Tuesday, September 26, 2006

போர்க்காலக் குறிப்புக்கள்

* ‘….Atleast 50 civilians were killed and more than 200 were injured in Sri Lankan forces aerial bombardment and artillery attacks, Thursday morning, in Kathiraveli and surrounding villages as thousands of civilians were still fleeing the areas…’ (TamilNet)
நேற்று, ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் அகோரமான குண்டுவீச்சுகளும், ஆட்டிலறி எறிகணை வீச்சுக்களும் நடந்துகொண்டிருக்கின்றன என்ற செய்தியை வாசித்தபோது ஊரிலிருந்த காலங்கள் மீண்டும் நினைவுக்கு வந்து தொந்தரவுபடுத்தத் தொடங்கின. இராணுவம் என்றவளவில் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வாழ்ந்திருக்கின்றேனே தவிர, ஒருபோதும் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் யாழில் இருந்தவரை வாழ்ந்ததில்லை. எனவே இலங்கை இராணுவத்தின் பொம்மரடிகளும் ஷெல்லடிகளும் மாத்திரமே எனக்கு அதிகம் பரீட்சயமாயிருந்தன.
இருளைப்போல, சிறுவயதுகளில் அதிகம் பயமுறுத்தியவை இந்த இரண்டு விடயங்களும்தான். செல்லடிகளிலும் பொம்மரடிகளிலும் சாவது என்றால் முற்றுமுழுதாக இறந்துவிடவேண்டும்; அரைகுறையாக உடல் உறுப்புக்கள் சிதைவடைந்து வாழ்வுமுழுதும் அதன் பாதிப்பில் கஷ்டப்படக்கூடாது என்றுதான் என்னைப் போன்ற பலர் அந்தப்பொழுதுகளில் நினைத்திருக்கின்றோம். அதன் நிமித்தமே ‘பங்கர்’ எனப்படும் பதுங்குகுழிகளை நாங்கள் எங்கள் வீட்டின் வளவில் வெட்டியிருந்தோம். ஒன்றல்ல இரண்டு பதுங்குகுழிகள் வெட்டியிருக்கின்றோம். இந்திய இராணுவம் வரமுன்னர் ஒருமுறையும், பிறகு -இந்திய இராணுவம் வந்துவிட்டதே அமைதி வந்துவிடும்- என்று அதை மூடிவிட…., எனினும் தொடர்ந்தும் போர் தொடர இன்னொரு பதுங்குகுழியையும் புதிதாய் வெட்டியிருக்கின்றோம்.
முன்னோர் பொழுதில்
ஊரில்
மாலை வேளையில்
மெழுகுதிரி கொளுத்தி
சாம்பிராணி காட்ட
பதுங்குகுழி
அபயம் காட்டும் கடவுளாயிற்று.
என்று ஏதோவொரு ‘கவிதை’யில் குறிப்பிட்டதைப்போல, பின்னேர/இரவுவேளைகளில் மெழுகுதிரி வெளிச்சத்தில் பதுங்குகுழியில் அமர்ந்திருக்கையில் மெல்லியதாய் வரும் காற்றும், மண்ணின் ஈரலிப்பும் அம்மாவின் கர்ப்பப்பைக்குள் இருப்பதான மிகப்பெரும் பாதுகாப்பையும் ஆசுவாசத்தையும் எனக்குத் தந்திருக்கின்றன. மனிதர்கள் அருகிலிருந்தாலும் மனிதர்கள் எவரும் இல்லாத தனிமையின் வாதையையும், நகரும் பூச்சிகளின் நட்பையும் பதுங்குகுழிதான் எனக்கு முதன்முதலில் அறிமுகமும் செய்திருந்தது.
எனக்குத் தெரிந்தளவில் எங்கள் வீட்டுக்கருகில் மூன்று முறை குண்டுவீச்சுக்கள் நடந்திருக்கின்றன. ஒருமுறை சகடை (அவ்ரோ? sea plane). இதற்குக் கோள்மூட்டி என்ற பெயரும் பாவிக்கப்பட்டதாய் நினைவு. அனேகமான பொழுதுகளில் இது குண்டுகள் வீசாது; முதலில் வந்து சுற்றி உளவுபார்த்துவிட்டு தகவல் அனுப்ப அதிவேக பொம்பர்கள் வந்து பிறகு குண்டுகளை வீசும்.
ஒருமுறை நான், அம்மா, பக்கத்துவிட்டு அக்கா மூன்றுபேரும் நின்று கதைத்துக்கொண்டிருக்கையில் சகடை பறந்துபோய்க்கொண்டிருந்தது. எனவே இப்போது ஆபத்து எதுவுமில்லை என எங்கள்பாட்டில் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தபோது…… -தற்செயலாய் நான் வானைப் பார்க்க- போன சகடை சடுதியாக ஒரு திசையில் திரும்ப ‘ஐயோ குண்டு போடுறாங்கள்’ என்று பின்னங்கால் அடிபட பங்கருக்குள் பாய்ந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. சகடையிலிருந்து தள்ளப்பட்ட குண்டுகள் கூட மிகத் தெளிவாக என் கண்களுக்கு அன்று தெரிந்திருந்தன. அவை பக்கத்து வயலில் வீழ்ந்து மிகப்பெரும் குழியை -கிணறளவுக்கு- உண்டு பண்ணியிருந்தன.
மற்றொருமுறை சந்தியில் தற்காலிகமாய் இயங்கிக்கொண்டிருந்த ஒரு வைத்தியசாலையின் மீது குண்டு வீழ்ந்திருந்தது. நல்லவேளையாக சொற்பமாக இருந்த நோயாளிகள் பக்கத்தில் இருந்த ஒரு மதகின் கீழ் அடைக்கலம் புகுந்ததால் அன்றைய பொம்மரடியில் இருந்து அவர்கள் தப்பியிருந்தனர். மூன்றாவது தாக்குதல்தான் எங்கள் வீட்டுக்கு மிக அருகில் நடந்தேறியது. அன்றைய பொழுதில் நான் அப்பாவுடன் யாழ் நகரை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தேன். இடைநடுவில் வந்து கொண்டிருந்தபோது, எவரோ எஙகள் ஊரில் குண்டு வீச்சு நடந்ததாய் சொல்ல வீடடையும்வரை அச்சமே என்கூட துணை வந்திருந்தது. வீட்டிலிருந்த அம்மாவுக்கும் அக்காவுக்கும் என்ன நடந்திருக்குமோ என்ற பதட்டத்தை அந்தச்செய்தி என்னில் ஏற்படுத்தியிருந்தது.
போர்க்காலங்களில் சம்பவம் நடந்த இடத்துக்குப் போய்ப்பார்க்கும்வரை, நடந்த நிகழ்வுகள் குறித்து அறிவது மிகக்கடினமாய் அன்றைய பொழுகளில் இருந்தது. அந்தக் குண்டு வீச்சில் நான் படித்துக் கொண்டிருந்த பாடசாலையின் இரண்டாம் மாடி முற்று முழுதாக சிதைந்து போனதும், பக்கத்திலிருந்த புளியமரத்தின் கிளைகள் முறிந்து போனதும் நிகழ்ந்தது. இந்த மூன்று சம்பவங்களிலும் சிறு காயங்களைத் தவிர பெரும் உயிரிழப்புக்கள் ஏற்படாததை நினைக்கும்போதெல்லாம், எங்கள் ஊர் வைரவர்தான் எங்களைக் காப்பாற்றியிருக்கின்றார் என்று அந்தப்பொழுதுகளில் நினைப்பதுண்டு.
விமானத்தாக்குதல்களைப் போல அல்ல எறிகணை வீச்சுக்கள். குண்டுத்தாக்குதலை விமானங்கள் பதியும் திசையைப் பார்த்து ஒரளவு கணித்தாவது எதிர்த்திசையில் ஓடமுடியும். ஆனால் எறிகணைத் தாக்குதல் எந்தத் திசையிலிருந்து எங்கு வந்து விழும் என்பதை உங்கள் காலடியில் ஷெல் வந்து விழுந்துவெடிக்கும் வரை உறுதிபடக்கூற முடியாது. எங்களைத் தாண்டித்தானே எறிகணைகள் போகின்றன என்று ஆசுவாசப்பட, சட்டென்று வீசுகின்ற தூரங்களையும் திசைகளையும் மாற்றி அடிக்கத் தொடங்குவார்கள். ஷெல்லை குத்துகின்ற (வீசுகின்ற) சத்தம் கேட்டவுடனேயே நெஞ்சம் அதிவேகமாய்த் துடிக்கத்தொடங்கி மனது கணங்களை எண்ணத் தொடங்கும். ஒவ்வொரு ஷெல்லும் விழுந்துவெடிக்கும்வரை அந்த மரண பயத்தோடேயே நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்.
போர்க்காலங்களில் ஊரிலிருந்த அனேக இரவுபொழுதுகளை, இவ்வாறான எறிகணைத் தாகுதல்களின் நிமித்தம் பதுங்குழிகளில்தான் அனேகம் கழித்திருக்கின்றேன். எறிகணைத் தாக்குதல்கள் ஒருபுறம் என்றால் அப்பாவின் ‘வீரதீர’க்கரைச்சல் இன்னொருபுறம் ஆரம்பித்துவிடும். அவருக்கு பதுங்குகுழிக்குள் நிற்பது பிடிக்காது. கூட்டணியில் வீரம் என்பது இப்படி செல் அடிக்கும்போது வெளியில் நிற்பதுதான் என்று கற்றுத் தந்தார்களோ என்னவோ தெரியாது, நாங்கள் பயந்துகொண்டு பங்கருக்குள் இருக்கும்போது அவர் வெளியில் சென்று நிற்பார். அப்பா வெளியில் நிற்பதைக் கண்டவுடன், அக்கா அப்பா உள்ளே வராவிட்டால் தானும் பங்கருக்குள் இருக்கமாட்டேன் என்று அடம்பிடித்து வெளியே வந்துவிடுவார். அக்காவும் அப்பாவும் முரண்டு பிடித்துக் கொண்டிருக்குக்கும்போது பங்கருக்குள் இருக்கும் எனக்கும் அம்மாவுக்கும் என்ன செய்வது என்ற அவதியும் விசரும் வந்துவிடும். இப்போது பார்க்கும்போது இவ்வாறான சண்டைகளால்தான் செல்லடிகள் மீதிருந்த பயத்தினை அந்த இரவுகளில் ஒரளவு இலகுவாய்க் கடந்துவிட முடிந்திருக்கின்றது என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகின்றது.. இல்லாவிட்டால் உயிரைத் தக்க வைப்பதற்கான எண்ணமே மூச்சு முட்ட வைத்து மிகப்பெரும் சித்திரவதையைத் தந்திருக்குமல்லவா?
பத்து வருடங்களுக்கு முந்தைய காலத்தைப் பற்றி உரையாடுவதைக் கூட ஒரு கற்காலத்தின் நினைவுமாதிரித்தான் பார்க்கவேண்டியிருக்கின்றது. ஏனெனில் போர் தன் கொடூர முகங்களை நொடிக்கொருதரம் இன்னுமின்னும் உக்கிரமாய் மாற்றிக்கொண்டிருக்கின்றது. இன்று ஈழத்தில் பல்லாயிரக்கணக்கில் ஏவப்படும் பல்குழல் ஆட்டிலறிகளையோ அதிநவீன கிபீர் குண்டுத்தாக்குதல்களையோ நான் நேரில் கண்டதுமில்லை; அதன் பாதிப்புக்களை அனுபவித்ததுமில்லை. பத்து வருடங்களுக்கு முன்னிருந்ததைவிட பன்மடங்கான அழிவுகளை இது கொடுக்கும் என்று மட்டுமே -ஷெல்லோ/குண்டோ என் உயிரை இந்தக்கணத்தில் எடுத்துவிடாதென உறுதிப்படுத்தப்பட்ட ஒருதேசத்தில் வாளாவிருந்து- யோசிக்கமுடிகிறது.
(2)
நாமெல்லோரும் போரின் அழிவுகளை அவ்வளவு கணக்கிலெடுக்காது நமக்கான நம்பிக்கைகளின் நியாயங்களைப்பற்றி பேசுவது எனக்கு இன்னும் அச்சமூட்டுகிறது. அதைவிட போரின் எந்தப்பக்கத்தையும் அறிந்துகொள்ளாது/அதற்குள் வாழ்ந்துபார்க்காது நாகரீகக்கனவான் வாழ்க்கை வாழ்ந்தபடி தமக்கான அரசியலைப் பேசுவர்களைப் பார்க்கும்போது இவர்களை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் விளங்கவில்லை.
ஒரு இராணுவ வீரனுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட லெபனானிய மக்கள் என்ற ‘அதியற்புத மனிதாபிமான சமன்பாட்டில்’ இஸ்ரேல் ஆட்டிலறிகளையும் குண்டுத்தாக்குதல்களையும் லெபனானில் நடத்திக்கொண்டிருக்கின்றது.
இன்றையபொழுதில்
ஒரு போரிலிருந்து
இன்னொரு போரைத் தொடக்குதல் குறித்து
எல்லாத் திசைகளிலிருந்தும்
ஆர்ப்பரித்துப் பேசுகிறார்கள
ஒரு மனிதனை
சிதைக்காமல் தடுக்கும்
மிக எளிய சமன்பாடுகள்
ஒவ்வொரு அழிவின்
தீராநடனங்களிடையே
சுடர்விட்டொளிர்வதை
நிசப்போரின் கொடூரமறியாக்கண்கள்
கவனிப்பதேயில்லை.
9/11 தாக்குதல்களின் பின், அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முன்னர் எழுதிய இந்த வரிகள்தான் நினைவில் ஓடுகின்றன. இன்று பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் லெபனானிய மக்களிலிருந்து இஸ்ரேலை அழித்தே தீரவேண்டும் என்ற வன்மத்துடன் நாளை பல்லாயிரக்கணக்கானவர்கள் தோன்றப்போகின்றார்கள். குழந்தைகளும் பெண்களும் குண்டுகளைத் தங்கள் உடலில் கட்டியபடி இஸ்ரேலில் வெடிக்கப்போகின்றார்கள் என்றுதான் கடந்தகால போர்க்கால வரலாறுகள் நமக்கு கட்டியங்கூறுகின்றன. இன்று பொதுமக்கள் கொல்லப்படுவதை பூனையைப்போல தூங்கிக்கொண்டு கண்டிக்காதிருக்கும் வல்லரசு நாடுகள்தான், நாளை நடக்கப்போகும் தற்கொலைத் தாக்குதல்களுக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாய் கண்ணீர் வடிக்கப் போகின்றன. அப்போது நாங்களும் இவர்கள் எல்லாம் மனிதர்களேயல்ல, ‘தீவிரவாதிகள்’ என்று உலகத்தோடு ஒத்து கலிங்கத்துப்பரணி பாடவேண்டியதுதான்.
(3)
ஊரில் இருந்தபோது, தாங்கள் கல்வீடு கட்டாதகாலங்களில் வைரவர் ஊர் - வலம் வருவதாய் அம்மா கதைகள் சொல்வதுண்டு. நள்ளிரவுகளில் மணியின் சத்தத்தோடும், லாம்பு விளக்கோடும், கோவணம் கட்டியபடி வைரவர் ஊரைக் காக்க கருவறை நீங்கி ஊர்வலம் வந்ததை தன் கண்களால் நேரே கண்டதாய் சித்தியொருவர் சத்தியம் செய்யாத குறையாகக் கூறியதும் நினைவிலுண்டு. அந்தப்பொழுதுகளில் பெண்கள், தாங்கள் எவ்வித பயமுமில்லாது வாழ்ந்ததாகவும் அம்மா அடிக்கடி நனவிடை தோய்வார். என்னைப் போன்றவர்களைக் கூட சிறுவயதுகளில் குண்டுவீச்சு/ஷெல்லடிகளிலிருந்து காப்பாற்றிய வைரவருக்கு பிறகு என்னதான் ஆயிற்றோ?
ஊர் நீங்கி அகதியாய் வேறு ஊர்களுக்கு நகர்ந்த பொழுகளில் வைரவர் ஏன் எங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை? இலங்கை இராணுவம் 95களில் யாழைக் கைப்பற்றியபொழுது எங்கள் ஊர் வைரவரின் சூலாயுதம் வேறொரு ஊரில் நிராதரவாய் காணப்பட்டதாய்க் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஊர் மக்கள் இல்லாத ஊரில் தானும் இருக்கமாட்டேன் என்று புலம்பெயர்ந்த வைரவரின் வைராக்கியம் பிடித்திருந்தாலும், எங்கள் வாழ்வையும் வளங்களையும் சூறையாடியவர்களைக் கண்டபின்னும் வைரவர் வெகுண்டெழுந்து ஊழிக்கூத்து ஏன் ஆடவில்லை?
நாங்கள் மீண்டும் ஊர் போவோம். ஒரு குழந்தையைப் போல குதூகலித்து ஆடியபடி எங்களோடு வைரவரும் ஊர் திரும்புவார். பாதிரிப்பூக்களும் பொன்னச்சிப்பூக்களும் மீண்டும் பூக்கத்தொடங்கும். புளிய மரத்தடியில் கிளித்தட்டும், பிள்ளையார் பேணியும் விளையாடச் சிறுவர்கள் கூடுவார்கள். பின் அந்திப்பொழுதுகளில் வைரவருக்கு வடைமாலை போர்த்தி பூசை நடக்க, எதிரேயிருக்கும் கள்ளுக்கொட்டிலில் இளைஞர்கள் கள்ளுக்குடித்துக் களிக்கும் காலங்கள் கனியும்.
………………………………………
* நேற்று அகோரமான தாக்குதல்கள் என்று அறிந்தபோது எவ்வளவு உயிரிழப்போ? என்றுதான் உடனே எண்ணத்தோன்றியது. இப்போது ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் பலி, இருநூறுக்கு மேற்பட்டவர்கள் காயம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான செய்திகளைக் கேள்விப்படும்போது பலியானவர்களில் ஒருவராய் நானிருந்தால்….எப்படியிருக்கும்…..? என்று மனம்போகின்ற போக்கில் மட்டுமே யோசிக்க முடிகிறது.

(Thursday, August 10th, 2006 at 10:33 am )

1 comment:

இளங்கோ-டிசே said...

1
Flying_Dragon says:
August 10th, 2006 at 1:22 pm edit
Good post!! thanks
//நாமெல்லோரும் போரின் அழிவுகளை அவ்வளவு கணக்கிலெடுக்காது நமக்கான நம்பிக்கைகளின் நியாயங்களைப்பற்றி பேசுவது எனக்கு இன்னும் அச்சமூட்டுகிறது. அதைவிட போரின் எந்தப்பக்கத்தையும் அறிந்துகொள்ளாது/அதற்குள் வாழ்ந்துபார்க்காது நாகரீகக்கனவான் வாழ்க்கை வாழ்ந்தபடி தமக்கான அரசியலைப் பேசுவர்களைப் பார்க்கும்போது இவர்களை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் விளங்கவில்லை.
//
:( :( :(
2
Thangamani says:
August 10th, 2006 at 2:23 pm edit
//ஊர் நீங்கி அகதியாய் வேறு ஊர்களுக்கு நகர்ந்த பொழுகளில் வைரவர் ஏன் எங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை?//
வைரவரைக் காக்க ஆளில்லை என்றால் அவரும் புலம் பெயரவேண்டியதுதான். அல்லது எங்காவது மனித (சிங்கள) உரிமைக் காவலராகவோ, மார்க்சிஸ்ட்டாகவோ, மாறி கொழும்பில் ஆயுதப்படை பாதுகாப்பில் போய்க்கொண்டிருக்கிறாரோ என்னவோ!
//நாங்கள் மீண்டும் ஊர் போவோம். ஒரு குழந்தையைப் போல குதூகலித்து ஆடியபடி எங்களோடு வைரவரும் ஊர் திரும்புவார். பாதிரிப்பூக்களும் பொன்னச்சிப்பூக்களும் மீண்டும் பூக்கத்தொடங்கும். புளிய மரத்தடியில் கிளித்தட்டும், பிள்ளையார் பேணியும் விளையாடச் சிறுவர்கள் கூடுவார்கள். பின் அந்திப்பொழுதுகளில் வைரவருக்கு வடைமாலை போர்த்தி பூசை நடக்க, எதிரேயிருக்கும் கள்ளுக்கொட்டிலில் இளைஞர்கள் கள்ளுக்குடித்துக் களிக்கும் காலங்கள் கனியும்.//
விரைவில் நிகழ எங்கள் வாழ்த்துகள்.
3
டிசே தமிழன் says:
August 10th, 2006 at 9:50 pm edit
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
4
ஷ்ரேயா says:
August 10th, 2006 at 10:09 pm edit
மேற்கோள் காட்டிப் போட முடியாதளவுக்குப் பதிவில் சொல்லப்பட்டிருக்கிற நினைப்புகளும் (எம்மை அந்தரத்துக்குள்ளாக்கும்) கேள்விகளும் தொடரும். பதில் வருமென்று பார்த்துக்கொண்டு நாங்கள்.. :(
இரவில் உலங்குவானூர்தியிலிருந்து சுடுவதை, இருளில் இரத்தப்பொட்டாய்த் தெறிக்கும் சன்னங்களைப் பார்த்தபடி நிற்பதும், வானூர்தி கிட்டே வந்ததும் ஓடிப்போய் ஒளிந்துகொள்வதும் எனக்குக் கடந்த காலமாய் இருக்கிறது. எத்தனைபேருக்கு அது இன்னும் நிகழ்காலமாயும் எதிர்காலமாயும்?
5
Chandravathanaa says:
August 11th, 2006 at 2:09 am edit
டி.சே
நேற்றிரவு இதை வாசித்த போது மனதின் அடியில் இருந்த பல நினைவுகள் அலை அலையாக எழுந்தன.
கண்டிப்பாகப் பதிந்து வைக்கப் பட வேண்டிய பதிவு.
6
Kannan says:
August 11th, 2006 at 3:13 am edit
//அதைவிட போரின் எந்தப்பக்கத்தையும் அறிந்துகொள்ளாது/அதற்குள் வாழ்ந்துபார்க்காது நாகரீகக்கனவான் வாழ்க்கை வாழ்ந்தபடி தமக்கான அரசியலைப் பேசுவர்களைப் பார்க்கும்போது இவர்களை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் விளங்கவில்லை//
//நாங்கள் மீண்டும் ஊர் போவோம். ஒரு குழந்தையைப் போல குதூகலித்து ஆடியபடி எங்களோடு வைரவரும் ஊர் திரும்புவார். பாதிரிப்பூக்களும் பொன்னச்சிப்பூக்களும் மீண்டும் பூக்கத்தொடங்கும். புளிய மரத்தடியில் கிளித்தட்டும், பிள்ளையார் பேணியும் விளையாடச் சிறுவர்கள் கூடுவார்கள். பின் அந்திப்பொழுதுகளில் வைரவருக்கு வடைமாலை போர்த்தி பூசை நடக்க, எதிரேயிருக்கும் கள்ளுக்கொட்டிலில் இளைஞர்கள் கள்ளுக்குடித்துக் களிக்கும் காலங்கள் கனியும்.//

7
sathiyak kadathasi says:
August 11th, 2006 at 4:18 am edit
//கள்ளுக்கொட்டிலில் இளைஞர்கள் கள்ளுக் குடித்துக் களிக்கும் காலங்கள் கனியும்//
அப்போது யார் கள்ளிறக்குவார்கள்?
8
anony says:
August 11th, 2006 at 6:40 am edit
கோள்மூட்டி sea plane என்று ஞாபகம்
9
கானா பிரபா says:
August 11th, 2006 at 8:25 am edit
வணக்கம் டி ச
நிரந்த அமைதி எப்போது வரும் எம் தாயகத்தில் என்ற நினைப்புக்கூட நரைத்துவிடுகின்றது. எமது ஒவ்வொரு தலைமுறையும் நவீன ரகப் போர்விமானங்களின் இரையாகிப் போகின்றனவே,
10
வசந்தன். says:
August 11th, 2006 at 8:37 am edit
மாவிலாறைப் படையினர் கைப்பற்றிவிட்டார்கள்.
புலிகள் முன்னேறியபோது பழைய நிலைக்குத் திருப்பிச்செல்ல வேண்டும் என்ற “மத்தியஸ்தர்கள்” இப்போதுவரை ஏதும் சொல்லவில்லை.
புலிகளின் ஆட்லறி நிலைகளைத்தான் தாக்குகிறோம் என்று படைத்தரப்பு சொல்வதை ஏற்றுக்கொண்டு சும்மா இருப்பது கண்காணிப்புப்பணி. திருமலை மாவட்ட மாவிலாறுக்கும் மட்டக்களப்பு மாவட்ட வாகரைக்கும் என்ன சம்பந்தமென்று தெரியவில்லை.
இன்று தரவையில் விமானக்குண்டுவீச்சு.
யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவைக் கைப்பற்ற முகமாலையூடாக பெரிய நகர்வை அரசபடை தொடங்கியுள்ளது.
இன்னும் ஒப்பந்தம் என்ற பேரில் புலிகளின் கையைக் கட்டிப்போட்டுக்கொண்டு சமாதான நாடகம் ஆடுவது நோர்வேக்கு நல்லதன்று. அவர்களாக வெளியேறுவதுதான் ‘மனிதத்துக்கு’ அவர்கள் கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதை.
வந்தால் வேலையை ஒழுங்காகச் செய்யவேணும். அல்லது எங்களை எங்கள் பாட்டில் விட்டுவிடவேணும்.
ரணிலைத் தோற்கடித்ததன் வெற்றியை விரைவில் நாம் அனுபவிக்க வேண்டும்.
11
டிசே தமிழன் says:
August 11th, 2006 at 9:16 am edit
நன்றி நண்பர்களே.
………
அனோனி. சரியான தகவலுக்கு நன்றி. மேலே திருத்திவிட்டேன்.
……
/அப்போது யார் கள்ளிறக்குவார்கள்? /
சத்தியக்கடதாசி, அப்போது யார் கள்ளிறக்குவார்கள் என்ற முக்கிய கேள்வியைப் போல, அப்போதும் யார் மட்டும் வைரவரை வழிபடவருவார்கள் என்பதும், -எல்லாக்கடவுளரும் புலம்பெயர்ந்தபின்னும்- ஏனின்றும் வைரவர்க்கு என்று தனிக்கோயில் புலம்பெயர்தேசத்தில் எழுப்பமுடியவில்லையென்ற கேள்விகளும் உண்டு.
12
டிசே தமிழன் says:
August 11th, 2006 at 9:41 am edit
வசந்தன், என்னைப்போலன்றி அண்மைக்காலம்வரை நீங்கள் போரினுள்ளே வாழ்ந்தவர் என்பதால் உங்களுக்கு சொல்வதற்கு நிறைய இருக்கும். ஏற்கனவே ஓரிடத்தில் குறிப்பிட்டமாதிரி, ஈழத்தில் இருப்பவர்கள் தமது இருப்பை/உயிர்ப்பை தக்கவைத்துக்கொள்ள இருக்கின்ற கடைசித்துரும்பு வலியதாய் இருப்பது மட்டுமே என்று நிர்ப்பந்திக்கப்படுகிறது. நியாய/அநியாயங்கள் குறித்து இந்த மேற்குலகங்கள் அக்கறைப்பட்டிருந்தால், எப்போதோ பாலஸ்தீனியப் பிரச்சினை தீர்ந்திருக்கவேண்டும்…… போரைப்பற்றி அன்றி வேறெதுவும் தெரியாத சந்ததிகள் ஈழத்தில் முகிழ்ந்திருக்க வேண்டியுமிராது.
13
Saravanan says:
August 11th, 2006 at 10:05 am edit
anbu nanparkale ungal kanaugal kantipaaga neraivaakum
kannalanga vaithuvitathu ungalin katantha kaala vaazkkai
anputan
Saravanan Rajendren
14
Saravanan says:
August 11th, 2006 at 10:19 am edit
அன்பு நன்பர்களே உங்களின் கடந்தகால வாழ்க்கை என்னை கண்கலங்க வைத்து விட்டது. உங்களின் ஆசைகள் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன் சரவணன் இராசேந்திரன்
15
டிசே தமிழன் says:
August 11th, 2006 at 1:28 pm edit
நன்றி சரவணன்.