joint family, no girlfriend_depression might take priority../
Yoo dargon buddy, I agree with your priorities too.
ஆனால் அதற்காய் /no girlfriend_depression/ என்று எனக்கும், உங்களுக்கும் இருக்கின்ற தனிப்பிரச்சினைகளை எல்லாம் உலகப்பிரச்சினையாக்குவது நியாயந்தானா :-)? இங்கே பெடியங்கள் தங்களுக்குள் அடிபடுவதற்கு முக்கிய காரணமாய் இருப்பது, தன்னுடைய கேர்ள்பிரண்டை மற்றவன் sight அடிக்கிறான் என்பதற்காய்…. இல்லாவிட்டால் தன்னைவிலத்திவிட்டு இன்னொருத்தனை நேசிக்கின்றார் என்பதற்காய்… இருக்கும். சிலவேளை அந்தப்பிள்ளை இரண்டு பேரையுமே விரும்பமாட்டார், ஆனால் இவங்கள் -இல்லாத விசயத்துக்காய்- தங்களுக்குள் அடிபட்டுக் கொள்ளுவாங்கள் :-(.
9
டிசே தமிழன் says:
August 17th, 2006 at 2:47 pm edit
யோகன், உங்களின் விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. உங்களின் அனேகமான கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றேன். நீங்கள் குறிப்பிட்டமாதிரி பிள்ளைகளுக்காய் உழைக்கின்றோம்…. அவர்களின் நல்வாழ்வுக்காய் புலம்பெயர்ந்துவிட்டோம்….. என்று கூறிக்கொண்டு அவர்களோடு மனந்திறந்து பேசாமல், எடுத்ததுக்கெல்லாம் பிள்ளைகளைக்குறை கூறிக்கொண்டு பல பெற்றோர்கள் இருக்கின்றார்கள் என்பது மிகமுக்கியமான அவதானம். அத்தோடு இங்கும் பிள்ளைகளுக்கு சாதி போன்ற விடயங்களைத் திணிக்கும் பெற்றோரைப் பற்றி ஒரு தனிப்பதிவே எழுதலாம்.
நிற்க. ஆனால் -பொதுப்படையாக- இவ்வாறான பிரச்சினைகளுக்குக் காரணம் பெற்றோர்
மட்டுமே என்று சுட்டுவிரல் நீட்ட சற்றுத்தயக்கமாய் இருக்கிறது. விரும்பிய அளவுக்கு சுதந்திரம் கொடுத்து பெற்றோர்கள் வளர்த்த பிள்ளைகள் கூட தறிகெட்டுப் போனதைக் கண்டிருக்கின்றேன். நீங்கள் குறிப்பிடுகின்றமாதிரி பெற்றோர்-பிள்ளைகள் தொடர்பாடல் சுமுகமாயும், எதையும் மனந்திறந்து பேசக்கூடிய சூழல் பிள்ளைகளுக்கு வாய்ப்பதுவுமே இந்தப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கி நகரக்கூடிய சாதகமான புள்ளிகளாக இருக்கும் என்று எண்ணத்தோன்றுகின்றது.
10
Chandravathanaa says:
August 20th, 2006 at 5:25 am edit
எமது இளைய சமூகத்தில் வேர் கொண்டிருக்கும் பாரிய பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.
இப்பிரச்சனைக்கு முற்று முழுதாகப் பெற்றோரையும் குற்றம் கூறி விட முடியாது. சில சமயங்களில் பெற்றோரின் பிள்ளைகளிடமிருந்தான அதீதமான எதிர்பார்ப்பும் ஒரு காரணமாயிருந்தாலும் வேறும் பல காரணங்கள் இருக்கின்றன. டிசே குறிப்பிட்டது போல ஒரு பெண்ணுக்காக தமக்குள் ஆளாளுக்கு வெட்டிக் கொத்துப் பட்ட கதைகள் ஜேர்மனியிலும் உண்டு.
போரின் பாதிப்பும், புலம் பெயர்வு அவர்களை அறியாமலே அவர்களுள் ஏற்படுத்திய தாக்கமும், இரு கலாச்சாரங்களுக்குள்ளான முரண்பாடுகளில் வளர வேண்டிய சூழ்நிலையும், தாழ்வுமனப்பான்மையில் நான்தான் பெரியவன், வலியவன் என்று காட்டிக் கொள்ள வேண்டிய நிலைப்பாடும்…. என்று பல காரணிகள் இந்த புலம் பெயர் இளைஞர்கள் யுவதிகளின் இருத்தல்களை நிர்ணயிக்கின்றன.
இங்கு பெற்றோரின் பங்கு இத்தனை சிக்கல்கள் தமது பிள்ளைகளுக்கு இருக்கிறதென்று என்பதை உணர்ந்து அவர்களை அணுக வேண்டிய பொறுப்பான செயற்பாடே. நாங்கள் பெரியவர்கள். உன்னைப் பெற்றவர்கள். நாம் சொல்வதுதான் சரி… என்ற பாணியில் அவர்களை அணுகாமல் அவர்கள் மனதின் உளைச்சல்களையும் இயலாமைகளையும் கருத்தில் கொண்டு தோழமையோடு அணுகி.. நட்போடு கதைக்கும் போது பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உடனே இல்லாவிட்டாலும் அந்த இளைஞர்கள் பின்னராவது சிந்தித்து செயற்பட பெற்றோரின் இத்தகைய அணுகல் உதவும்.
இத்தனை கவனமும் ஒரு குறிப்பிட்ட வயது வரையே. அது தாண்டியதும் அந்தப் பிள்ளைகள் தாமாக மாறுவார்கள். அந்தக் குறிப்பிட்ட வயதுக்குள் பாரதூரமாக எதுவும் நடந்து விடாது… அவர்கள் பாதைகளும் மாறி விடாது இருக்க பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடனும் நட்புடனும் பிள்ளைகளுடன் பழக வேண்டும்.
11
டிசே தமிழன் says:
August 21st, 2006 at 8:42 am edit
விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி சந்திரவதனா.
…………
/இத்தனை கவனமும் ஒரு குறிப்பிட்ட வயது வரையே. அது தாண்டியதும் அந்தப் பிள்ளைகள் தாமாக மாறுவார்கள். அந்தக் குறிப்பிட்ட வயதுக்குள் பாரதூரமாக எதுவும் நடந்து விடாது… அவர்கள் பாதைகளும் மாறி விடாது இருக்க பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடனும் நட்புடனும் பிள்ளைகளுடன் பழக வேண்டும்./
இது ஒரு முக்கியமான அவதானம். ஒரு குறிப்பிட்ட வயதுகளில்தான் இவ்வாறான விடயங்கள் நடந்தேறுகின்றன. அதைக் கடந்து வந்துவிட்டால் அவர்களும் இயல்பான மனிதர்கள் ஆகிவிடுவார்கள். ஆனால் அதற்குள் இவற்றிற்கு விலையாக உயிரையும் இழக்க வேண்டிய நிலையும் இருப்பதுதான் அவலமானது.