Tuesday, September 26, 2006

நீரில் கரையும் சொற்கள்

xx.xx.20xx
இசையில் ஓவியத்தில் இலக்கியத்தில் அமிழ முன்முடிவுகள் அவசியமற்றது. ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது எழுத்தாளரின் பெயரும் அடையாளமும் இன்றி வாசித்தால்தான் அந்தப்படைப்பில் முற்றாக அமிழ்ந்து போகமுடியும் என்று எப்போதோ வாசித்த கவிதை நினைவுக்கு வருகின்றது. உண்மையில் இந்த தன்மை எனக்குள்ளும் தலைதூக்கியபடிதான் இருக்கின்றது. விமர்சனங்களை வாசித்து வாசித்து எல்லாவற்றையும் விமர்சனக்கண்ணோடு பார்த்துக்கொண்டு வாழ்வின்/படைப்பின் அரிய தருணங்களைத் தவறவிடுகின்றேனோ என்று யோசிப்பதுண்டு. இலக்கியத்தைவிட எத்தனையோ அற்புதமான விடயங்கள் வாழ்வில் இருக்கின்றன. அவற்றில்தான் அதிகம் அமிழ்ந்துபோக விரும்புகின்றேன். ஒரு பயணியாய் இலக்கியப் படைப்புக்களை வாசித்துவிட்டு அவற்றிற்கு பின்னாலுள்ள அரசியலை உதறித்தள்ளி விட்டுப்போக விரும்புகின்றேன். பிடித்திருந்தால் மனதில் நிறுத்திக்கொண்டும், பிடிக்காவிட்டால் புன்னகைத்தபடியும் வாழ்வில் நகர விரும்புகின்றேன். ஆனால் அது எந்தளவில் சாத்தியம்/சாத்தியமின்மை என்பது புரியவில்லை.
……………………………………………….
xx.xx.20xx
நீ சிலவேளைகளில் குழந்தையாய், பலவேளைகளில் உக்கிரமான காளியாய் விசுவரூபம் எடுக்கிறாய். நீ பேசுகின்ற/உபயோகிக்கின்ற மொழி, பல தடவைகளில் நான் கேள்விப்படாத மொழியாக இருக்கிறது. இந்த உக்கிரமான மொழியைத்தான் எனது அம்மாவும் அக்காவும் பேசவிரும்பி தங்களுக்குள் அடக்கிக்கொண்டிருக்கவும் கூடும். உனது தனித்துவமான இந்த மொழி எந்த நேரமும் இதத்தைத் தருகின்றது என்று பொய் சொல்லமாட்டேன். சிலவேளைகளில் அவையென் மனக்குளத்தில் கல்லெறிந்து அலையலையாய் கேள்விகளை உருவாக்குகின்றன. என்னை, எனது பார்வைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற பதட்டத்தை எனக்குள் அடிக்கடி ஏற்படுத்துகின்றன.
………………………………………………
xx.xx.20xx
இரத்த ஆறு பெருகிக்கொண்டிருக்கும் நோயுற்ற நாட்டிலிருந்து பிரசவிக்கப்பட்ட நாங்கள் வண்ணத்துப்பூச்சிகளையும், புல்வெளிகளையும், பூக்களையும் பேசிக்கொண்டிருத்தல் எவ்வளவு இயல்பானது - இயல்பற்றது என்பதனைவிட இவ்வாறான நெகிழ்வான கனவுகளும் இல்லாவிட்டால் நாமும் எப்போதோ மனப்பிறழ்வானவர்களாய் ஆகியிருக்கவும் கூடும் என்ற அச்சந்தான் என்னில் உறைகிறது.
……………………………………………….
xx.xx.20xx
ஒரு குழந்தையால் எப்படி தனது அழுகைக்கான காரணத்தை வாய்திறந்து சொல்லமுடியாதோ….ஒரு சகமனிதர் தான் உணர்கின்ற வலியை எப்படி வார்த்தைகளால் விபரிக்கமுடியாதோ…அப்படித்தான் பலபொழுதுகளில் ஒருவரை எப்படி ஆழமாய் உள்ளார்த்தமாய் நேசிக்கின்றோம் என்பதையும் அந்த நபருக்கு வெளிப்படுத்துவிடமுடியாது. துரோகங்களையும் பழிவாங்கல்களையும் அப்படியே இன்னொரு சகமனிதருக்கு பிரதிபலித்துக் காட்டுவதற்கான அனைத்து வழிகளையும், முயற்சிகளையும் அறிந்து வைக்கின்ற நாம், உறவுகளை ஆழமாய் பிணைத்து வைத்திருக்கக்கூடிய அன்பை முழுமையாக வெளிப்படுத்தும் வழிமுறைகள் பற்றி அதிகம் கவலைப்படாமல் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடுவதுதான் மிகவும் அவலமானது.
……………………………………………….
xx.xx.20xx
சூரியன் இந்த நாளை மிக மிக வேகமாய் விழுங்கிக்கொண்டிருக்கின்றது. Patioவில் இருந்து மூன்று பியர்களும், ஒரு 5oz ஷொட்டும் அடித்து முடிக்க மழை பொழியத் தொடங்குகிறது. நாம் சிலிர்த்த/ நம்மால் சிலிர்க்கவைக்கப்பட்ட பெண்களைப் பற்றிப் பேசும்போது மனம் முழுதும் நிரம்பும் விகசிப்பும் நிதானமும் ஏன் நண்பா நாம் அரசியல் பேசும்போது மட்டும் வருவதில்லை? முகமெல்லாம் இருண்டு உலகின் கடைசிக்கணம் மாதிரியல்லவா நாம் குரைக்கத் தொடங்கிவிடுகின்றோம். உனக்கு ஏறிவிடுகின்றது; கெட்ட வார்த்தைகள் கலந்து உனக்கான அரசியலைப் பேசத்தொடங்குகின்றாய். வழமைபோல நானும் ஒமோம் போட்டபடி கேட்டுக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இன்றோ இடைமறித்து உரையாடத் தொடங்குகின்றேன். உனது குரல் உனக்குரிய தார்மீக ஆவேசத்துடன் உயரத்தொடங்குகின்றது. மழையில் அரையும் குறையுமாய் நனைந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் எம்மைப் பார்த்து waitress பெண், Why don’t you guys come inside and talk here? என்கிறார். நண்பா, நமக்குள் இருக்கும் விமர்சனங்கள்/பலவீனங்களை மீறி, நமக்குரிய ஒரே ஆதர்சனம் ‘சே’ என உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதுபோல நமக்கான கடைசி நம்பிக்கையாய் இன்னமும் நம்மில் தேக்கிக்கொண்டிருப்பது மார்க்சிசத்தையும், பெரியாரியத்தையும் என்பதையும், இதோ விழுந்துகொண்டிருக்கும் இந்த மழைத்துளிகளும், பச்சை patioவுக்கு கருமை வர்ணம் பூசும் இந்த இரவும் மிக நன்கு அறியும்.
……………………………………………….
xx.xx.20xx
நாம் இன்று பயணிக்கும் தெருக்களில், நாளை நம் சுவடுகள் அனைத்தையும் மரணம் தடயங்களில்லாது வாரிக்கொண்டுபோய்விடும் என்று எப்போதாவது யோசித்திருக்கின்றீர்களா? அந்த நினைப்பு என்னைக் கலங்க வைத்திருக்கிறது. இவ்வளவுதானா வாழ்வு என்று இடம் பொருள் ஏவல் அனைத்தையும் துறந்து பயமுறுத்தியிருக்கிறது. கலக்கத்தை மீறி அதுதான் வாழ்வின் அழகே என்று சிலிர்த்தெழுந்து, பலவீனங்களுடன் ம்னிதர்களை இன்னும் நேசிக்க வைக்கிறது. மனிதர்களை எந்தவளவுக்கு நேசிக்கின்றேனோ அந்தவளவுக்கு மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கவும் விரும்புகின்றேன்.
……………………………………………….
xx.xx.20xx
நள்ளிரவைத் தாண்டி மணித்தியாலங்கள் கடந்திருக்கும் இந்தப்பொழுதில், மனிதர்களும், கொட்டிய பனியும் உறங்கிக்கிடக்கும் இந்தக்கணத்தில், உன்னைப் பற்றிய நினைவுகள் என அறையில் ஒரு வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கத் தொடங்குகின்றது. உனக்கான என் பிரியத்தைக் கூற எந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தாலும் நான் விரும்பும் நெகிழ்வும் உயிர்த்திருத்தலும் இல்லாதிருப்பதைக் கண்டு ஒருவித சலிப்பு வருகின்றது. உன்பொருட்டேனும், இதுவரை கற்றிராத ஏதோவொரு புதுமொழியைக் கற்று, அந்தமொழியின் வனப்புமிகு வார்த்தைகளை ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் முதற்சொற்களைப்போல உனக்குச் சொல்லவேண்டும் போல ஆசை நிரம்புகின்றது.

(Thursday, August 3rd, 2006 at 10:50 pm )

1 comment:

இளங்கோ-டிசே said...

1
Kannan says:
August 4th, 2006 at 12:31 am edit
//கலக்கத்தை மீறி அதுதான் வாழ்வின் அழகே என்று சிலிர்த்தெழுந்து, பலவீனங்களுடன் ம்னிதர்களை இன்னும் நேசிக்க வைக்கிறது. மனிதர்களை எந்தவளவுக்கு நேசிக்கின்றேனோ அந்தவளவுக்கு மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கவும் விரும்புகின்றேன்.//
இன்னும் பல புள்ளிகளில் உங்கள் எண்ணங்களுடன் கலக்க முடிந்தாலும், மேற்கண்டதில் மிகவும் ஒன்ற முடிகிறது.
“உந்த டிசே வுக்கு என்ன வந்துவிட்டது, இப்படிக் கலக்குகிறவர்” என்று யோசிக்கிறேன் :-)
இதமாயிருந்தது வாசிக்க என்றும் சொல்லிவிட்டுப் போகத் தோன்றியது.
2
Chandravathanaa says:
August 4th, 2006 at 1:45 am edit
இதெல்லாம் உங்கள் மனப்பதிவுகளா? உணர்வு கலந்த பதிவுகள்.
ஒவ்வொன்றிலும் ஏதோ ஒன்றாவது எனக்கும் பொருந்துவன போலுள்ளன.
என் டயறிக் குறிப்புகள் போல உள்ளன.
விமர்சனங்களை வாசித்து வாசித்து எல்லாவற்றையும் விமர்சனக்கண்ணோடு பார்த்துக்கொண்டு வாழ்வின்/படைப்பின் அரிய தருணங்களைத் தவறவிடுகின்றேனோ என்று யோசிப்பதுண்டு. இலக்கியத்தைவிட எத்தனையோ அற்புதமான விடயங்கள் வாழ்வில் இருக்கின்றன. அவற்றில்தான் அதிகம் அமிழ்ந்துபோக விரும்புகின்றேன். ஒரு பயணியாய் இலக்கியப் படைப்புக்களை வாசித்துவிட்டு அவற்றிற்கு பின்னாலுள்ள அரசியலை உதறித்தள்ளிக்கொண்டு போக விரும்புகின்றேன். பிடித்திருந்தால் மனதில் நிறுத்திக்கொண்டும், பிடிக்காவிட்டால் புன்னகைத்தபடியும் வாழ்வில் நகர விரும்புகின்றேன். ஆனால் அது எந்தளவில் சாத்தியம்/சாத்தியமின்மை என்பது புரியவில்லை.
இரத்த ஆறு பெருகிக்கொண்டிருக்கும் நோயுற்ற நாட்டிலிருந்து பிரசவிக்கப்பட்ட நாங்கள் வண்ணத்துப்பூச்சிகளையும், புல்வெளிகளையும், பூக்களையும் பேசிக்கொண்டிருத்தல் எவ்வளவு இயல்பானது - இயல்பற்றது என்பதனைவிட இவ்வாறான நெகிழ்வான கனவுகளும் இல்லாவிட்டால் நாமும் எப்போதோ மனப்பிறழ்வானவர்களாய் ஆகியிருக்கவும் கூடும் என்ற அச்சந்தான் என்னில் உறைகிறது.
ஒரு குழந்தையால் எப்படி தனது அழுகைக்கான காரணத்தை வாய்திறந்து சொல்லமுடியாதோ….ஒரு சகமனிதர் தான் உணர்கின்ற வலியை எப்படி வார்த்தைகளால் விபரிக்கமுடியாதோ…அப்படித்தான் பலபொழுதுகளில் ஒருவரை எப்படி ஆழமாய் உள்ளார்த்தமாய் நேசிக்கின்றோம் என்பதையும் அந்த நபருக்கு வெளிப்படுத்துவிடமுடியாது.
நாம் இன்று பயணிக்கும் தெருக்களில், நாளை நம் சுவடுகள் அனைத்தையும் மரணம் தடயங்களில்லாது வாரிக்கொண்டுபோய்விடும் என்று எப்போதாவது யோசித்திருக்கின்றீர்களா? அந்த நினைப்பு என்னைக் கலங்க வைத்திருக்கிறது.
உனக்கான என் பிரியத்தைக் கூற எந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தாலும் நான் விரும்பும் நெகிழ்வும் உயிர்த்திருத்தலும் இல்லாதிருப்பதைக் கண்டு ஒருவித சலிப்பு வருகின்றது.
3
டிசே தமிழன் says:
August 4th, 2006 at 8:32 am edit
கண்ணன், சந்திரவதனா நன்றி.
…..
கண்ணன் பெங்களூரில் அப்படி என்னதான் சுவாரசியமான விடயங்கள் நடக்கின்றன :-)? வலைப்பதிவு பக்கம் இப்போது உங்களைக் காணமுடிவதில்லையே?
4
செல்வராஜ் says:
August 4th, 2006 at 10:06 am edit
அருமை டிசே! என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று படித்துக் கொண்டிருந்தேன். கண்ணன் கை கொடுத்தார். இதம். இதம் என்று சொல்வது பொருத்தமாய் இருக்கிறது. விட்டுவிட்டுச் செல்ல மனம் வராத எழுத்து. நடை. நன்று.
5
டிசே தமிழன் says:
August 4th, 2006 at 2:01 pm edit
நன்றி செல்வராஜ்.
…..
உங்கள் வரவை இங்கே பார்த்தபின்தான் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதி ஒன்று
நினைவில் வருகின்றது. இந்த கோடை காலம் முடிவதற்குள்ளாவது அதை நிறைவேற்றுவேன் என்று நம்புகின்றேன் :-).
6
selvanayaki says:
August 4th, 2006 at 2:59 pm edit
இந்தப் பதிவு குறித்துச் சொல்ல நானும் ஒரு புதுமொழி கற்றுக்கொண்டால் தேவலை என்றிருக்கிறது:))
இப்போதைக்கு என்னிடமிருக்கும் மொழியிலிருந்து “அருமை” என்பது தவிர வேறென்னத்தைச் சொல்ல?
7
Flying_DragOn says:
August 4th, 2006 at 3:08 pm edit
முதல் ஓட்டு இந்த டிராகன் போட்டது என்பதை இங்கே பதிவு செய்கிறேன் ;)
8
Kannan says:
August 4th, 2006 at 11:22 pm edit
டிசே,
பணி நிமித்தம் சென்னைக்குப் பெயர்ந்துள்ளதால் பெங்களூர் விசேடங்களை வாரயிறுதியிலே இங்கே வரும்போது தான் அறியமுடிகிறது. (மற்றபடி பெங்களூரில் எப்போதுமிருக்கும் விசேடம் தான்)
அப்புறம்… வழமையான சாட்டுத்தான் :)
9
டிசே தமிழன் says:
August 7th, 2006 at 10:09 pm edit
நன்றி செல்வநாயகி.
…..
/முதல் ஓட்டு இந்த டிராகன் போட்டது என்பதை இங்கே பதிவு செய்கிறேன் /
ப்ளையிங் ட்ராகன். அது கள்ளவோட்டென தேர்தல்பெட்டி சொல்கிறதே :-).
…..
கண்ணன் :-).
10
Thangamani says:
August 7th, 2006 at 11:39 pm edit
DJ
இந்தக் குறிப்புகள் எம்மை எமக்குள் தள்ளுகின்றன. இழந்துபோன, வெளிறிப்போன, உதிர்ந்துபோன, முழுவதுமாய் மலர்ந்து போன பெயரற்ற உணர்வுகள் அலையடிக்கின்றன.
நன்றி.
11
டிசே தமிழன் says:
August 8th, 2006 at 1:29 pm edit
தங்கமணி, நீண்டநாட்களுக்குப் பிறகு உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி.