Tuesday, September 26, 2006

Walk the Line

-திரைப்படம்-

‘You’ve got a way to keep me on your sideYou give me cause for love that I can’t hideFor you I know I’d even try to turn the tideBecause you’re mine, I walk the line’( …part of I walk the line lyric)

ஜோனி காஸ் (Johnny Cash) என்ற பிரபல்யம் வாய்ந்த நாட்டுப்பாடகரின் (Country musician) வாழ்வை சற்று புனைவுத்தன்மையுடன் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது. நாஷ்விலில் பிறந்து, மேற்கு ஜேர்மனியின் போர்க்காலச் சூழலில் பணியாற்றி மீளவும் ஊர் திரும்புகின்ற காஷிற்கு உருப்படியான வேலை எதுவும் கிடைக்காததால், பாடுவதில் ஆர்வம் காட்டத் தொடங்குகின்றார். தனது பாடல்களை இசைத்தட்டுக்களாய் வெளியிட ஒரு லேபிளைக்(label) கண்டுபிடிக்க, அந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரோ, நீ கோஸ்பலை (Gospal) பாடுவதாய் இருந்தால் வீட்டுக்குப் போய் பாடு, எனக்கு வேண்டியது வெளியே சந்தையில் விற்றுத்தீரக்கூடிய பாடல்கள் என்கிறார். இராணுவத்தில் பணியாற்றும்போது தனிமையும் துயரமும் தோய எழுதிவைத்திருந்த பாடல்களை, அந்த லேபிள் நிறுவனத்துக்காய் பாடத்தொடங்க பாடல்கள் பிரபல்யமாகின்றன (cry cry cry பாடல் அவற்றில் ஒன்று). தொடர்ந்து பல பாடல்கள் பாடி காஷ் பிரபல்யமடைய வெவ்வேறு நகரங்களுக்குச் சென்று பாடத்தொடங்குகின்றார். தொலைதூர நகரங்களில் பாடுவதில் பிஸியாக இருந்தாலும் சொந்த ஊரிலிருக்கும் மனைவி குழந்தைகளின் பிரிவிலும் பாடல்களை இயற்றிப் பாடுகின்றார். பிறகாலத்தில் மிகப்பிரபல்யம் வாய்ந்த பாடலான I walk the line பாடலும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அவரது மனைவியான விவியனை நினைவில் கொண்டே பாடப்படுகின்றது. இசைக்குழுவின் தொடர்ச்சியான பயணங்களாலும், சில நண்பர்களின் சகவாசத்தாலும் குடிக்கும், போதை மருந்துகளுக்கும் காஷ் அடிமையாகத்தொடங்குகின்றார். இதன் தொடர்ச்சியில் இசைப்பயணம் இடைநடுவில் இரத்துச் செய்யப்படுகின்றது. இவை உட்பட வேறுசில பிரச்சினைகளாலும் இவரது மனைவி விவியன் இவரைச் சிலவருடங்களுக்குள் விவாகரத்துச் செய்கின்றார்.
இதற்கிடையில் காஷுடன் இணைந்து பாடுவதற்காய் ரூர் போகும் ஜீன் கார்ட்டர் (June Carter) மீது காஷுக்கு ஈர்ப்பு வருகின்றது. ஒவ்வொருமுறையும் இவர் தன் விருப்பை ஜூனிடம் தெரிவிக்கும்போதும், ‘உனக்கு அருமையான மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்கள், அதை மறந்துவிடாதே’ என்று விவாகரத்தாகி குழந்தைகளுடன் வாழும் ஜூன் மறுதலிக்கின்றார். ஜூனின் பிடிவாதமும், தான் நிராகரிப்படுவதன் துயரமும் காஷை இன்னும் ஆழமாய் போதை மருந்துக்கும், குடிக்கும் அடிமையாக்குகின்றது. காஷின் மனைவி விவியன் காஷை விவாகரத்துச் செய்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாய் ஜூன் மீதான காஷின் அபரிதமான காதலும் ஒரு காரணமாய் படத்தில் காண்பிக்கப்படுகின்றது.
காஷிற்கும் ஜூனுக்கும் இடையில் பிறகு என்ன நிகழ்ந்தது, எப்படி காஷ் போதை மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டெழுந்து புகழ்பெற்ற இன்னும் பல பாடல்களைப் பாடினார் போன்ற இன்னபிற கேள்விகளுக்கான பதில்கள் படத்தின் நீட்சியில் அவிழ்க்கப்படுகின்றன.
(2)
ஜோனி காஷ், எல்வீஸ் (Elvis), பொப் டைலன்(Bob Dylan) போன்ற பாடகர்கள் பிரபல்யமாகிக் கொண்டிருந்த காலத்திலேயே நாட்டுப்பாடல்களில் கவனிக்கத்தக்கவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களோடு நட்பும் அவர்களின் சில ஆல்பங்களில் பாடல்களும் காஷ் பாடியுமிருக்கின்றார். இராணுவத்தில் பணியாற்றியதும், வன்முறையான தகப்பனைத் தன் குழந்தைப் பருவத்தில் கொண்டிருந்தமையும், சிறுவயதில் தனது சகோதரரை மில் ஒன்றின் விபத்தில் பலி கொடுத்த குற்றவுணர்வும் ஜோனி காஷின் பாடல்களுக்கு வலிமையும் வலியையும் கொடுத்திருக்கின்றன என்று அவரது பாடல் வரிகளை கவனமாய்க் கேட்பவர்களுக்குப் புரியும். துயரமும் தனிமையும் கசிய அன்புக்காய் ஏங்கும் ஒரு ஆத்மாவை ஒருவித ‘உச்சஸ்தாயிக்கு அண்மையான மெற்றாலிக் குரலில்’ ஒலிக்கும் காஷ் பாடல்களில் நாம் அடையாளங்கண்டு கொள்ளவும் முடியும்.
காஷ் பலரின் எதிர்ப்புக்களை மீறி சிறைக்கூடங்களுக்குச் சென்று பாடியது மட்டுமில்லாது, அங்கேயே லைவாய் (Live) புதுபாடல்களைப் பாடி இசைத்தட்டுக்களாய் வெளியிட்டுமிருக்கின்றார். தான் பாடும் அனைத்து நிகழ்ச்சியிலும், கறுப்புக் கோர்ட்டும் சூட்டும் அணிவதால் ‘Man in Black’ என்ற பட்டப்பெயரால் அவரது இரசிகர்களால்அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்( Man In Black என்று பாடிய ஒரு பாடலில் தனது ஆடையின் நிறத்துக்கான தேர்வுபற்றி விபரமாய்க் கூறுவார்). Cherokee இந்தியர்கள் மீது அன்பும் பரிவும் உடைய்ய காஷ், பல பாடல்களை அவர்களுக்காய் பாடியும் இருக்கின்றார்.
(3)
ஏற்கனவே தெரிந்த (உண்மை) கதையை- அடுத்ததாய் என்ன சம்பவங்கள் நிகழும் என்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரு விடயத்தை- பார்ப்பவர்களுக்கு சுவாரசியமாய் வழங்குவதென்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இவற்றை மீறி இந்தப் படத்தை அலுப்பின்றிப் பார்க்கக்கூடியதாய் இயக்கிய இயக்குநனரும் நடிகர் நடிகைகளும் கவனிக்கப்படக்கூடியவர்களே. Joaquin Phoenix நன்றாக நடித்துள்ளார். Reese Witherspoonனில், மிகச் சிறந்த நடிகை என்று ஒஸ்கார் விருது கொடுக்குமளவுக்கு சிறந்த நடிப்பை இந்தப்படத்தில் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை.
இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும்போது எனக்குள் நெடுங்காலமாய் அலைந்து திரியும் கேள்வியே மீண்டும் நினைவுக்கு வந்தது. காஷும் தனது மனைவி குழந்தைகள் என்று இருக்கும்போது இன்னொரு பெண்ணிடம் மையல் கொள்கின்றார். மையல் கொள்ளப்படும் பெண் ஒவ்வொருமுறை மறுக்கும்போதும் அதை அசட்டை செய்து மீண்டும் வேதாளம் முருங்கமரத்தில் ஏறுவதுபோல இரந்து நிற்பதும், ஒரு கலைஞருக்குரிய பலவீனம் என்று ஒதுக்குவதா அல்லது தனியொருவனின் விருப்பு என்று எடுத்துக் கொள்வதா என்று குழப்பமாய் இருந்தது. படைப்புக்களை கலைஞர்களிலிருந்து பிரித்துப்பார்பதற்கு இலகுவான வழியை பின்நவீனத்துவம் முன்வைக்கிறது. ஆசிரியர் இறந்துவிட்டார் (படைப்பைப் பார் படைப்பாளியைப் பார்க்காதே) என்ற கோட்பாட்டுக்குள் இந்தக் கேள்வியையும் அடக்கிவிடலாந்தான். அப்படியெனில் சமூகத்தில் இருக்கும் அழுக்குகளையும் கசடுகளையும் ஏற்றுக் கொள்ளும்/நம்பிக் கொள்ளும் அனைத்து மனிதர்களையும் நாம் கேள்வி கேட்பதற்கான காரணங்களை, அவர்களும் தாங்கள் செய்யும் ஏதோ ஒரு நல்லவிடயத்தைக் காரணங்காட்டி விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு நகர்ந்துவிடமுடியுந்தானே.
*’ஒரு பெண்ணைப் பிடித்தால் படுக்கைக்கு வருகின்றியா?’ என்று ஒரு இலக்கியவாதி கேட்டால், அதை ஒரு கலைஞனின் பலவீனமாயும், ஒரு சாதாரண மனிதன் கேட்டால் ஆபாசம் என்று எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் முரண்பாடாய் அல்லவாய் இருக்கும்? இவ்வாறான கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டிருந்தபோது Walk the Line பார்த்த அடுத்த நாள் Adrian Lyneன் Unfaithful பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. என்னுடைய கேள்விகளுக்கு அந்தப் படமும் தெளிவான பதில்களை முன்வைக்கவிட்டாலும் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாது எல்லோரும் பலவீனமுள்ள மனிதர்களே என்ற புரிதல் அத்திரைப்படத்தைப் பார்க்கும்போது வந்தது. Unfaithful படம் முடிகின்ற விதமும், இறுதியாய் நடைபெறும் உரையாடலும், பின்னணியில் விரியும் காட்சியும் ஒரு அழகான கவிதைக்கு நிகரானது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
* பொடிச்சியின் ஒரு பதிவின் பகுதியிலிருந்து….

(Tuesday, March 21st, 2006 at 9:59 am )

1 comment:

இளங்கோ-டிசே said...

1
Mathy Kandasamy says:
March 21st, 2006 at 11:15 am edit
//அடுத்த நாள் Adrian Lyneன் Unfaithful பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.//
Finally!
//ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாது எல்லோரும் பலவீனமுள்ள மனிதர்களே என்ற புரிதல் //
v.true.
//Unfaithful படம் முடிகின்ற விதமும், இறுதியாய் நடைபெறும் உரையாடலும், பின்னணியில் விரியும் காட்சியும் ஒரு அழகான கவிதைக்கு நிகரானது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். //
can’t agree more with you.
u should watch Adrian Lynes other movies too DJ.
-Mathy
2
Mathy Kandasamy says:
March 21st, 2006 at 11:20 am edit
//*’ஒரு பெண்ணைப் பிடித்தால் படுக்கைக்கு வருகின்றியா?’ என்று ஒரு இலக்கியவாதி கேட்டால், அதை ஒரு கலைஞனின் பலவீனமாயும், ஒரு சாதாரண மனிதன் கேட்டால் ஆபாசம் என்று எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் முரண்பாடாய் அல்லவாய் இருக்கும்?//
This has to be discussed in detail. If you notice, last year’s Ray had the same thing. I wondered at that time, what’s is it with these artists(actors included). Why do we condone such behaviour, when artists are involved. Same thing prevails in Thamiz too. right?
Abt the movie - will watch one of these days. I am glad that you said //Joaquin Phoenix நன்றாக நடித்துள்ளார்.//
I like him. Would be watching the movie for hissake.
//Reese Witherspoonனில், மிகச் சிறந்த நடிகை என்று ஒஸ்கார் விருது கொடுக்குமளவுக்கு சிறந்த நடிப்பை இந்தப்படத்தில் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை.//
:P doubly glad that you said this. Cannot stand her. :devil1:
-Mathy
3
டிசே தமிழன் says:
March 21st, 2006 at 11:54 am edit
மதி, Adrian Lyne பற்றிக் கதைத்தால் யார் முதலில் ஓடிவந்து பின்னூட்டம் இடுவார் என்பது ஏற்கனவே முடிந்தவிடயம் :). Adrian Lyneன் அனைத்துப் படங்களைப் பார்க்காதுவிட்டாலும், லோலிதா(Lolita) போன்ற சிலவற்றைப் பார்த்திருக்கின்றேன். Clint Eastwood பற்றி நல்லதொரு பதிவு எழுதியது மாதிரி, Adrian Lyne பற்றியும் நீங்கள் ஒரு பதிவு எழுதினால் நான் உங்களுக்கு பூசணிக்காயில் மஞ்சள் சப்பாத்தி சுட்டுத்தருவேன் என்று உத்தரவாதம் தருகின்றேன். (அது காலில் போடுவதற்கா இல்லை வாயில் போடுவதற்கா உகந்தது என்பதை ப்ளையிங் ட்ராகனில் பரிசோதித்துப் பார்க்கவும்). :dance:
4
Mathy Kandasamy says:
March 21st, 2006 at 12:18 pm edit
//Adrian Lyne பற்றியும் நீங்கள் ஒரு பதிவு எழுதினால் நான் உங்களுக்கு பூசணிக்காயில் மஞ்சள் சப்பாத்தி சுட்டுத்தருவேன் என்று உத்தரவாதம் தருகின்றேன். //
அப்படியொரு எண்ணம் இருக்குதுதான்!
ஆனால் இந்தப் பூசணிக்காய், அவரைக்காய் எல்லாத்தையும் விட்டிட்டு நீர் ‘கோணங்கி’ புத்தகம் சுடவேண்டிய இடத்தில் சுட்டுத்தந்தால் யோசிப்பேன். :Angel:
இது எப்படிக்கீது? ஹஹ்ஹா… :elvis:
ஏப்பண்ணை வர்ரதுக்கிள்ள நான் இடத்தைக் காலி பண்ணிர்ரேன். :cool:
-மதி
5
MixEdApe says:
March 21st, 2006 at 12:56 pm edit
ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! (ஏப்பண்ணையின் அப்ப ஏவறை)
மெய்யான ஜோனி காஸின் நிகழ்நேர (லைஃப் தம்பி) ‘I walk the line’ WMV வடிவிலே கிட/டைக்கிறது துண்டிலே போட்டு அனுப்பவா? :visil:
6
டிசே தமிழன் says:
March 21st, 2006 at 1:52 pm edit
ஏப்பண்ணை மத்தியானத்துக்கு பச்சைச் சப்பாத்துச் சாப்பிட்டுவிட்டு ஏவறை விடுகிறார் போல :-).

//மெய்யான ஜோனி காஸின் நிகழ்நேர (லைஃப் தம்பி) ‘I walk the line’WMV வடிவிலே கிட/டைக்கிறது துண்டிலே போட்டு அனுப்பவா?//
அனுப்புங்கோ அனுப்புங்கோ….கெதியாய் துண்டிலிலோ தூண்டிலோ அனுப்புங்கோ. இந்தப்பதிவை நேற்று அரையும் குறையுமாய் எழுதிக்கொண்டிருக்கையில் பேப்பரைப் புரட்டிப் பார்த்தபோது, ஜோனி காஷின் முதல் மனைவி விவியன், ‘I walked the line’ என்ற தலைப்பில், காஷ் இராணுவத்தில் இருந்தபோது தனக்கு எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்களைப் பிரசுரிக்கப்போகின்றார் என்று வாசித்தறிந்தேன். ஏதோ நான் பிரமச்சாரியாக இருக்கிறன் என்று தெரிந்து உதவத்தான் (அதைப் பார்த்து கொப்பி பண்ணி யாருக்காவது அனுப்பி ‘உய்கின்ற’ வழியைப் பாரென்று) அம்மணி விவியன் பிரசுரிக்கின்றார் என்றே நம்புகின்றேன் :-).
7
Flying_Dragon says:
March 22nd, 2006 at 9:44 am edit
//*’ஒரு பெண்ணைப் பிடித்தால் படுக்கைக்கு வருகின்றியா?’ என்று ஒரு இலக்கியவாதி கேட்டால், அதை ஒரு கலைஞனின் பலவீனமாயும், ஒரு சாதாரண மனிதன் கேட்டால் ஆபாசம் என்று எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் முரண்பாடாய் அல்லவாய் இருக்கும்?//
டிராகன் இனத்தில் தெளிவான கருத்துக்கள் இருந்தாலும் சொல்ல பயமாக உள்ளது :alien:
//‘I walked the line’ என்ற தலைப்பில், காஷ் இராணுவத்தில் இருந்தபோது தனக்கு எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்களைப் பிரசுரிக்கப்போகின்றார் என்று வாசித்தறிந்தேன்.//
ஜோனியை விவாகரத்து செய்துவிட்டு கடிதங்களை மட்டும் பிரசுரிப்பார்களாக்கும்.. நல்ல நியாயம்தான் :devil2:
இந்தச் சிரிப்பிகள் எங்கே சிக்கின?:adi:
8
டிசே தமிழன் says:
March 22nd, 2006 at 10:45 am edit
//டிராகன் இனத்தில் தெளிவான கருத்துக்கள் இருந்தாலும் சொல்ல பயமாக உள்ளது //
இதுக்கெல்லாம் பயப்பிடக்கூடாது ட்ராகனாரே. மனதில் இருப்பதை அப்படியே உடனேயே ‘லப்டப்பென்று’கொட்டிவிடவேண்டும் (வேறு பல விசயங்களுக்கும் இப்படியிருப்பது நலமாம்).

//ஜோனியை விவாகரத்து செய்துவிட்டு கடிதங்களை மட்டும் பிரசுரிப்பார்களாக்கும்.. நல்ல நியாயம்தான்//
உது சரியில்லை அண்ணை. விவியன் மட்டுந்தான் விரும்பி விவாகரத்துச் செய்தவர், ஜோனியில் ஒரு பிழையும்,
இல்லை என்ற மாதிரி அல்லவா அர்த்தம் வருகிறது. நீர் இன்னும் ‘கலாபக்காதலன்’ பார்த்த பாதிப்பில் இருக்கின்றீர் போல :).
….
//இந்தச் சிரிப்பிகள் எங்கே சிக்கின?//
இந்த்ச் சிப்பிகளை நமது அவக்காடோ தோழர் எனக்காய்ப் பொறுக்கித்தந்தவர். நீர் மிளகாய்த்தூளோடு இந்தச் சிப்பிகளை குழம்பாக்க காத்திருக்கின்றீர் என்று எனக்கு விளங்குகிறது . ஆனால் அது மட்டும் கனவிலும் கூட நடக்காது ராசா :stop:.