Tuesday, September 26, 2006

மூன்று தொகுப்புக்கள்: சிறு அறிமுகங்கள்

துவிதம் - ஆழியாள்

துவிதம்,’ ஆழியாளின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாய் வெளிவந்திருக்கின்றது. முதல் தொகுப்பான ‘உரத்துப்பேச’வில் உரத்துப்பேசிய சில கவிதைகளைப் போலன்றி, அதிர்ந்து பேசவிரும்பாத ஒரு பெண்ணின்/மனுசியின் மொழியில் பல கவிதைகள் துவிதத்தில் காணப்படுகின்றன. ஆனால் ஒரு நுட்பமான வாசகர், மெல்லிய குரலில் பேசும் இந்தக்கவிதைகளை விரித்து/விவரித்து வாசித்தால் இவையும் வாசிப்பவரின் மனதினுள் உரத்துப்பேசுவதைக் கண்டுணரமுடியும். முதலாம் வாசிப்பில் சாதாரண கவிதைகளாகத் தெரிந்த பல கவிதைகள், இரண்டாம் வாசிப்பில் நெகிழ்வும் நெருக்கமும் கொண்டு என்னோடு கைகோர்த்து வந்திருந்தன. கவிதைத் தொகுப்புக்களுக்கு முன்னுரை தேவையா/தேவையற்றதா என்ற விவாதத்தை ஒரு புறத்தில் தள்ளிவைத்தாலும், இத்தொகுப்பிலுள்ள மதுசூதனின் முன்னுரை அதிகம் கதைப்பதுபோல எண்ணத்தோன்றுகின்றது. வாசிப்பவர் தனது வாசிப்பினூடாக கவிதைகளை அடையாளங்கொள்ளக்கூடிய சுதந்திரவெளியை முன்னுரை சுருக்கிவிடுவது அவ்வளவு நல்லதல்ல.
(ஆழியாள்: aazhiyaal@hotmail.com)
——————————————————————————————————————————-
பெர்லின் இரவுகள் - பொ. கருணாகரமூர்த்தி
பொ.கருணாகரமூர்த்தி, தனது காரோட்டும் அனுபவங்களினூடாக தான் கண்ட ஜேர்மனியை இத்தொகுப்பில் விபரிக்கின்றார். அங்கத சுவையுடன் அலுப்பின்றி எல்லா கட்டுரைகளையும் வாசித்துவிட முடிகின்றது. மேற்கத்தைய நாடுகளுக்கு பல்வேறு முகங்களுண்டு; அதுவும் இரவில் நிசப்தமாய் இருக்கின்றது நகர் என்று எண்ணுகையில்தான் அது இன்னும் மிகவேகமாக காதலுடன், காமத்துடன், வக்கிரங்களுடன் இயங்கத் தொடங்குகின்றது. அந்த இன்னொருபக்கத்தை பொ.கருணாகரமூர்த்தி எழுத்தால் காட்சிப்படுத்தி பதிவுசெய்ய முயன்றிருக்கின்றார். எனது அரைகுறை தமிழ் இலக்கண அறிவுடனேயே நிரம்ப எழுத்துப்பிழைகளை இந்தத் தொகுப்பில் காணக்கூடியதாய் இருந்தது. அதைவிட, ஈழத்துத்தமிழில் உரையாடிக்கொண்டிருக்கின்ற கதைசொல்லி சடுதியாக தமிழகத்தில் பாவிக்கப்படும் வார்த்தைகளையும் பயன்படுத்தத் தொடங்கிவிடுவதை ஒரு பலவீனமாய் பார்க்கவேண்டியிருக்கின்றது. இரண்டு தசாப்தகாலத்துக்கு மேலாய் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளரின் வாழ்வும் இதற்கான காரணமேயென புரிந்துகொள்ள முயன்றாலும், அவசியமாய் களையப்படவேண்டிய ஒரு குறையென்றே இதனை நினைக்கின்றேன். இக்கட்டுரைகள் திசைகள் மின்னிதழில் தொடர்ச்சியாக வெளிவந்தும் இருக்கின்றன.
(கருணாகரமூர்த்தி: karunaharamoorthy@yahoo.ie)
——————————————————————————————————————————-
தொலைவில் - வாசுதேவன்
பிரான்ஸில் வசித்துவரும் வாசுதேவனின் முதலாவது கவிதைத்தொகுப்பு இது. அவரது அலைந்துழலும் வாழ்வு, அந்நியதேசம், உள்மனத்தேடல், அரசியல் என பல்வேறு விடயங்களை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பேசுகின்றன. மிகக்குறுகிய காலத்தில் எழுதத் தொடங்கி (2002ல் ஆரம்பித்து) சில நல்ல கவிதைகளை எழுதியுள்ளாரென்பது கவனிக்கத்தக்க விடயம். ‘பலஸ்தீனியப் பாதை’, ‘அபத்தங்கள்’, ‘மீள்வரல்’, ‘கோடோ வரும் வரையும்’ போன்றவை குறிப்பிடத்தக்க கவிதைகள். முன்னட்டை வடிவமைப்பிலும் வர்ணங்களிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம் போலத் தோன்றுகின்றது.
(வாசுதேவன்: vasu@laposte.net)
——————————————————————————————————————————-
(தொகுப்புக்களை அனுப்பி வைத்த நண்பர்களின் அன்புக்கு நன்றி)

(Monday, July 31st, 2006 at 11:13 pm)

1 comment:

இளங்கோ-டிசே said...

1
கார்திக்வேலு says:
August 1st, 2006 at 12:22 am edit
டி.சே ,
அறிமுகம் தான் என்றாலும் புத்தகத்திலிருந்து
சில வரிகளைப் போட்டிருக்கலாம் .
வாசுதேவன் புத்தக பற்றி சித்தன் கொட்டில்
பதிவில் வந்துள்ளது முன்னம் படித்திருந்தேன்.
http://ciththan.blogspot.com/2006/06/blog-post_115022480172698918.html
//„யாதும் ஊரல்ல யாவருங் கேளீர்“ என்ற இன்னொரு கவிதையிலும
„…ஊரற்றவர்களே, எவ்வூரும் உங்கள் ஊரல்ல
நீங்கள் ஊரற்றவர்கள் அவ்வளவுதான்…“
„…உங்களுக்கு ஊரிருந்தால் மட்டும் உரையுங்கள்
யாதும் ஊரென்றும் யாவருங் கேளிரென்றும்…“//
ஆனால் சில/பல கவிதைகளில் வரும் உலக இலக்கியப் படிமங்கள் (Van gogh / waiting for godot etc )
கவிதைக்கு தன்னளவில் எவ்வளவு செறிவூட்டுமெனபது தெரியவில்லை
2
Chandravathanaa says:
August 1st, 2006 at 3:50 am edit
டிசே
அறிமுகம் மட்டுந்தானா?
உங்கள் விரிவான பார்வைகளையும் எதிர் பார்க்கிறேன்.
3
Mathy says:
August 1st, 2006 at 6:30 am edit
தொலைவில் - சுகனின் விமர்சனமும் முக்கியமானது
http://sathiyak.blogspot.com/2006/06/blog-post.html
4
suresh kannan says:
August 1st, 2006 at 6:59 am edit
பதிவிற்கு நன்றி டிசே. பொ.கருணாகரமூர்த்தியின் “கூடு கலைதல்” என்றொரு சிறுகதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன். சமயமிருந்தால் அதைப்பற்றி எழுத உத்தேசம்.
5
டிசே தமிழன் says:
August 1st, 2006 at 9:59 am edit
கார்திக்வேலு, மதி சுட்டிகளுக்கு நன்றி. ஆழியாளின் ‘துவிதம்’ பற்றி மு.பொ எழுதிய குறிப்பை இங்கே பார்க்கலாம்.
……
சந்திரவதனா & கார்த்திக்வேலு: இத்தொகுப்புக்கள் குறித்து சற்று விரிவாக எழுத விருப்பம். அப்போது இயலுமாயின் பிடித்த கவிதைகளின் வரிகளைத் தர முயல்கின்றேன்.
……..
சுரேஷ் கண்ணன்: பொ.கருணாகரமூர்த்தியின் ‘கூடு கலைதல்’ குறித்து கட்டாயம் எழுதுங்கள். உந்தத் தொகுப்பு அண்மையில் -கனவுப் பட்டறையூடாக- வெளிவந்தது என்று நினைக்கின்றேன.
6
டிசே தமிழன் says:
August 1st, 2006 at 2:25 pm edit
———-//„யாதும் ஊரல்ல யாவருங் கேளீர்“ என்ற இன்னொரு கவிதையிலும
„…ஊரற்றவர்களே, எவ்வூரும் உங்கள் ஊரல்ல
நீங்கள் ஊரற்றவர்கள் அவ்வளவுதான்…“
„…உங்களுக்கு ஊரிருந்தால் மட்டும் உரையுங்கள்
யாதும் ஊரென்றும் யாவருங் கேளிரென்றும்…“//
ஆனால் சில/பல கவிதைகளில் வரும் உலக இலக்கியப் படிமங்கள் (Van gogh / waiting for godot etc )
கவிதைக்கு தன்னளவில் எவ்வளவு செறிவூட்டுமெனபது தெரியவில்லை ————-
கார்திக், உலக இலக்கியப் படிமங்கள் தமிழிலக்கியப்பரப்பில் நீண்டகாலமாய்ப் பயன்படுத்தப்பட்டு வருகின்றதுதானே. நீங்கள் குறிப்பிட்டமாதிரி சில இடங்களில் அழகாகவும் சில இடங்களில் துருத்திக்கொண்டும் வாசுதேவனில் தொகுப்பில் (எனக்குத்)தெரிந்தன. ஆனால் ஒருவருக்கு துருத்திக்கொண்டு நிற்பது இன்னொருவருக்கு அழகாகவும் தெரிய்வும் கூடும்; அதுவும் கவிதையின் அழகியலில் ஒரு பண்பு என்று நினைக்கின்றேன். அதுபோலவே சில இடங்களில் வாசுதேவனின் கவிதைகள், கவிதைகளாய் நீட்சிபெறாமல் உரையாடலாய்/வசனத்தொடராய் நின்றுவிடுகின்றன போலவும் தோன்றுகின்றன.
7
பொறுக்கி says:
August 2nd, 2006 at 3:02 am edit
உங்கள் புத்தக அறிமுகங்களைத் தொடர்ச்சியாகப் படித்து வருகின்றேன். ஒரு விளம்பரமாக இல்லாமல், விமர்சனங்களாகவும் இவை எழுதப்படவேண்டும் என்பது எனது விருப்பு.
8
டிசே தமிழன் says:
August 2nd, 2006 at 10:09 am edit
நன்றி பொறுக்கி. சந்தர்ப்பம் வாய்க்கும்போது இத்தொகுப்புக்கள் குறித்து விரிவாக எழுத முயல்கின்றேன்.
…..
ஏற்கனவே சில நண்பர்களுக்கு வாக்குக்கொடுத்து, எழுதி முடிக்காதிருக்கும் புத்தக விமர்சனங்களைப் போல, இதையும் கடந்துபோய்விடக்கூடாது என்ற அவசரத்தில்தான் இதைப் பதிவு செய்திருந்தேன்.
9
ஆழியாள் says:
August 5th, 2006 at 2:30 am edit
டிசே,
உங்கள் பார்வையில் தந்த புத்தக அறிமுகத்துக்கு மிக்க நன்றி.
ஆழியாள்
10
டிசே தமிழன் says:
August 7th, 2006 at 5:59 am edit
வருகைக்கு நன்றி ஆழியாள்.