Tuesday, September 26, 2006

Magic Seeds by V.S.Naipaul

நாவல் பற்றிய சில குறிப்புகள்

(1)
மத்திய வயதிலிருக்கும் விலி சந்திரனின் (Willie Chandran) வாழ்க்கையின் ஒரு பகுதியை இந்நாவல் கூறுகின்றது. இந்தியாவில் பிறந்து படிப்பின் நிமிர்த்தம் இங்கிலாந்து சென்று, அங்கே போர்த்துக்கீசியய பின்புலமுள்ள ஒரு பெண்ணைத் திருமணஞ் செய்து, பதினெட்டு வருடங்கள் ஆபிரிக்காக்கண்டத்தில் வசித்த விலி சந்திரன், உரிய அனுமதியின்றி ஜேர்மனியிலுள்ள தனது சகோதரி சரோஜினியுடன் தங்கி நிற்பதுடன் நாவல் ஆரம்பிக்கின்றது. சரோஜினி மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தும் திரைப்பட முயற்சிகளில் ஈடுபாடுடையவர்.அவ்வாறான செயற்பாடுகளால் பல (இடதுசாரி) தலைமறைவு இயக்கங்களுடன் நேரடித்தொடர்புகளும் உடையவர்.
வாழ்க்கையின் பெரும் பகுதியை நோக்கமில்லாது கழித்து mid-life crisisல் அவதிப்படும் சந்திரனை, இந்தியாவுக்குச் சென்று அங்கே ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடும் ஒரு இயக்கத்துடன் இணைந்து செய்ற்படக சரோஜினி ஆலோசனை கூறுகின்றார். சந்திரனுக்கு தனிப்பட்ட ரீதியாக எந்த அடக்குமுறைக்கும் பாதிக்கப்படாதுவிட்டாலும் ஒருவித ஆர்வத்த்தாலும், வாழ்க்கையின் வெறுமையாலும் இந்தியாவுக்குச் சென்று ஒரு இயக்கத்துடன் இணைகின்றார்.

சந்திரன் இந்தியா சென்று இயக்கமொன்றில் சேர்கின்றபோது, சரோஜினி வழிகாட்டிய இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டு இருக்க, சந்திரன் பிரிந்த இருகுழுக்களில் ஒன்றில் இணைகிறார். ஆனால் அது இவர் நினைத்த தலைமையின் கீழ் இயங்கிய (கண்டபலியின் கொள்கைகளுக்கு) நேர்மாறாக இருப்பதைக் கண்டு சலித்தாலும் வேறு வழியில்லாது அவர்களுடன் இணைந்து போராடுகின்றார். ஆரம்பத்தில்- பொலிஸ் பதிவுகள்- எதுவுமில்லாததால் ஒரு தகவலாளியாக இயக்கத்துக்குச் செயற்படுகின்றார். வேறு இரகசிய இடங்களிலிருந்து வரும் ஆயுதங்களை இயக்கத்தின் கரங்களுக்கு மாற்றவும், நிதியைச் சேகரிக்கவும் இன்னொரு போராளியுடன் நகரத்தில் சில வருடங்களைக் கழிக்கின்றார்.. பிறகு பொலிஸ் சந்திரனின் நண்பரைக் கைதுசெய்து, சந்திரனுக்கும் வலைவிரிக்க, நகரை விட்டு நீங்கி, இயக்கத்தின் தலைமை இருந்த காட்டுக்குள் இருந்து செயற்படத் தொடங்குகின்றார். இவர் சார்ந்த இயக்கத்தில் இருப்பவர்கள் அனேகர் இவரைப் போல மத்திய வயதில் இருப்பவர்களாகவும்- சிலர் இயக்கத்தில் 30,40 வருடங்கள் இருப்பவர்களாயும்- என்றோ ஒரு நாள் தாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் புரட்சி நிகழ்ந்துவிடும் என்ற கனவை இறுகப்பற்றிப் பிடித்தவர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு உயர் சாதிக்காரர்கள் இயக்கத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களாகவும், தீர்மானங்களை எடுப்பவர்களாய் இருப்பதுவும் சந்திரனுக்கு ஆச்சரியமளிக்கிறது.

நகரங்களுக்கும் தங்கள் செயற்பாடுகளை விரிவாக்கவேண்டும் என்று விரும்பிய இயக்கத்தின் தீர்மானம், அரசு, பொலிஸ் போன்றவற்றின் கண்காணிப்பால் மாற்றமடைகிறது. தாங்கள் தங்கியிருக்கும் காடுகளை அண்டிய கிராமஙகளை முதலில் மீட்டெடுத்து அங்கிருக்கும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு நாடு முழுதும் புரட்சியை விரிவாக்க திட்டதை மாற்றி அமைக்கின்றனர்.

இயக்கம் பண்ணையாட்களிடம் இருந்து நிலங்களை மீட்டெடுத்து ஒடுக்கப்பட்டவர்களுக்காய் கொடுத்தாலும், அவர்கள் காலம் காலமாய் பழக்கப்பட்ட பழக்கத்திலிருந்து மாறமுடியாது, இது பண்ணையாட்களின் நிலம் எங்களால் பயிரிடமுடியாது என்று ஒவ்வொருமுறையும் கூறிக்கொள்கின்றனர். இவர்களை, ஆயுதங்களை வைத்து மிரட்டினால்தான் மாறுவார்கள் என்றும், பொலிஸை சுட்டுக்கொன்றால்தான் இயக்கம் என்ற ஒன்று இருக்கிறது என்று நமபுவார்கள் என்றும் சந்திரன் தனக்குள் அலுத்துக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் சந்திரன் இயக்கத்தை விட்டு இன்னொரு தோழருடன் தப்பியோடி பொலிஸில் சரணடைகின்றார். தனக்கு சொற்ப சிறைத்தண்டனையே கிடைக்கும் என்று நம்பிய சந்திரனுக்கு பத்து வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட சந்திரன் சோர்வும் வெறுமையும் அடைகிறார். இதற்கிடையில் இவரது சகோதரியும் தங்கள் தகப்பன் மரணத்தின் விளிம்பில் இருப்பதைக்கண்டு இந்தியாவுக்கு வருகின்றார். பிறகு தந்தையாரும் இறந்துவிட, அவர் நடத்திய ஆச்சிரமத்தை நடத்தப்போவதாயும் இனி இந்தியாவில் தங்கப்போவதாயும் சிறையிலிருக்கும் சந்திரனுக்கு சரோஜினி கூறுகின்றார்.

இலண்டனில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சந்திரன் வெளியிட்ட ஒரு புத்தகத்தின் பதிப்பாளரின் உதவியால், குறைந்த கால சிறைத்தண்டனையுடன் சந்திரன் விடுதலையாகின்றார். பிறகு தனது கடந்தகால கசப்பான நினைவுகளைத் தாங்கிக்கொண்டு இங்கிலாந்திலிருக்கும் நண்பரொருவரின் வீட்டில் சென்று தங்குகின்றார்.
அங்கே அந்த நண்பருடன் நடைபெறும் நீண்ட உரையாடல்களும், வாழ்க்கை என்பது என்ன என்ற மாதிரியான கேள்விகளளுககு விடைகளைத் தேடுவவதாயும், அந்த நண்பரின் மனைவியுடன் (தகாத) உறவும் புதியவேலையும், முதலாளித்துவ உலகைப் புரிந்துகொள்வதுமாயும் நாவல் நீள்கிறது.

(2)
ஆரம்பத்தில் சுவாரசியமாகப் போகும் நாவல் பின்பகுதியில் மிக மெதுவாக நகர்ந்து, தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தை குறைக்கிறது. கவனமாக உற்றுப்பார்த்தால், வாசகர்களை ஆரம்பத்தில் எந்த அபிப்பிராயங்களை உருவாக்காமல் நாவலுக்குள் இழுத்துவிட்டு, அத்தியாங்கள் நீள நீள தனது வலதுசாரிக் கொள்கைகளை நாவலின் ஆசிரியன் திணிக்கத் தொடங்குவது கண்கூடு. நாவலின் ஆரம்ப அத்தியாயத்தில் ஜேர்மனியில் இருக்கும் தமிழர்கள் வ்ருகின்றார்கள். சந்திரனும் சரோஜினியும் மூன்றாம் உலகநாடுகளின் (தேசிய) போராட்டங்களைப் பற்றி உரையாடும்போது, ரோசாப்பூக்களை விற்கும் தமிழனைப் பார்த்து இந்த ரோசாப்பபூக்கள் எல்லாம் இவர்களின் நாட்டில் ஆயுதங்களாய் மாறும் என்ற மாதிரி சரோஜினி கூறினாலும், விமர்சனங்களை மீறி அவர்கள் போராடுவதற்கான நியாயங்களும் காரணங்களும் இருக்கின்றன என்கிறார். நாவலின் நீட்சியில் நாவலாசிரியர் தனது சொந்தக்கருத்துக்களை கதாபாத்திரங்களில் திணித்தாலும், சரோஜினியை ஒரு இடதுசாரி நம்பிக்கை உள்ள ஒருவராக அடையாளப்படுத்துவதால், தமிழர் போராட்டம் அரையும் குறையுமான மேற்கத்தைய புரிதல்களிலிருந்து தப்பிவிடுகின்றது.

வாழ்க்கையின் அரைவாசிக்கும் மேற்பட்ட காலத்தை வெளிநாடுகளில் வசித்த ஒருவர், முறையான காரணங்கள் இன்றி இந்தியாவுக்கு போராடப்போவதும், எந்தக் கேள்வியும் இல்லாது அவரை இயக்கம் ஏற்றுக்கொள்வதும், ஊர்/நகர மக்களும் வித்தியாசம் காட்டாது இயல்பாய் பழகுவதும் நாவலில் மட்டுமே நடக்ககூடிய விடயம். நாவலாசிரியர் ஒரு தெளிவான காரணத்தைக் காட்டாது சந்திரனின் பாத்திரத்தை -ஏதோ ஷொப்பிங்கு போவதுபோல- போராடவும் போவதாய் காட்சிப்படுத்தும்போதே நாவலின் சரிவும் ஆரம்பித்துவிடுகின்றது. எப்படி தங்கள் கொள்கைகள், கருத்துக்களை பரப்ப ஒரு கதைக்களன் தேவைப்படுகின்றதோ, அப்படியே நைபாலும் தனது நம்பிக்கைளை விதைக்க நைபாலும், சந்திரன் என்ற முக்கிய பாத்திரத்தையும், இந்தியத் துணைக்கண்டத்தையும் பயன்படுத்திக்கொள்கிறார் (இப்படி தனது நம்பிக்கைகளைத் திணித்து நாவலாய் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் நாவாலசிரியர் ஒருவரும் ஞாபகத்துக்கு வருவதை இந்தக்கணத்தில் தவிர்க்கமுடியவில்லை).

இங்கிலாந்தில் வாழும் வாழ்வுதான் யதார்த்தமான வாழ்வு எனவும், தத்துவங்களால், புரட்சிகளால் ஆகப்போவதில்லை ஒன்றுமில்லையெனவும் இறுதியில் நாவலை முடித்துவிடுகின்றார் நாவலாசிரியர். தனது தந்தை ஏழை மக்களுக்காய் நடத்திக்கொண்டிருந்த ஆச்சிரமத்தை தன்னால் தொடர்ந்து நடத்த முடியாது இருக்கின்றதென சரோஜினியும் முடிவில் நம்பிக்கை இழந்துவிடுகின்றார். ஆரம்பத்தில் கட்டியமைக்கப்படுகின்ற அனைத்து நம்பிக்கைகளும் இறுதியில் தகர்ந்துவிடுவதாய்க் காட்டுவது தனி மனிதர்களின் வீழ்ச்சி என்பதைவிட, மூன்றாம் உல நாடுகளில் எதையும் செய்தல் சாத்தியமில்லை என்ற தொனிதான் எல்லாவற்றையும் மீறி ஒலிக்கிறது. ரின்னாட்ட்டில் (Trindnad) பிறந்து இங்கிலாந்தில் பெரும்பகுதியைக் கழித்து, பிரிட்டிஷ் இராணியில் செல்லப்பிள்ளை பரிசான நைற் (Knight) விருதைப் பெற்ற ஒருவரிடமிருந்து மூன்றாம் உலப்பிரச்சினைகளையும் அங்குள்ள மக்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதுகூட ஒருவகையில் தவறுதானோ.

(Thursday, March 16th, 2006 at 10:03 am)

1 comment:

இளங்கோ-டிசே said...

1
MixEdApe says:
March 16th, 2006 at 11:18 am edit
/இங்கிலாந்தில் வாழும் வாழ்வுதான் யதார்த்தமான வாழ்வு எனவும், தத்துவங்களால், புரட்சிகளால் ஆகப்போவதில்லை ஒன்றுமில்லையெனவும் இறுதியில் நாவலை முடித்துவிடுகின்றார் நாவலாசிரியர்./
பல இடங்களிலே இது யதார்த்தமென்றாலுங்கூட, இதைத்தான் மேற்கில் மட்டுமல்ல, பரவி உலகெங்கிலுமே ஆட்சியதிகாரம் உள்ளவர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது.
/ தனது தந்தை ஏழை மக்களுக்காய் நடத்திக்கொண்டிருந்த ஆச்சிரமத்தை தன்னால் தொடர்ந்து நடத்த முடியாது இருக்கின்றதென சரோஜினியும் முடிவில் நம்பிக்கை இழ்ந்துவிடுகின்றார்./
பாண்டிச்சேரியிலே பிற்காலத்திலே தங்கிய ‘அலிகார் புகழ்’ அரவிந்தர் என்ற பயங்கரவாதியை ஞாபகப்படுத்துகிறது
2
டிசே தமிழன் says:
March 16th, 2006 at 2:32 pm edit
Ed the Ape, இந்த நாவல் Half a Life என்ற நைபாலின் மற்றொரு நாவலின் தொடர்ச்சி மாதிரி எழுதப்பட்டிருக்கின்றதாக அறிகின்றேன். இதே பாத்திரத்தின் (சந்திரனின்) மத்திய வயதுக்கு முன்பான வாழ்வை அந்த் நாவல் கதையாக்குகின்றது என்று வாசித்து இருக்கின்றேன்.