Tuesday, September 26, 2006

நண்பரின் பத்தி எழுத்தொன்று……

ஜூலை மாதம் ஈழத்தமிழர்களுக்குப் பல நினைவுகளைக் கொண்டுவரும் ஒரு மாதமாகும். பல கொடூரங்களையும், பின் எழுச்சிகளையும் இந்த மாதத்தில் ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றிருக்கின்றது. மரணங்கள் நிறைந்த இந்த மாதம், கறுப்பு ஜூலை என்றழைக்கப்படுவதில் வியப்பேதுமில்லைதானே. மரணங்கள் பற்றி நண்பரொருவரால் எழுதப்பட்ட பத்தியொன்றினை இங்கே நன்றியுடன் மீள் பதிவு செய்கின்றேன்.
…..
ஜீவன் கந்தையா என்ற பெயரில் பதிவுகள் இணையத்தளத்தில் பத்திகள் எழுதிய மைக்கேல், பல அருமையான சிறுகதைகளையும் குறுநாவல்களையும் எழுதியுள்ளார். மைக்கேலின் விரிவான வாசிப்பையும், ஆதாரங்களுடன் நிதானமாய் விவாதிக்கும் திறனையும், ஒரு சிறுவனின் நிலையில் நின்று பலசமயங்களில் வியந்து பார்த்துக் கொண்டிருப்பதுண்டு. மைக்கேல் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் எழுதிய பத்து, பதினைந்து சிறுகதைகள் வரையில் என் சேகரிப்பில் இன்னமும் இருக்கின்றன.. ‘நர்மதா’ என்ற பெயரில் தனது அலைந்துழன்ற இயக்க வாழ்வையும், இந்தியாவில் இருக்கையில் தான் கண்ட பிற விடயங்களையும் நாவலாக எழுதிக்கொண்டிருப்பதாய் அவர் கூறியதாயும் நினைவினில் உண்டு.. என்றேனும் ஒரு நாள், நான் பதிப்பாளரானால் மைக்கலினதும், சித்தார்த்த ‘சே’ குவேராவினதும் படைப்புக்களையும் தான் முதன்முதலில் வெளியிடுவது என்பது எப்போதோ நான் தீர்மானித்த விடயம். இன்று மைக்கேல் அஞ்ஞானவாசம் போய், அவரது தொடர்புகளும் முற்றுமுழுதாக அறுந்துவிட்ட நிலையில், எனது வாசிப்பும் எழுத்தும் பன்முகமாயும் விரிந்ததளமாயும் இருக்கவேண்டும் என்று அக்கறைப்பட்டு சகோதரவாஞ்சையுடன் என்னை ஊக்குவித்த அவரை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூருகின்றேன். (~டிசே)
…………………..
சூரையங்காடு

-ஜீவன் கந்தையா

இந்த முறையும்  மரணத்தைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன்.  மரணந்தான் மனிதனுக்கு இருக்கிற ஆகப்பெரிய துன்பம் என்று நினைக்கிறேன். காவோலைகள் சர சரவென விழ, குருத்தோலைகள் சிரித்த காலம் போய், குருத்தோலைகள் சரிக்கப்படும் காலமொன்றில் இது நிகழ்ந்தது. நிகழ்ந்து பதினெட்டு வருடங்கள் தாண்டிவிட்டன. இந்தப் பதினெட்டு வருடங்களிலே எத்தனையோ மரணங்களைப் பார்த்து வந்துவிட்டேன். திருமூலரின் வார்த்தையின் படிக்கு, நீரிலே மூழ்கி நினைப்பொழிந்து போன முகங்களாக பல, என் ஞாபக அடுக்குகளுக்குள் புதைந்துபோய் விட்டன. அடிக்கடி அலைக்கும் நோயின் உபாதைக்குள்ளாக என் மரணம் பற்றிய பீதி கிளம்பி, வெறுமைக்குள் தள்ளும்போது, சில முகங்களை ஞாபக அடுக்குகளிலிருந்து உருவி எடுத்து தூசி தட்டிப் பார்ப்பதுண்டு. ஆனால் அவற்றுடன் மானசீகமாக உரையாடலை வைத்துக்கொண்டதில்லை. ஏனெனில் முடிவுறாத உரையாடலை நீட்டிச் செல்வதற்கு அந்த முகங்கள் என்னையும் அவைதம் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுமே என்ற பயம்தான் காரணம். 

சில இரவுகளில் கனவுக்கும், நனவுக்கும் இடைப்பட்ட நிலையில் ஓரிரு முகங்கள் வந்து உரையாடலைத் தொடங்கும். ‘என் கவிதை வரிகளைக் களவாடி இருக்கிறாயே ராஸ்கல்!’ என தயாபரன் வந்து மிரட்டுவதும் உண்டு.

தயாபரன் என் பால்யகால நண்பன். எனக்கு கவிதை படிக்கவும், ரசிக்கவும் அவன்தான் சொல்லிக் கொடுத்தான். மைம்மல் பொழுதொன்றில் இரண்டுபேரும் பருத்தித்துறைக் கடற்கரையில் ‘வட்டப்பாறை’ என்று அழைக்கப்படும் கடலுக்குள்ளே அரைவட்டத்திற்கு பாறைகள் நீட்டிக்கொண்டிருக்கும் பிரதேசத்தில், தண்ணிக்குள் தலைநீட்டி நின்ற பாறையொன்றில் கிழக்குநோக்கி இருந்துகொண்டு அவனது கவிதைக் கொப்பியிலிருந்து கவிதைகள் படித்தோம். அதிகமும் அவனது காதலி மாதங்கியினை நோக்கி பாடிய மடலேறுவகைப் பட்ட கவிதைகளாக இருந்தும் புதுக்கவிதையின் சூட்சுமங்களை அந்தவயதிலேயே கைவரப் பெற்றிருந்தான். அவனுக்கு துணைசெய்வதற்கென சிவகங்கையிலிருந்து கவிஞர் மீரா வேறு “கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்” என்ற கவிதைப்புத்தகத்தையும் வெளியிட்டிருந்தார். அந்த நாற்பது பக்க கொப்பியில் எழுதப்பட்டிருந்த கவிதைகள் அத்தனையையும் படித்து முடிப்பதற்கு சூரியனுக்கு விருப்பமிருக்கவில்லை. இருளடைந்து விட்டதும் தயாபரன் சொன்னான். ‘இந்தா வீட்டில கொண்டுபோய்ப் படிச்சிட்டு பிறகு தா’.

மறுநாள் சேதி அறிந்து நான் சைக்கிளில் த்துப்பறந்து போனபோது புகையிலைப் பாத்திக்குள் தயாபரன் குப்புறக் கிடந்தான். மேலே நடு உச்சியில், கத்தரி வெய்யிலின் அக்னிக்கதிர்களை எறிந்துகொண்டு சூரியன் மிகுதிக் கவிதைக்காக எதிர்பார்த்திருந்தான். முதுகில் சன்னம் துளைத்த சின்ன ஓட்டைதான் இருந்தது. ஆனால் நெஞ்சுப்பக்கம் ஓவென்று பெரிய சல்லடை போட்டுக்கொண்டு S.L.R. துவக்கின் சுருள்சன்னம் வெளியேறிப்போயிருந்தது. முதல்வெடி காலில் தைத்ததும் தப்பியோடுவதற்கு புகையிலைப்பாத்திக்குள் மறைந்து தவழ்ந்து போய்க்கொண்டிருந்தபோது தோட்டவேலி பாய்ந்து வந்து முதுகுக்கு அருகே துவக்கை வைத்து இறுதி முற்றுப்புள்ளியை யாரோ ஒரு ஆமிக்காரன் வைத்திருந்தான்.

தாய்க்குத் தலைமகன் தயாபரன். அவனுக்குக்கீழே குஞ்சும் குருமானுமாய் பெண்சகோதரிகள். வெளிறிப்போயிருந்த சடலத்தைக் கட்டியழும் சகோதரிகளுக்கு யார் ஆறுதல் சொல்வார்?. எட்டுச் செலவுவரை ஓடியாடி நண்பர்கள் எல்லோரும் அக்குடும்பத்திற்கு உதவினோம். அந்த நாளில் தினமும் போய் வந்துகொண்டிருந்தும் கவிதைக்கொப்பியை கொண்டுபோய்க் கொடுக்கவில்லை. இப்படியாக அது என்கூடவே இருந்தது. யாராவது நம்பிக்கையாக வைக்கத் தந்த காசு உங்களிடம் இருந்தால் செலவுக்கு கஸ்டப்படும் தினங்களில் பத்திருபதை எடுத்துக்கொள்வதில்லையா? அதேபோலத்தான் கவிதை எழுதுவோமே என்று தயாரிப்புச்செய்து கவிதையும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது சில இடங்களில் ஒறுவாய் விழும் வார்த்தைகளுக்கு அந்தக் கொப்பியில் இருந்து எடுத்து நிரப்பியிருக்கிறேன். திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற எல்லோரது நம்பிக்கையைப் போலத்தான் இதையும் நான் செய்தேன். ஆனால் எல்லாக் கடனையும் தீர்த்துவிடக்கூடிய மாதிரி மனிச வாழ்க்கை இல்லை அல்லவா? இப்போது தயாபரனின் மிரட்டல் நீள்கிறது...

ஒரு மனித இறப்பை ஐந்தடி தூரத்திலிருந்து வைத்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்கு வயது ஏழு.

மலேரியாக் காய்ச்சல் பீடித்து என்னை மந்திகை ஸ்பத்திரியில் கொண்டுபோய்ச் சேர்த்திருந்தாள் அம்மா.

ஆஸ்பத்திரிக் கட்டிலில் நான் படுத்திருக்க, அம்மா அருகே நின்றுகொண்டு தோடம்பழம் உரித்து, இரண்டு சுளையை எனக்குத் தீத்துவதும், மூன்றாவதை தான் தின்பதுமாக லயப்பிசகின்றி இயங்கிக்கொண்டிருந்தாள்.

எனக்கு இடப்புறமாக ஐந்தடி தள்ளியிருந்த கட்டிலில் ஒரு வயதுக்குக் குறைவான குழந்தை ஒன்று படுத்திருந்தது. அதற்கு சேலைன் ஏறிக்கொண்டிருந்தது. செங்கமாரி முற்றி மங்கமாரி ஆக்கிவிட்டது என்று அதன் தாய் எனது அம்மாவுக்கு சொல்லியிருந்தாள். அதற்கு அழுவதற்குக்கூட வலுவில்லைப்போலும். ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்த முதல் நாளிரவிலிருந்து ஒரு அனக்கமும் காட்டவில்லை. எப்போதாவது ஒருமுறை கண்ணைத் திறக்கும். காட்சிகள் பிடிபட்ட எந்த அசுமாத்தமு மின்றி சிறிதுநேரம் இமையாடிவிட்டு, பின்னர் அயர்ச்சியில் மூடிவிடும்.

அன்று பகல் பூராவிலும் அதன் அம்மாவும் எனது அம்மாவும் பாடு பேசிக்கொண்டிருந்தபோது, நான் காதைக் கொடுத்து அலுத்துப்போய் நித்திரையாகி விட்டேன். உறக்கம் கலைந்தபோதுகூட “இவன் பிறந்த ராசியோ என்னவோ சாணைப்பிள்ளையில இருந்து நோய் நொடிதான் தங்கச்சி” என்று என்னைப் பற்றி அம்மா சொன்னது எனக்குக் கேட்டது.
பிறகுதான் இந்தத் தோடம்பழச் சுளை தீத்தலும், தின்னலும் நடந்தது.

அம்மாவிற்குப் போகும் தோடம்பழப் பங்கைக் குறைப்பதற்காக நான் வேகமாக சாப்பிட முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். ஆறேழு நாட்களாக அடித்த காய்ச்சல் காரணமாக எனது வாய்பூராவுமே ருசியற்று மந்தமாகிவிட்டது. தொண்டை வேறு காய்ந்துபோய் இருந்ததால் நினைத்தமாதிரி விழுங்கவும் முடியாமல் திண்டாடினேன்.

திடீரென, கையில் வைத்திருந்த தோடம்பழச் சுளைகளை தொப்பென வீசினாள் அம்மா. “பிள்ளை.. பிள்ளை.. நேர்ஸ்.. நேர்ஸ்” என்று கத்திக் கொண்டு ஓடத் தொடங்கினாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பக்கத்துக் குழந்தையின் தாயும் தாச்சி மறிப்பது மாதிரி அங்குமிங்குமாய் ஓடுவதும் குழந்தைக்குக் கிட்ட வருவதுமாக அலைந்தபோதுதான் ஏதோ ஒருவகைப் புரிதல் நிகழ்ந்து நான் குழந்தையைப் பார்த்தேன். அதன் சின்ன விலாக்கூடு மேலும் கீழுமாக அந்தரப்பட்டது. மூச்சு எடுக்க முடியாமல் வாய் திறந்து மூடுவதுமாக இருந்தது. இப்போது அதன் கண்கள் விரியத் திறந்து அயர்ச்சியற்று பிரகாசமாக இருந்ததுபோல எனக்குப் பட்டது.

நேர்சும் அம்மாவும் ஓடி வந்தார்கள். குழந்தையின் சின்ன நெஞ்சாங்குழிக்குள் கையை வைத்து அமத்தி அமத்தி எடுத்தாள் நேர்ஸ். பல தடவை எத்தனித்தபிறகு, மெதுவாக தன்  கையை எடுத்துவிட்டு வெறுதே பார்த்துக்கொண்டே இருந்தாள். நானும் சரிந்து படுத்து கவனித்துக்கொண்டே இருந்தேன். அதன் விரிந்த இமையை தட்டித் தட்டி விட்டாள். குழந்தையின் தாய் நேர்சைப் பிடித்து தள்ளிவிட்டுக் கொண்டே இருந்தாள். அம்மா அந்தத் தாயின் தோளை அணைத்தபடி ஆறுதல்சொன்னாள். அம்மாவின் கண்களிலிருந்தும் நீர் வடிந்ததை நான் பார்த்தேன்.

பின்னர் நேர்ஸ் விலகிப்போய் டொக்டரைக் கூட்டி வந்தாள். துடிப்படங்கிய சிறு மார்பில் குழாய் வைத்துப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு,
“இஞ்ச பாரம்மா, இதில அழுதுகொண்டு நிக்காதை. மற்றப் பிள்ளையள் பயந்து போடும். நான் D.M.O. இட்டை கையெழுத்து வேண்டித் தாறன், கெதியா பிரேதத்தை வீட்டுக்கு கொண்டுபோகப் பார். பிறகு காம்பராவுக்குள்ள கொண்டுபோனால் எடுக்கிறதுக்கு அலைச்சல்” என்று முடிவாகச் சொன்னார் டொக்டர்.

போர்வையால் குழந்தையின் தலைவரை போர்த்துவிட்டு நேர்சையும் அழைத்துக்கொண்டு டொக்டர் சென்றதும், “தங்கச்சி ஓடிப்போய் ஒரு கார் பிடிச்சுக்கொண்டு வா” என்று அம்மா அத்தாயிடம் வேண்டினாள்.

அவள் தலையில் அடித்துக் குளறிக்கொண்டே வெளியேறிப்போனாள்.
“என்ர ஐயோ! அந்தக் கார்க்காரன் 150 ரூபாக் கேட்கிறான். ஆக்களை ஏத்துற கார்க்  காரர் ஒருத்தரும் பிரேதம் ஏத்தமாட்டினமாம். பிரேதக்கார்க்காரன் 150 ரூபாவாம்... நான் என்ன செய்வன் இந்தப் படுபாதகக் கடவுள் என்னை இப்பிடிச் சோதிக்கிறானே” என்று ஒப்பாரியிட்டுக் கதறிக்கொண்டு திரும்பி வந்தாள் தாய்.

அம்மா என்னருகே வந்து தலையணைக்குள் வைத்திருந்த காசை எடுத்து எண்ணிப் பார்த்தாள். “என்னட்டை 15 ரூபாவும் சில்லறையுந்தானே இருக்கு தங்கச்சி” என்று பரிதாபமாக முறையிட்டாள் அம்மா. ஏதோ கடிதமொன்றை கொண்டுவந்து கொடுத்த நேர்ஸ், “கொண்டு போறதுக்கு ஏற்பாடு செய்திட்டியா” என அவசரப்படுத்தினாள். அந்தத் தாய் செய்வதெதுவும் தெரியாமல் என் அம்மாவை பார்த்து நீர் பெருக்கினாள்.

தரவற்று அழுதுகொண்டிருக்கும் அவளையும் சடலம் மூடப்பட்டிருக்கும் போர்வையையும் மாறி மாறிப் பார்த்தபின், “தங்கச்சி எழும்பு! உன்ரை உடுப்பு பாக்கை எடு நான் பிள்ளையைக் கொண்டுவந்து வீட்டை தாறன், கண்ணைத் துடை, நான் பஸ்சில உன்னைக் கூட்டிப் போறன் அழுது கிழுது காட்டிக் குடுத்துப் போடக்கூடாது” என்னுடைய துவாயை எடுத்து மளமளவென்று குழந்தையைச் சுற்றினாள். அப்படியே தூக்கி தன் தோளில் அணைத்துக் கொண்டு சீலைத் தொங்கலால் சீராக மறைத்துக் கொண்டாள். மறு  கையில் தாயின் கையை இறுகப் பிடித்தபடி என்னைப் பார்த்து,“ராசா! பேசாமக் கட்டில்ல கிடவணை. நான் இந்த அக்காவைக் கொண்டுபோய் வீட்டில விட்டிட்டு வாறன்” என்று சொல்லிக் கொண்டு வெளியேறிப் போனாள்.
நான் பக்கத்துக் கட்டிலின் வெறுமையைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன்.
1984: சென்னை:  காண்டாவனக் காற்று திரண்டு வந்த மாதந்தான் என் கிராமத்திலிருந்தும், என் வீட்டிலிருந்தும் என்றென்றைக்குமாக பிரிந்து வந்தேன். நம்பமாட்டீர்கள், காண்டாவனக் காற்று பெயர்ந்துவரும் மாதத்தில், என் கிராமமே ஒருபக்கம் தலைசாய்த்து நிற்கும். காற்றுத் தெளித்துக் கண்களுக்குள் விழுத்தும் மணல், தூசி, தும்பைத் தவிர்க்க மனிதர் தலை சாய்த்திருப்பர். காற்றின் போக்கிற்கு தென்னை, பனை, மா, சீமைக் கிழுவை, முருங்கை தலை சாய்த்துப் பணியும். சேவலின் விசிறிவால் கூட சாய்ந்தே இருக்கும். ஆனாலும் அது பேட்டுக்கோழியைக் கலைத்தே தீரும். இரவுகளிலும் காற்று அமராது. கடலில் வாங்கெழும்பி அலை உறுமும். ஓலைப்பாயை விரித்து தலைசாய்த்துப் படுத்தால் கூரை முகட்டுவளையில் எலி பிடிக்க நெளியும் சாரைப்பாம்பின் வயிறும் சிலபொழுது தெரியும். இருந்தும் இப்படியான அற்புதக் கிராம வீடுகளிலிருந்து பல இளைஞர்கள் கிளம்பி  இந்தியா வந்தோம்.

சென்னையிலோ  வெயில் அனலெழுப்பியது. ஈழத்தின் பல்வேறு கிராமங்களில் திரட்டப்பட்ட 200 பேர்வரை யுதப்பயிற்சிக்காக சென்னையில் வந்து குவிந்திருந்தோம். யாருக்கும் யாரது பின்புலங்களும் தெரியாதபோதும் எமது கண்களுக்குள் அடைகாக்கப்பட்ட ஈழக்கனவொன்றின் பொன்முட்டையேந்தி நடமாடினோம், உரையாடினோம்...

“இன்னும் இரண்டு வருசங்களுக்கிடையில ஈழம் கிடைச்சிடும். பிறகென்ன.. ராச வாழ்க்கை.”

“எங்களுக்கெல்லாம் தியாகிகள் பென்சன் கிடைச்சாலும் கிடைக்குமடா”

தமிழீழத்தில நடக்கிற முதல்தேர்தல்ல பருத்தித்துறைத் தொகுதிக்கு நான் கண்டிப்பா போட்டியிடுவன்.

“உது விசர்க்கதை நடக்கப்போறது கம்யூனிசப்புரட்சி! தேர்தலுமில்ல ஒரு மண்ணுமில்ல.”

“அதுக்கு, நாங்கள் முதல்ல மக்களுக்கை வேலை செய்யோணும் தோழர்! மக்களை அரசியல் மயப்படுத்தாத ஆயுதப்போராட்டத்தில ஒன்றுமேயில்ல..”

“அப்ப என்ர அக்காவுக்கு சீதனங் குடுக்கத் தேவையில்ல.. எண்டுறியளோ?”

“விடுதலை கிடைச்ச உடன நான் யுர்வேத மருத்துவத்தைப் படிச்சு முடிச்சு அதை ஒரு விஞ்ஞானபூர்வமாக மாற்றியமைக்கப் போறன்.”

“அதுக்குமுதல் நீ உயிரோட இருக்கோணுமே, ஒண்டில் ஆமி சுடும், அல்லாட்டி வேற இயக்கமேதும் மண்டையில போடும்.”

“F குறு¡ப்பை சாப்பாட்டுக்கு கூப்பிடுராங்கள் எழும்புங்கோ” 

சூரியனிலிருந்து குதித்தோடி வந்தவன் போல மேற்கிலிருந்து கத்திக் கொண்டு வந்த தோழன் சேதி சொன்னபோது நான் சாப்பிட்டு முடித்திருக்கவில்லை. மாலைநேரமாகிவிட்டாலும் எனக்கு அப்போதுதான் மத்தியானச் சாப்பாட்டுக்கான வரிசை வந்தது! சடலத்தைப் பார்க்க எல்லோரும் எழுந்தோடினார்கள். நான் மற்றும் ஓரிருவர் மட்டும், பருப்பும், எருமை இறைச்சிக்கறிக் குழம்பும் குழைத்த சோற்றில் கவனம் செலுத்தினோம்.

அது சென்னைக்குப் புறத்தேயுள்ள சாலிக்கிராமத்தின் அருகேயுள்ள ஐ¡னகி தோட்டம் என்ற பரந்த மாமரக்காடு. மாமரத்தில் து¡க்குமாட்டி மரணமானவனுக்கும் எனக்கும் முன்பே பரிச்சயம் இருந்தது. நானும் அவனுமாக இரண்டுவாரம் நாளுக்கு பன்னிரண்டு வார்த்தைக்கு மேலாகாமல் உரையாடிக்கொண்டு ஒரே அறையில் பதுங்கியிருந்தோம். பின்னர் பாசையூரில் வள்ளத்திலேறிய நேரம் தொடக்கம் இராமேஸ்வரம் கரை தொடும்வரைக்கும் நான் அவன்மீது சத்தியெடுத்து, அசிங்கப்படுத்தியபோதும் எந்தவித முனக்கமும் இல்லாமல் அருகில் இருந்தான். கரையிறங்கியபோது அவனது முதுகு பூராவிலும் இரத்ததோயல். அதிவேகமாக ஓடிய வள்ளம் கடலலையில் து¡க்கிப் போட்ட ஒவ்வொரு தரமும் இவனது முதுகு காயப்பட்டிருக்கிறது. இவன் ஒரு அசகாயமெளனி. மனக்காயத்தை வெளியில் து¡க்கி வீசத்தெரிந்திருந்தால் இவனுக்கு தற்கொலைக்கான எண்ணம் வந்திருக்காது. இவன் என்னையும், மற்றவர்களையும் போலத்தான் தமிழீழ விடுதலை வேண்டும் என்ற கனவில், கடற்படையின் கண்காணிப்பு வீச்சை ஊடறுத்து பாக்குநீரிணையைக் கடந்து கரைதாண்டி வந்தானா என்று எனக்கு இன்றைவரை தெரியாது. ஆனாலும் சாப்பாட்டு வரிசை தவறி முன்பாகவே சாப்பிடக் குந்தியதற்கு யாரோ கடிந்துகொண்டதைப் பொறுக்கமாட்டாமல் சோற்றுக்கடாரத்தின் வாய்க்கு சாக்குச் சுற்றிக்கட்டி கஞ்சி வடிக்கப் பாவிக்கும் கயிற்றைக் கழட்டியெடுத்துப் போய் மாமரத்தில் து¡க்குமாட்டி இறந்துவிட்டான்.

சாப்பிட்டுக் கையைக் கழுவிக்கொண்டு போய் நான் சடலத்தைப் பார்த்தபோது, சரிவான மாமரத்தில் கயிற்றை மாட்டி இருந்ததால் உடல் பாரத்திற்கு சடலம் மெல்ல மெல்ல வழுகி வந்து, நிலத்தில் முழந்தாள் பட குந்திக்கொண்டிருந்தது.

யாசிப்பது போல இருந்தது... எதை யாசிக்கிறான் என் மெளனத்தோழன் என இன்றுவரை கேள்வி என்னகத்தே உண்டு!

ஒருவன் உயிர் வாழுவதற்காக சாப்பிடவேண்டி இருக்கிறதல்லவா? இந்தப் பதினெட்டு வருடங்களாக தினந்தினம் என்றில்லாவிட்டாலும் அவ்வப்போது என் கையில் சோற்றுக் கவளம் திரளும் கணங்களில், தூக்கு மாட்டிச் செத்தவன் மனதின் எங்கோ ஒரு மூலையில் இருந்து ஞாபகிக்கிறான்..!

(பதிவுகள் இணையத்தளத்தில் பத்திகளில் ஒன்றாய் இது வெளிவந்திருந்தது)
(Friday, July 21st, 2006 at 8:24 am)

1 comment:

இளங்கோ-டிசே said...

1
theevu says:
July 22nd, 2006 at 4:14 pm edit
:(
//தூக்கு மாட்டிச் செத்தவன் மனதின் எங்கோ ஒரு மூலையில் இருந்து ஞாபகிக்கிறான்..!
.//
இவனது மரணம் ஒழுங்காக அவனது குடும்பத்தினர்க்கு கூட அறிவிக்கப்பட்டு இருக்காது…
2
ஆழியாள் says:
July 22nd, 2006 at 11:22 pm edit
மைக்கேலின் இந்தப் பத்தி வாசித்ததில்லை. நல்ல எழுத்து. பதிந்ததுக்கு நன்றி.
பதிப்பாளராய் வர வாழ்த்துக்கள்.
ஆழியாள்
3
இளவஞ்சி says:
July 23rd, 2006 at 12:35 am edit
// மனக்காயத்தை வெளியில் தூக்கி வீசத்தெரிந்திருந்தால் இவனுக்கு தற்கொலைக்கான எண்ணம் வந்திருக்காது. //
உண்மை!
வாசிக்கத் தந்தமைக்கு நன்றி!
4
தங்கமணி says:
July 23rd, 2006 at 2:41 am edit
வாசிக்கத் தந்தமைக்கு நன்றி டீசே!
5
மலைநாடான் says:
July 23rd, 2006 at 2:00 pm edit
//சாப்பாட்டு வரிசை தவறி முன்பாகவே சாப்பிடக் குந்தியதற்கு யாரோ கடிந்துகொண்டதைப் பொறுக்கமாட்டாமல் //
டி.சே!
இது யாழ் சமுகக் கட்டுமானத்தின் ஒரு குறைபாடெனவும் கருதுகின்றேன். பதிவுக்கு நன்றிகள்.
6
கானா பிரபா says:
July 23rd, 2006 at 6:12 pm edit
வணக்கம் டி ச
வலிநிறைந்த எழுத்துக்குவியல்.
7
டிசே தமிழன் says:
July 24th, 2006 at 10:12 am edit
மைக்கேலின் பத்திக்கான பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!